வரலாற்றில் தடம்பதித்த கல்கியின் பார்த்திபன் கனவு

-முனைவர் மு.புஷ்பரெஜினா

                தமிழக வரலாற்றைச் சிறப்பித்த  பெருமை சோழர்களையே சாரும். சோழர்களின் வரலாற்றை அறியpushpa உதவியாகப் பல ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றுள் இன்றிமையாத ஒன்று இலக்கியங்கள். இலக்கியங்களிலும் குறிப்பாக இக்கால இலக்கியங்களில் சோழர்களின் வரலாற்றை நம் கண்முன் கொணர்ந்த பெருமை வரலாற்று நாவல்களை இலக்கிய உலகிற்கு படைத்தளித்த கல்கியின் படைப்புகளையே சாரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

வரலாற்று நாவல்களின் தந்தை – கல்கி

                சோழநாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம், மாயூரத்திற்கு அருகில் புத்தமங்கலம் என்ற சிற்றூரில் பிறந்து, வரலாற்று நாவல்களால் தமிழ் இலக்கிய நெடும் பரப்பில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டவர் கல்கி. ஒருமுறை நண்பர்களுடன் மாமல்லபுரம் சென்று கடற்கரை மணல்வெளியில், நிலவொளியில் அமர்ந்திருந்த போதே கல்கிக்கு வரலாற்று நாவல் எழுத வேண்டும் என்ற ஆவல் மனத்தில் தோன்றியதாகச் ’சிவகாமியின் சபதம்’ நாவலின் முன்னுரையில் கூறியுள்ளதன் மூலம் அறியலாம்.

                கல்கியின் மனத்தில் வரலாற்று நாவலை எழுதவேண்டும் என்ற ஆவல் தோன்றியவுடன் தன்னை ஒரு வரலாற்று ஆராய்ச்சி மாணவனாகவே கருதிக் குறிப்புகளைத் திரட்டலானார். பல்வேறு வரலாற்று நூல்களைப் படித்ததோடு தான் எழுதவிருக்கும் வரலாற்று நாவலோடு தொடர்புடைய மாமல்லபுரம், தஞ்சை. இலங்கை போன்ற நாடுகளுக்கும், ஊர்களுக்கும், அஜந்தா போன்ற இடங்களுக்கும் சென்று கண்டு வந்தார்.

                கல்கி தம் வரலாற்று நாவல்களில், வரலாற்றுச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வரலாற்று மாந்தர்களையும், கற்பனை மாந்தர்களையும் சேர்த்து வரலாற்றுக்கு முரணாகாமல் அக்கால மக்களின் பழக்க வழங்கங்கள், மனவியல்புகள், கலை, இலக்கியச்சிறப்பு முதலானவைகள் வெளிப்படுவதற்கு ஏற்ற கற்பனை வளத்தோடு, நாவலுக்குரிய தோற்றம், உள்ளடக்கம் குன்றாத வகையில் படைத்தளித்தார். ஆகவே கல்கி வரலாற்று நாவல்களின் வழிகாட்டி என்று புகழப்படுகிறார்.

கல்கியின் பார்த்திபன் கனவு

                பார்த்திபன் கனவு கல்கியின் முதல் வரலாற்று நாவலாகும். மகத்தான மானுட நாடகங்களை உருவாக்க கல்கி எடுத்து வைத்த முதல் அடி இது எனலாம்.

                 அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு நாட்டுப்பற்று தோன்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு கல்கி வரலாற்று நாவலை எழுதியிருக்க வேண்டும் என்று கூறும் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள், கல்கியின் பார்த்திபன் கனவு நாவலின் முன்னுரையில்,

                “சோழநாடு சுதந்திரம் இழந்து அடிமை வாழ்வு வாழ்கிறது. அதன் சுதந்திர வாழ்வையும், பரதகண்டம் முழுவதிலும் பரந்து நிற்க வேண்டிய புகழையும் குறித்துப் பார்த்திபன் கனவு கண்டு, அக்கனவைச் சித்திரமாக எழுதி, ஏங்கி ஏங்கி வருந்துகிறான். தனது ராணியாகிய அருள்மொழியையும், தன் புதல்வனாகிய விக்கிரமனையும் தன் கனவுலகைக் காணச் செய்கிறான். சுதந்திரத்தை மீட்கும் பொருட்டு நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்தியுடன் வீரப்போர் செய்து மடிகிறான். இவ்வாறு நாவலின் முதலிலிருந்து கடைசிவரை தேசப்பற்று என்னும் அடிநாதமே ஒலித்துக் கொண்டிருக்கிறது” என்பார்.

                நாவலின் வெற்றி அதன் கதைக்கரு, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, உரையாடல், உத்திமுறைகள், காட்சி, வருணனை, நடை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே அமையும்.

பார்த்திபன் கனவு – கதைப்போக்கு

                பார்த்திபன் கனவைக் கல்கி அவர்கள் மூன்று பாகங்களாகப் பகுத்துள்ளார். பார்த்திப சோழன் மரணத்துடன் முதல் பாகமும், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் நடப்பதாகத் தொடங்கும் இரண்டாம் பாகம் விக்கிரமன் செண்பகத்தீவுக்குச் செல்ல, அரசி அருள்மொழி சிறுத்தொண்டருடன் புண்ணிய நகரங்களைத் தரிசிக்கச் செல்வதாகவும், அதன் பின் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கும் நிகழ்ச்சியுடன் மூன்றாம் பாகம் தொடங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கதை சுமார் பத்து ஆண்டுகள் நடப்பதாகக் கல்கி அமைத்துள்ளார்.

                பார்த்திப சோழனின் கனவு, அவன் விக்கிரமனிடம் பெறும் வாக்குறுதி, சிவனடியாரான நரசிம்மர் பார்த்திபனுக்குத் தரும் வாக்குறுதி, அதன்படி விக்கிரமனைச் சுதந்திர மன்னனாக்கச் செண்பகத்தீவுக்கு அனுப்புதல், அவன் மாவீரத்தை விளக்கச் சிவனடியாரைக் கபால பைரவனிடமிருந்து விக்கிரமன் காப்பாற்றுதல், நரசிம்மர் அவனைச் சோழ நாட்டின் சுதந்திர மன்னனாக்குதல் என்பதாக நாவலின் கதை கட்டுக்கோப்போடு முரணின்றி வளர்ந்து முழுத்தன்மை பெறுவதை அறிய முடிகிறது,

பாத்திரப்படைப்பு

                தன் சோழநாடு எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டு ஓவியமாக வரைந்து, பெரும் படை கொண்ட நரசிம்ம வர்ம பல்லவனிடம் தோல்வி அடைந்து இறப்பதாகப் பார்த்திப மகாராஜா காட்சியளிக்கிறார்.

                பார்த்திப மகாராஜாவின் மகனாக அவசரப்பட்டு எதையாவது செய்து மாட்டிக்கொள்வதும், அடுத்தவரின் உதவியில் தப்பித்துக் கொள்வதுமாக விக்கிரமனின் கதாப்பாத்திரம் மூலம் சுவாரசியப்படுத்தி இருக்கிறார் கல்கி.

                படகோட்டி பொன்னனும், அவன் மனைவி வள்ளியும், சக்கரவர்த்தி மகள் குந்தவியும் சுவாரசியத்தை அதிகப்படுத்துகின்றனர். குந்தவி விக்கிரமனை நினைத்து உருகுவதும், அவனுக்காகத் தன் தந்தை  நரசிம்மச் சக்கரவர்த்தியுடன் வாக்குவாதம் செய்வதுமாகிய இடங்களில் கல்கி அழகான வர்ணனையைத் தந்துள்ளார்.

                நரசிம்ம வர்மனால் செண்பகத்தீவு சென்று மன்னனான விக்கிரமன் தேவசேனனாக மாறுவேடம் பூண்டு  மாமல்லபுரம் செல்ல, வீரசேனனால் காப்பாற்றப்படுகிறான். மாரப்பனால் காஞ்சிக்கு அனுப்பிவைக்கப்பட்ட விக்கிரமன் கபாலிகர்களிடமிருந்து பொன்னனால் காப்பாற்றப்பட்டு, மகேந்திர மண்டபத்தில் சிறுத்தொண்டர் குழுவினருடன் இருந்த அருள்மொழியைச் சந்திக்கின்றான்.

                சிறுத்தொண்டர் பல்லவரின் படைத்தலைவராக வாதாபி சென்ற போது, அவரால் உயிர்ப்பிச்சையளிக்கப்பட்ட, நீலகேசியே கபாலருத்ரபைரவன் என்றும், அவன் சூழ்ச்சியினால் கலகம் உண்டாக்கி நாட்டை வெல்லக்கருதியதாகக் கூற, மாரப்பன் நீலகேசியாகிய பைரவனைக் கொன்றார்.

                விக்கிரமன் மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட, விசாரணையில் நரசிம்மரே சிவனடியார் என்பதாகப் பாத்திரங்களைப் படைத்துச் செல்கிறார் கல்கி.

பார்த்திபன் கனவு நாவலின் தொடக்கமும் முடிப்பும்

                பார்த்திபன் கனவு நாவல் தோணித்துறை எனும் அத்தியாயத்தில் காவிரிக்கரையின் இயற்கை வருணனையோடு தொடங்குகிறது. ராஜாவும் ராணியும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு  யுத்தம் வரப்போவதாகப் பொன்னன் கூறுகிறான். அப்போது மகாராஜாவுக்குச் செய்தி கொண்டு வந்த வீரன் ஒருவன் தோணியைச் செலுத்துமாறு கூறுகிறான்.

                சோழநாட்டில் போர் வரப்போகிறதே! யாருடன் சோழன் போரிடப் போகிறான்? அரசருக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறான் ஒரு வீரன்! அது என்ன செய்தி? போரைப்பற்றிய செய்தியா? வேறு செய்தியா? என்று வாசகர்களைப் பார்த்திபன் கனவு எனும் கோட்டைக்குள் ஆவலுடன் நுழையச் செய்கிறது கல்கியின் நடை.

                இவ்வாறு ஆவலுடன் தொடங்கிய பார்த்திபன் கனவு நாவல், நரசிம்மனின் முயற்சி வென்றதா? குந்தவி காதலனைக்  கைப்பிடித்தாளா? விக்கிரமன் பார்த்திபனின் கனவை மெய்ப்பித்தானா? விக்கிரமனின் தாய் மீட்கப்பட்டாளா? விக்கிரமனுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது.

              பார்த்திபன் சிறந்த வீரன் என்பதை அறிந்த  நரசிம்மர் தனது இலட்சியத்தையும் விடுத்து  நாடு கடத்தப்பட்ட விக்கிரமன் அதை மீறித் திரும்பியதால், சோழரின் மணிமகுடத்தை விக்கிரமச் சோழர் இனிமேல் தனியாகத்தான் தலையில் தாங்க வேண்டும் என்று புதுமையான தண்டனை அளிக்க, விக்கிரமன் சோழ நாட்டின் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தான்.

             மேலும் பார்த்திபன் கனவில் ‘கனவு நிறைவேறியது’ என்னும் இறுதி அத்தியாயத்தில் தமிழகம் முழுவதையும் ஒரு நாடாக்கித்தன் கீழ் கொண்டுவந்து ஆளும் நரசிம்மவர்மரின் இலட்சியக்கனவு  நிறைவேறவில்லை என்பதாக நாவல் சுவையிறக்கமாக அமைகிறது.

சோழ வரலாற்றை உணர்த்திய பார்த்திபன் கனவு

பொதுவாக வரலாற்று நாவல்களில் காணப்படுவது போன்றே வீரமும் காதலும் முதன்மைப்படுத்தப்படுகின்றன என்றாலும், தமிழகத்தில் சைவமும் சமணமும் மோதிக்கொண்ட ஒரு காலச்சூழலில் காபாலிகச் சமயம் அரசியலில் செல்வாக்குப்பெற்றிருந்த செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. அரசியலும் சமயமும் கைக்கோர்த்துக் கொள்வதனால் நிகழும் தீமை தெளிவாக முன்வைக்கப்படுகிறது.

ஆனாலும் கடல் கடந்த நாடுகளில் புலிக்கொடி பறக்க வேண்டும் என்று பார்த்திபன் கண்ட கனவு சுமார் 300 ஆண்டுகளுக்குப் பின்னர், இராசராசன், இராசேந்திரன் ஆகிய சோழப்பேரரசர்கள் காலத்திலேயே முழுமையாக நிறைவேறியது என்னும் வரலாற்றை உண்மையை உணர்த்தும் வகையில் பார்த்திபன் கனவு நாவல் அமைந்துள்ளது. கல்கியைப் போன்ற வரலாற்று நாவலாசிரியர்களின் படைப்புகள் வழி நாட்டுப்பற்றும், மக்களின் பண்பாடும், பழக்கவழக்கங்களும் இளைய சமுதாயத்தினரால் உணரப்படவேண்டும்.

துணை நூல்கள்:

  1. கல்கியின் பார்த்திபன் கனவு, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை.
  2. தமிழக வரலாறும் பண்பாடும், வே.தி.செல்லம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
  3. வரலாற்று நாவல்களின் நோக்கமும், பயனும், கி.வா.ஜகந்நாதன்.
  4. கல்கியின் வரலாற்று நாவல்கள், பூவண்ணன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “வரலாற்றில் தடம்பதித்த கல்கியின் பார்த்திபன் கனவு

  1. தோழிக்கு வாழ்த்துக்கள். தாங்கள் புதினம், சிறுகதைகள் படிப்பதில் ஆர்வமிக்கவர் என்பதை அறிவேன். தொடர்ந்து எழுதுங்கள். மிக்க மகிழ்ச்சி

  2. நன்றி தோழி காயத்ரி பூபதி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *