செண்பக ஜெகதீசன்

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.  (திருக்குறள்-796: நட்பாராய்தல்)

 புதுக் கவிதையில்…

கெடுதி வரும்போது கலங்காதே,
அதனிலும் உளது நன்மை…
அதுவே அளவுகோலாகிவிடும்
அடுத்துவரும் நண்பர்களின்
குணநலங்களை அளந்திடவே…! 

குறும்பாவில்…

பிறரால்வரும் கெடுதியிலும் நன்மையுண்டு,
அதுவே அளவுகோலாய் உதவிடும்
நண்பர்தம் குணநலன் அறிந்திட…! 

மரபுக் கவிதையில்…

அடுத்தவர் உனக்குக் கேடுசெய்தால்
     -அணுவும் அதற்குக் கவலற்க,
கெடுதல் அதிலே கண்டிடுவாய்
   -கூடுதல் நலந்தரும் நன்மையதை,
அடுத்திடும் நண்பர் குணநலங்கள்
  -அறிந்தே அவரைச் சேர்த்திடவே
எடுத்திடும் அளவுக் கருவியதாய்
  -ஏற்றுக் கொண்டிடு கேடதையே…! 

லிமரைக்கூ…

அடுத்தவர் செய்திடுவார் கேடு,
எடுக்கும் நண்பர் குணமறிய இதையே
ஏற்ற அளவுகோலாய் நாடு…! 

கிராமிய பாணியில்…

தெரிஞ்சியெடு தெரிஞ்சியெடு
நல்லநண்பனத் தெரிஞ்சியெடு
நாலும்பாத்துத் தெரிஞ்சியெடு… 

அடுத்தவன் ஒனக்குக் கேடுசெஞ்சாலும்
அதுக்கு ஒண்ணும் கவலப்படாத,
அதுவே ஒனக்கு நன்மயாவும்… 

நமக்கு வாற நண்பனத்தான்
கொணத்த அறிஞ்சி தெரிஞ்செடுக்க
அளவுகோலா அதுதான் ஆயிடுமே… 

அதால,
தெரிஞ்சியெடு தெரிஞ்சியெடு
நல்லநண்பனத் தெரிஞ்சியெடு
நாலும்பாத்துத் தெரிஞ்சியெடு…! 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *