Tag: செண்பக ஜெகதீசன்

  • குறளின் கதிர்களாய்…(157)

    –செண்பக ஜெகதீசன்

    முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல். (திருக்குறள் -559: கொடுங்கோன்மை) 

    புதுக் கவிதையில்…

    முறையானவற்றை விட்டு மன்னன்
    முறையற்றவற்றைச் செய்தால்,
    பெய்யும் காலத்திலும்
    மழை
    பெய்யாமல் போய்விடும்…! 

    குறும்பாவில்…

    முறையற்ற மன்னர்தம் ஆட்சியில்,
    நாட்டில்
    வராமல் போய்விடும் வான்மழை…! 

    மரபுக் கவிதையில்…

    நாட்டில் மக்கள் நலம்பெறவே
         -நல்ல திட்டம் வகுக்காமல்,
    வாட்டி வதைக்கும் கொடுங்கோலர்
       -வேதனை மிக்க ஆட்சியிலே,
    வாட்டம் போக்கக் காலத்திலே
      -வந்து பெய்யும் மழையதுவும்,
    நாட்டுப் பக்கம் பெய்யாமல்
      -நலிய விட்டுப் போய்விடுமே…! 

    லிமரைக்கூ…

    முறையாய் ஆட்சியதைச் செய்யாமல்,
    கொடுங்கோலாட்சி செய்வோர் நாட்டிலெங்கும்
    வரும்மழையும் போய்விடும் பெய்யாமல்…! 

    கிராமிய பாணியில்…

    கூடாது கூடாது
    கொடுங்கோலாட்சி கூடாது… 

    மக்களுக்குச்
    செய்யவேண்டியதச் செய்யாம
    செய்யக்கூடாததச் செய்வோர்
    செய்யிற ஆட்சியால பலனில்ல… 

    அவரால
    வாற காலத்தில வாற மழையும்
    வராமலே வறண்டு போயிடுமே,
    மக்கள்
    வாழ்க்க இருண்டு போயிடுமே… 

    அதால,
    கூடாது கூடாது
    கொடுங்கோலாட்சி கூடாது…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(156)

    –செண்பக ஜெகதீசன்

    உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
    மரமக்க ளாதலே வேறு. (திருக்குறள் -600: ஊக்கமுடைமை) 

    புதுக் கவிதையில்…

    ஊக்கமே ஒருவனுக்கு
    உறுதியான அறிவு,
    ஊக்கமற்றோர்
    வெறும் மரங்களே… 

    உருவிலவர்
    மனிதரைப் போலிருப்பது
    மட்டுமே வேறுபாடு…! 

    குறும்பாவில்…

    ஊக்கமுடைய மனிதர் மட்டுமே
    உறுதியான அறிவுடையோர்,
    ஊக்கமிலார் மனிதவுருவில் மரங்களே…! 

    மரபுக் கவிதையில்…

    ஊக்கம் ஒன்றே ஒருவன்தன்
         -உறுதி யான அறிவாகும்,
    ஊக்க மில்லா மனிதரெல்லாம்
         -ஒன்றும் பயனிலா மரமாவர்,
    நோக்கில் காணும் வேறுபாடு
         -நிற்கு மந்த மரமெல்லாம்
    நோக்க மனிதர் உருவிலேதான்
         -நிற்ப தன்றி வேறிலையே…! 

    லிமரைக்கூ…

    ஊக்கமிலாரை மரமெனவே கூறு,
    ஊக்கமே உறுதியான அறிவு, மரமவைதான்
    மனிதவுருவன்றி வேறுபாடில்லை வேறு…! 

    கிராமிய பாணியில்…

    ஊக்கம் வேணும் ஊக்கம் வேணும்
    வாழ்க்கயில மனுசனுக்கு ஊக்கம் வேணும்…
    ஊக்கம் ஒண்ணே மனுசனுக்கு
    உண்மயான அறிவாவும்… 

    ஊக்கமில்லா மனுசரெல்லாம்
    ஒண்ணும் ஓதவாத மரந்தானே,
    மனுசன்போல உருவத்தில மரந்தானே,
    வேறயில்ல வித்தியாசம்… 

    அதால,
    ஊக்கம் வேணும் ஊக்கம் வேணும்
    வாழ்க்கயில மனுசனுக்கு ஊக்கம் வேணும்…!

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(155)

    –செண்பக ஜெகதீசன்

    நெடுநீர் மறவி மடிதுயில் நான்குங்
    கெடுநீரார் காமக் கலன். (திருக்குறள் -605: மடியின்மை) 

    புதுக் கவிதையில்…

    காலங் கடத்தலுடன் மறதி
    சோம்பல் தூக்கம்,
    இவை நான்கும்
    வாழ்வில் கெட்டழிவோர்
    விரும்பியேறும் மரக்கலங்களாம்…! 

    குறும்பாவில்…

    மறதி காலங்கடத்தல் சோம்பல் தூக்கமிவை
    மரக்கலங்கள் வாழ்க்கைக் கடலில்,
    விரும்பி ஏறுவர் கெட்டழிவோர்…! 

    மரபுக் கவிதையில்…

    காலங் கடத்தல் மறதியோடு
         -குறையாச் சோம்பல் கடுந்தூக்கம்,
    ஞால வாழ்வில் இவைநான்கும்
         -நன்றாய் வாழ விரும்பாமல்
    கால மெல்லாம் கெட்டழிவோர்
         -கருத்தில் கொண்டே விருப்பமுடன்
    பாலமாய் ஏறிடும் மரக்கலமாம்,
         -பாரீர் நீரே பாரோரே…! 

    லிமரைக்கூ…

    காலங்கடத்தல் சோம்பல் மறதி,
    கடுந்தூக்கம் கலம்நான்கிவை ஏறிச்செல்வோன்
    கெட்டழிவான் வாழ்விலே உறுதி…! 

    கிராமிய பாணியில்…

    வேண்டாம் வேண்டாம்
    சோம்பலு வேண்டாம்,
    வாழ்வக் கெடுக்கிற
    சோம்பலு வேண்டாம்… 

    சோம்பலோட கூடவே
    காலங்கடத்தலு மறதி
    கடுந்தூக்கம் எல்லாமே
    கெட்டழிக்கும் மனுசனயே,
    கேடுகெட்டவன் ஏறுகிற
    கப்பலுதான் இதுநாலும்… 

    அதால,
    வேண்டாம் வேண்டாம்
    சோம்பலு வேண்டாம்,
    வாழ்வக் கெடுக்கிற
    சோம்பலு வேண்டாம்…!

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(154)

    –செண்பக ஜெகதீசன்

    அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
     பிற்பயக்கும் நற்பா லவை. (திருக்குறள் -659:வினைத் தூய்மை) 

    புதுக் கவிதையில்…

    அடுத்தவரை ஒருவன்
    அழவைத்து
    சேர்த்த செல்வமெல்லாம்,
    அழிந்திடும்
    அவனை அழவிட்டே… 

    நற்செயலால் பெற்ற
    பொருளை இழப்பினும்,
    பின்னர்
    நற்பயனே கிட்டும்…! 

    குறும்பாவில்…

    பிறரைத் துன்புறுத்தி பெற்றசெல்வம்
    போய்விடும் அவனை அழவிட்டு,
    இழப்பிலும் நல்வழிச்செல்வம் நன்மையே தரும்…! 

    மரபுக் கவிதையில்…

    பிறரை ஒருவன் அழவைத்துப்
      பொருளைச் சேர்த்தால் போகுமது
    துறந்தே யவனை அழவிட்டே
      துயரில் அவனை விழவிட்டே,
    சிறந்த வழியில் வந்தபொருள்
      சென்றா லதுவும் இழப்பில்லை,
    அறத்தால் வந்திடும் நற்பயனை
      அதுவே கொண்டு சேர்த்திடுமே…! 

    லிமரைக்கூ…

    பிறரழச் செல்வமதைச் சேர்க்காதே,
    போய்விடுமுனை அழவிட்டே, நல்வழிச் செல்வந்தரும்
    நற்பலனே, போனதெனப் பார்க்காதே…! 

    கிராமிய பாணியில்…

    சேக்காத சேக்காத
    செல்வத்தத்தான் சேக்காத,
    அடுத்தவன அழவுட்டு
    ஆசப்பட்டு சேக்காத… 

    அது ஒன்ன அழவுட்டு
    அத்தினயும் போயிடுமே
    அழிஞ்சிதான் போயிடுமே…
    நல்லவழியில சேத்தபணம்
    நம்மவுட்டுப் போனாலும்
    நட்டமில்ல நட்டமில்ல
    நல்லபலனக் கொண்டுவரும்… 

    அதால,
    சேக்காத சேக்காத
    செல்வத்தத்தான் சேக்காத,
    அடுத்தவன அழவுட்டு
    ஆசப்பட்டு சேக்காத…!

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(153)

    –செண்பக ஜெகதீசன்

    முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங்
    காயினுந் தான்முந் துறும். (திருக்குறள் -707: குறிப்பறிதல்) 

    புதுக் கவிதையில்…

    உவகையிலும் வெறுப்பினிலும்,
    உண்மையைக் காட்டிவிடும்
    மனிதனின் முகம்… 

    அம்முகத்தைவிட
    அறிதிறம் மிக்கது
    எதுவுமில்லை…! 

    குறும்பாவில்…

    உண்மையைக் காட்டிவிடும் மனிதமுகம்
    அவன் மகிழ்ச்சியிலும் வெறுப்பினிலும்,
    அதைவிட அறிதிறமிக்கது ஏதுமில்லை…! 

    மரபுக் கவிதையில்…

    மகிழ்ச்சியில் மனிதன் இருந்தாலும்,
         -மற்றவர் மீது வெறுப்பதையே
    அகத்தில் வைத்துக் கொண்டேதான்
         -அழுத்த மாக மறைத்தாலும்,
    முகமது காட்டிக் கொடுத்துவிடும்
         -மனிதனின் உண்மை நிலையினையே,
    அகமதைக் காட்டும் முகத்தைப்போல்
         -அறிதிற மிக்கது வேறிலையே…! 

    லிமரைக்கூ…

    மகிழ்ச்சி வெறுப்பின் எல்லை
    மறைக்காது காட்டும் மனிதமுகம்போல் வேறு
    அறிதிறம் மிக்கது இல்லை…! 

    கிராமிய பாணியில்…

    காட்டிக்குடுக்கும் காட்டிக்குடுக்கும்
    மனுசமொகமே காட்டிக்குடுக்கும்…

    அவன்
    சந்தோசமா இருந்தாலும்,
    அடுத்தவன்மேல வெறுப்புலத்தான்
    சங்கடத்தில இருந்தாலும்
    அவன்மொகமே காட்டிக்குடுக்கும்… 

    எதுவுமில்ல எதுவுமில்ல
    அதுபோல எதயுமே கண்டுபுடிக்கும்
    கருவிதான் எதுவுமேயில்ல…

    காட்டிக்குடுக்கும் காட்டிக்குடுக்கும்
    மனுசமொகமே காட்டிக்குடுக்கும்…!

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(152)

    –செண்பக ஜெகதீசன்

    வாளோடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலோடென்
    னுண்ணவை யஞ்சு பவர்க்கு. (திருக்குறள் -726: அவை அஞ்சாமை)

    புதுக் கவிதையில்…

    வீரமின்றி அஞ்சுபவர்
    வைத்திருக்கும்
    வாளினால் பயனேதுமில்லை… 

    அறிவு மிக்கோர்
    அவையில் செல்ல
    அஞ்சுபவனுக்கு,
    அவனிடமுள்ள நூலினால்
    ஏது பயனுமில்லை…! 

    குறும்பாவில்…

    அஞ்சும் வீரமிலானின் வாளுக்கும்,
    அறிஞர்தம் அவையஞ்சுவோனின் நூலுக்கும்
    அறவே இல்லை பயனே…! 

    மரபுக் கவிதையில்…

    களத்தில் இறங்கி வீரத்துடன்
         -கத்தி யெடுத்துப் போராட
    உளத்தில் அச்சம் கொண்டவரின்
       -வாளினால் ஏதும் பயனில்லை,
    அளவிலா அறிவுடைச் சான்றோர்தம்
      -அவையினில் சென்று பேசுதற்கே
    தளர்வொடு அஞ்சுவோன் நூலதாலும்
      -துளியும் இல்லை பயனதுவே…! 

    லிமரைக்கூ… 

    வாளினால் வெற்றியேதும் வராது
    அஞ்சுவோன் கையிலிருந்தால், அவையஞ்சுவோன் நூலும்
    அதுபோல் பலனேதும் தராது…! 

    கிராமிய பாணியில்…

    பயப்படாத பயப்படாத
    படிச்சவுங்க சபயில பயப்படாத…

    பயனில்ல பயனில்ல
    கொஞ்சங்கூடப் பயனில்ல,
    பயந்துசாவுறவன் கைவாளால
    படயில ஒண்ணும் பயனில்ல… 

    அதுபோல
    படிச்சவுங்க சபயில போகத்தான்
    பயப்படுறவனோட புத்தகத்தாலயும்
    பயனில்ல பயனில்ல
    கொஞ்சங்கூடப் பயனில்ல… 

    அதால,
    பயப்படாத பயப்படாத
    படிச்சவுங்க சபயில பயப்படாத…!

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(151)

    செண்பக ஜெகதீசன்

     

    செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு

    மெஃகதனிற் கூரிய தில்.

    -திருக்குறள் -759(பொருள்செயல்வகை)

     

    புதுக் கவிதையில்…

     

    சேர்த்திடு பொருளை,

    சிறப்பான வாழ்வினுக்கே..

     

    பகைவரின் செருக்கடக்கும்

    படைக்கலமாகும் அது..

     

    அதைவிடக் கூரிய ஆயுதம்,

    அதுவன்றி வேறில்லை…!

     

    குறும்பாவில்…

     

    பொருளைச் சேர்த்திடு வாழ்வில்,

    பகைவரை அடக்கும் ஆயுதம் அது,

    அதைவிடக் கூரியது வேறொன்றுமில்லை…!

     

    மரபுக் கவிதையில்…

     

    பாரில் வாழ்வு வளம்பெறவே

    பொருளைத் தேடிச் சேர்த்துக்கொள்,

    நேரில் வந்திடும் பகைவரையும்

    நசுக்கிடும் ஆயுதம் அதுவேதான்,

    கூரிய ஆயுதம் அதனுடனே

    கூறிட இணையாய் ஏதுமில்லை,

    பாரிதை, படையாம் அதற்கிணையாய்ப்

    படையதை யன்றி வேறிலையே…!

     

    லிமரைக்கூ..

     

    வாழ்வில் பொருளைச் சேரு,

    எதிரியை யழிக்கும் கூரிய ஆயுதம்

    இதனிலும் வேறிலை பாரு…!

     

    கிராமிய பாணியில்…

     

    சம்பாதி சம்பாதி பொருளச்சம்பாதி

    ஓடியாடி ஒழச்சி பொருளச்சம்பாதி,

    ஒலகத்தில வாழத்தான் பொருளச்சம்பாதி..

     

    அதுதான்

    ஒனக்கு வாற எதிரியயே

    ஒண்ணுமில்லாம அழிக்க ஆயுதமாவும்,

    ஒசந்த ஆயுதமாவும்..

     

    அதவிட கூர்மயான ஆயுதம்

    அதப்போல எதுவுமில்ல,

    அதமிஞ்சி ஆயுதமில்ல..

     

    அதால,

    சம்பாதி சம்பாதி பொருளச்சம்பாதி

    ஓடியாடி ஒழச்சி பொருளச்சம்பாதி

    ஒலகத்தில வாழத்தான் பொருளச்சம்பாதி…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(150)

    –செண்பக ஜெகதீசன்

    கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
    நீட்டி அளப்பதோர் கோல்.  (திருக்குறள்-796: நட்பாராய்தல்)

     புதுக் கவிதையில்…

    கெடுதி வரும்போது கலங்காதே,
    அதனிலும் உளது நன்மை…
    அதுவே அளவுகோலாகிவிடும்
    அடுத்துவரும் நண்பர்களின்
    குணநலங்களை அளந்திடவே…! 

    குறும்பாவில்…

    பிறரால்வரும் கெடுதியிலும் நன்மையுண்டு,
    அதுவே அளவுகோலாய் உதவிடும்
    நண்பர்தம் குணநலன் அறிந்திட…! 

    மரபுக் கவிதையில்…

    அடுத்தவர் உனக்குக் கேடுசெய்தால்
         -அணுவும் அதற்குக் கவலற்க,
    கெடுதல் அதிலே கண்டிடுவாய்
       -கூடுதல் நலந்தரும் நன்மையதை,
    அடுத்திடும் நண்பர் குணநலங்கள்
      -அறிந்தே அவரைச் சேர்த்திடவே
    எடுத்திடும் அளவுக் கருவியதாய்
      -ஏற்றுக் கொண்டிடு கேடதையே…! 

    லிமரைக்கூ…

    அடுத்தவர் செய்திடுவார் கேடு,
    எடுக்கும் நண்பர் குணமறிய இதையே
    ஏற்ற அளவுகோலாய் நாடு…! 

    கிராமிய பாணியில்…

    தெரிஞ்சியெடு தெரிஞ்சியெடு
    நல்லநண்பனத் தெரிஞ்சியெடு
    நாலும்பாத்துத் தெரிஞ்சியெடு… 

    அடுத்தவன் ஒனக்குக் கேடுசெஞ்சாலும்
    அதுக்கு ஒண்ணும் கவலப்படாத,
    அதுவே ஒனக்கு நன்மயாவும்… 

    நமக்கு வாற நண்பனத்தான்
    கொணத்த அறிஞ்சி தெரிஞ்செடுக்க
    அளவுகோலா அதுதான் ஆயிடுமே… 

    அதால,
    தெரிஞ்சியெடு தெரிஞ்சியெடு
    நல்லநண்பனத் தெரிஞ்சியெடு
    நாலும்பாத்துத் தெரிஞ்சியெடு…! 

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(149)

    –செண்பக ஜெகதீசன்

    எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
    உட்பகை யுள்ளதாங் கேடு. (திருக்குறள் -889: உட்பகை) 

    புதுக் கவிதையில்…

    எள்ளின் பிளவளவு
    மிகச் சிறிதளவே இருந்தாலும்
    உட்பகை,
    அரசையே அழிக்கவல்ல
    கேடு அதில்
    அதிக அளவில் நிறைந்திருக்கும்…! 

    குறும்பாவில்…

    உருவில் சிறிதாய் எள்பிளவுபோலிருந்தாலும்,
    உட்பகையில் நிறைந்திருக்கும்
    ஊறு செய்யும் கேடு…! 

    மரபுக் கவிதையில்…

    உருவில் சிறிய எள்ளதனின்
         -உள்ளே யிருக்கும் பிளவதுபோல்
    உருவம் சிறிதா யிருந்தாலும்
       -உட்பகை யென்னும் பெருங்கேடு,
    திருவே யுருவாம் மன்னருக்கும்
      -தீங்கு செய்தே அழித்துவிடும்
    திருட்டு குணத்தைப் பெருமளவில்
      -தாங்கி யிருக்கும் அறிவீரே…! 

    லிமரைக்கூ…

    மிகச்சிறிது எள்ளின் பிளவு,
    இவ்வளவிருக்கும் உட்பகையிலுமுண்டு அழிக்குங்கேடு
    மிகவும் அதிகமாம் அளவு…! 

    கிராமிய பாணியில்…

    நல்லதில்ல நல்லதில்ல
    உள்பகதான் நல்லதில்ல,
    வாழ்க்கயில அரசாச்சியில
    உள்பகதான் நல்லதில்ல… 

    எள்ளுக்குள்ள இருக்குஞ்சின்ன
    பௌவுபோலச் சின்னதாத்தான்
    உள்பகயே இருந்தாலும்,
    ஒலகத்தயே அழிக்கத்தக்க
    கேடதுல நெறஞ்சிருக்கும்,
    பெருமளவு நெறஞ்சிருக்கும்… 

    அதால,
    நல்லதில்ல நல்லதில்ல
    உள்பகதான் நல்லதில்ல,
    வாழ்க்கயில அரசாச்சியில
    உள்பகதான் நல்லதில்ல…!

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(148)

     –செண்பக ஜெகதீசன்

    துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
    நஞ்சுண்பார் கள்ளுண் பவர்
    . (திருக்குறள்-926: கள்ளுண்ணாமை) 

    புதுக் கவிதையில்…

    பொழுதும் உறங்குவோரும்
    பிணமும் வேறல்ல,
    அதுபோல்தான்
    கள்ளுண்பவர் ஒப்பாவார்
    நஞ்சுண்பவர்க்கே…! 

    குறும்பாவில்…

    பிணம்போல்வர் பொழுதும் உறங்குபவர்,
    கள்ளுண்பவர் கருதப்படுவர்
    நஞ்சுண்பவராய்…! 

    மரபுக் கவிதையில்…

    காலம் நேரம் பாராமல்
       -கடமை யேதும் செய்யாமல்,
    ஞாலம் மறந்தே உறங்குவோரெலாம்
       -நிச்சய மாகப் பிணமேதான்,
    சாலப் பொருத்தமாய்ச் சொல்லிடலாம்
       -சற்றும் நலமதை யெண்ணாமல்
    ஆலம் உண்பதற் கொப்பாமே
       -அற்பக் கள்ளை உண்பதுவே…! 

    லிமரைக்கூ…

    அதிகமாய்த் தூங்கினாலது பிணம்,
    அளவேதுமின்றிக் கள்ளைக் குடிப்போர்க்கு
    அதுகாட்டும் நஞ்சினது குணம்…! 

    கிராமிய பாணியில்…

    ஒறங்காத நீயும் ஒறங்காத
    ஒழைக்காம எப்பவும் ஒறங்காத,
    ஒறக்கம் ஒனக்கு அதிகமானா
    ஒனக்கும் பொணத்துக்கும் வித்தியாசமில்ல… 

    அதுபோல
    குடிக்காத குடிக்காத
    கள்ள நீயும் குடிக்காத,
    கண்ணுமண்ணு தெரியாம
    கள்ள நீயும் குடிச்சியண்ணா
    அது
    வெசத்தக் குடிச்சது போலவும்… 

    அதால
    குடிக்காத குடிக்காத
    கள்ள நீயும் குடிக்காத…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(147)

    -செண்பக ஜெகதீசன் 

    தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
    நோயள வின்றிப் படும். (திருக்குறள் -947: மருந்து) 

    புதுக் கவிதையில்…

    பசித்தீயின்
    அளவறிந்து உண்ணலே
    அருமருந்து…
    அந்த
    அளவறியாமல்
    அளவின்றி உண்பவனிடம்
    அளவின்றி வரும் நோய்கள்…! 

    குறும்பாவில்…

    உடல்செரிமான அளவறிந்துண்ணாமல்
    அதிகமாய் உண்பவனுக்கு வந்திடும்
    அளவிலா நோய்கள்…! 

    மரபுக் கவிதையில்…

    உண்ணும் உணவைச் செரிக்கவைக்கும்
         -உடல்தீ யளவு தெரியாமல்,
    எண்ணம் போல உணவினைத்தான்
       -எடுத்தே யளவு ஏதுமின்றி
    உண்பவர் உடலது தாங்காதே,
         –உண்டா லதனை மேன்மேலும்,
    எண்ணி லடங்கா நோயெல்லாம்
      –எளிதி லவரைச் சேர்ந்திடுமே…! 

    லிமரைக்கூ…

    அளவாய் உண்பதே மருந்து,
    அதிக நோய்தரும், பசித்தீயின் அளவறியாது
    அளவின்றி உண்டால் விருந்து…! 

    கிராமிய பாணியில்…

    மருந்து மருந்து அருமருந்து
    அளவோட தின்னா அதுமருந்து,
    ஒடம்போட
    செரிமான அளவத் தெரிஞ்சித்தான்
    அளவோட தின்னா அதுவிருந்து…

    அது தெரியாம
    அளவுயில்லாம எல்லாத்தையும்
    அள்ளித்தின்னா நோய்வருமே,
    அவுனுக்கு
    அத்தினநோயும் சேந்துவருமே… 

    அதால,
    மருந்து மருந்து அருமருந்து
    அளவோட தின்னா அதுமருந்து…!

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(146)

    –செண்பக ஜெகதீசன்

    நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
    குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். (திருக்குறள்-959: குடிமை) 

    புதுக் கவிதையில்…

    மண்ணின் இயல்பை,
    அதில்
    முளைத்தெழும் விதைகாட்டும்…
    மனிதன் பிறந்த குலத்தின்
    மாண்பை அவன்
    வாய்ச்சொல் காட்டிவிடும்! 

    குறும்பாவில்…

    மண்தன்மை காட்டும் முளைக்கும்விதை,
    மனிதனின் பேச்சு காட்டிவிடும்
    பிறந்த குலத்தின் குணத்தை! 

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் விழுந்த விதையதுதான்
         -முளைத்து வந்திடும் முளையினிலே
    கண்ணில் தெரியும் உண்மையது
       -காணும் நிலத்தின் இயல்பதுவே,
    மண்ணில் மனித வாழ்வுதனில்
      -மனிதன் பேசும் பேச்சினிலே
    திண்ணமாய்த் தெரியும் காண்பீரவன்
      -தோன்றிய குடியின் இயல்பதுவே! 

    லிமரைக்கூ…

    மண்வளம் முளையில் தெரியும்,
    மனிதன் பிறந்த குலமாண்பு அவன்
    பேசிடும் பேச்சிலே புரியும்! 

    கிராமிய பாணியில்…

    போட்டவெத மொளைக்கயில
    புரிஞ்சிபோவும் மண்ணுவளம்,
    காட்டிப்புடும் காட்டிப்புடும்
    மொளயதுதான் காட்டிப்புடும்
    மண்வளத்தக் காட்டிப்புடும்… 

    தெரிஞ்சிபோவும் தெரிஞ்சிபோவும்
    மனுசன் பொறந்தகொலக்
    கொணமதுதான் தெரிஞ்சிபோவும்,
    அவன் பேசுகிற
    பேச்சிலதான் தெரிஞ்சிபோவும்
    நல்லாவே தெரிஞ்சிபோவும்…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(145)

    செண்பக ஜெகதீசன்

     

     

    வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு ளஃதுண்ணான்

    செத்தான் செயக்கிடந்த தில்.

           –திருக்குறள் –1001(நன்றியில் செல்வம்)

     

    புதுக் கவிதையில்…

    சேர்த்த பெரும்பொருளைச்

    செலவிடாமல் அனுபவிக்காது

    உண்ணாமல் உயிர்வாழ்பவன்,

    ஒப்பாவான் செத்தவனுக்கே..

     

    ஆகப்போவது

    அவனால் ஏதுமில்லை…!

     

    குறும்பாவில்…

    பெரும்பொருள் சேர்த்ததை உண்டனுபவிக்காதவன்,

    பிணம்தான் உயிருடனிருந்தாலும்-

    பயனேதுமில்லை அவனால்…!

     

    மரபுக் கவிதையில்…

    ஓடி யாடி சம்பாதித்து

         ஒன்றாய் வீட்டில் சேர்த்துவைத்து,

    நாடி ஏதும் உண்ணாமல்

       நன்றாய் எதையும் நுகராதே

    வாடி வாழும் மனிதனவன்

      வாழ்ந்தும் நிசமாய்ச் செத்தவனே,

    தேடிப் பிடித்துப் பார்த்தாலும்

      தேறா தவனால் எப்பயனுமே…!

     

    லிமரைக்கூ..

    பலவாய்ச சேர்த்த சொத்தை

    பயனுற அனுபவிக்காதவன் வாழ்ந்தும் பிணமே,

    பயனிலா அவன்வெறும் செத்தை…!

     

    கிராமிய பாணியில்…

    செலவுபண்ணு செலவுபண்ணு

    நல்லமொறயா செலவுபண்ணு..

     

    ஓடியாடி சம்பாதிச்சி

    வீடுநெறய குமிச்சிவச்சி

    எதயும் எடுத்து அனுபவிக்காம

    ஒண்ணுந்திங்காமப் போறவந்தான்

    உசிரோடயிருந்தாலும் பொணந்தான்,

    அவனால

    யாருக்குமில்ல பலன்தான்..

     

    அதால,

    செலவுபண்ணு செலவுபண்ணு

    நல்லமொறயா செலவுபண்ணு…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(144)

     

    –செண்பக ஜெகதீசன்…

    நாணகத் தில்லா ரியக்கம் மரப்பாவை

    நாணா லுயிர்மருட்டி யற்று.

           –திருக்குறள் –1020(நாணுடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    செய்யக் கூடாததைச் செய்ய

    நாணும் குணம்

    இதயத்தில் இல்லாதவரின்

    உயிர் இயக்கம்,

    மரபொம்மையைக் கயிற்றில் கட்டி

    உயிருள்ளதுபோல் இயக்கி

    ஏய்த்தல் போன்றதே…!

     

    குறும்பாவில்…

     

    உள்ளத்தில் நாணமில்லாதவரின் உயிரியக்கம்,

    கயிற்றில் கட்டி மரபொம்மையை

    உயிருள்ளதாய் இயக்குதல் ஒப்பதே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    செய்யத் தகாதன செய்வதற்கே

         செயலில் உளத்தில் நாணமிலார்

    உய்யும் உலக வாழ்வினிலே

         உலவித் திரியும் இயக்கமது,

    பொய்யாய் இயக்கப் பொம்மையதைப்

       பிடித்துக் கட்டி கயிற்றாலே

    மெய்யாய் இயக்கும் இயக்கம்போல்

      மேதினி யதனில் இழுக்காமே…!

     

    லிமரைக்கூ…

     

    தகாதவை செய்ய நாணாதார் வாழ்வு,

    மரப்பொம்மையை கயிற்றில் கட்டி இயக்குதல்போல்

    ஆகுமே அகில வாழ்வில் தாழ்வு…!

     

    கிராமிய பாணியில்…

     

    வெக்கப்படு வெக்கப்படு

    மனசார வெக்கப்படு

    கெட்டதுசெய்ய வெக்கப்படு..

     

    வாழ்க்கயில இதுக்கு

    வெக்கப்படாதவன் ஆட்டமெல்லாம்

    வெத்தாட்டமாப் போயிடுமே,

    மரப்பொம்மய கயத்திலகட்டி

    மனம்போல ஆட்டுறமாதிரி

    மதிப்பில்லாமப் போயிடுமே..

     

    அதால,

    வெக்கப்படு வெக்கப்படு

    மனசார வெக்கப்படு

    கெட்டதுசெய்ய வெக்கப்படு…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(143)

    –செண்பக ஜெகதீசன்

    அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
    ஆற்றுவார் மேற்றே பொறை. (திருக்குறள் -1027:குடிசெயல்வகை) 

    புதுக் கவிதையில்…

    களத்தில்
    கடமைக்காகப் போரிடுவோரைவிட,
    வெற்றிக்காகப் போரிடும்
    வல்லவனுக்கே
    வந்துசேரும் பொறுப்பு! 

    குடும்பத்தில்,
    அதன் உயர்வுக்குச் செயலாற்றும்
    நல்லவரை
    நாடிவரும் பொறுப்பு! 

    குறும்பாவில்…

    வெற்றிபெறப் போரிடும் வல்லவரையும்,
    குடும்ப மேன்மைக்குப் பாடுபடும் நல்லவரையும்
    தேடிவரும் பொறுப்பு!
     

    மரபுக் கவிதையில்…

    வீரர் பலரும் போரிடினும்
         -வெற்றியை ஈட்டும் வீரனையே
    சேரும் உரிய பொறுப்பதுவும்
         -சேர்ந்து கிட்டும் புகழதுவும்,
    பாரில் குடும்ப உறவினிலே
         -பணிகள் செய்தால் மேன்மைக்கே,
    சேரும் அவனைப் பொறுப்புக்கள்
         -சேர்ந்தே வந்திடும் நற்பெயரே! 

    லிமரைக்கூ…

    வீரர்பலர் போரிடக் காணலாம் போரில்,
    வெற்றியீடும் வல்லவனுக்கே கிடைக்கும் பொறுப்பு,
    குடும்பமேன்மை தருபவனை நாடுமது நேரில்!       
     

    கிராமிய பாணியில்…

    சண்ட சண்ட பெருஞ்சண்ட
    பலரும் போராடும் பெருஞ்சண்ட,
    அதுல
    சேராது சேராது பெரும்பொறுப்பு
    எல்லாருக்கும் சேராது பெரும்பொறுப்பு,
    செயிக்கவைக்கும் வீரனுக்குத்தான்
    சேரும்நல்ல பெரும்பொறுப்பு! 

    அதுபோல
    குடும்பத்திலயும் கதயிதுதான்,
    எல்லாருக்கும் வராது பெரும்பொறுப்பு
    குடும்ப மேன்ம கொண்டுவரப்
    பாடுபடும் நல்லவனத்தான்
    தேடிவரும் பெரும்பொறுப்பு! 

    அதால,
    நல்லதுசெய் நல்லதுசெய்
    குடும்பத்துக்கு நல்லதுசெய்!

     

     

    Share