-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரப் போட்டிக்கான படத்தை எடுத்துத்தந்திருப்பவர் திருமதி. ராமலக்ஷ்மி. தேர்வாளர், வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியரான திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்களுக்கு நம் நன்றிகளை உரித்தாக்குவோம்!

momandchild

அன்னையவள் கரந்தவழும் அலைபேசி படம்பிடிப்பது யாரை என்று ஆவலுடன் பார்வையிடுகின்றதோ இந்த மழலை?

இதற்கான விடையைக் கண்டுபிடிக்க நம் கவிஞர்கள் காத்திருக்கின்றார்கள். 

***

”பிள்ளையைக் கவனியாது கைப்பேசியில் அன்னையவள் எடுக்கும் இந்தப் படம், பொய்வாழ்வே மெய்யென்று அப்பிள்ளைக்குச் சொல்லாமல் சொல்லித்தரும் பாடம்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

நாளைய பாடம்…

கைக்குழந்தையைக் கவனிக்காமல்
கீழே விட்டு,
கைபேசியில் படமெடுத்து
மெய்மறந்தால்,
நாளை வரும்
பொய் வாழ்வு
தானே படம்பிடிக்கப்படுகிறது
பிள்ளை நெஞ்சில்…!

 *** 

”நிஜத்தைத் தொலைத்து நிழலை ஆராதிக்கும் வழக்கத்தை விஞ்ஞானம் கற்றுத்தந்துவிட்டதால், பெற்றமனம் கல்லாகவும் பிள்ளைமனம் பித்தாகவும் மாறிப்போயிருப்பது நிழலல்ல நிஜமே!” என்கிறார் திருமிகு. ராதா விஸ்வநாதன்.

நிஜங்களை விட
நிழல்களையே தேடுகிறது மனம்
நிழல்களை நிஜமாக்கி விட்டது விஞ்ஞானம்
வானைமுட்டும்
இதன் வளர்ச்சியில்
இன்று
நிஜங்களின் பலி ஏராளம்!
பிஞ்சு
மனத்தின் கெஞ்சல்
பெற்றவளின் காதில் எட்டவில்லை
சுயத்தின் நிழலில் தொலைந்து விட்டது
அவளது தொடு உணர்வு
தொடர்பு எல்லைக்கு அப்பால் அவள் நிற்க
பிள்ளை மனம் பித்தாகி
பெற்ற மனம் கல்லான இக்காட்சி
நிழல் அல்ல நிஜம்

*** 

அழுதபிள்ளைக்குப் பாலூட்டாமல் அவசியமற்ற செயல்களில் சிந்தையைச் செலுத்தும் அன்னையைச் சாடுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

சேயிக்குப் பசி!
தாய்ப்பால் கேட்கிறது!
தாயிக்கு மோகம்!
ஆண்பால் தேடுது!
பெண்பாலுக்கு ஆண்பால்!
அழுத பிள்ளைக்குப் பாலூட்டும்
அன்னை இல்லை!
தவமிருந்து பெற்ற பிள்ளை
தவியாய்த் தவிக்குது!
பிள்ளை இல்லாதவள் அந்த
பிரம்மாவைத் துதிப்பாள்!
பிள்ளை உள்ளவள் காதலன் தேடி
கல்லாகிப் போனாள்!

***

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

’செல்பி’ மோகம்

நின்றால் நடந்தால் இருந்தாலென்ன
சின்னச்சின்ன அதிர்வுகளும் கவனிக்கப்படும்
செல்லப்பிள்ளையாய் மனசு துடிக்கும்
சிறுவெற்றிடம் கிடைத்தாலும்
கைபேசி காட்சிப்படமாய் விரிந்திடும்
காட்சிப்படங்களை நுட்பமாய்ச் செதுக்குகையில்
காட்சிப்பிழைகளாய் அகாலமரணங்கள்
சிருங்காரம் முதல் மெய்ப்பாடுகள் கையடக்கப் பதிவுகளாய்
தன்மோகம் அதிகரித்துப் பிறர்வாட
வேடிக்கை பார்க்கும் நாகரிகம்
வேகமாய்ப் பரவும் மாயமென்ன?
இயற்கை அழகு கொட்டிக்கிடக்க
அன்னையவள் அருகிருக்க
பிஞ்சு மழலையின் பஞ்சுக் கரங்கள் பற்றிட ஆளில்லை
நெஞ்சுரத்தில் நஞ்சுரம் ஏறிய காரணமென்ன
யான் அறியேன் பராபரமே!

செல்பேசியில் ’செல்ஃபி’ எடுக்கும் வசதி வந்தாலும் வந்தது…மாந்தரனைவரும் வயது வித்தியாசமின்றித் ’தம்படம்’ (செல்ஃபி) எடுத்துத் தம் பெருமையைத் ’தம்பட்டம்’ அடித்துக் கொள்வதிலேயே பொழுதைக் கழிக்கத் தொடங்கிவிட்டனர். அரவணைக்கவேண்டிய பிஞ்சுக்குழந்தையையும் அந்நியமாக்கிவிடும் இந்த நஞ்சுகுணம் நல்லோரை அஞ்சவே செய்கின்றது எனும் அருங்கருத்தைத் தன்கவிதையில் பதிந்திருக்கும் திருமிகு. மா. பத்ம பிரியாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.