க.பாலசுப்பிரமணியன்

 

திருவாவினன்குடி (பழனி)

palani_temple1

மூத்தோரை வலம்வந்து மூத்தவனும் பழம்பெறவே

முடிவுக்குத்  தலைவணங்காது  முடிதுறந்த முருகா !

மூதாட்டி அவ்வையவள் முன்வந்து அழைத்திடவே

முத்தமிழில் மனம்குளிர்ந்து முக்கனியாய் நிற்பவனே !

 

அலங்காரம் அணிதுறந்து ஆண்டியாய் நின்றாலும்

அளவில்லாக கருணைகொண்டு அகிலமெல்லாம் ஆள்பவனே!

அசைவின்றி நெஞ்சங்கள் பசையாக உனைப்பிடிக்க

இசைவாக இதயத்தில் குடியேறும் குமரா!

 

போகங்கள் துறந்த மெய்ஞ்ஞானத் திருவுருவே !

போகர்தம் கைவண்ண நவபாஷாணக் கருவே !

பொல்லாத துன்பங்கள் பொடியாக்கும் புனிதா !

புலனெல்லாம் அரசாளும் பழனிமலைத் தலைவா !

 

பாலோடு தேன்கலந்து பழச்சாறும் பால்சோறும்

பசியாறத் தந்தாலும் படியேறி வந்தோரின்

கசிகின்ற கண்ணீரில் பசியாறி நிற்பவனே

இசையாலே உனையழைக்க இதயப்பசி தீர்ப்பவனே!!

 

மலமான எண்ணங்கள் மிதமாக இருந்தாலும்

வலமாக உனைச்சுற்றி இதமாக அழைத்தாலே

நலமாக நான்வாழப் பலமாக நீயிருந்து

குலம்காக்கும் குமரா! குன்றுவாழ் கோவே!

 

விழிதிறந்து உனைக்காண ஊழ்வினையும் ஓடிடுமே

பழிபாவம் நீங்கிடுமே பழனியப்பா என்றழைத்தால்

எழிலான உன்னுருவம் இதயத்தில் குடியிருக்க

அழியாத புகழ்தந்து ஆட்கொள்வாய் ஆறுமுகனே !

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.