-தமிழ்த்தேனீ

அப்பா  என்னை ஒரு பையன் ரொம்ப நாளா தொடர்ந்து வந்து  தொந்தரவு பண்ணிகிட்டே இருக்கான். இன்னிக்கும்  அவன் வருவானோன்னு பயமா இருக்குப்பா  என்றாள் விஜயா.  என்னது  சொல்லவே இல்லையே என்கிட்ட என்று பதறினாள்  கோமதி, அவளை  இரு இரு பதறாதே  என்னான்னு கேப்போம்  என்று  சொல்லி விஜயா  ஏன்  இவ்ளோ நாளா  சொல்லவே இல்லை, சொல்லி இருந்தா அவனுக்குப் புத்தி சொல்லியோ  இல்லே மெரட்டியோ  அனுப்பி இருக்கலாமே!  சரி ஆனது ஆச்சு.  இப்பவாவது சொன்னியே  இன்னிக்கு நானும் உன்கூட  வரேன். பயப்படாதே என்று ஒரு சொக்காயை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினார் வேம்பு.  வேம்புவும் விஜயாவும்  சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தபோதே  அவன் வந்தான், அப்பா இவன்தாம்பா  இவன் பேரு  ரமேஷ்  என்றாள்  விஜயா பயந்தபடி. சரி சரி  பயப்படாதே  நான் பாத்துக்கறேன்  என்றபடி  அவனை நோக்கிப் போனார் வேம்பு.

ரமேஷ் அவரை  லட்சியம் செய்யாமல் ஒதுக்கி  விஜயாவிடம் போய்நின்று எத்தனை நாளா கேட்டுகிட்டிருக்கேன்  நீ பதிலே சொல்லாமே  அலட்சியப்படுத்துறியா இப்ப பாரு என்றபடி ஒரு பிளேடால் தன் கழுத்தில் அறுத்துக் கொண்டு ரத்தம் வழிய நீ  இல்லாட்டி நான் செத்துப் போறேன்  என்றபடி கீழே விழுந்தான். பதறிப்போய்  அப்பா  இவனை ஒரு கை பிடிங்க  என்றபடி  ஒரு ஆட்டோவை நிறுத்தி இருவருமாக  அவனைத் தூக்கி  வண்டியில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு  சென்று அவனுக்கு முதல் உதவிக்கு ஏற்பாடு செய்துவிட்டு டாக்டரின் அழைப்பின் பேரில் வந்த காவல்துறை அதிகாரியிடம் யாரோவிட்ட காத்தாடி நூல் இவர் கழுத்தை அறுத்துவிட்டது யதேச்சையாக பார்த்த  நானும்  எங்க அப்பாவும் இவரை இங்கே  கூட்டி வந்தோம்  என்றாள்.

இங்க கொஞ்சம் தனியா வாங்க என்று  அழைத்துப்போய் மேடம் இந்தக் காலத்துப் பசங்களுக்கு தைரியம் ரொம்ப அதிகமாயிடிச்சு, இந்த ஆளு செத்துப் போயிட்டான்னு வெச்சிக்கோங்க அப்போ  நாங்க விசாரிப்போம் அதுக்கப்புறம் உங்களுக்குத்தான் ப்ரச்சனை, நீங்க ஏதோ நல்ல எண்ணத்திலே செய்யறீங்கன்னு நெனைக்கிறேன், காவல்துறையை அவ்ளோ லேசா  எடைபோடாதீங்க  சம்பவம் நடந்த  இடத்திலே விசாரிச்சிட்டுத்தான் இங்கே வந்திருக்கேன், ஆனா ஒண்ணுபுரியுது உங்களுக்கு இந்த ஆளுமேலே ஏதோ இரக்கம் அதான் காப்பாத்தறீங்க, நான் கொஞ்சம் வித்யாசமான ஆளு எனக்கும் பொண்ணு இருக்கும்மா,  எத்தனையோ  கிரிமினலையும்  கிரிமினல் கேசையும் பாத்தவங்க நாங்க, சாட்சி இல்லாததாலே நிரூபிக்க, முடியாத காரணத்தாலே  பல கேசிலே மனசாட்சிக்கு விரோதமா பலபேர் மேலே  இன்னும் நடவடிக்கை  எடுக்காமலே இருக்கோம், இந்தப் பையன் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ செஞ்சிட்டான், இவனைத் தற்கொலைங்கற கேசிலே உள்ளேபோட்டு இவன் வாழ்க்கையைக் கெடுக்கவேண்டாமேங்கற  நல்ல எண்ணத்திலே  நான் இதைக் கேசா  எழுதாமே விபத்தாவே  நெனைச்சு மறந்துடறேன்.  ஆனா ஜாக்கிரதை, இவன்கிட்டே எல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும்  வாழ்க்கையைக் கெடுத்துக்கிடாதீங்க.    வரேம்மா என்ற காவல்துறை அதிகாரி டாக்டரிடம் என்ன டாக்டர் இந்த ஆளு பொழைச்சிருவானா என்றார். அவரைச் சரியான நேரத்திலே இவங்க  கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க அவர் பிழைச்சுட்டார்  இனிமே பயமில்லே என்றார். நல்லவேளை  தப்பிச்சீங்க மேடம்  நான் வரேன்  என்றபடி ஒரு புன்சிரிப்புடன் வெளியேறினார்  காவல் அதிகாரி.

மறுநாள் அப்பாவையும் அம்மாவையும் அழைத்துக்கொண்டு  மருத்துவமனைக்குப் போய் டாக்டரிடம் எப்படி இருக்காரு அவரு  என்றாள். டாக்டர்  நல்லா இருக்காரும்மா ஒண்ணும் பயமில்லே என்றார், நன்றி டாக்டர், அவருக்குச் செலவான தொகையை நான் கட்டிடறேன் என்றபடி பணத்தைக் கட்டப் போனாள் விஜயா.      எனக்கு ஒரே பதட்டமா இருக்கு இவ என்ன செய்யப் போறாளோ என்று பதறினாள் கோமதி. சரி இந்தக் காலத்து பிள்ளைங்களுக்கு  நாம எது சொன்னாலும்  புரியாது  இவங்களை நாம  கட்டுப்படுத்தவும் முடியாது நாம் பதறி என்ன  ப்ரயோசனம் நீ கொஞ்சம் அமைதியா இரு என்று கோமதியிடம் சொல்லிவிட்டுத் திரும்பினார். விஜயா  பணத்தைக் கட்டிட்டேம்பா என்றாள்.

வேம்பு எதுக்கும்மா  நீ இதையெல்லாம் செய்யறே? இவங்களுக்கெல்லாம் இரக்கமே  பாக்கக் கூடாது  என்றார். அப்பா நாம விபத்து  ஏற்படுத்தினா  நாமதானே  செலவு செய்யணும்.  ஆமாம்பா இது கூட  ஒரு வகையிலே  விபத்துதான்.  ஏதோ  ஒரு வகையிலே  நான் இவரைக் கவர்ந்திருக்கேன். அதுனாலேதானே இப்பிடி ஆச்சு. நான் இன்னும் கொஞ்சம் அடக்கமா இருந்திருக்கணுமோ அப்பிடின்னு தோணுதுப்பா. இவரு மேலே  இரக்கம்தான் வருது என்றாள் விஜயா. இப்பிடி இரக்கத்தை வரவழைக்கத்தானே  இவங்கள்ளாம் திட்டம் போட்டு இப்பிடி செய்யறாங்க  அது புரியலையா விஜயா உனக்கு… தப்பும்மா  இவங்களுக்கெல்லாம் பரிதாபமே காட்டக் கூடாது என்றார் வேம்பு.

எனக்குத் தெரியும் அப்பா பேசாம வாங்க  என்றபடி  அவன் படுத்திருக்கும் அறைக்குப் போய் வேம்புவை அங்கே உட்காரவைத்துவிட்டு  ரமேஷ் படுத்திருந்த  கட்டிலின் அருகே போய் உட்கார்ந்தாள், அங்கே  இருந்த  ரமேஷின்  பெற்றோர்கள்  ரொம்ப நன்றிம்மா  என் புள்ளையை  காப்பாத்திட்டீங்க  என்றார்கள் கண்ணில் நீர் வழிய.  உங்க  பிள்ளை பொழைச்சிட்டாரு.  ஆனா என்னா செஞ்சாருன்னு தெரியுமா சரி விடுங்க  அதெல்லாம் பரவாயில்லே  நான்  போலீஸ்காரங்க கிட்டே எஃப் ஐ ஆர்  போடாம  விட்ருங்கன்னு  கெஞ்சி  ஒரு வழியா  சமாளிச்சிட்டேன். இங்கே  டாக்டர்கிட்டேயும்  பேசிட்டேன்  அதுனாலே கவலைப்படாதீங்க என்று கூறிவிட்டு  என்ன   ரமேஷ்  இப்போ எப்பிடி இருக்கீங்க என்றாள் புன்னகையுடன். ரமேஷைப் பார்த்து   இந்த முறை  நான் பொழைச்சிட்டேன், எனக்கு  அதுகூட  மகிழ்ச்சி இல்லே… விஜயா நீ இப்பிடி என் பக்கத்திலே உக்காந்து பேசறியே அதுதான்  எனக்கு ரொம்ப மகிழ்ச்சி நான் குடுத்து வெச்சவன்  என்றான் ரமேஷ்.     விஜயா  வேம்புவைப் பார்த்து  அப்பா அம்மா  ரெண்டு பேரும் இங்கே  கிட்டக்க வாங்களேன், என்றவள்  அவனுடைய  பெற்றோர்களையும்  இங்கே வாங்கன்னு அழைத்து கட்டிலை சுற்றி நிற்கவைத்துவிட்டு   ரமேஷ்   இந்த  முறை  உங்களை நான் காப்பாத்திட்டேன் , ஆனா  இப்பிடி நடந்தா  அடுத்த முறை காப்பாத்த  மாட்டேன்  என்றாள்.

அதுக்கு அவசியமே இருக்காது  விஜயா  என்றான் ரமேஷ் அவசரமாக. அது இல்லே  இப்பிடி எதுக்கெடுத்தாலும்   தற்கொலைன்னு  முடிவெடுக்கறவங்களுக்கு  எப்பவுமே  இந்த யோசனை வந்துகிட்டே இருக்கும் அதுக்குதான்  சொன்னேன்  என்றாள்.   சரி  ரமேஷ்  உங்களை நான் நம்பறேன் .ஆனா  எதுக்காகவும் என்னைப் பயமுறுத்தி பணிய வைக்கறவங்களைக் கண்டா  எனக்கு பிடிக்காது . நீங்க  என்னை காதலிக்கறது உண்மைதானே  என்றாள் . ஆமாம்  விஜயா சந்தேகமே படாதே  நான் உன்னை  மனப்பூர்வமா காதலிக்கறேன் என்றான் ரமேஷ்.   அப்போ  இனிமே தற்கொலைங்கற  எண்ணமே உங்களுக்கு வரக்கூடாது  வரவே கூடாது என்றாள்.  இல்லே  விஜயா  நான் சத்தியமே செஞ்சு தரேன்;  சத்தியமா  இனிமே இது மாதிரி நடக்கவே மாட்டேன்   என்றான் ரமேஷ் .

நீங்க என்னைக் காதலிக்க எவ்ளோ உரிமை உங்களுக்கு இருக்கோ அதே மாதிரி  உங்களைக் காதலிக்காம இருக்க எனக்கும் உரிமை இருக்கு. எனக்கு  இந்த மாதிரி ஒரு பொண்ணை நடுத்தெருவிலே பயமுறுத்தி காதலிக்க வைக்கறதெல்லாம் பிடிக்காது. அதுனாலே நீங்க உங்க அப்பா அம்மாகிட்டே சொல்லி உங்களுக்கேத்த  பொண்ணைக் கல்யாணம் செஞ்சிக்கங்க, சத்தியம் செஞ்சிருக்கீங்க  இனிமே  தற்கொலை செஞ்சிக்க மாட்டேன்னு. ஆனா  இனிமேயும்  புரிஞ்சிக்காம  என்னைக் கல்யாணம் செஞ்சிக்கோன்னு  வற்புறுத்தினா  சரின்னு  கல்யாணம்  செஞ்சிக்குவேன் உங்களை, அதுக்கப்புறம் உங்க வாழ்க்கை  நரகமாயிடும்  நல்லா யோசிங்க. வாங்கப்பா வாங்கம்மா போகலாம் என்று வெளியே  வந்த  வேம்பு  விஜயா  உங்கம்மாவை நான் பொண்ணு பாத்தபோது என் மாமனார் இவளைக் கல்யாணம் செஞ்சிகிட்டா  உங்க வாழ்க்கை  சொர்க்கமா இருக்கும்ன்னு சொன்னாரு. சரி அதை விடு, முதல்லேயே  என்னைக் கல்யாணம் செஞ்சிகிட்டா உங்க வாழ்க்கை  நரகமாயிடும்னு நீ தெளிவா சொல்லிட்டே,  இந்தப் பையன் இனிமே உன்னை நெனைச்சுகூடப் பாக்கமாட்டான்னு நான் நினைக்கறேன் என்றார் நிம்மதியுடன். கோமதி நிம்மதியுடன் சிரித்தாள். விஜயாவைப் பெருமையாகப் பார்த்தபடி.
சரி வாங்கப்பா  வாங்கம்மா  நாம போகலாம் என்றாள் விஜயா உறுதியாக.

சுபம்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *