உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங்                                          

கல்லா ரறிவிலா தார்.

       -திருக்குறள் -140(ஒழுக்கமுடைமை)

 

புதுக் கவிதையில்…

 

பற்பல நூல்கற்றும்

அறிவில்லாதவரே,

உலகத்தாரோடு

ஒட்டி உறவாடி

ஒழுகக் கல்லாதவர்…!

 

குறும்பாவில்…

 

உலகத்தவர்களுடன் உறவாடி    

ஒழுக அறியாதவர்,    

பலநூல் கற்றும் அறிவிலாரே…!

 

மரபுக் கவிதையில்…

அறிவைப் பெருக்கிடப் பலநூற்கள்

     ஆர்வமாய்த் தேடிப் படித்தேதான்

சிறந்த அறிவைப் பெற்றவரும்,

     சுற்றி யுள்ள உலகோருடன்

உறவாய்ச் சேர்ந்தே உறவாடி

     ஒழுகிடக் கற்க வில்லையெனில்,

அறிந்த கல்வியில் பலனில்லை

     அறிவிலார் பெயரே பெறுவாரே…!

 

லிமரைக்கூ..

 

உலகத்தோடு சேர்ந்தொழுகக் கல்லார்,

பலநூல் படித்தே அறிவைப் பெற்றாலும் 

உண்மையிலவர் அறிவென்பதே இல்லார்…!

 

கிராமிய பாணியில்…

 

கத்துக்க கத்துக்க

ஒழுக்கத்தக் கத்துக்க,

ஒலகத்தோட ஒண்ணுசேந்து

ஒழுக்கத்தக் கத்துக்க..

 

ஒலகத்தோட ஒண்ணுசேந்து

ஒழுக்கத்தக் கத்துக்கல்லண்ணா,

பலவகையாப் படிச்சியேதான்

பெருமறிவச் சேத்தாலும் பலனில்ல

எந்தப் பலனுமில்ல,

உண்மயில அவன் அறிவில்லாதவன்தான்..

 

அதால

கத்துக்க கத்துக்க

ஒழுக்கத்தக் கத்துக்க,

ஒலகத்தோட ஒண்ணுசேந்து

ஒழுக்கத்தக் கத்துக்க…!

 

-செண்பக ஜெகதீசன்…

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *