-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படம் திருமிகு. ராமலக்ஷ்மியினுடையது. போட்டிக்கு இதனைத் தெரிவு செய்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் நம் நன்றி!

elders-with-toys

இளமையில் மட்டுமா கொடுமையானது வறுமை? இல்லை முதுமையிலும் அதன் தாக்கம் கடுமையானதுதான்! இல்லையேல் தள்ளாத வயதில் வீதியோரம் நின்று விளையாட்டுப் பொருள்கள் விற்றுக் களைக்கவேண்டிய விதி இம்முதியோர்க்கு வாய்த்திருக்குமா…? என்றே நம் மனம் வேதனை கொள்கின்றது.

ஆலமரத்தை அதன் விழுதுகள் பழுதின்றிக் காப்பதுபோல்
குதலைமை (முதுமை) தோன்றிய தம் தந்தையரைக் காத்தல் அவர்தம் மக்களின் கடனாகும்.

இந்த வண்ணக் காற்றாடிகள் நம் கவிஞர்களுக்கு எத்தகைய எண்ண ஊற்றுக்களை உருவாக்கியிருக்கின்றன என அறிந்துவருவோமா?

***

குடிசைத்தொழில்கள் மடிந்து பன்னாட்டுக் குபேரத் தொழில்கள் கோலோச்சத் தொடங்கிவிட்ட காலமிது. வீதியில் விளையாடிய சிறுவர்கள் இன்று வீடியோ விளையாட்டுக்களில் மூழ்கிவிட்டனர். நம் பிழைப்புக்கு இங்கேதும் வழியுண்டா? என்று ஏக்கற்று நிற்கும் முதியோரை நமக்கு வேதனையோடு சுட்டிக்காட்டுகிறார் திருமிகு. ராதா விஸ்வநாதன்.

பனை ஓலைக் காத்தாடி -அது
பாட்டி செய்து தந்த காத்தாடி

இயற்கை வண்ணக் காத்தாடி-அது
இன்றும் நினைவில் சுழல்கிறதே

காத்தாடி போல காலமும் சுழல‌
காணாமல் போனது ஓலையுமே

காற்றில் சுற்றும் காத்தாடி-பலர்
சோற்றுக்கும் வழி சொல்கிறதே

வானைப் பிளக்கும் விஞ்ஞானம்-அதை
வாளால் வெட்டி சாய்த்ததோ

செயற்கை வண்ணக் காத்தாடி-அது
செய்யும் வினைகளோ கொஞ்சமில்லை

மக்கிய ஓலைக் காத்தாடி-அது
மண்ணின் வளம் காத்ததம்மா

கண்ணைக் கவரும் வண்ணத்தில்
எண்ணற்ற காத்தாடி வந்ததாலும்

வீடியோ கேம் செய்யும் விளைவில்
வீதியில் விளையாட பாலகரில்லை

காத்தாடி விற்பனை இல்லாமல்
கவலை இவர்களைச் சூழுகிறதே

***

”என் மகன் சிறுவனாயிருந்தபோது அவன் மகிழ்ச்சிக்குப் பொம்மை வாங்கிக்கொடுத்த நான், (அவன் வளர்ந்து என்னைக் கைவிட்டபின்) இன்று பிழைப்புக்காகத் தெருவில் நிற்கிறேன்; பொம்மை விற்கிறேன்!” என்று நொந்துபேசும் முதியோரின் குரலைத் தம் கவிதையில் பதிவுசெய்திருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

பிள்ளை சின்னவனாயிருக்கையில்
பணத்தைப் பாராமல் வாங்கிக்கொடுத்தேன்
பல பொம்மை..

பெரியவனாகி அவன்
போனபின் வேலைக்கு,
தெருவில் நிற்கிறேன்-
பொம்மை விற்க..

ஆறுதல் சொல்வோர்க்கும்
இருக்குமோ இந்த
ஆறாத வடு…!

***

முதுமை இரக்கமின்றிப் புறக்கணிக்கப்படுவதைத் தம் கவிதை வரிகளில் வலியோடு சொல்லியிருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையை அடுத்துக் காண்போம்!

முதியோர் கையிலும் உயர்வுபடும்
பண்டுமுறை உழந்து உண்டுஉயிர்த்து
வாழும் மானிடத்தில் வம்சாவளியாக
வாழையடி வாழையாக
வயது முதிர்ச்சிக்கு வரவேற்பில்லை
பழையன கழிதலும் புதியன புகுதலும்
பாரோர் வழக்காய்ப் பரிவர்த்தனம் தொடருகிறது
குழந்தைவிளையாட்டுப்பொருட்களோடு
குழந்தையாகிப் போனவர்கள் ஏக்கப் பார்வையில்
குடும்ப அரவணைப்பின்றி
நடைபாதை வியபாரிகளாய்
நிழலாடும் நடையோட்டம்
நாகரிக நதிக்கரையில் பிம்பமிடும் மாயம்
உழைத்துக் களைத்தவர்களுக்கு
உறவுக் கரம்கொடுக்க ஆதரவின்றி
உழைக்கத் தயாரான உன்னதம்
இளையோர் பாரதம் முதியோர் கையிலும் உயர்வுபடும்!

மலையாடு மஞ்சுபோல் நிலையாது நீங்கிவிடும் தன்மையுடையது இளமை. அதனை இளையோர் நன்குணர்ந்து முதியோரை மதிக்கவேண்டும். ஆயிரம் அறநூல்கள் செப்புவதை ஒரு முதியவர் தம் அனுபவத்தால் வழங்கிவிட இயலும்!

இளமையில் குடும்ப உறவுகளுக்காக உழைத்துக் களைத்தோர், முதுமையில் வேண்டுவது பொன்னும் பொருளுமல்ல; அன்பும் அருளுமே! அவற்றை நல்குதல் இளையோர் கடன். ஒரு நாடு உயர்ந்திட இளையோரின் ஆற்றல் மட்டுமே போதாது; முதியோரின் அறிவும் அங்கே துணைசேரவேண்டும்! என்று  முதியோருக்கு ஆதரவுக்குரல் எழுப்பியிருக்கும் திருமிகு. மா. பத்ம பிரியா இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார்.  

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *