கொடியவன் நீலன் சிலை அகற்றும் போராட்டம்
—தஞ்சை வெ.கோபாலன்.
James George Smith Neill (27 May 1810 – 25 September 1857)
1857இல் வட இந்தியாவில் நடைபெற்ற இந்திய சிப்பாய்களின் புரட்சியை முதல் சுதந்திரப் போர் என்றுதான் தேசபக்தர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த புரட்சி சரியான தலைமை இல்லாமையாலும், உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்பதுபோல இந்தியர்களே செய்த துரோகச் செயல்களாலும் வீரத்தோடு போராடிய பல தேசபக்த சிங்கங்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டியிருந்ததை நாம் அறிவோம். இது தவிர ஆங்கில தளபதி நீல் என்பவன் நடத்திய வெறியாட்டம் காரணமாக எத்தனை இந்தியர்கள் உயிர் துறக்க நேர்ந்தது என்பதை அறிய வேதனை உண்டாகிறது. போதாதற்கு இந்த கொடுமைக்காரன் ராணுவ தளபதி நீலனுக்குச் சென்னையில் அப்போது ஸ்பென்சருக்கு எதிரில் சிலையொன்றையும் நிறுவி நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்கள்.
நீலனுடைய முழுப் பெயர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் (General James George Smith Neill) யார் இந்த நீல்? இவன் செய்த கொடுமைகள் எவை? அவன் சிலையொன்றை சென்னையில் வைத்தது என்ன ஆயிற்று? இவைகளுக்கு விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அந்த விவரங்களை இந்தக் கட்டுரையில் சிறிது பார்க்கலாம்.
சிப்பாய்கள் தொடங்கிய கலகம் மெல்ல மெல்ல வட இந்திய நகரங்களுக்கெல்லாம் பரவத் தொடங்கியது. மீரத் நகரத்தில் உருவான எழுச்சி, டெல்லியில் அதிர்வு, அசம்கர் வெற்றி இவை பற்றிய செய்திகள் எல்லாம் நாடெங்கும் பரவிய நேரம். பஞ்சாபில் இருந்த ஆங்கில அதிகாரி ஜான் லாரென்ஸ் என்பவரும் கல்கத்தாவில் தலைமை பீடத்தில் இருந்த லார்ட் கேனிங் பிரபுவும் புரட்சியை அடக்கப் பிரம்ம பிரயத்தனங்களைச் செய்து கொண்டிருந்தனர். வெள்ளையர் ஆதரவுப் படைகள் டெல்லியில் புரட்சியாளர்களை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மற்ற பகுதிகளில் இருந்த வெள்ளைப் படைகள் பாதுகாப்புக்காக படைகளை அனுப்ப அவசரப்படுத்திக் கொண்டிருந்தனர். பம்பாய், சென்னை, ரங்கூன் ஆகிய இடங்களிலிருந்து படைகள் கலகம் நடந்த பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டன.
அப்படி வரவழைக்கப்பட்ட படைகளில் சென்னையிலிருந்து சென்ற துப்பாக்கிப் படை ஜெனரல் நீல் என்பான் தலைமையில் கலகத்தை அடக்கப் புறப்பட்டது. இந்த நீல் என்பான் பற்றி சொல்லப்படும் குணாதிசயங்கள், இவன் தர்மம் என்பதையே அறியாதவன், எதற்கும் துணிந்த கொடியவன், மனிதாபிமானம் இல்லாத ராட்சச குணங்கள் படைத்த மனித உருவிலான அரக்கன். காசிக்கு வந்த நீலனின் படைகளுக்கு இந்திய துரோகிகளின் துணையும் கிடைத்தது.
இவன் இந்திய படைவீரர்களுக்கு இட்ட முதல் கட்டளை அவர்கள் ஆயுதங்களை யெல்லாம் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டுமென்பதுதான். ஆனால் சுயமரியாதையும் தேசபக்தியும் கொண்ட இந்திய வீரர்கள் அவன் ஆணையை ஏற்க மறுத்து தாக்குதலில் ஈடுபட்டனர். ஜெனரல் நீல் தன் வெள்ளை படைகளோடு பஞ்சாபின் சீக்கியர் படையையும் சேர்த்துக் கொண்டு தாக்கத் தொடங்கினான். இந்தப் படை சிப்பாய்களைத் தவிர கிராமம் கிராமமாகப் புகுந்து அங்கெல்லாம் கண்ணில் தெரிந்த மனிதர்களையெல்லாம் வெட்டி வீழ்த்தினர். சிறை பிடித்தவர்களை ஆங்காங்கே மரங்களில் தூக்கிலிடுவது என்று வெறியாட்டம் ஆடினர். பல தூக்கு மேடைகள் அமைத்து ஓயாமல் ஒழியாமல் அப்பாவி பொதுமக்களை தூக்கிலிட்டுக் கொன்றான் நீல். தூக்கிலிட வேண்டிய கூட்டம் அதிகமாக இருந்ததால், தூக்கிலிட்ட ஒருவரின் உயிர் பிரியுமுன்பாகவே அவரை குற்றுயிரும் குலையுயிருமாகத் தூக்கி ஏறிந்துவிட்டு அடுத்தவரை தூக்கிலிட்டனர்.
இப்படி ஒருவர் ஒருவராகத் தூக்கிலிட பலநாட்கள் ஆகுமென்பதால் ஒரு காரியம் செய்தனர். பலரை ஒரே நேரத்தில் ஒரு பெரிய மரத்தடியில் நிறுத்தி, அவர்கள் கழுத்துகளில் எல்லாம் சுறுக்குக் கயிற்றைச் சுற்றி பெரும் மரக்கிளை வழியாக மறுபுறம் கொண்டு சென்று அங்கு ஒரு யானை மூலம் கயிற்றை இழுக்கச் செய்து பலரை ஒரே நேரத்தில் தூக்கிலிட்ட கொடுமையும் நடந்தது. இப்படி பலரை தூக்கிலிட தூக்கு மேடையும், கயிறும் தேவைப்பட்டதால் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தனர். ஒரு கிராமத்தின் உட்பகுதியில் அனைவரையும் நிறுத்தி சுற்றிலும் தீமூட்டி அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் பரலோகப் பிராப்தி அடையும்படி செய்தனர். அதில் தப்பி ஓட நினைத்தால் சுற்றிலும் பீரங்கிகளை நிறுத்திவைத்து சுட்டுப் பொசுக்கினர். இந்த வரலாற்றையெல்லாம் இவர்கள் பெருமையாகப் பின்னர் எழுதி வைத்துவிட்டுச் சென்றனர்.
இந்த கொடியவன் நீலன் செய்த அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல; சொல்லி மாளாத கொடுமைகள். இப்படி சென்னையில் புறப்பட்டுக் கல்கத்தா சென்று அங்கு கேனிங் பிரபுவின் உத்தரவின் பேரில் இந்திய சிப்பாய்களை வழியெல்லாம் பலிகொடுத்துக் கொண்டு வந்தபோது காசியையும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் நடத்திய கொலைவெறி காட்சிகளைப் பார்த்தோம். அந்தக் கொடியவன் புரட்சியின் போது 1857இல் லக்னோ நகரத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தன் வெறியாட்டத்தை நடத்திக் கொண்டிருந்த சமயம் பீரங்கியால் சுடப்பட்டுத் தன் குதிரையில் இருந்தபடியே கீழே விழுந்து உயிரைவிட்டான். மனித உருக்கொண்ட அரக்கன் இந்திய மண்ணில் இரத்தம் கக்கிச் செத்தான்.
1861ஆம் வருடத்தில் அந்த கொடியோன் நீலனுக்குச் சென்னையில் ஸ்பென்சருக்கு எதிரில் ஒரு சிலை நிறுவப்பட்டது. பீடமும் சிலையுமாக 21 அடி உயரமுள்ள முழு வெண்கலத்தால் ஆன அந்தச் சிலையை வெள்ளையர்கள் நிறுவினர். அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த மக்களுக்கு அவன் செய்த கொடுமைகள் தெரியவில்லையோ என்னவோ அப்போது அவன் சிலைக்கு எந்த எதிர்ப்பும் எழவில்லை. ஆனால் இந்திய மக்கள் விழிப்புணர்வு பெற்றபின் சுமார் 66 ஆண்டுகள் கழித்து 1927இல் தேசிய வாதிகள் இந்த கொடியவன் நீலனின் சிலை அங்கிருந்து அகற்றப்பட வேண்டுமென போராட்டத்தைத் துவக்கினர். இந்த நீண்ட நெடிய போராட்டத்தை மதுரை தேசபக்தர் நா.சோமையாஜுலு என்பார் தலைமை தாங்கினார். அவருடன் பங்குபெற்ற சில தேசபக்தர்கள் கடலூர் சுப்பராயலு, மதுரை சிதம்பர பாரதி, கடலூர் அஞ்சலை அம்மாள், லீலாவதி மற்றும் பலர்.
1927 ஆகஸ்ட் 11ஆம் தேதி தேசபக்தர்கள் ஊர்வலமாகச் சென்று ஒரு ஏணியை வைத்து அந்த சிலைமீது ஏறிக்கொண்டு கடலூர் சுப்பராயலு ஒரு சுத்தியல் கொண்டு சிலையை உடைக்கத் தொடங்கினார். சிலை வெண்கலத்தால் ஆனது என்பதால் உடையவில்லை; ஆனால் நீலனின் கையில் பிடித்திருந்த வாள் சிறிது சேதமடைந்தது. அப்போது அங்கு கூடிய கூட்டத்தினர் மத்தியில் அந்த நீலன் செய்த கொடுமைகளை விளக்கி தேசபக்தர்கள் பேசினார்கள். அதற்குள் அங்கு வந்த காவல்துறையினர் தொண்டர்களைக் கைது செய்து அழைத்துக் கொண்டு போய்விட்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது தியாகி சுப்பராயலு சொன்னார், நீலன் சிலை இந்திய மக்களுக்கோர் அவமானச் சின்னம். நான் மரண தண்டனை பெறுவதாயிருந்தாலும் இதை உடைத்தே தீருவேன் என்று முழங்கினார். நீதிபதி தொண்டர்களுக்குத் தலா ரூ.300 அபராதமும் 3 மாத சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்புக் கூறினார். அபராதம் செலுத்த மறுத்து தொண்டர்கள் மேலும் 3 மாத சிறைதண்டனை பெற்றனர்.
இப்படித் தொடர்ந்து பல நாட்கள் தொண்டர்கள் ஊர்வலமாக வந்து சிலையை உடைக்க முயல்வதும், கைதாவதும், சிறை செல்வதுமாக இருந்தனர். இதில் நா.சோமையாஜுலு உட்பட பலருக்கு ஒரு வருஷம் சிறை தண்டனையும் ரூ.50 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த ரூ.50 அபராதத்தைச் செலுத்த மறுத்ததால் இவர்களுக்கு மேலும் 15 மாத சிறை தண்டனை கிடைத்தது. இவர்கள் ஒரிசாவில் உள்ள பெர்ஹாம்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தில் 13 வயதே ஆன காந்திமதிநாதன் எனும் சிறுவன் ஒரு கோடாலி கொண்டு சிலையை உடைக்க முயற்சித்துக் கைதாகி செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் நான்கு ஆண்டுகள் இருக்க நேர்ந்தது. சென்னை வந்த மகாத்மா காந்தி நீலன் சிலையை அகற்ற அஹிம்சை முறையில் போராட வேண்டுமென்றார். கடலூர் முருகப்பப் படையாச்சி, அவர் மனைவி அஞ்சலை அம்மாள், அவர்களது 11 வயது நிரம்பிய மகள் லீலாவதி ஆகியோர் இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்றனர். லீலாவதி சென்னை சிறுமியர் இல்லத்தில் நான்கு ஆண்டுகள் இருக்க நேர்ந்தது.
அப்போதைய சென்னை சட்டமன்றத்தில் நீலன் சிலையை அகற்றும் தீர்மானம் ஜஸ்டிஸ் கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டது. 98 உறுப்பினர்களில் 29 பேர் நீலன் சிலையை அகற்ற ஆதரவு தந்தும், ஜஸ்டிஸ் கட்சியினரும் 18 ஆங்கிலேய உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்து தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் காங்கிரசார் சிலையின் மீது களிமண் உருண்டைகளை வீசித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர். இதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து 1937இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராஜாஜி தலைமையில் ஒரு அரசாங்கம் அமைந்த பின்னர் நீலன் சிலையை அகற்றி எழும்பூர் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு சென்றார்கள். இப்படி அடக்கி ஆண்ட அந்நியர்களை மட்டுமல்ல, இந்தியர்களை மிருகத்தனமாகக் கொன்று குவித்த ராட்சசன் நீலன் சிலையைக் கூட இங்கு வைக்கக்கூடாது என்று போராடியவர்கள் நம்மவர்கள் என்பதை எண்ணி பெருமைப்படலாம். ஜெய் ஹிந்த்!