குறளின் கதிர்களாய்…(146)
–செண்பக ஜெகதீசன்
நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். (திருக்குறள்-959: குடிமை)
புதுக் கவிதையில்…
மண்ணின் இயல்பை,
அதில்
முளைத்தெழும் விதைகாட்டும்…
மனிதன் பிறந்த குலத்தின்
மாண்பை அவன்
வாய்ச்சொல் காட்டிவிடும்!
குறும்பாவில்…
மண்தன்மை காட்டும் முளைக்கும்விதை,
மனிதனின் பேச்சு காட்டிவிடும்
பிறந்த குலத்தின் குணத்தை!
மரபுக் கவிதையில்…
மண்ணில் விழுந்த விதையதுதான்
-முளைத்து வந்திடும் முளையினிலே
கண்ணில் தெரியும் உண்மையது
-காணும் நிலத்தின் இயல்பதுவே,
மண்ணில் மனித வாழ்வுதனில்
-மனிதன் பேசும் பேச்சினிலே
திண்ணமாய்த் தெரியும் காண்பீரவன்
-தோன்றிய குடியின் இயல்பதுவே!
லிமரைக்கூ…
மண்வளம் முளையில் தெரியும்,
மனிதன் பிறந்த குலமாண்பு அவன்
பேசிடும் பேச்சிலே புரியும்!
கிராமிய பாணியில்…
போட்டவெத மொளைக்கயில
புரிஞ்சிபோவும் மண்ணுவளம்,
காட்டிப்புடும் காட்டிப்புடும்
மொளயதுதான் காட்டிப்புடும்
மண்வளத்தக் காட்டிப்புடும்…
தெரிஞ்சிபோவும் தெரிஞ்சிபோவும்
மனுசன் பொறந்தகொலக்
கொணமதுதான் தெரிஞ்சிபோவும்,
அவன் பேசுகிற
பேச்சிலதான் தெரிஞ்சிபோவும்
நல்லாவே தெரிஞ்சிபோவும்…!