நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்போட்டிகளின் வெற்றியாளர்கள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி 84-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

கண்ணைக்கவரும் அணில்களைத் தன் காமிராவில் அள்ளிவந்திருக்கும் திரு. ரகுநாத் திருமலைசாமியும், அவரின் புகைப்படத்தைப் படக்கவிதைப்போட்டிக்குத் தேர்வுசெய்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனும் நம் நன்றிக்கு உரியவர்கள்.

squirrels

பாலூட்டி இனத்தைச் சேர்ந்த அணில்கள், தம் உணவை முன்பற்களால் கொறித்துண்ணும் அழகே அலாதியானது. அவற்றின் முதுகிலுள்ள மூன்று கோடுகள் இயற்கை தந்ததோ அல்லது இறைவன் தந்ததோ நாமறியோம். ஆயினும் அவை அணில்களுக்கு அளவற்ற அழகைத் தருகின்றன என்பதை நாமறிவோம்!

சற்றே பயந்த சுபாவம் கொண்ட அணில்கள், ஆளரவமற்ற இடங்களில் ஆனந்தமாய் விளையாடும். அணிலின் இப்பண்பினை ’அணிலாடுமுன்றிலார்’ என்ற சங்கப்புலவர் குறுந்தொகைப்பாடலொன்றில் (குறுந்: 41) பதிவுசெய்திருக்கின்றார்.

இனி, இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைக் கண்ணுறுவோம்!

*****

விலங்குகளின் தாய்மையில்கூட வியத்தகு தூய்மையிருக்க, மானுடத் தாய்மையோ வேதனைதரும் வகையில் கலப்படமாகி வருவதைக் கழிவிரக்கத்தோடு தன் கவிதையில் குறிப்பிடுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

அண்ணல் ராமன் அன்றளித்த
அழகுக் கோடுகள் பார்த்தவற்றை
எண்ணிப் பார்க்கும் தாயணிலின்
ஏற்ற மிகுந்த தாய்மையின்முன்,
கண்ணே யில்லா காமத்தாலே
கள்ளத் தனமாய் பெற்றபிள்ளையைக்
கண்ணிய மின்றி கைவிடும்தாய்
காட்டும் தாய்மை தலைகுனிவே…!
 

*** 

பெண் அணில்குஞ்சை நஞ்சென எண்ணி அதன் தந்தை அகன்றுவிட, அன்னை அணிலோ அதனைப் பொன்குஞ்சாய் எண்ணி மாதர்குல மாணிக்கங்களின் மகத்துவம் சொல்வதைக் கவினுறப் படைத்துள்ளார் திரு. சி. ஜெயபாரதன். 

தவத்திருச் செல்வமே, உனக்குன்
தாய் தரும் முத்தமிது !
சேய் நீ, பெண் சிசு!
ஆண் வாரிசை எதிர்பார்த்த
அப்பனுக்கு நஞ்சு!
அன்னைக்குப் பொன் குஞ்சு!
சித்தம் குளிர்ந்ததடி
தாய் எனக்கு.
பித்தம் பிடித்ததடி, உன்னைப்
பெற்ற தந்தைக்கு!
நேருவுக்குப் பெண் மகவு
பாரதப் பிரதமர்!
அன்னை தெராசா பெண்மணி!
ஆத்திசூடி
ஔவை பெண்ணினம்!
உன்னை, என்னை,
உலகில் ஆணைப் பெண்ணை
உண்டாக்கி, உருவாக்கி
உலவ விட்டவர்
மாதர் குலம்!
மங்கையர் குலம்!
பங்கம் அடைந்து, மனமுடைந்து
எங்கும், எப்போதும்,
செய்ந்நன்றி மறக்கப் பட்டுச்
சாவில் தள்ளப்படும்
பாவையர் இனம்!

*****

மூன்று கோடுகள் கொண்ட அணிலைக் கண்டதும் கவிஞர் திரு. ரா. பார்த்தசாரதிக்குக் ’கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ எனும் மூன்று கோட்பாடுகள் நினைவுக்கு வந்துவிட்டதை அவர் கவிதை உணர்த்துகின்றது. அறிஞர் அண்ணா அவனிக்கு அளித்த திரிரத்தினங்கள் அல்லவா அவை!

இறைவன் அளித்த அழகான மூன்று கோடுகள்
இறைவன் மனித முகத்திற்கு அளித்த மூன்று கோடுகள்
இவை எல்லாம் நிலையாமையை உணர்த்தும்நெறிகள்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என மூன்று கோட்பாடுகள்
மனித வர்க்கத்திற்கு இன்றியமையாத வாழ்க்கை நெறிகள்
கடமை என்பது மனிதன் வாழ்க்கையில் ஆற்றவேண்டிய செயல்கள்
கண்ணியம் என்பது ஓழுக்க நெறிகளை வாழ்வில் கடைப்பிடித்தல்
கட்டுப்பாடு என்பது எதிலும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுதல்!
மனிதனே! என் முதுகிலிருக்கும் மூன்று கோடுகளை பார்!
மேற்குறிய மூன்று வாழ்க்கை நெறிகளையும் நினைத்துப் பார்!
உனது கண்ணில் தெரியும் ஏக்கம் என் நெஞ்சைத் தொட்டது
ஐந்தறிவு உள்ள நமக்கு கட்டுப்பாடு ஏது என நினைக்குது
மரக்கிளையும், மரமுமே நமக்கு என்றும் சொந்த வீடு,
ஒற்றுமைக்கும், பகுத்துண்டு வாழ்வதற்கும் ஓர் எடுத்துக்காட்டு! 

*** 

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது அடுத்து நம் கவனத்துக்கு… 

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்!

அன்பினுள்ளான்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
அன்பினில் கரைந்து நெஞ்சினில் நிறைந்து
ஆனந்தக் கூத்தாடி பந்தத்தில் திளைத்து
”நேசமது இங்கே
நிலமாந்தரே காண்!” என்று
பேதமது மறந்து
பாங்குடன் பழகிக் களிக்கும்
பச்சிளம் அணில்கள்
பூவுலக ஜீவராசிகள்
நெக்குருகி நெஞ்சுருகி நேசமதை
என்புருக நித்தம் கொண்டாடி…
மானுட தேசமது
மறந்து போன நேயமதை
மாக்களாகிப் போன மக்களுக்கும்
மரித்துப் போன உறவுகளுக்கும்
மனிதநேயம் சிதைத்து நிற்கும் உள்ளங்களுக்கும்
முன்னறிவிப்பு செய்வன போல்
கொஞ்சி விளையாடி
நஞ்சு உள்ளங்களைப்
பிஞ்சு உயிர்கள் சலித்தெடுக்கின்றன!
இயற்கையின் பாடமது இயல்பான நேசமது
மனிதநேயம் தாண்டிய உயிர்நேயம் காணுதல்
வாடிய உள்ளங்களைக் கண்டபோதெல்லாம் வாடுவோம்
நாடியே உலகத்து உயிர்களை ஜீவிப்போம்.

எந்திரத்தனமான இன்றைய வாழ்வில் உயிர்வாழ்க்கைக்கு ஆதாரமான அன்பு எனும் மந்திரத்தை மனிதன் மறந்துதான் போய்விட்டான்! மனிதன் மறந்துவிட்ட அன்பதை, இந்த அணில்கள் தம் உண்மை நேயத்தால், மன்பதைக்கு நினைவூட்டுகின்றன எனும் உயர்ந்த கருத்தைக் கருவாக்கித் தன் கவிதையை உருவாக்கியிருக்கும் முனைவர். மா. பத்ம பிரியா இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க