Featuredகவிஞர் வாலி

சக்கரக்கட்டி ராசாத்தி…

— கவிஞர் காவிரிமைந்தன்.

 

பெற்றால்தான்

 

மனம் ஒரு பறவை!  விரும்பும் திசையெல்லாம் பறந்துகொண்டேயிருக்கும்!  மனிதனுக்குத்தான் இறகுகள் இல்லை!  உடலால் பறக்க முடியாவிட்டாலும் உள்ளத்தால் பல தூரம் கடந்து விடுகிறான்.  நனவில் அல்ல!  கனவில்!!  எதார்த்தங்களை வாழ்வில் பார்த்துச் சலித்துப்போன பிறகு  நமக்கும்கூட அப்படிப் பறந்திட எண்ணம் வரும்!  அதுவும் காதல் கொண்ட பருவத்தில் என்றால் எல்லைகள் அங்கே இல்லவே இல்லை!

பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படும் திரைச் சித்திரங்களில் இந்த எதார்த்தங்களை மீறி கொஞ்சம் மாய ஜாலம் கலந்து மக்களுக்குத் தர தொன்றுதொட்டு இயக்குனர்களுக்குக் கூட ஒரு வேட்கை இருந்து வருகிறது!

ஒரு ‘கார்’ தரையிலிருந்து விண்ணோக்கி கிளம்பி சென்னை நகரை.. அதன் முக்கிய சாலைகளை வலம் வருவது போன்ற காட்சியமைப்பு! மக்கள் திலகத்துடன் கன்னடத்துப் பைங்கிளி  அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்களும் தோன்றிடும் வெற்றிப்படைப்பு!  எத்தனையோ பாடல்களை மனம் விரும்பிக் கேட்கும்போதும் இந்தப் பாடல் கேட்கும்போதெல்லாம் ஏதோ உற்சாக கங்கை உள்ளத்துள் ஊற்றெடுக்கும்!

முழுக்க முழுக்க மெலோடியும் இல்லாமல் அதே நேரம் முழுமையான ஜன ரஞ்சகப் பாடலாகவும் இல்லாமல் ஒருவிதக் கலவையாய் உருவாக்கித் தந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்!  கவி வண்ணம் வாலி கணை தொடுத்திருக்கிறார்!  திரு கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் இயக்கத்தில் ‘பெற்றால்தான் பிள்ளையா’ திரைப்படத்தில் அமைந்த பாடலிது!

tms-susila-vaali-msv

மக்கள் திலகமும் அபிநய சரஸ்வதியும் இணைந்து தமிழ்த் திரையில் வழங்கிய காதல் பாடல்களின் பட்டியல் நீளும்..  என்றாலும் உயிரோட்டமான இப்பாடல் எப்போது கேட்டாலும் .. டி எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா குரல்களில் தெவிட்டாத தெள்ளமுதம் என்கிற வகையில் ஆண்டுகள் பல தாண்டி நம் மனதை ஆண்டு வருகிறது!

காணொளி:   http://www.youtube.com/watch?v=Tjwxq4Vh4a0

படம்: பெற்றால்தான் பிள்ளையா
பாடல்: வாலி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்: டி எம் சௌந்தரராஜன், பி சுசீலா

சக்கரைக்கட்டி ராஜாத்தி –
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே –
நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி

பட்டுப் போன்ற உடல் தளிரோ –
என்னைப்பார்க்கையிலே வந்த குளிரோ
தோகை மயிலின் தோளை அணைத்து
தோகை மயிலின் தோளை அணைத்து
பழகிக்  கொள்வது சுகமோ

தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும் –
விழிதூரப் போகச் சொல்லி நடிக்கும்
ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
ஆசை பிறந்தது எனக்கும்

கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்
கேள்வி  என்ன ஜாடை என்ன
தேவை இல்லை வெட்கம்

அத்தை மகனே அத்தானே –
உன்அழகைக் கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே –
நான்பூத்திருக்கும் முல்லை மொட்டானேன்….

உறவைச் சொல்லி நான் வரவா
என் உயிரை உன்னிடம் தரவோ
[உன் உதட்டில் உள்ளதைப் பெறவோ]
மாலை மயக்கம் தீரும் வரைக்கும்
மாலை மயக்கம் தீரும் வரைக்கும்
வாரி கொடுப்பேன் வா வா

மடியைத் தேடி வந்து விழவோ –
இந்தமாப்பிள்ளை அழகுக்கு அழகோ
காலை வரையில் சே(சோ)லை நிழலில்
காலை வரையில் சே(சோ)லை நிழலில்
கண்கள் உறங்கிட வா வா

கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்
கேள்வி  என்ன ஜாடை என்ன
தேவை இல்லை வெட்கம்

அத்தை மகனே அத்தானே –
உன்அழகைக் கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே –
நான்பூத்திருக்கும் முல்லை மொட்டானேன்….

சக்கரைக்கட்டி ராஜாத்தி –
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே –
நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி

இந்த வரிகளில் “உன் உதட்டில் உள்ளதைப் பெறவோ” என்கிற வார்த்தை தணிக்கைக் குழுவினரால் நீக்கப்பட்டு.. “என் உயிரை உன்னிடம் தரவோ” என்றும் ‘சேலை நிழலில்’ என்கிற வார்த்தை.. ‘சோலை நிழலில்’ என்றும் மாற்றப்பட்டு ஒலிப்பதிவானது!  காலத்தின் கோலத்தைப் பாருங்கள்..  சேலை என்பதும் உதட்டில் என்கிற வார்த்தைகள் கூட தணிக்கை செய்யப்பட்ட காலம் என்பதை இன்று நினைக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது!

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

 1. Avatar

  அன்று தணிக்கையாய் இருந்தது
  இன்று  தனிக் “கை” யானதால் …உப்பு மிளகு தட்டி சூப்பு வச்சு குடியா”
  என்றால் பாரத பரிசு! ம்ம்ம்ம்ம்..
  முகவுரை அருமை
   “என்னைப்பார்க்கையிலே வந்த குளிரோ
  தோகை மயிலின் தோளை அணைத்து
  போர்த்தி  கொள்வதில் சுகமோ”
  என்று ஆசான் எழுதாமல்  எப்படி விட்டார்?

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க