Tag: செண்பக ஜெகதீசன்

  • குறளின் கதிர்களாய்…(187)

    -செண்பக ஜெகதீசன் 

    உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
    இன்னாச்சொல் நோற்பாரின் பின். (திருக்குறள் -160: பொறையுடைமை) 

    புதுக் கவிதையில்… 

    உடலை வருத்தி
    உண்ணா நோன்பிருப்போர்
    உயர்ந்தோரே…

    அவரிலும் பெரியோர்
    அடுத்தவர் சொல்லும்

    கொடுஞ்சொல் கேட்டும்,
    பொங்கிடாது
    பொறுமை கொள்வோரே…! 

    குறும்பாவில்… 

    பிறர் சொல்லும் இன்னாச்சொல் கேட்டும்
    பொறுமை மேற்கொள்வோர்,
    உண்ணா நோன்பிருப்போரைவிடப் பெரியோரே…!      

    மரபுக் கவிதையில்… 

    உரிய நேரம் உண்ணாமல்
    -உடலை வருத்தி நோன்பிருப்போர்,
    பெரியோ ரென்றே புவனமிதில்
    -பெருமை வந்து சேர்ந்திடுமே,
    தெரிந்தே கொடுஞ்சொல் பேசிவரும்
    -தீயோர் முன்னும் பொறுமைகாக்கும்
    அரிய மாந்தர் இவர்கள்தான்
    -அவரிலும் மேலாம் பெரியோரே…! 

    லிமரைக்கூ… 

    பெரியோராவர் நோன்பிருப்போர் உண்ணாமல்,
    இவரினும் பெரியோரே பொறுமைகாப்போர்
    பிறரின் கொடுஞ்சொல்லை எண்ணாமல்…! 

    கிராமிய பாணியில்… 

    பொறும காக்கணும் பொறும காக்கணும்
    பெரும தரும் பொறும காக்கணும்…

    வாயக்கெட்டி வயித்தக்கெட்டி
    பட்டினிகெடந்து நோம்பிருந்தா
    பெரியவருண்ணு பேருவரும்…

    அடுத்தவஞ் சொல்லும் கொடுஞ்சொல்லக்
    கேட்டபின்னும் கோவப்படாம
    பொறும காக்கிறவங்கதான்
    அவரமிஞ்சுன பெரியவங்க…

    அதால,
    பொறும காக்கணும் பொறும காக்கணும்
    பெரும தரும் பொறும காக்கணும்…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(186)

    -செண்பக ஜெகதீசன் 

    கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும். (திருக்குறள் -166: அழுக்காறாமை)

    புதுக் கவிதையில்…

    பொருள் கொடுத்துப்
    பிறருக்குதவுதல்
    பெருங்குணம்…

    கொடுப்பவனைப் பார்த்து
    பொறாமைப்படுபவனின் குடும்பம்
    உண்ணவும் உடுக்கவும் ஏதுமின்றிக்
    கெட்டழியும்…! 

    குறும்பாவில்…

    அடுத்தவர்க்குக் கொடுத்துதவுவோன் மீது
    அழுக்காறு கொள்வோன் குடும்பம் கெட்டழியும்,
    உண்ண உடுக்க ஏதுமின்றி…! 

    மரபுக் கவிதையில்…

    தன்னிட முள்ள பொருளதனைத்
         -தானே தந்து பிறர்க்குதவும்
    உன்னத குணமது உடையோரை
         -உரிய முறையில் போற்றாமல்,
    அன்னார் மீதே பொறாமைகொளும்
         -அசுர குணமது கொண்டார்தம்
    அன்புடைச் சுற்றம் அழிந்துகெடும்
         -அன்னம் ஆடை கிடைக்காமலே…! 

    லிமரைக்கூ..

    பொறாமை கொள்வான் பொருள்கொடுப்போன் மீதே,
    போயழிவான் சுற்றமொடு ஊணுடையின்றி யென்பதால்
    பொறாமை கொள்ளுதலென்பது மாபெருந் தீதே…! 

    கிராமிய பாணியில்…

    கொள்ளாத கொள்ளாத பொறாமகொள்ளாத
    குடியழிக்கும் கொணமான பொறாமகொள்ளாத…

    அடுத்தவனுக்குக் குடுத்தொதவுற
    அன்பான மனுசன்மேல பொறாமகொள்ளுறவன்
    அழிஞ்சிபோவான்,

    அன்னந்தண்ணி யில்லாம உடுக்கத்துணி யில்லாம
    அவந்தான் குடும்பத்தோட அழிஞ்சிபோவான்…

    அதால,

    கொள்ளாத கொள்ளாத பொறாமகொள்ளாத
    குடியழிக்கும் கொணமான பொறாமகொள்ளாத…!

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(185)

    -செண்பக ஜெகதீசன்

    பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
    நட்பாடல் தேற்றா தவர். (திருக்குறள் -187: புறங்கூறாமை) 

    புதுக் கவிதையில்…

    நகைச்சுவையுடன்
    இன்சொல் பேசி
    நட்புகொள்ளத் தெரியாதவர்,
    புறஞ்சொல்லி
    நண்பரையும் நமைவிட்டுப்
    பிரிந்துபோகச்செய்வர்…! 

    குறும்பாவில்…

    நகைமுகத்தொடு பேசிப் பிறரை
    நண்பராக்கத் தெரியாதவர்தான், புறம்பேசிப்
    பிரித்திடுவார் நண்பரையும்…! 

    மரபுக் கவிதையில்…

    இனிய சொற்கள் பேசியேதான்
    -இன்முகத் தோடே பழகிவந்தால்,
    கனியும் நல்ல நட்பதுவும்
    -காலம் காலம் நிலைத்திருக்கும்,
    மனிதர் இதனை அறியாமல்
    -மற்றவர் வெறுக்கப் புறம்பேச,
    புனித மான நட்பழியும்
    -போவர் நண்பரைத் தான்பிரிந்தே…! 

    லிமரைக்கூ…

    நட்பாக்க இன்சொல்லைப் பேசு,
    இதறியாதே புறங்கூறல் நட்பழித்து
    நண்பர்களைப் பிரித்திடும் மாசு! 

    கிராமிய பாணியில்…

    பேசாத பேசாத பொறம்பேசாத
    பொழப்பக்கெடுக்கும் பெறம்பேசாத…
    சிரிச்சமொகத்தோட நல்லதாப்பேசி
    நண்பனச் சேக்கத்தெரியணும்… 

    அது தெரியாதவந்தான்
    பொறம்பேசி போக்கடிசிருவான் நட்பயே,
    பிரிச்சிப்புடுவான் நண்பனயே… 

    அதால,
    பேசாத பேசாத பொறம்பேசாத
    பொழப்பக்கெடுக்கும் பெறம்பேசாத!

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(184)

    செண்பக ஜெகதீசன்

     

    அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்

    பெற்றான் பொருள்வைப் புழி.

           –திருக்குறள் –226(ஈகை)

     

    புதுக் கவிதையில்…

     

    வறியவர் பசியைப்

    போக்கவேண்டும்,

    பொருள் இருப்பவன்..

     

    அதுவே அவனுக்குப்

    பிற்காலத்தில் உதவிடத்தக்க

    சேமிப்பாகும்…!

     

    குறும்பாவில்…

     

    வைத்திருக்கும் செல்வத்தினால்

    வறியேர் பசிப்பிணி போக்குபவனுக்கு,   

    பிற்கால சேமிப்பாகும் அது…!

     

    மரபுக் கவிதையில்…

     

    அதிகப் பசியில் வாடுவோர்க்கே

    அன்ன மளித்துக் காப்பாற்ற

    அதிகப் பொருளைச் செலவிட்டே

    அவர்தம் பசிப்பிணி போக்கிட்டால்,

    அதில்வரும் செலவது இழப்பல்ல

    அறப்பணி செய்த செல்வருக்கே,

    எதிர்வரும் காலத் தேவைக்கது

    ஏற்ற நல்ல சேமிப்பே…!

     

    லிமரைக்கூ..

     

    வறியவரின் பசிப்பிணியைப் போக்கு

    செல்வமது இதிலே செலவிட்டதை

    வருங்கால சேமிப்பாய் ஆக்கு…!

     

    கிராமிய பாணியில்…

     

    குடுத்துவாழணும் குடுத்துவாழணும்

    கைப்பொருளக் குடுத்துவாழணும்,

    காசில்லாத ஏழபசிபோக்க

    கைப்பொருளக் குடுத்துவாழணும்..

     

    பெரும்பசியில வாடுறவன்

    பசிபோக்கச் செலவளிச்சா

    பணக்காரனுக்கு அது போக்கில்ல,

    எதிர்காலத்தில அவன் தேவைக்கு

    இப்பவே சேமிச்ச சேமிப்புதான்..

     

    அதால,

    குடுத்துவாழணும் குடுத்துவாழணும்

    கைப்பொருளக் குடுத்துவாழணும்,

    காசில்லாத ஏழபசிபோக்க

    கைப்பொருளக் குடுத்துவாழணும்…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(183)

    -செண்பக ஜெகதீசன்

    நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
    வாழ்வாரின் வன்கணா ரில்.
    (திருக்குறள் -276: கூடாவொழுக்கம்) 

    புதுக் கவிதையில்…

    துறவி என்பவன்
    தூயவனாயிருத்தல் வேண்டும்…
    நெஞ்சினில் பற்றுவைத்து
    நேரில் பற்றற்றவனாய்
    நடிக்கும் துறவியைவிடக்
    கொடியவர் வேறில்லை…! 

    குறும்பாவில்…

    பற்றினை நெஞ்சில்வைத்து பற்றற்றவனாய்ப்
    பாசாங்கு செய்யும் துறவியைவிடக்
    கொடியோர் வேறெவருமிலர்…! 

    மரபுக் கவிதையில்…

    முற்றுந் துறந்த முனிவரென்றே
         -முழுதும் பொய்யாய் நடித்துவிட்டு,
    பற்று மிகுந்த நெஞ்சினராய்
       -பெரிதும் ஆசை கொண்டவராய்
    புற்றில் வாழும் அரவெனவே
    -புரட்டில் திரியும் துறவியைப்போல்
    குற்றம் நிறைந்த கொடியோர்கள்
    -குவலய மீதில் வேறிலையே…! 

    லிமரைக்கூ…

    துறவிக்கு இருக்கக்கூடாது ஆசை,
    பற்றற்றவனாய் நடிப்பது கொண்டுவரும் துறவிக்கு
    கொடியோர்க்கெலாம் கொடியோனெனும் மாசை…! 

    கிராமிய பாணியில்…

    ஒழுக்கம் வேணும் ஒழுக்கம் வேணும்
    மனுசனுக்கு நல்ல ஒழுக்கம் வேணும்,
    எல்லாந்தொறந்த முனிவருண்ணாலும்
    பொல்லாப்பில்லாத ஒழுக்கம் வேணும்…
    மனசுல ஆசய மறச்சிவச்சி
    ஆசயில்லாதவன்போல நடிக்குமந்த
    சாமியாரப் போல
    கேடுகெட்ட கொடியவந்தான்
    யாருமில்ல ஒலகத்தில…
    அதால,

    ஒழுக்கம் வேணும் ஒழுக்கம் வேணும்
    மனுசனுக்கு நல்ல ஒழுக்கம் வேணும்,
    எல்லாந்தொறந்த முனிவருண்ணாலும்
    பொல்லாப்பில்லாத ஒழுக்கம் வேணும்…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(182)

     

     

     

    புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுள்                                                  

    துச்சி லிருந்த வுயிர்க்கு.

           -திருக்குறள் -340(நிலையாமை)

     

    புதுக் கவிதையில்…

     

    நோய் நொடிகளால்

    நிறைந்திருக்கும் வீடு,

    மனித உடல்..

     

    அதில்

    மறைந்து குடியிருந்து

    வெளியேறிய உயிர்,

    நிரந்தரமாய்க் குடியிருக்க

    இதுவரை கிடைக்கவில்லை

    வீடொன்று…!

     

    குறும்பாவில்…

     

    உடலெனும் வீட்டில் நெருக்கிக் குடியிருந்த           

    உயிரதற்குக் கிடைக்கவில்லை வீடு, 

    நிரந்தரமாய்க் குடியேற…!

     

    மரபுக் கவிதையில்…

     

    பிணிநிறை மனித உடலென்னும்

         பொருத்த மில்லா வீட்டைவிட்டு

    துணையா யிருந்த உயிரதுதான்

         துறந்து வெளியே சென்றபின்னே,

    துணிந்து மீண்டும் குடியேறத்

         தகுந்த நிரந்தர வீடெதுவும்

    அணுகிட யெங்கும் கிடையாத

         அகில வாழ்வின் நிலையதுவே…!

     

    லிமரைக்கூ..

     

    உயிரிருந்தது உடலெனும் கூட்டில் , 

    வெளியேறியபின் அதற்கு இடமேயில்லை குடியேற    

    நிரந்தரமாய் ஆங்கோர் வீட்டில்…!

     

    கிராமிய பாணியில்…

     

    நெரந்தரமில்ல நெரந்தரமில்ல

    நிக்கும் உசிரு நெரந்தரமில்ல..

     

    நோநொடி நெறஞ்ச ஒடம்புலதான்

    நெருக்கியிருந்த உசிரதுதான்

    நெனச்சநேரம் போயிருமே,

    ஒடலவுட்டுப் போயிருமே..

     

    வெளியவந்த உசிரதுக்கு

    எப்பவும்

    நெலயாத்தங்க எடமில்லியே,

    ஒலகவாழ்க்க இதுதானே..

     

    பாத்துக்கோ

    நெரந்தரமில்ல நெரந்தரமில்ல

    நிக்கும் உசிரு நெரந்தரமில்ல…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • குறளின் கதிர்களாய்…(181)

    செண்பக ஜெகதீசன்

    உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே கல்லா தவர்.   (திருக்குறள் -395: கல்வி) 

    புதுக் கவிதையில்…

    செல்வரிடம் பொருள்பெற,
    வணங்கி நிற்பர்
    வறியோர்…
    கற்றோரிடம் கல்விபெற
    இதுபோல்
    பணிவுகொண்டோர் உயர்ந்தோர்…
    பணிவிது இல்லாதோர்
    பயனிலாக் கீழோரே…! 

    குறும்பாவில்…

    பொருள்பெறச் செல்வரிடம் பணிவோர்போல்
    கல்விபெறப் பணிவோர் உயர்ந்தோர்,
    பணிந்து கல்விபெறார் தாழ்ந்தோரே…! 

    மரபுக் கவிதையில்…

    வறுமையில் பொருள்பெறச் செல்வரிடம்
    -வணங்கிப் பணிந்து பெறுவோர்போல்,
    பொறுமையாய்க் கேட்டே கல்வியினைப்
    -பெறுவோர் தரத்தில் உயர்வாரே,
    சிறிதும் பணிவது இல்லாமல்
    -சேர்ந்த கற்றோர் தம்மிடத்தில்
    பெறுவோம் கல்வி எனுங்கல்லார்,
      -பெறுவர் நிலையில் கீழோரே…! 

    லிமரைக்கூ…

    பொருள்பெறுவர் செல்வரிடம் பணிந்து,
    பணிவுடன் கற்போர் உயர்ந்தோர், பணிவிலார்
    கீழோரெனக் கல்லாரைச்சொல் துணிந்து…! 

    கிராமிய பாணியில்...

    படிக்கணும் படிக்கணும் நல்லாப்படிக்கணும்,
    பாடுபட்டுப் பணிவோட நல்லாப்படிக்கணும்…
    பணக்காரங்கிட்ட பணம்கேக்கிற
    ஏழயப்போல பணிவோட
    படிச்சவங்கிட்ட கேட்டுப்படிச்சா,
    படிக்காதவனும் ஒசந்தவனாவான்… 

    அப்புடிப்
    பணிவோட படிக்காத படிக்காதவன்
    நெலமயில ரெம்பக் கீழ்த்தரமாவான்… 

    அதால,
    படிக்கணும் படிக்கணும் நல்லாப்படிக்கணும்,
    பாடுபட்டு பணிவோட நல்லாப்படிக்கணும்…!

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(180)

    செண்பக ஜெகதீசன்

    அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லைப்
    பொச்சாப் புடையார்க்கு நன்கு. (திருக்குறள் -534: பொச்சாவாமை) 

    புதுக் கவிதையில்…

    கோட்டை கொத்தளத்தால்
    பயனேதுமில்லை,
    பயம்கொண்டிருந்தால் நெஞ்சிலே… 

    அதுபோல
    மறதியுடையோர் பெற்றிருக்கும்
    பெருஞ்செல்லவத்தினாலும்
    பயனேதுமில்லை…! 

    குறும்பாவில்…

    பயமுடையோர் கொண்ட கோட்டைகளாலும்,
    மறதியுடையோர் பெற்ற பெருஞ்செல்வத்தாலும்
    பயனேதுமில்லை…! 

    மரபுக் கவிதையில்…

    நெஞ்சில் பயமது கொண்டமன்னன்
         -நாட்டிற் கரண்பல அமைத்தாலும்,
    கொஞ்சமும் அவற்றால் பயனில்லை
         -கோட்டை கொத்தளம் வீணாமே,
    மிஞ்சிடும் செல்வம் கொண்டோரும்
          -மறதி தன்னைக் கொண்டிருந்தால்,
    எஞ்சிடும் பயனதால் ஏதுமில்லை
          -எல்லாச் செல்வமும் வீண்தானே…! 

    லிமரைக்கூ…

    பயந்தவனுக்கு உதவிடாது கோட்டை,
    மறதியுடையோன் செல்வமும் பயன்தராது
    உறுதியாய்க் கொண்டுவரும் கேட்டை…! 

    கிராமிய பாணியில்…

    மறக்காத மறக்காத
    எதயுமே எளிதா மறக்காத… 

    காடுமல கோட்டயெல்லாம்
    காப்பாத்தாது நாட்ட,
    பயந்தே ஓடுற ராசாவுக்கு
    இதால
    பயனா ஏதும் கெடயாதே… 

    அதுபோல
    மறந்தேபோகிற மனுசங்கிட்ட
    மலயாச் செல்வஞ் சேந்தாலும்,
    அதுனால
    பயனா எதுவும் சேராதே… 

    அதால,
    மறக்காத மறக்காத
    எதயுமே எளிதா மறக்காத…!

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(179)

    -செண்பக ஜெகதீசன்

    மடியுளாள் மாமுகடி யென்ப மடியிலான்
    தாளுளாள் தாமரையி னாள். (திருக்குறள் -617:  ஆள்வினையுடைமை) 

    புதுக் கவிதையில்…

    முயற்சியற்ற சோம்பேறியிடம்
    வறுமைதான் வந்துசேரும்,
    வடிவிலே மூதேவியாய்…
    முயற்சியுடையவனிடம்
    திருமகள்
    வந்து குடியேறுவாள்
    சேரும் செல்வமாய்…! 

    குறும்பாவில்…

    முயற்சியின்மை கொண்டுவரும்
    மூதேவியாம் வறுமையை, முயற்சி
    சேர்க்கும் செல்வத்தை, திருமகளாய்…! 

    மரபுக் கவிதையில்…

    செயலில் முயற்சி யில்லாமல்
         -சோம்பி யிருப்பார் இல்லமதில்
    பயமது தந்திடும் மூதேவி
         -பற்றி உறைவாள் வறுமையதாய்,
    சுயமாய் முயன்றே செயல்புரிந்தால்
         -சேரும் செல்வம் அவ்விடமே,
    தயவாய்த் தனந்தரும் திருமகளும்
         -தானே உறைவாள் அவனுடனே…!

     லிமரைக்கூ…

    வறுமையாய் வந்திடுவாள் மூதேவி
    முயற்சியிலாரிடமே, செல்வமாய்ச் சேர்ந்தே
    முயற்சியுடையோருடன் உறைவாள் சீதேவி…!

    கிராமிய பாணியில்…

    முயற்சிவேணும் முயற்சிவேணும்
    செய்யும் செயலுல முயற்சிவேணும்…
    செய்யும் செயலுல முயற்சியில்லாம
    சோம்பியிருந்தா பயனில்ல,
    வாட்டும் வறுமயா மூதேவி
    வந்து தங்கிருவா வூட்டுக்குள்ள… 

    முயற்சியோட செயலச்செஞ்சா
    செல்வமெல்லாம் வந்துசேரும்,
    சேந்து குடிவருவா
    செல்வந்தரும் லெச்சுமியே…
    அதால,
    முயற்சிவேணும் முயற்சிவேணும்
    செய்யும் செயலுல முயற்சிவேணும்…!

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(178)

    செண்பக ஜெகதீசன்

    பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
    எண்ணிய தேயத்துச் சென்று. (திருக்குறள் -753: பொருள் செயல்வகை) 

    புதுக் கவிதையில்…

    சேரும் செல்வமோர்
    அணையா விளக்கு…
    அது
    சேர்ந்தவர்க்கு,
    எண்ணிய தேசமெலாம் சென்று
    இருளெனும் பகையழிக்கும்…! 

    குறும்பாவில்…

    செல்வமெனும் அணையா விளக்கு,
    சேர்ந்தவர் விரும்பும் தேசமெலாம் சென்று
    இருளாம் பகையை இல்லாமலாக்கும்…! 

    மரபுக் கவிதையில்…

    இருளை யகற்றி ஒளிகொடுக்கும்
         -என்றும் அணையா விளக்காகி,
    பொருளது அதனைச் சேர்ப்பவர்க்குப்
        -பெரிதும் துணையாய் வந்திடுமே,
    விரும்பும் தேசம் எங்கேயும்
    -விரைந்தே உடனே சென்றாங்கே
    பொருந்தா இருளாம் பகையழித்துப்
       -போகுமே பொருளாம் விளக்கதுவே…! 

    லிமரைக்கூ…

    அணையா விளக்காகும் பொருளே,
    அதுவே விரும்பும் தேசமெலாம் சென்றாங்கே
    போக்கிடும் பகையெனும் இருளே…! 

    கிராமிய பாணியில்…

    சேருசேரு செல்வஞ்சேரு
    நல்லபடியா செல்வஞ்சேரு…
    சேருஞ்செல்வம் ஒருவெளக்கு,
    சூறக்காத்து அடிச்சாலும்
    அதுவொரு அணையாவெளக்கு…
    அந்த வெளக்குதான்
    விரும்புற
    அந்நிய தேசமெல்லாம் போயி
    பகங்கிற இருட்டப்
    பக்குவமா அழிச்சிடுமே…
    அதுக்கு,
    சேருசேரு செல்வஞ்சேரு
    நல்லபடியா செல்வஞ்சேரு…!

     

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(177)

    செண்பக ஜெகதீசன்

    நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
    பத்தடுத்த கோடி யுறும். (திருக்குறள்-817: தீ நட்பு) 

    புதுக் கவிதையில்…

    உள்ளத்தில் பகைமையுடன்
    உதட்டிலே சிரிப்பைக் காட்டும்
    உறவு நட்பல்ல… 

    அதைவிட,
    பகைமையையே காட்டிடும்
    பகைவர் தரும் துன்பம்,
    பத்துகோடி மடங்கு
    இன்பந்தரும்…! 

    குறும்பாவில்…

    பகைகொண்ட உளத்துடன் நகைப்போர்
    நட்பைவிட, பகைவர்தரும் துன்பம்,
    பத்துகோடி மடங்கு இன்பமே…! 

    மரபுக் கவிதையில்…

    நெஞ்சில் முழுதும் நஞ்சுவைத்து
         -நிறைந்த பகையை மறைத்துவிட்டே
    கொஞ்சும் மொழியுடன் நகைத்துவரும்
       -கொடியோர் நட்பு வேண்டாமே,
    பஞ்சில் நெருப்பாய்ப் பகைவர்தரும்
      -பற்பல வகையாம் துன்பங்களும்,
    அஞ்சிடத் தக்கயிந் நட்பைவிட
    -அதிகக் கோடியாய் இன்பமாமே…! 

    லிமரைக்கூ…

    சிரித்திடுவார் பகையையுள் மறைத்து,
    தீநட்பிதனைவிடக் கோடிமடங்கு இன்பமே, வரும்
    தீயோர்துன்பம், பகையதை நிறைத்து…! 

    கிராமிய பாணியில்…

    வேண்டாம் வேண்டாம் தீநட்பு
    வெசமாக் கொல்லும் தீநட்பு…

     உள்ளே பகய மறச்சிவச்சி
    வெளியே சிரிப்போர் ஒறவுவேண்டாம்… 

    அப்புடிப்பட்ட நட்பவிட
    நேருல மோதுற பகயாளி
    நமக்குக் குடுக்கிற துன்பமெல்லாம்
    கோடி மடங்கு இன்பந்தான்… 

    அதால,
    வேண்டாம் வேண்டாம் தீநட்பு
    வெசமாக் கொல்லும் தீநட்பு…!

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய் …(176)

     

     

    விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி                                             

    னோட்டன்றோ வன்கண் ணவர்க்கு.

           -திருக்குறள் -775(படைச்செருக்கு)

     

    புதுக் கவிதையில்…

     

    பகைவரைப் போர்க்களத்தில்

    சினங்கொண்டு நோக்கிய

    கண்கள் நோக்கி

    வேலெறிந்தாலும்,

    கண்ணிமைத்தல் களங்கமென்று

    எதிர்நோக்குவர்,

    படைச்செருக்குமிக்க வீரர்…!

     

    குறும்பாவில்…

     

    சினந்த கண்கள் நோக்கிவரும் வேலுக்காகக்     

    கண்மூடார் களங்கமென்று,       

    படைத்திறன் மிக்க போர்வீரர்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    சினந்து களத்தில் போராடும்

         சிறந்த வீரர் கண்ணோக்கி

    கனத்த வேல்தான் வந்தாலும்,

         கண்ணை மூடுதல் களங்கமென்றே

    மனத்தில் நிறைந்த வீரத்துடன்

         மானம் காக்கும் செருக்குடனே

    தனது கண்ணை மூடாத

         திறமை தன்னைக் காண்பீரே…!

     

    லிமரைக்கூ..

     

    வீரச்செருக்கைப் பாரீர் போரில்,

    சினந்தகண்ணைச் சிறிதும் மூடாவீரர் 

    எறிந்தவேல் வந்தாலும் நேரில்…!

     

    கிராமிய பாணியில்…

     

    பாருபாரு படச்செருக்கப்பாரு,

    பட்டாளத்து வீரனோட

    படச்செருக்க நல்லாப்பாரு..

     

    கோவத்தில தெறந்தகண்ண

    கோல்லப்போற வேல்வந்தாலும்

    கொஞ்சமா மூடுனாலும்

    கொறச்சலுண்ணு,

    கொஞ்சங்கூட மூடாத

    தெறமிக்க வீரனப்பாரு..

     

    பாருபாரு படச்செருக்கப்பாரு,

    பட்டாளத்து வீரனோட

    படச்செருக்க நல்லாப்பாரு…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • குறளின் கதிர்களாய்…(175)

     

    செண்பக ஜெகதீசன்

     

    புறத்துறுப் பெல்லா யெவன்செய்யும் யாக்கை

    யகத்துறுப் பன்பி லவர்க்கு.

           –திருக்குறள் –79(அன்புடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    மனித உடலிலுள்ள

    புறத்துறுப்புக்களால்

    பயனேதுமில்லை,

    அகத்துறுப்பாம்

    அன்பு இல்லையெனில்…!

     

    குறும்பாவில்…

     

    அன்பெனும் அகவுறுப்பில்லையேல்,    

    மானிட உடலில்

    புறவுறுப்புக்களால் பலனேதுமில்லை…!

     

    மரபுக் கவிதையில்…

     

    உயிருடன் மனிதன் உலவிடவே

         உடலது கொண்ட அங்கங்கள்

    வயிறு முதலா பற்பலவும்

       வாய்த்தும் பலனாய் ஏதுமில்லை,

    உயர்ந்த உண்மை அன்பதுதான்

      உள்ளே உறுப்பாய் அமைந்தால்தான்

    உயர்வது பெற்றிடும் உடலதுவே,

       உண்மை இதுதான் உணர்வீரே…!

     

    லிமரைக்கூ..

     

    அகத்தினில் அன்புதான் அங்கமே,

    அதுயிலாது புறவுறுப்புக்களால் பலனில்லை,  

    அவற்றால் வாழ்வினில் பங்கமே…!

     

    கிராமிய பாணியில்…

     

    அன்புவேணும் அன்புவேணும்

    உள்ளத்தில அன்புவேணும்,

    அதுதான் ஒடம்புல

    உள்ளுறுப்பா அமயவேணும்..

     

    அதுயில்லாம

    வெளியவுள்ள உறுப்பெல்லாம்

    உண்மயில உறுப்பில்ல,

    அதுகளால பயனுமில்ல..

     

    அதால,

    அன்புவேணும் அன்புவேணும்

    உள்ளத்தில அன்புவேணும்…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(174)

     

    செண்பக ஜெகதீசன்

     

    அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து

    நல்விருந் தோம்புவா னில்.

           –திருக்குறள் –84(விருந்தோம்பல்)

     

    புதுக் கவிதையில்…

     

    இன்முகம் காட்டி

    நன்முறையில் உபசரித்தால்

    விருந்தினரை,

    அவன் வீட்டில்

    பொன்முகம் காட்டி

    திருமகள் வந்துறைவாள்-

    பொருள் தரவே…!

     

    குறும்பாவில்…

     

    வருவிருந்தை உபசரித்தால் உவகையுடன்,    

    விரும்பி வந்துறைவாள் திருமகள்-

    விருந்தாக அவன் வீட்டில்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    இனிய முகத்துடன் விருந்தினரை

         இன்சொல் பேசியே உபசரிக்கும்

    கனிந்த உள்ளம் கொண்டவன்தான்

       குடிசை வீட்டில் வாழ்ந்தாலும்,

    மனதில் ஆர்வம் பொங்கிடவே

      மண்ணைப் பொன்னாய் மாற்றிவிடும்

    தனத்துக் கரசி திருமகளும்

      தானய் வருவாள் அங்குறையவே…!

     

    லிமரைக்கூ..

     

    விருந்தினரை உபசரித்தால் இன்முகத்துடன்,

    விருப்பமொடு வந்துறைவாள் அவன்வீட்டில்

    வளந்தரும் திருமகளும் நன்முகத்துடன்…!

     

    கிராமிய பாணியில்…

     

    ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்

    விருந்தினர ஒபசரிக்கணும்,

    வீடுவந்த விருந்தினர

    விருப்பத்தோட ஒபசரிக்கணும்..

     

    நாலுவார்த்த நல்லதாப்பேசி

    நல்ல மொகத்தோட ஒபசரிக்கணும்..

     

    நல்லபடியா ஒபசரிக்கிற

    நல்லமனுசன் வீட்டுலதான்

    எல்லா செல்வமும் தருகிறவ,

    எங்களம்மா திருமகதான்

    நல்ல மனசோட குடிவருவா..

     

    அதால

    ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்

    விருந்தினர ஒபசரிக்கணும்,

    வீடுவந்த விருந்தினர

    விருப்பத்தோட ஒபசரிக்கணும்…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(173)

     

     

     

    உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங்                                          

    கல்லா ரறிவிலா தார்.

           -திருக்குறள் -140(ஒழுக்கமுடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    பற்பல நூல்கற்றும்

    அறிவில்லாதவரே,

    உலகத்தாரோடு

    ஒட்டி உறவாடி

    ஒழுகக் கல்லாதவர்…!

     

    குறும்பாவில்…

     

    உலகத்தவர்களுடன் உறவாடி    

    ஒழுக அறியாதவர்,    

    பலநூல் கற்றும் அறிவிலாரே…!

     

    மரபுக் கவிதையில்…

    அறிவைப் பெருக்கிடப் பலநூற்கள்

         ஆர்வமாய்த் தேடிப் படித்தேதான்

    சிறந்த அறிவைப் பெற்றவரும்,

         சுற்றி யுள்ள உலகோருடன்

    உறவாய்ச் சேர்ந்தே உறவாடி

         ஒழுகிடக் கற்க வில்லையெனில்,

    அறிந்த கல்வியில் பலனில்லை

         அறிவிலார் பெயரே பெறுவாரே…!

     

    லிமரைக்கூ..

     

    உலகத்தோடு சேர்ந்தொழுகக் கல்லார்,

    பலநூல் படித்தே அறிவைப் பெற்றாலும் 

    உண்மையிலவர் அறிவென்பதே இல்லார்…!

     

    கிராமிய பாணியில்…

     

    கத்துக்க கத்துக்க

    ஒழுக்கத்தக் கத்துக்க,

    ஒலகத்தோட ஒண்ணுசேந்து

    ஒழுக்கத்தக் கத்துக்க..

     

    ஒலகத்தோட ஒண்ணுசேந்து

    ஒழுக்கத்தக் கத்துக்கல்லண்ணா,

    பலவகையாப் படிச்சியேதான்

    பெருமறிவச் சேத்தாலும் பலனில்ல

    எந்தப் பலனுமில்ல,

    உண்மயில அவன் அறிவில்லாதவன்தான்..

     

    அதால

    கத்துக்க கத்துக்க

    ஒழுக்கத்தக் கத்துக்க,

    ஒலகத்தோட ஒண்ணுசேந்து

    ஒழுக்கத்தக் கத்துக்க…!

     

    -செண்பக ஜெகதீசன்…

     

     

    Share