புதுமாற்றம் கொண்டு வாராய்!
-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஏகிவிட்ட இரண்டாயிரத்து பத்தி நா(ன்)கைப் (2014 )போல
இல்லாது! நீ மலர்க! இவ்விரண்டாயிரத் துப்பதி னைந்தே !
சோக நிலை மாறி யொரு சுகந்தம் வீச!
சுகம் பொங்க! வளம் பொங்க! வாழ்வில் நல்ல
மோக நிலை கொண்டே தன் மக்க ளெல்லாம்
முடிவில்லா இன்பத்தைத் துய்க்கும் வண்ணம்
இணையில்லா ஆண்டென்று இகமே போற்ற
இரண்டாயிரத்துப் பதினைந்தே நீ இதமாய் வாராய்!
கொலை மலிந்து தலைபுரளக் கோபம் கொண்டே!
கொடுவதைகள் செய்வோர் தம்உள்ளம் மாறி
வலை போலச் சூழ்ந்துள்ள துயரம் நீங்கி
வசந்தங்கள் வந்தெம்மை மகிழ் விலாழ்த்த
விலையில்லா அமைதியினை உலகுக்கீன்று
விதிமாற்றி இருளகற்றி ஒளியைச் சேர்த்து
கலை மணக்கும் புத்தகமாய்! அகிலந் தன்னில்
களிப்பூட்ட நீவாராய்பதி னைந்தே!
இனமென்றும் மொழியென்றும் மதங்களென்றும்
இடைவெளியை ஏற்படுத்தும் மடமை நீங்கி
மனமொன்று பட்டுலக மாந்தரெல்லாம்
மாண்போடு சோதரராய் வாழ்ந்து நிற்கத்
தினந்தொரும் ஏழ்மையிலே வாடுவோர்கள்
செழிப்போடு வாழுநிலை தன்னை ஆக்கிக்
கனவெல்லாம் வினையாகிக் கண்டு உய்ய
கனிவோடு புதுமாற்றம் கொண்டுவாராய்!