-செண்பக ஜெகதீசன்

மடியுளாள் மாமுகடி யென்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள். (திருக்குறள் -617:  ஆள்வினையுடைமை) 

புதுக் கவிதையில்…

முயற்சியற்ற சோம்பேறியிடம்
வறுமைதான் வந்துசேரும்,
வடிவிலே மூதேவியாய்…
முயற்சியுடையவனிடம்
திருமகள்
வந்து குடியேறுவாள்
சேரும் செல்வமாய்…! 

குறும்பாவில்…

முயற்சியின்மை கொண்டுவரும்
மூதேவியாம் வறுமையை, முயற்சி
சேர்க்கும் செல்வத்தை, திருமகளாய்…! 

மரபுக் கவிதையில்…

செயலில் முயற்சி யில்லாமல்
     -சோம்பி யிருப்பார் இல்லமதில்
பயமது தந்திடும் மூதேவி
     -பற்றி உறைவாள் வறுமையதாய்,
சுயமாய் முயன்றே செயல்புரிந்தால்
     -சேரும் செல்வம் அவ்விடமே,
தயவாய்த் தனந்தரும் திருமகளும்
     -தானே உறைவாள் அவனுடனே…!

 லிமரைக்கூ…

வறுமையாய் வந்திடுவாள் மூதேவி
முயற்சியிலாரிடமே, செல்வமாய்ச் சேர்ந்தே
முயற்சியுடையோருடன் உறைவாள் சீதேவி…!

கிராமிய பாணியில்…

முயற்சிவேணும் முயற்சிவேணும்
செய்யும் செயலுல முயற்சிவேணும்…
செய்யும் செயலுல முயற்சியில்லாம
சோம்பியிருந்தா பயனில்ல,
வாட்டும் வறுமயா மூதேவி
வந்து தங்கிருவா வூட்டுக்குள்ள… 

முயற்சியோட செயலச்செஞ்சா
செல்வமெல்லாம் வந்துசேரும்,
சேந்து குடிவருவா
செல்வந்தரும் லெச்சுமியே…
அதால,
முயற்சிவேணும் முயற்சிவேணும்
செய்யும் செயலுல முயற்சிவேணும்…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.