ஒளியே வழிகாட்டிடு
விப்ரநாராயணன்
அகவிருள் விலக்கவே ஆண்டவன் வருவான்
இகவிருள் விலக்கவே ஆசான் வருவான் இச்
சகவிருள் விலக்கவே ஆதவன் வருவான் இச்
சகத்தினை நெறிப்படுத்தவே தீபாவளி வருவாள்
அசுரனை அழித்தான் பீமனும் அன்று நம்
அசுரத்தனத்தை அழிக்கவே தீபாவளித் திருநாள்
அச்சத்தை நீக்கவே இத்திருநாள் நம்மனதின்
எச்சத்தை கொளுத்தவே தீபாவளித் திருநாள்
மத்தாப்பைக் கொளுத்துவோம் இத்திருநாளில் நம்
புத்தியையும் தீட்டுவோம் இத்திருநாளில் நாட்டில்
எத்திசையிலும் ஒளிவீசும் தீபாவளித் திருநாள்
சத்தியத்தைக் காக்கவந்த சமத்துவத் திருநாள்
ஆண்டவனின் விருப்பமே இத்தீபாவளித் திருநாள்
மாண்டவன் விருப்பத்தால் மலர்ந்த திருநா ள் ஊழல்
தாண்டவத்தை கொளுத்தவந்த அற்புதத் திருநாள்
தீண்டாமை நீங்கவே வந்த தீபவொளித் திருநாள்
கூட்டம் கூட்டமாய் கடைக்குச் செல்வர்
கூட்டத்தில் காணாமல் போகவும் செய்வர்
பட்டுத்துணியும் பலவகை இனிப்பும் வாங்குவர்
கட்டுக் கட்டாய் பட்டாசும் ஆனந்தமாய் வாங்குவர்
புத்தாடை அணிந்து மத்தாப்பு கொளுத்தி
தாத்தா பாட்டியுடன் மாமா மாமியுடன்
சித்தி சித்தப்பா அப்பா அம்மாவுடனும்
சுத்தி சுத்தி வந்து கொண்டாடும் திருநாள்
ஆனந்தமாய் இருக்கவே வந்த ஒளித்திருநாள்
ஆனந்தத்தின் பொருளை உணர்த்தவந்த திருநாள்
ஆனந்த வாழ்வை நிலைக்கச் செய்யும் திருநாள்
ஆனந்தமே நோக்கமென்று உணர்த்த வந்த திருநாள்
ஒளியின் வருகை இருளகல நாம் அறிவோம்
ஒளிதான் வாழ்வின் விளக்கமெனவும் அறிவோம்
ஒளிவுமறைவின்றி வாழ்தலே ஒளியின் வருகை
ஒளியே தீபவொளியே அழைத்துச்செல் உலகை