Featuredகட்டுரைகள்பொது

வாடாத ரோசாப்பூ

எஸ் வி வேணுகோபாலன் .

 

வாடாத ரோசாப்பூ

ருத்ரய்யா : வித்தியாசமான கலைஞன்

Rudraiah

 

 

வசர நிலை பிறப்பிக்கப்பட்டிருந்த (1975) ஆண்டில் கல்லூரிக் கல்விக்காக சென்னைவாசியாகக் குடியேறியபோது, அதுவரை படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள், பழகிய நட்பு வட்டங்கள் எல்லாமே கொஞ்சம் வேறு தினுசாக மாறத் தொடங்கியது எனக்கு. 1978ல் வெளியான ‘அவள் அப்படித்தான்’ படத்தை உடனே பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு, இலக்கியவாதி நண்பன் சந்திரமவுலி (அழகியசிங்கர்) முக்கிய காரணம். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஏராளமான அதிர்ச்சியோடுதான் வந்தேன். அவள் அப்படித்தான் படத்தின் கதை, வசனம், காட்சிப்படுத்தல், பாடல்கள் எல்லாமே ஒரு வித்தியாசமான ரசனைக்கான ஆளாக என்னை உருக்கொள்ளத் தூண்டிக் கொண்டே இருந்தன. ருத்ரய்யா மனத்தில் நின்றுவிட்டார்.

அதுவரை தமிழ்த் திரையில் பார்த்திராத பெண், ஸ்ரீபிரியா நடித்த பாத்திரம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு வைத்திருக்கும் அம்மா, அதன் தொடர் அதிர்ச்சியில் வீட்டை விட்டு வெளியேறும் அந்தப் பெண் வளர்த்துக் கொள்ளும் வாழ்க்கைப் பாதை, அதன் நெருடலான குறுக்கீடுகளை துணிச்சலான ஒரு மந்திரப் புன்னகையால் அவள் கடப்பது, தனது புரிதல்களின் பளு தாங்காது முறியும் அவள் மனம்…..என எத்தனையோ புதிர்களை நேர்த்தியாகத் தொடுத்து முன்வைத்த படம் அவள் அப்படித்தான்.

Rudraiah2வழக்கமாக நாம் பார்த்துவந்த திரைப்படம் அல்ல அது என்பது திரும்பத் திரும்ப உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது. வீட்டைவிட்டு வெளியேறுகிற அந்தப் பெண் ஒரு நண்பன் வீட்டில் அடைக்கலம் புகுந்தால், அவன், மறுநாள் காலை அவளது தந்தையை தொலைபேசியில் அழைத்து அவள் தங்கள் வீட்டில் இருப்பதைத் தெரிவித்து விடுகிறான். அவர் நன்றி தெரிவிக்கையில், ‘எதற்கு நன்றி, அவள் என் சகோதரி’ மாதிரி என்று அவன் சொல்லும் பதில் அவளைக் கடுமையாக பாதிக்கிறது. இரவெல்லாம் என்னோடு படுக்கையில் இருந்துவிட்டு, விடிந்ததும் என்னை சகோதரி என்று சொல்வதற்குப் பதில் அவன் என்னை வேசி என்று சொல்லியிருந்தால் கூட கவலைப் பட்டிருக்கமாட்டேன் என்று பின்னாளில் அவள் சொல்கிறாள்.

தன்னைப்பற்றிக் கீழ்த்தரமாகப் பேசும் உயரதிகாரியைத் தனியே வரச் சொல்லிப் பிறகு அவமதிப்போடு வெளியேற்றும்போது அவள் பேசும் சொற்கள் மேலும் காத்திரமானவை. ரஜினிகாந்த் மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்று அது. பெண்கள் குறித்த ஆவணப் படம் எடுப்பவராக கமலுக்கு வாய்த்த அந்தப் பாத்திரம் தமிழுக்கு மிகவும் புதிது.

கண்ணதாசன் எண்ணற்ற பாடல்கள் படைத்திருந்தாலும், இந்தப் படத்திற்காக எழுதக் கிடைத்த தூண்டுதல் வரிகள் மிகவும் கொண்டாடப்படவேண்டியவை. ‘உறவுகள் தொடர்கதை’ என்ற பாடலை இளையராஜாவின் மிகவும் சிறப்பான பின்னணி இசையில் ஜேசுதாஸ் பாடுவதைக் கேட்கும் ஒவ்வொருமுறையும் நெஞ்சம் அந்தக் காட்சிகளில் போயமர்ந்து திரும்பும்.

கமல் ஹாசனின் சொந்தக் குரலில் மிதக்கும் ‘பன்னீர்ப் புஷ்பங்களே’ என்ற பாடலில், ‘பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்வைப் பாராட்ட யாருமில்லை நிஜ வாழ்க்கையிலே, பலபேரைச் சேரும் பரந்தாமன் தன்னைப் புகழ்பாடக் கேட்டதுண்டு இந்த பூமியிலே..’ என்று பரவும் வரிகள் சமூகத்தின் மீதான சாட்டையடி விமர்சனம்.

தமிழ் சினிமா ஒவ்வொரு பத்தாண்டிலும் வெவ்வேறு சுவடுகளைப் பதித்துத்தான் வளர்ந்து வந்திருக்கிறது. கருப்பு வெள்ளைப் படங்களை அந்தத் தலைமுறை ரசிகர்கள் இன்னும் சொந்த ஆல்பங்கள் போல் நெஞ்சில் புரட்டிப் பார்த்துக் கொண்டேதான் இருப்பார்கள். ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் சமூகத்தை மௌனமான காட்சிமொழி செயற்கையாகத் தான் சித்தரிக்கும், ஆகவேதான் வசனங்களின் ஆதிக்கம் இங்கே அதிகம் என்று அண்மையில் கூட ஒரு நேர்காணலில் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனாலும் உண்மை இந்த இரண்டு எல்லைகளுக்கிடையே தேடப்பட வேண்டியதாகவே இருக்கும். எல்லோரும் எப்போதும் பேசிக் கொண்டிருப்பதில்லை. பாடலிலும் கூட சொற்களற்றுக் கடக்கும் இசை மேலும் அழுத்தமான உணர்வுகளைப் பரிமாறுகிறது. பின்னணி இசையோடு நகரும் காட்சியொன்றில் சட்டென்று ஓயும் இசை, வேறு புதிய செய்தியை நோக்கி ரசிகரை ஈர்க்கிறது. இவற்றின் பரிசோதனைகள் பலவற்றை ‘அவள் அப்படித்தான்’ நிகழ்த்தியது.

ருத்ரய்யாவின் இந்த முயற்சியில் சோமசுந்தரேஷ்வர் (ராஜேஸ்வர்), வண்ணநிலவன் இருவரது பங்களிப்பு முக்கியமானது. ருத்ரய்யா குறித்த இருவரது மனம் கசியும் நினைவுகூரலும் அற்புதமான ஒரு கலைஞனிடமிருந்து தமிழ்த்திரைக்குக் கிடைத்திருக்க வேண்டிய வளமான படைப்புகள் வாய்க்காது போனதைத் தெரிவிக்கின்றன. ருத்ரய்யா பற்றி அதிகம் தெரிந்து கொள்ளுமளவு அவரைத் தொடராவிட்டாலும், அவரது பெயர் அப்படி பதிந்து போனதற்கு அந்த ஒரு படமே காரணமாயிருக்கிறது. அவரது ‘கிராமத்து அத்தியாயம்’ படத்தை நான் நழுவவிட்டுவிட்டேன் என்பது நெஞ்சில் குற்ற உணர்ச்சியோடு தங்கியிருக்கிறது. தோல்வியைத் தழுவினாலும் அந்தப் படத்தின் பாடல்கள் உள்ளத்தில் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருப்பவை. அதுவும் இளையராஜா இசையமைத்தது! மலேசியா வாசுதேவனும், எஸ் ஜானகியும் பாடிய ‘ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது’ என்ற பாடல் ஒரு ரசனை மிக்க கீதம் என்றால், எஸ் பி பாலசுப்பிரமணியனின் சோகம் ததும்பும் ‘வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பாத்தேன்..’ என்ற பாடல் உருக்கத்தோடு கட்டமைக்கப்பட்ட இசையில் வந்து சேருவது.

ஒருபுறம் மிரள வைக்கும் பிரும்மாண்டங்கள் ஒரு சராசரி ரசிக உள்ளத்தைக் கிளர்த்தவே செய்கின்றன. புதிய முயற்சிகளில் இறங்குவோர்கூட கலைப்பட முத்திரை குத்தப்படாது பார்த்துக் கொள்ள எச்சரிக்கை எடுத்துக் கொள்கின்றனர். அருவருக்கத் தக்க அளவில் லாப வெறியும், பணத்தைச் சுற்றியே வளர்த்தெடுக்கப்படும் மலினமான வாழ்க்கையும் குறித்த கவலைகள் பண்பாட்டுத் தளத்தில் கூடுதலாக பிரதிபலிக்க வேண்டிய காலத்தில் நாம் வாழ்கிறோம். அண்மைக் காலத்தில் அப்படியான முயற்சிகள் பல முன்னெழுந்து வருகின்றன.

ஆனாலும் இன்னும் இன்னும் கூரான வெளிப்பாடுகளை, இன்னும் இன்னும் அருகே வந்து பேசும் கதையமைப்பை, மக்கள் மனத்தைச் சலனப்படுத்தும் அற்புதமான கலையின் பிரதியை நோக்கி நகரவேண்டியிருக்கிறது. மக்சீம் கார்க்கியின் தாய் நாவலில், பாவெல் விலாசவ் தனது முதல் ஆவேச உரையை நிகழ்த்தியதும், தாடிக் கிழவன் ரீபின், “உன் பேச்சு அவர்களது இதயத்தைத் தொட வேண்டும் பாவெல், நீ அறிவுக்குப் பேசுகிறாய்” என்பதாக ஓர் உரையாடல் வரும்.

மக்கள் இதயத்தை தொட நினைக்கும் கலைஞர்களுக்கு ருத்ரய்யாவின் பெயர் நிச்சயம் ஓர் உந்துவிசையாகவே இருக்கும்.

[ நன்றி: தீக்கதிர் (இலக்கியசோலை) 01 12 2014 ]

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க