குறளின் கதிர்களாய்…(143)
–செண்பக ஜெகதீசன்
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை. (திருக்குறள் -1027:குடிசெயல்வகை)
புதுக் கவிதையில்…
களத்தில்
கடமைக்காகப் போரிடுவோரைவிட,
வெற்றிக்காகப் போரிடும்
வல்லவனுக்கே
வந்துசேரும் பொறுப்பு!
குடும்பத்தில்,
அதன் உயர்வுக்குச் செயலாற்றும்
நல்லவரை
நாடிவரும் பொறுப்பு!
குறும்பாவில்…
வெற்றிபெறப் போரிடும் வல்லவரையும்,
குடும்ப மேன்மைக்குப் பாடுபடும் நல்லவரையும்
தேடிவரும் பொறுப்பு!
மரபுக் கவிதையில்…
வீரர் பலரும் போரிடினும்
-வெற்றியை ஈட்டும் வீரனையே
சேரும் உரிய பொறுப்பதுவும்
-சேர்ந்து கிட்டும் புகழதுவும்,
பாரில் குடும்ப உறவினிலே
-பணிகள் செய்தால் மேன்மைக்கே,
சேரும் அவனைப் பொறுப்புக்கள்
-சேர்ந்தே வந்திடும் நற்பெயரே!
லிமரைக்கூ…
வீரர்பலர் போரிடக் காணலாம் போரில்,
வெற்றியீடும் வல்லவனுக்கே கிடைக்கும் பொறுப்பு,
குடும்பமேன்மை தருபவனை நாடுமது நேரில்!
கிராமிய பாணியில்…
சண்ட சண்ட பெருஞ்சண்ட
பலரும் போராடும் பெருஞ்சண்ட,
அதுல
சேராது சேராது பெரும்பொறுப்பு
எல்லாருக்கும் சேராது பெரும்பொறுப்பு,
செயிக்கவைக்கும் வீரனுக்குத்தான்
சேரும்நல்ல பெரும்பொறுப்பு!
அதுபோல
குடும்பத்திலயும் கதயிதுதான்,
எல்லாருக்கும் வராது பெரும்பொறுப்பு
குடும்ப மேன்ம கொண்டுவரப்
பாடுபடும் நல்லவனத்தான்
தேடிவரும் பெரும்பொறுப்பு!
அதால,
நல்லதுசெய் நல்லதுசெய்
குடும்பத்துக்கு நல்லதுசெய்!