பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

15401477_1179568085430722_1334656740_n

27182698n05ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 17.12.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

3 thoughts on “படக்கவிதைப் போட்டி – (90)

 1. காத்தாடி

  பனை ஓலைக் காத்தாடி -அது
  பாட்டி செய்து தந்த காத்தாடி

  இயற்கை வண்ணக் காத்தாடி-அது
  இன்றும் நினைவில் சுழல்கிறதே

  காத்தாடி போல காலமும் சுழல‌
  காணாமல் போனது ஓலையுமே

  காற்றில் சுற்றும் காத்தாடி-பலர்
  சோற்றுக்கும் வழி சொல்கிறதே

  வானைப் பிளக்கும் விஞ்ஞானம்-அதை
  வாளால் வெட்டி சாய்த்ததோ

  செயற்கை வண்ணக் காத்தாடி-அது
  செய்யும் வினைகளோ கொஞ்சமில்லை

  மக்கிய ஓலைக் காத்தாடி-அது
  மண்ணின் வளம் காத்ததம்மா

  கண்ணைக் கவரும் வண்ணத்தில்
  எண்ணற்ற காத்தாடி வந்ததாலும்

  வீடியோ கேம் செய்யும் விளைவில்
  வீதியில் விளையாட பாலகரில்லை

  காத்தாடி விற்பனை இல்லாமல்
  கவலை இவர்களைச் சூழுகிறதே

 2. முதியோர் கையிலும் உயர்வுபடும்
  பண்டுமுறை உழந்து உண்டுஉயிர்த்து
  வாழும் மானிடத்தில் வம்சாவழியாக
  வாழையடி வாழையாக
  வயது முதிர்ச்சிக்கு வரவேற்பில்லை
  பழையன கழிதலும் புதியன புகுதலும்
  பாரோர் வழக்காய் பரிவர்த்தனம் தொடருகிறது
  குழந்தைவிளையாட்டுப்பொருட்களோடு
  குழந்தையாகிப் போனவர்கள் ஏக்கப் பார்வையில்
  குடும்ப அரவணைப்பின்றி
  நடைபாதை வியபாரிகளாய்
  நிழலாடும் நடையோட்டம்
  நாகரிக நதிக்கரையில் பிம்பமிடும் மாயம்
  உழைத்துக் களைத்தவர்களுக்கு
  உறவுக் கரம்கொடுக்க ஆதரவின்றி
  உழைக்கத் தயாரான உன்னதம்
  இளையோர் பாரதம் முதியோர் கையிலும் உயர்வுபடும்

 3. ஒரு தந்தையின் சந்தேகம்…

  பிள்ளை சின்னவனாயிருக்கையில்
  பணத்தைப் பாராமல் வாங்கிக்கொடுத்தேன்
  பல பொம்மை..

  பெரியவனாகி அவன்
  போனபின் வேலைக்கு,
  தெருவில் நிற்கிறேன்-
  பொம்மை விற்க..

  ஆறுதல் சொல்வோர்க்கும்
  இருக்குமோ இந்த
  ஆறாத வடு…!

  -செண்பக ஜெகதீசன்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க