டிசம்பர் 1, 2014

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள்

எஸ். கணேசன்

இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள். இவரது பொதுநலத் தொண்டை வியந்து பாராட்டி வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் எழுத்தாளரும் வாசகருமான திரு. துரை அவர்கள்.

புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த அறுபத்திஇரண்டு வயது மூத்தக்குடிமகனான திரு. எஸ். கணேசன் அவர்களது தொண்டு சமீபத்தில் ஹிந்து செய்திதாளில் வெளியானது. பிறர் துயர் கண்டு வருந்தும் உள்ளம் கொண்ட ஒரு சிலரில் கணேசனும் ஒருவர். ஆனால் பரிதாபப்படுவதுடன் நிறுத்திவிடாமல் தொடர்ந்து சென்று  துயர் களையும் நடவடிக்கையையும்  எடுப்பதினால் இவர் மற்றவர்களில் இருந்து மாறுபட்டவராகவும் இருக்கிறார்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்குச் சொந்தமான காரை இறந்தவர் உடலை மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு எடுத்துச் செல்லும்  உதவிக்காகப்  பயன்படுத்துகிறார். அதுவும் வாடகை வசூலிக்காமல் அவரே ஓட்டிச் சென்று உதவியும் வருகிறார். இவரால் இவ்வாறு உதவப்பட்ட இறந்தவரின் குடும்பங்கள் ஐயாயிரத்திற்கும் மேல். அத்துடன் ஆயிரக்கணக்கில் மருத்துவ உதவி தேவையானவர்களும் இவரால் உதவப்பட்டு அவசர சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார்கள். பிரசவங்களுக்கு இலவச சேவை, விபத்தில் சிக்குண்டோருக்கு அவசர உதவி போன்றவை இந்த உதவிகளில் அடங்கும்.

எஸ். கணேசன்2பழைய இரும்பு வியாபரத் தொழிலில் ஈடுபட்டிருந்த திரு. கணேசன் ஒருமுறை இறந்தவர்களின் உறவினர்கள் உடலை இல்லத்திற்குக் கொண்டு செல்ல வசதியின்றி ஒரு கைவண்டியில் வைத்து தள்ளிச் சென்றதைக் கண்டு மிகவும் வருந்தியிருக்கிறார். ஊரில் இருக்கும் வாடகை வண்டிகள் பிணத்தை அப்புறப்படுத்த உதவுவதில்லை. எனவே இவர் தனது இரும்பு வியாபாரத்தின் மூலம் சேமித்த பதினேழாயிரம் ரூபாய்களைக் கொண்டு கார் ஒன்று வாங்கி அவசரத் தேவைக்கு உதவுவதற்கு மட்டுமே அந்த காரைப் பயன்படுத்துவது என்றும், அதுவும் வாடகை வாங்காமல் உதவுவது என்ற லட்சியத்தைக் கொண்டார். இவரது வாடகைக் காரின் பதிவு எண் 515 என்பதால் ‘515’ கணேசன் என்று அழைக்கப்படலானார்.

இறந்தவர் உடலை கொண்டுச் செல்வதுடன், சிலமுறை அவரே குழிவெட்டி உடலை அடக்கம் செய்வது வரை உதவியும் இருக்கிறார். ஆனால் காசு மட்டும் வாங்குவதில்லை. ஒரு சிலர் டீசல் நிரப்பும் பொழுது அதற்கான தொகையைக் கொடுத்து உதவியதுண்டு என்கிறார் கணேசன்.  இவரது தொலைபேசி எண் புதுக்கோட்டை காவல் நிலையங்கள் அனைத்திலும் ‘அவசர உதவிக்கு உதவும் எண்’, என்ற குறிப்பில் உள்ளது. அவ்வாறு இவர் அவசர உதவி வழங்கியதால் ஏறத்தாழ 2000 பேர் பிரசவநேர உதவி பெற்றவர்களும், 1000 பேர் அவசர சிகிச்சையால் உயிர் பிழைத்தவர்களும் உள்ளனர்.

தனக்கென்று இதுவரை எந்த சொத்தும் சேர்க்காது தனது இரும்பு வியாபாரத்தில் ஈட்டும் தொகையைக் கொண்டே காரைப் பராமரிப்பதற்கு செலவழித்தும் வருகிறார். ‘இத்தைகைய தொண்டு மனநிறைவை அளிப்பதால் இறக்கும்வரை இல்லாமையில் உள்ளவர்களுக்கு இவ்வாறே உதவுவேன், அதுவே மனதிற்கு மகிழ்ச்சி தருவது’ என்று கூறும் திரு.கணேசனின் தொண்டுள்ளத்திற்கு நன்றி கூறியும், அவர் தொண்டு தொடர வாழ்த்துகள் கூறியும் அவரை  வல்லமையாளராகப்  பாராட்டி மகிழ்வதில் பெருமை கொள்கிறோம்.

தகவல் மற்றும் படம் உதவி: கே.சுரேஷ், தி இந்து நாளிதழ்

அவசர உதவிக்கு ஓடும் ஆபத்பாந்தவன்: 44 ஆண்டில் 5 ஆயிரம் உடல்களை காரில் ஏற்றிச்சென்று சேவை – தி இந்து
http://tamil.thehindu.com/opinion/reporter-page/article6493473.ece

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

  1. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். ஏழையின் மகிழ்ச்சியிலும் இறைவனைக் காணலாம் என்பதற்கு உதாரணம் இந்த கணேசன். 

    அது என்னவோ பாருங்கள் இருக்கப்பட்டவர்களுக்கு கவனமெல்லாம் இரும்பு பெட்டியின் மீது.இரக்கப்படுபவர்களுக்கு கவனமெல்லாம் இல்லாதவர்கள்
     மீது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.