செண்பக ஜெகதீசன்

 

அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து

நல்விருந் தோம்புவா னில்.

       –திருக்குறள் –84(விருந்தோம்பல்)

 

புதுக் கவிதையில்…

 

இன்முகம் காட்டி

நன்முறையில் உபசரித்தால்

விருந்தினரை,

அவன் வீட்டில்

பொன்முகம் காட்டி

திருமகள் வந்துறைவாள்-

பொருள் தரவே…!

 

குறும்பாவில்…

 

வருவிருந்தை உபசரித்தால் உவகையுடன்,    

விரும்பி வந்துறைவாள் திருமகள்-

விருந்தாக அவன் வீட்டில்…!

 

மரபுக் கவிதையில்…

 

இனிய முகத்துடன் விருந்தினரை

     இன்சொல் பேசியே உபசரிக்கும்

கனிந்த உள்ளம் கொண்டவன்தான்

   குடிசை வீட்டில் வாழ்ந்தாலும்,

மனதில் ஆர்வம் பொங்கிடவே

  மண்ணைப் பொன்னாய் மாற்றிவிடும்

தனத்துக் கரசி திருமகளும்

  தானய் வருவாள் அங்குறையவே…!

 

லிமரைக்கூ..

 

விருந்தினரை உபசரித்தால் இன்முகத்துடன்,

விருப்பமொடு வந்துறைவாள் அவன்வீட்டில்

வளந்தரும் திருமகளும் நன்முகத்துடன்…!

 

கிராமிய பாணியில்…

 

ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்

விருந்தினர ஒபசரிக்கணும்,

வீடுவந்த விருந்தினர

விருப்பத்தோட ஒபசரிக்கணும்..

 

நாலுவார்த்த நல்லதாப்பேசி

நல்ல மொகத்தோட ஒபசரிக்கணும்..

 

நல்லபடியா ஒபசரிக்கிற

நல்லமனுசன் வீட்டுலதான்

எல்லா செல்வமும் தருகிறவ,

எங்களம்மா திருமகதான்

நல்ல மனசோட குடிவருவா..

 

அதால

ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்

விருந்தினர ஒபசரிக்கணும்,

வீடுவந்த விருந்தினர

விருப்பத்தோட ஒபசரிக்கணும்…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *