குறளின் கதிர்களாய்…(40)
-செண்பக ஜெகதீசன்
சொல்வணக்க மொன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான். (திருக்குறள்:827 – கூடா நட்பு)
நல்லதல்ல
வில்லின் பணிவு,
அது
விடப்போகும் அம்பிற்காகத்தான்…
அதுபோல்
பகைவர்தம்
பணிவான சொற்களும்
பயன்தராது நல்லதாகவே…!
குறும்பாவில்…
வில்லின் பணிவும்,
வயவர்தம் சொல்லின் பணிவும்
வழங்கிடாது நற்பயனையே…!
மரபுக் கவிதையில்…
வில்லது பணிவாய் வளைந்தாலும்
விரைந்தே வந்திடும் அம்பாலே
நல்ல பயனைத் தந்திடாத
நம்மை யழிக்கும் படைதானே,
நல்லார் போலே மிகப்பணிந்து
நல்ல சொல்லாய்ச் சொன்னாலும்
பொல்லாப் பகைவர் பேச்செல்லாம்
பயனாய் நல்லதைத் தாராதே…!
லிமரைக்கூ…
பணிவுடனே வளைந்தாலும் தீங்கேதரும் வில்,
பணிவாய்த்தான் வந்தாலும்
நற்பயனைத் தருவதில்லை பகைவர்தம் சொல்…!
கிராமிய பாணியில்…
வில்லு வளஞ்சா
மரியாதண்ணு
மனசுலதான் எண்ணாத,
அது ஆபத்து-
அம்பு வந்து
தொளச்சிருமே நம்மளத்தான்…
அதுபோல
நம்பாத நம்பாத
எதிரி பேச்ச நம்பாத,
மருவாதயா பேசுனாலும்
மனசாற நம்பாத-
அம்புபோல வந்து
ஆளத்தான் அழிச்சிருவான்,
நம்பாத நம்பாத
அவம்பேச்ச நம்பாத…!