க. பாலசுப்பிரமணியன்

கற்றலும் அதனைச் சார்ந்த கொள்கைகளும்

education

விழி, செவி மற்றும் செயல் சார் கற்றல் முறைகளின் பாதிப்புகள் கற்றலில் மட்டுமின்றி பொதுவாகவே வாழ்க்கையின் பல நடைமுறைகளில் தங்கள் அடையாளங்களைக் காட்டுகின்றன. பொருள்களைத் தேர்ந்தெடுத்தல், உரையாடும் முறைகள், செயல்படும் முறைகள், நம்முடைய நிரந்தரமான பழக்க வழக்கங்கள் ஆகிய பல வாழ்க்கை வழிகளில் இவைகளின் ஆதிக்கமும் ஊடுருவல்களும் காணப்படுகின்றன. ஆகவே, வளரும் பருவங்களில் கற்றலின் போது இந்த ஆதிக்கங்களுக்கு ஏதுவான முறையில் கற்றல் ஏற்படுமானால் அவை அந்தத் தனி நபரின் வளர்ச்சிக்கும் மனநலத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் ஏணிப்படியாக அமையும் என்பது பொதுவாக மன, மூளை-நரம்பியல் நிபுணர்களின் கருத்து.

மூளையில் கற்றலின் தாக்கங்களை ஆராய்ச்சி செய்த  “காண்டல்” என்ற அறிவியல் நிபுணர் -“கற்றல் மூளைநரம்புகளின் இணையத்தைப் பொறுத்து அமைகின்றது ” (Learning is a neural connect)  என்ற ஒரு கருத்தை முன்வைத்து கற்றலின் பொழுது மூளை நரம்புகள் தங்களுடைய பழைய இணைப்புகளை விலக்கி புதிய இணைப்புகளை ஏற்படுத்திக்கொள்கின்றன என்ற ஒரு ஆய்வினை வெளிப்படுத்தினார். இதற்கான நோபல் பரிசு அவருக்கு 2000-மாவது ஆண்டில் வழங்கப்பட்டது .

இந்த ஆய்வினால் வெளிப்படும் ஒரு முக்கியக் கருத்து “வகுப்பறைகளில் கற்றலின் பொழுது இருக்கின்ற சூழ்நிலைகள் கற்றலுக்கான உள்ளமைப்புகள் மூளையில் ஏற்படும் இந்த இணைப்புகளுக்கும் இணையங்களுக்கும் துணையாகவும் அவற்றை வளப்படுத்துவதாகவும் அமைதல் அவசியம் என்பதே”. எனவே  பள்ளிச்சூழ்நிலைகள், பாட அமைப்புக்கள், பாடங்கள் நடத்தப்படும் விதங்கள், பள்ளிகளில் உறவாட அமையும் சூழ்நிலைகள் போன்ற பல இந்த இணைப்புக்களுக்கு உதவியாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்க வாய்ப்புண்டு. அதை சரியாக அமைப்பது சமுதாயத்தின் முக்கிய  கடமை.

மூளை தொடர்ந்து கற்றலில் ஈடுபட்டு வருகின்றது. கருவறையிலிருந்து கடைசி மூச்சு வரை கற்றல் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ நடந்து கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக மூளையின்  நியூரோன்களின் கட்டமைப்புகள் தொடர்ந்து மாறிக்கொண்டும்  புதிதாகிக்கொண்டும் இருக்கின்றன. இது நாம் விரும்பியோ விரும்பாமலோ நடக்கின்ற செயல். இதன் மேல் நமக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது.

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன்னே “இளமையில் கல் ” என்ற கருத்து வலுவாக இருந்தது. பொதுவாக கற்றலின் வேகமும் ஆழமும் இளமையில் அதிகமாக இருக்கும் என்றும் மேலும்  சுமார் முப்பது வயதுக்கு மேல் கற்றலின் வேகமும் முழுமையும் குறைந்துவிடும் என்றும் கருதப்பட்டது. ஆனால் இந்த கருத்து தற்போது முழுமையாக நிராகரிக்கப்பட்டு  “கற்றல் எந்த வயதிலும் நடக்கலாம் .. கடைசி மூக்சுவரை மூளை கற்றலுக்குத் தயாராகவே இருக்கின்றது” என்ற சீரிய கருத்து ஏற்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நரம்பு நெகிழின்மை  (நியூரோ-பிளாஸ்டிசிடி )  என்ற புதிய அறிதல் மூலமாக நமது மூளையின் வேலைத்திறன்கள் பற்றிய புதிய கருத்துக்கள்  கற்றல் பற்றிய நமது பழைய கருத்துக்களை வெகுவாக மாற்றியுள்ளன. மாணவர்களின் கற்றல் திறன்கள், கற்றலின் ஆழம், கற்றல் பற்றிய விருப்பு- வெறுப்புகள், ஆகியவை பற்றி புதிய கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த கண்டுபிடிப்புகளின் காரணமாக கற்றலைப்  பற்றிய கொள்கைகளில் பலவித மாற்றங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன  ஒரு  நூறு ஆண்டுகளுக்கு முன்பு கற்றலின் இலக்கு கற்பவரின் நடவடிக்கைகளில் ஏற்படும் சிறப்பான பயனுள்ள மாற்றங்கள்  (Behavioural  outcomes ) என்பதை அடிப்படையாகக்கொண்ட “Behaviourism” என்பதாக இருந்தது . பின்னொரு காலகட்டத்தில் வல்லுநர்கள் “அறிவாற்றல்” இருந்தால்தான் நடைமுறை மாற்றங்கள் ஏற்படும் என்ற கருத்தை முன்னிறுத்தி “அறிவாற்றல் இயல்” (Cognitivism)  என்ற ஒரு கொள்கையை முன்வைத்தனர்

பின்னொரு காலகட்டத்தில் “கற்றல்” என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் மூளையில் நடக்கும் ஒரு சிந்தனை சார்ந்த செயல்; எனவே ஒவ்வொரு கற்றலும் ஆக்கப்பூர்வமானது”  என்ற கருத்தை மேற்கொண்டு Constructivism”  என்ற புதியதோர் கருத்தை முன் வைத்தனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் காரணமாக கற்றலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிந்து கற்றல் ஒரு தனிப்பட்ட செயலாக இருந்தாலும் அது வெளியுலகின் துணையோடும் தாக்கங்களினாலும் உருவாக்கப்படுகின்றது  என்ற கருத்தை மேற்கொண்டு “connectivism என்ற ஒரு கருத்தை ஏற்று “கற்றல் என்பது ஒரு சமூக அறிவாக்கச் செயல் “(KNOWLEDGE IS  A SOCIAL CONSTRUCT )  என்ற கருத்தை முன்னிறுத்தியுள்ளனர்

எனவே கற்றலைப் பற்றியும் அறிவாக்கத்தைப் பற்றியும் நமது கருத்துக்களும் சிந்தனையும் காலப் போக்கில் மாறிக்கொண்டும் புதிதாக உருவாகிக்கொண்டும் வருகின்றது.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *