செண்பக ஜெகதீசன்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.   (திருக்குறள் -395: கல்வி) 

புதுக் கவிதையில்…

செல்வரிடம் பொருள்பெற,
வணங்கி நிற்பர்
வறியோர்…
கற்றோரிடம் கல்விபெற
இதுபோல்
பணிவுகொண்டோர் உயர்ந்தோர்…
பணிவிது இல்லாதோர்
பயனிலாக் கீழோரே…! 

குறும்பாவில்…

பொருள்பெறச் செல்வரிடம் பணிவோர்போல்
கல்விபெறப் பணிவோர் உயர்ந்தோர்,
பணிந்து கல்விபெறார் தாழ்ந்தோரே…! 

மரபுக் கவிதையில்…

வறுமையில் பொருள்பெறச் செல்வரிடம்
-வணங்கிப் பணிந்து பெறுவோர்போல்,
பொறுமையாய்க் கேட்டே கல்வியினைப்
-பெறுவோர் தரத்தில் உயர்வாரே,
சிறிதும் பணிவது இல்லாமல்
-சேர்ந்த கற்றோர் தம்மிடத்தில்
பெறுவோம் கல்வி எனுங்கல்லார்,
  -பெறுவர் நிலையில் கீழோரே…! 

லிமரைக்கூ…

பொருள்பெறுவர் செல்வரிடம் பணிந்து,
பணிவுடன் கற்போர் உயர்ந்தோர், பணிவிலார்
கீழோரெனக் கல்லாரைச்சொல் துணிந்து…! 

கிராமிய பாணியில்...

படிக்கணும் படிக்கணும் நல்லாப்படிக்கணும்,
பாடுபட்டுப் பணிவோட நல்லாப்படிக்கணும்…
பணக்காரங்கிட்ட பணம்கேக்கிற
ஏழயப்போல பணிவோட
படிச்சவங்கிட்ட கேட்டுப்படிச்சா,
படிக்காதவனும் ஒசந்தவனாவான்… 

அப்புடிப்
பணிவோட படிக்காத படிக்காதவன்
நெலமயில ரெம்பக் கீழ்த்தரமாவான்… 

அதால,
படிக்கணும் படிக்கணும் நல்லாப்படிக்கணும்,
பாடுபட்டு பணிவோட நல்லாப்படிக்கணும்…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *