நான் அறிந்த சிலம்பு – 226
-மலர் சபா
மதுரைக் காண்டம் – அழற்படு காதை
கலப்பை துலாம் தால் யாழ்
கையில் ஏந்தியவன்;
விளைபொருட்கள் அதிகம் விளையச் செய்து
விருந்தினர்களை இனிதாக உபசரித்து
மலைபடு பொருட்கள், கடல்படு பொருட்கள்
இவற்றைக் கொண்டு வந்து
வேண்டுவோர்க்கு விலைக்கு அளித்து,
உழவுத்தொழில் செய்து
நெல் முதலியன விளைவித்து
உலக மக்களுக்கு உதவும்
சிறந்த வாழ்க்கை நெறியை உடையவன்.
ஒளிபொருந்திய தலையில்
இளம்பிறை அணிந்த கடவுளின் மேனியைப் போல
ஒளிவீசும் ஒப்பற்ற அழகோடு விளங்கும்
வணிக பூதங்களுக்குத் தலைமை வாய்க்கும்
வணிக பூதக் கடவுளும்…
வேளாண் பூதம்
கருவிளைப்பூவைப் போன்றவன்;
பொன் வெள்ளி அணிகலன்கள் பூண்டவன்;
தெளிந்த கருப்பு நிற உடையை அணிந்தவன்;
வைரம் பாய்ந்த அகில், சந்தனம்
இவற்றைக் கலந்து அரைத்த
சாந்து பூசிய மார்பினன்;
உயர்ந்த கிளை, கொடி மற்றும்
நீரில் நிலத்தில் பூத்த பூக்கள் கொண்டு தொடுத்த
பூமாலையை அணிந்தவன்;
கைத்திறமை வாய்ந்த கலைஞன் செய்த
அழகிய வேலைப்பாடமைந்த கலப்பையைக்
கையில் ஏந்தியவன்;
கழுவியெடுத்த நீல மணி போன்ற
மேனியை உடையவன்;
வெற்றி சார்ந்த வேளாண் கருவிகள் ஏந்தியவன்;
களத்தின் சிறப்புப் பாடுவோர் பாடும்
துறைகளில் பயிற்சி உடையவன்;
அரவம் மிக்க மதுரை நகரில் இருந்து
வேளாண் மக்கள் இடுகின்ற
பலிப்பொருட்களைப் பெறுகின்ற
வேளாண் பூதங்களுக்குத் தலைமையான
வேளாண் கடவுளும்…
***
படத்துக்கு நன்றி: கூகுள்