எனக்குள் நானே..!
-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
பெண்ணுக்குச் சிறப்பு பொறுமை!
ஈரமாகும் மன மெல்லாம்
சிரிப்பு!
உன்னில் கண்டேன்
அந்த மதிப்பு!
இரட்டைத் தாயின்
ஒற்றைக் குழந்தை போல!
பொறாமையில்லாப் பொறுமையினை
உன்னில் கண்டேன்
அந்த மதிப்பு!
பெண்ணைத் தூற்றி வசைபாடும் உலகத்தில்
பொறுமையோடு
பெருமை தேடும்
ஒருத்தி நீ !
கவியாற்றலை
வரமாய் வாங்கி வந்த நீ
பொறாமை பிடித்தவர்கள் மத்தியில்
பொறுமையை வரமாய்ப் பெற்றுக் கொண்டாய்!
சிந்தனைக் கிணற்றைத் தோண்டின்
மரியாதை ஊற்று உறைந்து போகுமோ??
மானம் மரியாதையாய்
நீ
இருந்தாலும் – வாழ்ந்தாலும்
போட்டி, பொறாமை, சூது, வாது இல்லாத
மனசு உன்னிடம்!
உன் நட்பினைப் பின்தொடர
என் மனசோ ஏங்கித் தவிக்கும்!
ஒரு நதியாய்ப் பாய்ந்தோடுவாய்…
பள்ளத்தை நோக்கும் வெள்ளமாய்
என்னை மூழ்கடிப்பாய்…!
தாகமெடுக்கின்ற நேரத்தில்
வறட்சியாய் இருப்பாய்!
வறட்சியாய் இருக்கும் நேரத்தில்
குளிர்ச்சியாய் இருப்பாய்!
உன் மௌனம்
வெளியேறிச் செல்லக் காத்திருந்து
மனசு உருகித் தவிக்கையிலே…
உன் சிந்தனைத் துளிகளால்
ஒவ்வொரு நாளும்
நான்
குளிர்த்துக் கொண்டிருக்கின்றேன்…!
மழைக்காலத்தில் துளிர்க்கும்
புல் பூண்டாய்
எனக்குள் நானே
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுகிறேன்!