செண்பக ஜெகதீசன்

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி யுறும். (திருக்குறள்-817: தீ நட்பு) 

புதுக் கவிதையில்…

உள்ளத்தில் பகைமையுடன்
உதட்டிலே சிரிப்பைக் காட்டும்
உறவு நட்பல்ல… 

அதைவிட,
பகைமையையே காட்டிடும்
பகைவர் தரும் துன்பம்,
பத்துகோடி மடங்கு
இன்பந்தரும்…! 

குறும்பாவில்…

பகைகொண்ட உளத்துடன் நகைப்போர்
நட்பைவிட, பகைவர்தரும் துன்பம்,
பத்துகோடி மடங்கு இன்பமே…! 

மரபுக் கவிதையில்…

நெஞ்சில் முழுதும் நஞ்சுவைத்து
     -நிறைந்த பகையை மறைத்துவிட்டே
கொஞ்சும் மொழியுடன் நகைத்துவரும்
   -கொடியோர் நட்பு வேண்டாமே,
பஞ்சில் நெருப்பாய்ப் பகைவர்தரும்
  -பற்பல வகையாம் துன்பங்களும்,
அஞ்சிடத் தக்கயிந் நட்பைவிட
-அதிகக் கோடியாய் இன்பமாமே…! 

லிமரைக்கூ…

சிரித்திடுவார் பகையையுள் மறைத்து,
தீநட்பிதனைவிடக் கோடிமடங்கு இன்பமே, வரும்
தீயோர்துன்பம், பகையதை நிறைத்து…! 

கிராமிய பாணியில்…

வேண்டாம் வேண்டாம் தீநட்பு
வெசமாக் கொல்லும் தீநட்பு…

 உள்ளே பகய மறச்சிவச்சி
வெளியே சிரிப்போர் ஒறவுவேண்டாம்… 

அப்புடிப்பட்ட நட்பவிட
நேருல மோதுற பகயாளி
நமக்குக் குடுக்கிற துன்பமெல்லாம்
கோடி மடங்கு இன்பந்தான்… 

அதால,
வேண்டாம் வேண்டாம் தீநட்பு
வெசமாக் கொல்லும் தீநட்பு…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *