குறளின் கதிர்களாய்…(147)

-செண்பக ஜெகதீசன் 

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். (திருக்குறள் -947: மருந்து) 

புதுக் கவிதையில்…

பசித்தீயின்
அளவறிந்து உண்ணலே
அருமருந்து…
அந்த
அளவறியாமல்
அளவின்றி உண்பவனிடம்
அளவின்றி வரும் நோய்கள்…! 

குறும்பாவில்…

உடல்செரிமான அளவறிந்துண்ணாமல்
அதிகமாய் உண்பவனுக்கு வந்திடும்
அளவிலா நோய்கள்…! 

மரபுக் கவிதையில்…

உண்ணும் உணவைச் செரிக்கவைக்கும்
     -உடல்தீ யளவு தெரியாமல்,
எண்ணம் போல உணவினைத்தான்
   -எடுத்தே யளவு ஏதுமின்றி
உண்பவர் உடலது தாங்காதே,
     –உண்டா லதனை மேன்மேலும்,
எண்ணி லடங்கா நோயெல்லாம்
  –எளிதி லவரைச் சேர்ந்திடுமே…! 

லிமரைக்கூ…

அளவாய் உண்பதே மருந்து,
அதிக நோய்தரும், பசித்தீயின் அளவறியாது
அளவின்றி உண்டால் விருந்து…! 

கிராமிய பாணியில்…

மருந்து மருந்து அருமருந்து
அளவோட தின்னா அதுமருந்து,
ஒடம்போட
செரிமான அளவத் தெரிஞ்சித்தான்
அளவோட தின்னா அதுவிருந்து…

அது தெரியாம
அளவுயில்லாம எல்லாத்தையும்
அள்ளித்தின்னா நோய்வருமே,
அவுனுக்கு
அத்தினநோயும் சேந்துவருமே… 

அதால,
மருந்து மருந்து அருமருந்து
அளவோட தின்னா அதுமருந்து…!

 

 

 

About செண்பக ஜெகதீசன்

இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்...

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க