கே. ரவி

பாடல் பதிந்தும், பதியாத கதை சொல்கிறேன். ஆனால், அதற்குமுன், ஒரு செய்தி, அதைச் செய்தி என்று கூடச் சொல்ல முடியாது, ஒரு கருத்து அல்லது நோக்கு, அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வரலாற்று நிகழ்ச்சிகளை விட, அவை நமக்கு உணர்த்தும் கருத்து அல்லது கதை முக்கியம் என்று பல முன்னணி வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ளார்கள். எனவே, என் கவிதையின் வரலாறாகவே அமைந்து விட்ட என் வாழ்க்கையின் நிகழ்ச்சிகளைக் காட்டிலும், அந்த நிகழ்ச்சிகளின் உந்து சக்தியாகவும், அவற்றை முந்து சக்தியாகவும் அமைந்த அக நெகிழ்ச்சிகள் மிக முக்கியம். அதைக் கருத்தில் கொண்டு, நான் சில எண்ணங்களை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அலையலையாய் விரிந்த கூந்தல் மேகக்கூட்டம் போல் இருப்பதாகச் சொல்லும் உவமை புதியதில்லை. ஆனால், வானத்தைப் பார்த்ததும், அதன் சுருள்சுருளான மேகங்களுக்கிடையில் நிலாப்பிறையைக் கண்டதும், அப்போது மின்னல் வானத்திரையைப் பிளந்து கொண்டு பளிச்சிட்டதும், இவையெல்லாம் பிறைசூடிய பித்தனை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது வெறும் உவமையாகவோ, உருவகமாகவோ மட்டும் இல்லை. அது ஓர் அனுபவக் களம். ஆகாசத்தையே பிறவா யாக்கைப் பெரியோனாகப் பார்த்த பிரமிப்பில்தான், போன பகுதியில் படித்த “நிலவை அணிந்து கொண்டு” என்று தொடங்கும் கவிதையின் உயிர்வீச்சே இருக்கிறது. “விழிநிறைந்தது வானம்” என்ற சொற்றொடரே அதன் ஜீவ நாடி. நிலவும், மேகமும், மின்னலுமாக இரவில் தொடங்கி, பனிப்புகையின் நடுவே வெள்ளி முளைத்துச் சிவன் கையில் காயழலாய்க் கதிரவன் உதிக்கும் காலை வரை அந்தக் கவிதை நகர்ந்து அல்லது படர்ந்து செல்வதே அந்தக் கவிதை வெறும் அசையாப் பொருள் இல்லை, அதற்கு இயக்கம் உண்டு என்று அதன் உயிர்மூச்சை அடையாளம் காட்டுகிறது. “மெல்லப் படர்ந்தது வெள்ளி” என்ற வரியில், ‘மெல்ல’ என்ற சொல்லின் ஆதிக்கமே அதன் இயக்க நிலைக்குத் தக்க சான்று. அண்டமெல்லாம் ஜனிக்கும் மஹாசூன்யமே, ப்ரளயமாகி உலகைப் புசிக்கும் காலதேவனாகவும் அமைந்து, கடைசியில் சலனமற்ற சதாசிவமாகவும் நிலைத்து விடும் அனுபவம், ஆங்கிலத்தில் ‘மிஸ்டிக் எக்ஸ்பீரியன்ஸ்’ என்று சொல்லப்படும் ஒரு புதிரான அனுபவம். நாம் சிற்றறிவால் சட்டெனப் புரிந்து கொள்ள முடியாத பேருண்மையை, ஏன், பேரழகை, அல்லது பேரானந்தத்தை உள்ளுணர்வில் ஏற்படுத்தும் அனுபவம். இப்படிப்பட்ட அகநெகிழ்ச்சியே அந்தக் கவிதையின் அனுபவக் களம் அல்லது சூழல். அந்தக் கவிதையைக் கேட்கும் போது, அதுவும் இன்னிசையோடு எஸ்.பி.பி. போன்ற நல்ல குரலுடையவர் அதைப் பாடக் கேட்கும் போது, கேட்பவரையும் அந்த அனுபவக் களத்திற்குக் கடத்திச் செல்லும் ஆற்றல் அந்தச் சொற்களுக்கு இருந்தால், அதுவே மந்திரமாகி விடுகிறது. ஒரு கவிதையில் இந்தச் சொல் நன்றாக உள்ளது, அந்த உவமை அற்புதம், என்றெல்லாம் நயம் வியப்பது பேச்சாளர்களின் பணி. ஆனால், ஒரு கவிதை எந்த அனுபவக் களத்துக்குப் படிப்பவனை அல்லது கேட்பவனைக் கடத்திச் செல்கிறதோ, அந்தக் களத்தில் ஆழ்ந்து அதை அனுபவிப்பதோ ஒரு ரசிகனின் பணி. ஒரு கவிதை வாசகனை அனுபவக் கடத்தல் செய்வதற்கு நல்ல இசை எப்படி உதவுகிறதோ, பாடகர் எப்படி உதவுகிறாரோ, அப்படியே கவிதையின் நயம் வியக்கும் பேச்சாளர்களும் அதே விதத்தில் உதவக் கூடும். ஆனால், மிக முக்கியம், அல்லது இலக்கு என்ன தெரியுமா? களமும் அதில் மூழ்கித் திளைக்கும் ரசனையும் மட்டுமே.

ஒரு கவிஞன் தன் கவிதையையே வியந்து, விரித்துரைக்கலாமா என்ற கேள்வியும், அப்படிச் செய்வது அதிகப்பிரசங்கித் தனம் இல்லையா என்ற கேலியும் எழக்கூடும். என் படைப்புகளை நானே ரசிக்கவில்லை என்றால், யார் ரசிப்பதற்கு நான் அதை வெளியிடுவது? ரசிக்கத் தக்கதுதான் என்று நான் ஒரு முடிவுக்கு வராமல், மற்றவர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ள முன்வரலாமா? விருந்தினர்களுக்குப் படைக்கும் முன், உணவை நாம் சோதித்துச் சுவை பார்ப்பதில் தவறில்லையே. சபரி மூதாட்டி சொல்லிக் கொடுத்த பாடம் இல்லையா? என் கவிதை என்பது என் குழந்தை போன்றது. என் குழந்தையின் படைப்புக்கு நானே முழுப்பொறுப்பா? நான் அதன் படைப்புக்கு ஒரு கருவியானேன். ஆனால், அதன் கர்த்தாவோ, கடவுளாகிய இயற்கை அல்லது பிரபஞ்ச சக்தி இல்லையா? என் குழந்தையை நான் ரசித்துக் கொஞ்சுவது தவறா? மற்றவர்கள் அதை மெச்சிப் புகழும் போது என் மேனி சிலிர்ப்பது இயற்கைதானே? பாரதி பாடவில்லையா:

உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி

மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி

இந்தக் கவிதை பிறக்க என்னைக் கருவியாகத் தேர்ந்தெடுத்த இறைவனுக்கு நான் செலுத்தும் நன்றியில்லையா அது!

“தன்னைப் புகழ்தல் தகும் புலவோர்க்கே” என்று ஓர் இலக்கண சூத்திரம் உண்டு. என் ஆசான் தண்டமிழ்க் கொண்டல் அதைத் தம் இல்லத்தின் சுவரில் பெரிதாக எழுதி மாட்டியிருப்பார். அதன் மெய்ப்பொருள் இப்பொழுதுதான் விளங்குகிறது. ஒரு புலவனாக நீயிருக்கும் பட்சத்தில், நீ உன்னைப் புகழ்ந்து கொள்ளலாம். ஏனென்றால், நீ எப்பொழுதும் உன் உள்ளத்தில் பொங்கிவரும் கவிதையையே சுவைத்துக் கொண்டிருப்பாய். அந்தக் கவிதை வெள்ளத்தை மற்றவர்களும் பருகத் தருவதற்கு உனக்கு அனுமதியுண்டு என்பதோடு, அப்படிப் பருகத் தருவது உன் கடமையும் ஆகும் என்பதை நினைவிற்கொள். அப்போது நீ உன்னைப் புகழ்வது என்பது உனக்குள் ஊற்றெடுக்கும் கவிதையை, அதைத் தரும் பிரபஞ்ச சக்தியை, இறைவனைப் புகழ்வதாகத்தான் பொருள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

சரி, இப்பொழுது நான் சொன்னது ஏதோ என் கவிதையில் மட்டுமே கிட்டும் அனுபவம் என்று எண்ணிவிட வேண்டாம். போன பகுதியில் ரமணன் எழுதிய சிவாஷ்டகத்தையும் படித்துக் கேட்டோம் இல்லையா? அதில் வரும் ஒரு வரி, அமர வரி, அதுவே போதும். “புஜம் போன்ற மெளனத்தில் ஆரங்கள் கீதம்”. அடாடா, அதைப் பற்றி வியப்பதற்கு முன், அந்த வரியையே நாலைந்து முறை படித்துச் சொல்லி அனுபவிக்க வேண்டும். புஜம் அல்லது தோள், மலை போல் இருந்தது, மூங்கில் போல் இருந்தது என்றெல்லாம் உவமை சொல்வதுண்டு. புஜத்தையே வேறொன்றுக்கு உவமை சொல்ல முடியுமா? முடியலாம், அந்த வேறொன்று தோள் போல ஒரு பருப்பொருளாக அல்லது திண்பொருளாக, வடிவமுடையதாக இருந்தால். சரி, மெளனம் போன்ற வடிவற்ற ஒரு கருத்தீட்டுக்கு புஜத்தை எப்படி உவமை சொல்ல முடியும்? இது என்ன குழப்பம்? கொஞ்சம் உள்ளுக்குள் போய் உற்றுப் பாருங்கள். மெளனம் என்பதன் வடிவம் மெல்ல ஒரு திரைக்குப் பின்னால், பனித்திரைக்குப் பின்னால் வானம் போல் தெளிவின்றிப் புலப்படக் கூடும். அது மிகப் பெரிதாகத் தோற்றம் கொடுக்கும். அம்மாடியோவ், மெளனம் என்பது இவ்வளவு பெரிசா? வானம் எவ்வளவு விரிந்து, பரந்ததோ, அவ்வளவு விரிந்து, பரந்த பெரிய விஷயம் மெளனம்! சிவனுடைய தோள்களைப் போல! “தோள்கண்டார் தோளே கண்டார்” புரிகிறதா? “தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின் நாள்பலக் கழியுமாம்” என்ற கம்ப சூத்திரத்தின் மர்ம முடிச்சு அவிழ்கிறதா? துயரமோ, கவலையோ மனத்தை அழுத்தும் போது, மனம் சாய்ந்து கொள்ளத் தோள்கொடுப்பது அல்லது தோளாகவே அமைவது மெளனம்தானே! மெளனத் தோளில் மனம் சாய்ந்து கொண்டு ஆறுதல் காணும் அற்புதமான அகக்காட்சியை உள்ளுக்குள் தரிசிக்க முடிகிறதா?

பாரதி எந்த ஞான ஆகாசத்தில் நின்று கொண்டு யாரும் பேசாப் பொருளைப் பேசத் துணிந்தானோ, அந்த ஆகாசத்தின் சமாச்சாரங்கள் இல்லையா இதெல்லாம்!

‘புஜம்போன்ற மெளனம்’ என்ற சொற்றொடர் ஏற்படுத்தும் மலைப்பிலிருந்து நாம் மீள, மெல்ல விசிறி விசிறிக் காற்று வரவழைக்கும் சொற்களே, “ஆரங்கள் கீதம்”. அது சாதாரண விசிறி இல்லை. சபரி மலைக்குச் செல்பவர்களுக்கு, அதுவும், பெரிய பாதையில் செல்பவர்களுக்குத் தெரியும். மிகவும் சிரமப்பட்டுக் கரிமலை ஏறி வருபவர்களுக்கு முன்னால் நின்று கொண்டு, ஏற்கனவே உச்சியை அடைந்தவர்கள், துண்டால் விசிறும் போது கிடைக்கும் ஆசுவாசம்; நிம்மதி; ஆனந்தம்! அதை அனுபவித்து உணர வேண்டும். அப்படியொரு காற்றை வீசும் விசிறியே அந்த ஆரங்களின் கீதம். மன்னிக்கவும், ஆரங்களின் கீதம் இல்லை, “ஆரங்கள் கீதம்”. ஆரங்களில் இருந்து, அவற்றின் அசைவுகளில் இருந்து உண்டாகும் கீதம் இல்லையாம். ஆரங்களே கீதமாம். மெளனம் என்ற தோளில் கீதம் கூட ஒலியெழுப்பக் கூடாது. வெறும் அசைவுதான். உஸ்….! கீதம், இசை கூட அங்கே நிசப்தம்தான்.

விட்டு விடுங்கள், இதற்குமேல் தாங்காது. இதைவிட ஒரு போதை, இதைக் காட்டிலும் உடற்சிறையை உடைத்துக் கொண்டு உயிர் திமிறிக் கொண்டு வரும் ஒரு பாதை உண்டா? சொல்லுங்கள். நான் ஏன் கவிதைப் பித்துப் பிடித்துத் திரிகிறேன் என்று புரிகிறதா? தலையாட்டிப் பயனில்லை, என்னோடு பயணம் செய்ய, இல்லை, இல்லை, என்னோடு எனக்குள் ஊடுருவிச் செல்ல, அங்கே கண்டறியாதன காண, கேட்டறியாதன கேட்கத் துணிய வேண்டும். தயாரா?

அது எப்படி ஒருவருக்குள் இன்னொருவர் செல்வது? இதெல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதோ? அட, ஒதுக்கி வையுங்கள் அறிவை. புத்தி சிகாமணி, ஓர் ஓரமாகக் கைகட்டிக் கொண்டு நில்.

1970-களில் வந்த ஒரு கவிதை இப்பொழுது உள்ளத்தில் ஒலிக்கிறது:

தென்றலே சற்று நில் – நீ

சென்றிடும் பாதையை மாற்றிக் கொள்

கனவிதழ் கூப்பிக் கவிதை மலராள்

கடுந்தவம் செய்கின்றாள் – நீ

 கவனம் இழந்து மோதி விடாதே

கண்ணீர் உகுத்திடுவாள்

ஞானமே எச்சரிக்கை – உன்

ஆணவப் பேச்சை நிறுத்திவை

ஸ்வரங்களின் தேவி சுடர்ரதம் ஏறி

ஊர்வலம் வருகின்றாள் – நீ

அவசரப் பட்டுப் பரபரக் காதே – உன்

சிறகை முறித்திடுவாள்

மெளனமே இதழ்விரி – பனி

மகுடங்கள் அசைய நீசிரி

மானஸ தேவதை ஊர்வலம் வரும்வழி – பொன்

மகரந்தங்க ளால்நீ மழைபொழி – அவை

பொலபொல வென்று விழும் ஒலியே – அவள்

புன்னகையாம் கோயில் மணி

அப்படியானால் ஒருவருக்குள் ஒருவர் நுழைந்து பார்க்க முடியுமா? ஏன் முடியாது? நான் வேறு, நீ வேறு என்ற பிரிவினைத் தோற்றத்தைப் புலப்படுத்தும் உடற்கூடுகள் வெறும் குறுக்குச் சுவர்களே. பானைக்குள் இருக்கும் வெளியும், பானைக்கு வெளியில் உள்ள வெளியும் வேறு வேறா? ஒரே வெட்ட வெளியை, உள்ளென்றும், வெளியென்றும் பிரிக்கும் மண் ஓடுதானே பானை?

1984-85 என்று நினைக்கிறேன். சபரி மலைக்கு எங்கள் குழுவினரோடு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு நிகழ்ச்சி நடந்ததாம். போன பகுதியில், என் கனவுப் பாடலைத் தொலைபேசியில் எனக்கு டாக்டர் ஞாபகப் படுத்திய செய்தியை வல்லமை இதழில் படித்து விட்டு, நண்பன் சு.ரவி எனக்கு அந்த நிகழ்ச்சியை நினைவூட்டினான். அதை இப்பொழுது சொல்கிறேன். அந்தப் பேருந்துப் பயணத்தின் ஒரு கட்டத்தில், சு.ரவியும் நானும் பாடிக் கொண்டே இருந்தோம். மற்றவர்கள் உறங்கிவிட்ட பிறகும் சிறிது நேரம் பாடி விட்டு நாங்கள் இருவரும் அப்படியே மெளனத்தில் ஆழ்ந்தோம். நான் த்யானத்தில் ஆழ்ந்து விட்டேன். சு.ரவியும் அப்படியே. என் த்யானத்தில் சாயிபாபா ஒளி வடிவமாகக் காட்சி தந்து என்னைப் பேரானந்தத்தில் மூழ்கச் செய்தார். சுமார் ஒருமணி நேரம் இந்த நிலை நீடித்தது. த்யானத்தில் இருந்து புறவுணர்வு நிலைக்கு நான் திரும்பியதும், சு.ரவியிடம், யாராவது காயத்ரி மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்களா என்று கேட்டேன். அவன் ஆச்சரியப் பட்டான், அவன் அந்த ஒரு மணி நேரமும் காயத்ரி மந்திரத்தை மனத்துக்குள்ளேயே ஜெபித்துக் கொண்டிருந்த செய்தி எனக்கு எப்படித் தெரிந்தது என்று. அப்போது அவனுடைய புருவ மத்தியில் சாயி பாபா அமர்ந்திருந்த தரிசனத்தையும் சொன்னான். நான் அந்த ஒரு மணி நேரம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று அவன் கேட்டதும் நானும் த்யானத்தில் இருந்ததாகவும், சாயி தரிசனமே பெற்றதாகவும் சொன்னேன். த்யானத்தில் எப்படி எனக்குள் அவனும், அவனுக்குள் நானும்…?

எங்கள் உரையாடல் த்யான நிலை பற்றித் தொடர்ந்தது. நான் முதன் முதலாக டாக்டர் முன்னிலையில் த்யானம் செய்ய நேர்ந்த கதையைச் சொன்னேன். அப்போது பனிமலையுருகி வழிவது போல் என் தலை குளிர்ந்து போனதைச் சொன்னேன். உடனே சு.ரவி, செளந்தர்ய லஹரியிந் 20-ஆவது செய்யுளைச் சொல்லிக் காட்டினான்.

கிரந்திமங்ஞேப்யஹ கிரண நிகுரும்பம்ருத ரஸம்aravi

ஹ்ருதித்வா மாதத்தே ஹிமகரசிலா மூர்த்திம் இவ யஹ

ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் சமயதி சகுந்ததிப இவ

ஜ்வர ப்லுஷ்டான் த்ருஷ்ட்ய சுகயதி சுதாதாரஸிரய

இந்தக் கவிதையின் பொருள் த்யானத்தில் பனிமலை உருகுவது போல உள்ளுக்குள் அமுதம் பொழியும், அப்போது மாயையின் சின்னங்களான பாம்புகள் பட்சிராஜனைக் கண்டது போல் ஓடி மறையும் என்பதாம். “ஹிம கர சிலா மூர்த்திம்” என்பது பனிப்பாறையில் செதுக்கப் பட்ட அல்லது அமர்நாத்தில் தெரிவது போல் பனியில் தானே தன்னை வடித்துக் கொண்ட மூர்த்தி அல்லது வடிவம் என்று பொருள்படுகிறது. “கிரண நிகுரும்பம்ருத ரஸம்” என்ற சொற்றொடர் அமுதப் பெருக்கையும், “சகுந்ததிப” என்பது பறவைகளின் ராஜனான கருடனையும் குறிக்கின்றன. கருடனே த்யான அனுபவத்துக்குக் காரணகர்த்தாவாக இருக்கிறான் என்று சு.ரவி சொன்னதுமே எனக்கு மெய் சிலிர்த்தது. காரணம், டாக்டரின் முன்னிலையில் நான் முதன்முறையாக த்யானம் செய்த போது எனக்குள் பனிமலை உருகி அமுதம் பொழிந்த அனுபவத்தை அவரிடம் சொன்னேன். அதை அவர் கண்டு கொள்ளாமல், அருகில் இருந்த இன்னொரு நபரிடம், “இன்று காஞ்சிபுரத்தில் கருட சேவை இல்லையோ?” என்று கேட்டார். அதன் உட்பொருளை அன்று நான் உணரவில்லை என்றாலும், பிறகு மேற்சொன்னவாறு பேருந்தில், செளந்தர்ய லஹரியின் 20-ஆவது ஸ்லோகத்தை சு.ரவி விளக்கியதும் புரிந்து கொண்டு சிலிர்த்தேன்.

யாருக்குள் யார்? நான் எழுதிய கவிதையொன்றின் சில வரிகள் இப்போது நினைவுக்கு வருகின்றன:

யார்மாயை யார்நிஜம் யார்சாயை யார்நிழல்

என்மாய வட்டத்தில் நீமாயையா – அல்லது

என்மாய வட்டமே உன்சாயையா

கவிதையும், மந்திரமும் வேறு வேறு இல்லை. வேத மந்திரங்கள் சிலவற்றைத் தமிழில் பாரதி எழுதி வெளியிட்ட போது, அதற்கு, “வேத ரிஷிகளின் கவிதை” என்றுதான் பெயர்சூட்டினான்.

என் கனவுக்குள் நுழைந்து அங்கே என்னைப் பாட வைத்து, நான் அதை மறந்து விட்ட போது மீட்டுத் தந்த குருவின் அருளை நினைந்து நெகிழ்கிறேன்.

அந்தப் பாடலை வெகு நாட்கள் பதிவே செய்யவில்லை. அது வந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்து, என் நண்பர், இசையமைப்பாளர் ரெஹான் தான் இசையமைத்து ஒரு கேஸட், (அப்படியொரு பொருள் ஒரு காலத்தில் வழக்கில் இருந்தது, தம்பி!), அதாவது, இசைநாடா தயாரிக்கப் போவதாகவும், அதுவும் திருவேங்கடநாதன் பற்றிய பாடல்களாக இருக்க விரும்புவதாகவும், அதற்கு என் பாடல்களைத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நானும் சில பாடல்கள் தந்தேன். அதில் அந்தக் கனவுப் பாடல், “ஆதி சேஷன் ஆகவா” என்ற பாடலும் ஒன்று. பாடல்களைப் பதிவு செய்து கொண்டு வந்து ரெஹான் போட்டுக் காட்டியதும், பாட்டின் சொற்களுக்கும், மெட்டுக்கும் ஒரே போராட்டமாக இருந்ததை அவனிடமே சொல்லி விட்டு, அதே மெட்டுகளுக்கு ஏற்ப வேறு பாடல்களும் அப்போதே எழுதித் தந்தேன். குரல் இழை மட்டும் புதிய வரிகளோடு மாற்றிப் பதிவு செய்யப்பட்டு, “திருவேங்கடநாதன்” என்ற பெயரில் அந்த இசைநாடா வெளியானது. “ஆதி சேஷன் ஆகவா” பாடல், “ஏழு மலை ஏறவா” என்று மாறிய கதை இதுதான்.

அந்தப் பாடலை இங்கே படிக்கலாம், கேட்கலாம்:

ஏழுமலை ஏறவா கேட்கலாம் இங்கே:

ஏழு மலை ஏறவா கோவிந்தன் புகழ் கூறவாasr

ஓ மாதவா ஶ்ரீ ராகவா

என்றிங்கு நான்பாடவா

பாட்டுப்பாடி பஜனை செய்து பக்தியோடு தேடவா

பாரிஜாத மாக நெஞ்சைப் பாதங்களில் போடவா

கூட்டமாகக் கூடிவந்து சன்னிதிக்குள் சேரவா

கோடியிலே நானொருவன் குரெலெடுத்துப் பாடவா

ஓ மாதவா ஶ்ரீ ராகவா

என்றிங்கு நான்பாடவா

நான் உருகிப் பாடுவதுன் காதில் விழவில்லையா

நான் ஒருவன் தேடுவதுன் கண்ணில் படவில்லையா

கானமழை முடிவிலுந்தன் ஞானவொளி தோன்றுமே

காண வேண்டும் என்று நெஞ்சம் மீண்டும் மீண்டும் ஏங்குமே

ஶ்ரீநிவாஸா கோவிந்தா வெங்கட ரமண கோவிந்தா

ஶ்ரீதர கேஸவ கோவிந்தா ஶ்ரீஹரி நாதா கோவிந்தா

ஓ மாதவா ஶ்ரீ ராகவா

என்றிங்கு நான்பாடவா

புரிந்ததா? பதிந்தும் பதியாத பாடல்! பள்ளியில் படித்த பாடப் புத்தகத்தின் பக்கங்களைப் போல் ……! குருநாதனால் தீட்சை பெற்ற பிறகும், மீண்டும் உலக விவகாரத்தில் உழன்று திரியும் பேய்மனம் போல் ……! ஏன், வேண்டுதல் வேண்டாமையிலாத நிலையடைந்த பிறகும், சில காலம் உடற்கூட்டில் இருந்தாக வேண்டிய ஜீவன் முக்தனைப்போல் …! அப்பப்பா, எத்தனைப் போல், போல், போல்! கவிதைக்கு அழகே உவமைதானே சாமீ! புரிந்ததா, இல்லை புரிந்தும் புரியாதது போல்.. !

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “காற்று வாங்கப் போனேன் – (41)

 1. ரவி,

  ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரியில் திளைத்திருந்த நாட்களை நினைவு கூர்ந்த்தற்கு நன்றி!
  “ஹிமகரசிலா மூர்த்தி , சுதாதார சிரயா என்றெல்லம் வர்ணிக்கப்படும் அன்னையின் திரு உருவம்  நெஞ்சில் நிறைந்து ததும்பியது நினைவுக்கு வருகிறது:
       அமுதம் நனைத்த பனிச்சிலையைப் பாடல்
        தமிழில் நனைத்தேன்! குளிர்ந்தாள்- உமையவள்
        ஸ்ரீபுரத்தாள், மாமதுரைக் கோபுரத்தாள் பண்ணிசைக்கும் 
        நூபுரத்தாள் நெஞ்சே நினை..

   “தரிசனம் தருவாய் காமாக்‌ஷி” என்றுதொடங்கும் சாவேரி ராகக் கீர்த்தனையின் இறுதி முடுகு ( துரிதம்)ப் பகுதி:
    
    இமயப் பனிச்சிகரம்  அரசுற்ற சுத்தசிவம் 
    இதயத் திருக்கும் எழில் அமுத்ப் பனிச்சிலைநின்
    சிந்தூர நுதலும் கருவண்டாடும் இருவிழியும்
    சிங்கார அலைபுரளும் பொன்மேனி அழகும் ஒளிர் ( தரிசனம்)..

  ஸௌந்தர்யலஹரியில் மீண்டும் ஆழ்த்தியமைக்கு நன்றி..

  சு,ரவி

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.