Tag: நிர்மலா ராகவன்

  • நலம் .. நலமறிய ஆவல் – 12

    நிர்மலா ராகவன்

    வெண்ணையும், சுண்ணாம்பும்

    நலம்-
    மூத்த மகன் அரசாங்கப் பள்ளிக்கு அனுப்பப்பட, இளையவன் தனியார் பள்ளிக்குப் போனான். ஏனெனில், மூத்தவன் கறுப்பு.

    தம் செல்வச் செழிப்பு, உயர் கல்வி இதிலெல்லாம் அடைந்த பெருமையைவிட, பெற்றோர் இருவருக்கும் தாம் கறுப்பாக இருக்கிறோமே என்பதுதான் பெரிய குறையாக இருந்தது. அதைப் போக்கவேபோல் இரண்டவதாகப் பிறந்த `வெள்ளையனை’ (அவனுடைய செல்லப்பெயர்) தெய்வமாகவே மதித்து நடத்தினார்கள்.

    வெள்ளையன் கேட்பதற்கு முன்னாலேயே அவனுக்கு எல்லாம் கிடைத்துவிடும். பெரியவன் `கருப்பையா’வுக்கோ தந்தையிடமிருந்து அடிதான் கிடைத்தது.

    `நான் எந்த தப்புமே பண்ணலியே! அப்பா ஏம்மா என்னை அடிக்கிறார்?’ என்று தாயிடம் முறையிட்டான் மகன்.

    “அப்பாதானே! பரவாயில்லே. வாங்கிக்கோ,’ என்றாளாம் தாய்! (அவள் என்னிடம் கூறியது).

    மகனும் பொறுத்துப்போனான். எலும்பும் தோலுமாக மகன் ஆனபின்னர்தான் தாய் விழித்துக்கொண்டாள்.

    மகனை இன்னமும் அடித்தால், தான் அவனை அழைத்துக்கொண்டு தனியாகச் சென்றுவிடுவதாக கணவனை எச்சரிக்க, அவர் தன் போக்கை மாற்றிக்கொண்டார். அடிக்குப் பதில் ஓயாத வசவு.

    “அவன் ரொம்ப ஒடுங்கி இருக்கிறான். ஏதாவது செய்யுங்களேன்!’ என்று எனக்குக் கோரிக்கை விடுத்தாள் தாய்.

    நான் தனிமையில் அவனுடன் பேசினேன். “இந்த அப்பாக்களுக்கே ஒரு குழந்தை உயர்த்தி. இன்னொன்றைக் காரணமின்றி அடிப்பார்கள், இல்லை திட்டுவார்கள்,’ என்று பொதுவாக ஆரம்பித்து, “ஒங்கப்பாவும் இப்படித்தானா?” என்று கேட்டேன்.

    “இல்லை!” கேள்வி முடியுமுன், மறுப்பு வந்தது. பதில் வந்த வேகத்திலிருந்தே அவன் சொல்வது உண்மையல்ல என்று தெரிந்துவிட்டது.

    நான் விடாப்பிடியாக, எனக்குத் தெரிந்த சிலரைப்பற்றிக் கூற, அவன் தன்னையுமறியாது, “எங்கப்பாவும் அப்படித்தான். எதுக்கு திட்டறாருன்னே புரியாது!” என்று ஒப்புக்கொண்டான்.

    அப்போது அவன் கல்லூரி மாணவன். மகா புத்திசாலி. “உன் பாடத்தில் அப்பாவிடம் ஏதாவது சந்தேகம் கேளேன்!” என்றேன். தன்னை மகன் நாடுகிறானே என்று சிறிது பெருமை எழுந்தால், அவனுடன் நெருக்கமாக உணர்வாரோ என்று நினைத்தேன்.

    “சந்தேகமே கிடையாதே!” என்றான், பட்டென்று.

    அவன் பெரியவனாக ஆனபிறகும், முகத்தில் சிரிப்பே கிடையாது. காதல் மனைவியும் அவனை மதிப்பதில்லை. குடும்பம்’ என்றாலே இப்படித்தான் இருக்கும்போலிருக்கிறது என்று நினைத்தவன்போல், வேலையிலேயே மூழ்கி, தன்னை மறக்கிறான். அதனால் உத்தியோகத்தில் பெரிய பதவி.

    வேலை முடிந்து திரும்பியவனிடம் ஒரு முறை, “இன்று உன் தினம் எப்படிப் போயிற்று?” என்று கேட்டேன்.

    சுவாரசியமாக விவரித்தான். ஏதோ மீட்டிங். வழக்கம்போல், எல்லாரும் உணர்ச்சிவசப்பட, நாற்காலிகள் காற்றில் பறந்தன என்று அவன் கூற, இருவரும் சேர்ந்து சிரித்தோம். “நீயுமா?”

    பெருமையுடன், “ம்!” என்று ஆமோதித்தான். பல காலமாக அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தைப் பின் எப்படித்தான் வெளிப்படுத்துவது!

    அப்பா அவருடைய சிறு வயதில் நிறைய அடி வாங்கியிருக்கலாம். அப்போது தன் தந்தையை எதிர்க்க முடியாத நிலையில் இருந்ததால், அந்த ஆத்திரம் மகனிடம் திரும்பியிருக்கிறது. (வதைக்கும் பெற்றோர் தன்னைப்போல் இருக்கும் குழந்தையிடம்தான் வன்முறையைப் பிரயோகிப்பார்கள்).

    இது புரிந்து, `கருப்பையா’ மகனிடம் மிகக் கனிவுடன் நடந்துகொள்கிறான்.

    அவனுடைய தாய் என்னிடம், “அது எப்படி மூன்று, நான்கு வயதுவரை கொஞ்சி வளர்த்த மூத்த பையன், இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்ததும் வேண்டாதவனாக ஆகிவிடுகிறான் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!” என்கிறாள்.

    யாருக்குப் புரிகிறது இந்த மனிதர்களின் சுபாவம்!

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் -11

    நிர்மலா ராகவன்

    எனக்கென்ன, பயமா!

    நலம்-1-1-1-1
    ‘கோலாலம்பூரா! தலைநகரம் அல்லவா? சின்ன விஷயத்திற்கெல்லாம் அங்கே எல்லாரும் சண்டை பிடிப்பார்களே! நீ எப்படித்தான் தாக்குப்பிடிக்கப் போகிறாயோ, பாவம்!’

    சிற்றூரிலிருந்து நாட்டின் தலைநகரத்திற்குப் போனால் கலாசார அதிர்ச்சி ஏற்படும் என்று பலரும் பயமுறுத்தி இருந்தார்கள் மே லின் என்ற அந்த இளம் ஆசிரியையை.
    செல்வச்செழிப்போ, பெற்றோரின் பிரத்தியேக கவனிப்போ இல்லாத பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தவளுக்குப் பயம் பிடித்துக்கொண்டது. இந்த இருபத்து ஐந்து வருடங்களாக தான் யாரை நம்பி வாழ்ந்தோம், இனியும் அப்படித்தான் வருகிற எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் எங்கள் பள்ளிக்கூடத்தை வந்தடைந்தாள் மே லின்.

    வந்த சில மாதங்களுக்குள்ளாகவே, பல ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்த ஆசிரியைகளுடன் வலுச்சண்டை போட ஆரம்பித்தாள். காரணம் இல்லாவிட்டாலும், எதற்காகவாவது விவாதமும், சண்டையும் தொடரும். எங்களுக்கெல்லாம் அலுத்துவிட்டது. வேலைப்பளு ஒரு பக்கமிருக்க, அநாவசியமாக ஒருத்தி வம்புக்கு இழுத்தால்? பலரும் அவளைக் கண்டால் ஒதுங்க ஆரம்பித்தோம்.

    தான் பிறரைப் பார்த்துப் பயப்படுவதற்குப் பதில், அவர்களே தன்னைப் பார்த்துப் பயந்து விலகுகிறார்கள்! பெருமையில், அவளுடைய அதிகாரம் இன்னும் அதிகரித்தது.
    நாங்கள் அனைவரும் இனபேதம் இல்லாது நட்புடன் பழகிவந்தோம். இவள்மட்டும் எதனால் இப்படி இருக்கிறாள் (`What is wrong with her?’) என்று கலந்து பேசினோம்.

    ஒரு முறை, “இங்கே சண்டை போட்டால்தான் பிழைக்க முடியுமாமே! எனக்கென்ன, பயமா!” என்று மே லின் ஏதேதோ பேச, அவளுடைய போக்கிற்கான அர்த்தம் சற்றுப் புரிகிறமாதிரி இருந்தது.

    ஒரு முன்னிரவு காலத்தில், நான் தெருவில் நடந்து போகும்போது, சிறிய நாய் ஒன்று வெறி பிடித்தமாதிரி குரைத்தபடி, எதிர்த்திசையிலிருந்து என்னை நோக்கி வெகு வேகமாக வந்தது.

    முதலில் பயமாக இருந்தாலும், `பயந்தவர்தான் பிறரை பயமுறுத்துகிறார்’ என்ற உண்மை நினைவுக்கு வந்தது.

    `நான் உன்னை ஒன்றும் செய்யப் போவதில்லையே! என்னைப் பார்த்து எதற்குப் பயப்படுகிறாய்?’ என்று மானசீகமாக அந்த நாயுடன் தொடர்பு கொண்டேன். உடனே, அது பிரேக் போட்டாற்போல் உட்கார்ந்தது. அதைத் தாண்டிப் போகையில், அதன் தலை குனிந்திருந்தது.

    மே லின்னின் போக்கிற்கும் அதற்கும் என்ன வித்தியாசம்? பிறர் தன்னை ஏற்பார்களோ, மாட்டார்களோ என்ற ஏக்கம் – அச்சம் – அவளுக்கு. அந்த பயத்தில் அவர்கள் தன்னை ஏற்காதிருக்கும்படி நடந்துகொள்கிறாள்!

    நான் அந்தப் பள்ளியைவிட்டு மாற்றலாகிப் போனபோது, அவளுடைய வயதும் என் அனுபவமும் ஒன்றுதான் என்ற நிலை அளித்த உரிமையுடன், மே லின்னிடம் தனிமையில் புத்தி கூறினேன்: “Take it easy! உன்னை யாரும் எதுவும் செய்துவிடப் போவதில்லை”.

    “என்ன சொல்கிறீர்கள்? எனக்குப் புரியவில்லை,” என்றாள் பரிதாபமாக.

    “நீ எதற்கெடுத்தாலும் சண்டை போடுகிறாய் என்று ஒரு பேச்சு நிலவுகிறது,” என்று நான் ஆரம்பிக்க, அவள் முகத்தில் ஒரே அதிர்ச்சி.

    “நீ நட்புடன் பிறருக்கு உதவி செய்தாலும், மரியாதையாக நடந்துகொண்டாலுமே போதுமே! எல்லாரும் உன்னை ஏற்பர். அதை விட்டு, ஏன் இப்படி இருக்கிறாய்?” என்றுவிட்டு, அப்பால் நகர்ந்தேன்.

    குரலடைக்க, “நீங்கள் என்னிடம் சொன்னதற்கு ரொம்ப நன்றி,” என்றாள், திரும்பத் திரும்ப. அழுதுவிடுவாள் போலிருந்தது.

    எந்த ஒரு உத்தியோகத்திலும் நாம் புதிதாகச் சேரும்போது, வந்த அன்றே நம்மைப்பற்றித் துருவித் துருவிக் கேட்பவர்களும், நம்முடன் ஒட்டிக்கொள்ள விரும்புகிறவர்கள்போல் நடிப்பவர்களும் நட்புடன் பழகுகிறார்கள் என்றெண்ணி மகிழ்ந்து, ஏமாந்துவிடக் கூடாது. இவர்களை நம்ப முடியாது. சந்தர்ப்பம் கிடைத்தால், இந்த இரண்டு ரகமுமே முதுகில் கத்தி பாய்ச்சும்.

    புதிதாக வந்திருப்பவர் நம்மை மிஞ்சிவிடக்கூடாதே என்ற பதைப்பிலிருப்பார்கள் சிலர். இவர்கள் தன்னம்பிக்கை குன்றியவர்கள்.

    நான் ஒரு பள்ளிக்குச் சில காலம் அனுப்பப்பட்டிருந்தேன், மேற்பயிற்சிக்காக. அங்கே இருந்த ஓரிரு இந்திய ஆசிரியைகள் ஆசிரியர்களின் பொது அறையில் அதிகம் பேசாமல் இருந்ததைக் கண்டேன். மிகச் சாதாரணமாக உடுத்தியிருந்தார்கள். என்னுடன் மட்டும் பேசினார்கள், மகிழ்ச்சியுடன்.

    ஆங்கில-சீன (Eurasian) மாது ஒருத்தி என்னிடம், “நீ தினமும் இப்படி பட்டுப்புடவையே கட்டிக்கொண்டு வருகிறாயே! இங்குள்ள மர நாற்காலிகளில் நூல் இழுபட்டு, வீணாகிவிடும்,” என்றாள்.

    அவள் குரலில் கிஞ்சித்தும் கரிசனம் இல்லை என்பது புரிந்து, நான் கண்களைச் சுருக்கிக்கொண்டு, மிக இனிமையாக, “பரவாயில்லை. புடவை போனால் என்ன! நானே ஒரு நாள் சாகத்தானே போகிறேன்!” என்றேன். குரலில் அலட்சியம்.

    அப்போது அவள் முகத்தைப் பார்க்க வேண்டுமே!

    இன்னொரு நாள், “நீ ஆங்கிலத்தில் எழுதுவாய், தெரியும். தமிழிலும் எழுதுவாயா?” என்று ஆச்சரியம் தெரிவித்துவிட்டு, “Linguist!” என்று பழிப்பதுபோல் கூறினாள்.

    அவள் எதிர்பார்த்தபடி, நான் ஏதோ தவறான காரியம் செய்துவிட்டு, மன்னிப்பு வேண்டுவதுபோல் அசட்டுச் சிரிப்பு சிரிக்கவில்லை. எந்த உணர்ச்சியும் காட்டாது, அவளையே பார்த்தேன்.

    அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவள் மாறிவிட்டாள். என்னை ஒரு தலைவியாக ஏற்றதுபோல், தன் குறைகளைச் சொல்லிச் சொல்லி என் தீர்வை நாடினாள்!

    (நாற்காலிகள் எல்லாம் வழுவழுப்பாக இருந்தன, என் புடவை எதுவும் நாசமாகவில்லை என்பது வேறு விஷயம்).

    அங்கிருந்த தமிழ் ஆசிரியை ஒருவரிடம், “இப்படி காமாசோமாவென்று அலட்சியமாக உடுத்திக்கொண்டு வராதீர்கள். மதிக்க மாட்டார்கள். உங்களிடம் நல்ல புடவையே இல்லையா?” என்று போலியாக மிரட்டினேன். (ஆசிரியர்களின் நகைச்சுவையான போக்கும், உடைகளும் பிடித்திருந்தால், மாணவ மாணவிகளுக்கு அவர்கள் கற்பிக்கும் பாடத்தில் தனி அக்கறை பிறக்கும். உடன் உத்தியோகம் பார்ப்பவர்களும் முதலில் வேண்டாவெறுப்பாக மரியாதை செலுத்துவார்கள். நாளடைவில் நம்மையும் சரிசமமாக ஏற்பார்கள்).

    சிரித்துவிட்டு, மறு நாளிலிருந்து அவரும் விதவிதமான புடவை அணிந்துகொண்டு வந்தார். அவரைப் பார்த்தவுடன், பிற ஆசிரியைகளின் விழிகள் விரிந்தன — பயத்தால்!
    ஒரு புதிய இடத்தில் நுழைந்து, ஆரம்பத்திலேயே அதிகம் பேசினால், நம் பலம், பலவீனங்களைப் பிறர் புரிந்துகொள்ள வழிவகுத்து விடுகிறோம். நம் பலத்தையே நமக்கு எதிராக வளைத்து, தமக்கு ஆதாயம் தேடிக்கொள்பவர்களும் உண்டு. ஆகவே, முகத்தில்கூட அதிக உணர்ச்சிகள் காட்டாது, மௌனமாக இருப்பது நலம். அமைதியுடன் பிறரைக் கவனித்தால், அவர்களுடைய குணம் புரியும். இந்தச் சூழ்நிலையில் நாம் எப்படி நடந்துகொள்வது என்ற தெளிவும் பிறக்கும்.

    தொடருவோம்

    Share
  • தாந்தித்தாத்தாவும்…

    நிர்மலா ராகவன்

    தாந்தித்தாத்தாவும், பொன்னுசாமி கங்காணியும்

    தந்தையின் பக்கத்தில் அமர்ந்து, கடந்த முக்கால் மணி நேரமாகப் பஸ்ஸில் பிரயாணம் செய்துகொண்டிருந்த புலியம்மாவின் உள்ளத்தில் ஒரே சமயத்தில் பயமும், குதூகலமும் நிரம்பி இருந்தன.

    ஆறு வருடங்களாகத் தமிழில் பயின்றுவிட்டு, இப்போது மலாய்ப் பள்ளியில் — முற்றிலும் புதியதொரு சூழ்நிலையில் — படிக்கவேண்டுமென்ற பயம். தங்கள் தோட்டப்புறத்திலேயே முதன்முறையாக இவ்வளவு சிறப்பான தேர்ச்சி பெற்று, உயர்கல்வி கற்க ஆயத்தமென, இந்தப் பள்ளியில் சேரப் போகும் களிப்பு.

    ‘கேவலம், பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு இவ்வளவு செலவழிச்சாவது படிப்பு அவசியந்தானா! ஆனாலும் ஒங்க மகளுக்கு ரொம்பத்தான் இடங்கொடுத்து வளக்கறீங்க!’ பொறாமை மேலிட, அண்டை அயலார் அவநம்பிக்கை ஊட்டிப்பார்த்தபோது, பொன்னுசாமி கங்காணி அயரவில்லை.

    ‘பெண்களை மதிக்கறவன்தான் தெய்வம் ஆகிறான்,’ என்று நிதானமாக மகாத்மா காந்தியின் போதனையை எடுத்துக்கூறினார்.

    காந்தி மகான்தான் அவருடைய தெய்வம். அவர்கள் வீட்டில் மூஞ்சூறுமேல் அமர்ந்த பிள்ளையார், யானைகளுடன் கஜலட்சுமி ஆகிய கடவுள் படங்களுடன், வேட்டி மட்டும் அணிந்து, தரையில் காலை மடக்கி, சர்க்காவில் நூல் நூற்கும் காந்தியின் படமும் மாட்டி இருந்தார்.

    அதைப்பற்றிக் கேலியாக விசாரிப்பவர்களிடம், ‘சாமி கண்ணுக்குத் தெரியுமான்னு நாத்திகம் பேசறாதாலதான் இன்னிக்கு இளவட்டங்க தறிகெட்டுப்போறாங்க. ஒத்தையாளா வெள்ளைக்காரனைத் துரத்தி அடிச்சிருக்காரே, நம்ப காந்தி! இது சாமான்யமான மனுசன் செய்யற வேலையா? எவன் ஒருத்தன் சுயநலமில்லாம இருக்கானோ, அவன்தான் சாமி!” என்று, அன்பே சிவம் கமலஹாசன் பாணியில் பேசி, அவர்கள் வாயை அடைத்துவிடுவார்.

    பிறரது கேலிக்கெல்லாம் மசியாது, தனது கொள்கைகளில் பிடிவாதமாக, உண்மையே பேசி, வெற்றியும் பெற்றிருக்கிறாரே அம்மகான்! அப்பாவுக்குப் பிடித்த காந்திபோலத் தானும் நடக்கவேண்டும் என்று புலியம்மா உறுதி செய்துகொண்டாள்.

    ஆனால், அப்பா செய்தது எல்லாமே அவளுக்குப் பிடிக்கும் என்பதில்லை. முக்கியமாக, அவளுடைய பெயர்.

    “ஏம்பா எனக்கு இந்தப் பேரு வெச்சீங்க? எல்லாரும் கேலி செய்யறாங்க!” பத்து வயதாயிருக்கும்போது தந்தையிடம் செல்லமாகச் சிணுங்கினாள்.

    மகள் தன்னைத் தட்டிக்கேட்பதாவது என்று அவர் ஆத்திரப்படவில்லை. அவர்தான் அகிம்சாவாதி ஆயிற்றே!

    “எல்லாம் காரணமாத்தான். தனக்கு எல்லாம் தெரியும்னு அலட்டிக்கிற மனுசன் புலியைப் பாத்துப் பயப்படறான், ஓடி ஒளிஞ்சுக்கறான்!” அந்த நினைவிலேயே அவர் சிரித்தார்.

    அவளுக்கு அந்த விளக்கம் பிடிபடவில்லை. “எங்கிட்ட ஏம்பா மத்தவங்க பயப்படணும்?”
    “அப்படி இல்ல. நீ எதுக்கும் பயப்படக்கூடாது, கண்ணு. இது ஆம்பளைங்க ஒலகம்! பொண்ணுங்கன்னா மட்டம். அதான் அன்னாடம் பாக்கறியே! நம்ப லயத்திலேயே, கண்ணுமண்ணு தெரியாம தண்ணி போட்டுட்டு, அவனவன் பெண்டாட்டியை மாட்டை அடிக்கறமாதிரி அடிக்கிறான். ம்! இவனெல்லாம் ஆம்பளை!” என்று எள்ளியவர், “அந்த மகானைப் பாரு! துப்பாக்கியும், பீரங்கியுமா வெச்சு வெள்ளைக்காரனை விரட்டினாரு? அகிம்சாவாதத்திலேயே தாய்தாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக்குடுத்தாரு!” என்ன பேச ஆரம்பித்தாலும், அதைக் காந்தியில்தான் கொண்டு முடிப்பார் பொன்னுசாமி கங்காணி.

    அவருடைய மனைவி பதைத்துப்போய் உள்ளேயிருந்து வருவாள். “யாருகிட்ட எதைச் சொல்றதுன்னு கிடையாது? அது சின்னப்பிள்ளை!” என்று மகளுக்குப் பரிவாள்.

    அவளிடம் நேராகப் பதிலளிக்காது, புலியம்மாவிடம் கூறுவார் அவர்: “நான் எதுக்குச் சொல்றேன், நீ என்னைமாதிரி தற்குறியா நின்னுடப்படாது. பெரிய படிப்புப் படிச்சு, நல்லா வரணும். நடுவிலே யாராவது வயத்தெரிச்சல்பட்டு ஒன்னை வெரட்டினா, நீ பயந்து ஒதுங்கலாமா? புலிமாதிரி எதிர்த்துச் சண்டை போடணும், என்ன?”

    புலியம்மாவுக்கு அவருடைய அடிப்படைக் கொள்கையிலேயே சந்தேகம் பிறந்தது. “ஏம்பா? சண்டை போட்டா, அது அகிம்சையா?”

    “சண்டைன்னா, வெட்டறதும், குத்தறதும் மட்டுமில்ல. கொள்கைக்காக போராடறதும்மா. துப்பாக்கியா பிடிச்சிருந்தாரு காந்தி?”

    இவ்வளவு தெரிந்துவைத்திருந்த அப்பாவுக்கு ஏன் தன்னை முதலிலேயே ஒரு மலாய்ப் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்று தோன்றாமல் போயிற்று? பயத்தால் உறைந்திருந்த அந்த வேளையில் புலியம்மாவுக்கு இந்தச் சந்தேகம் உதித்தது.

    அவள் எந்தக் கேள்வி கேட்டாலும், அப்பா நிதானமாகப் பதில் சொல்வார். எங்கேயோ இருந்திருக்கவேண்டியவர், பாவம்! அதிகக் கல்வி இல்லாததால், வாழ்க்கையில் முன்னேற முடியவில்லையாம். தானே அடிக்கடி அவளிடம் சொல்லி இருக்கிறார். அதனால்தான் மகளாவது உயரவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

    “அப்பா!” புலியம்மா தயங்கினாள்.

    “என்னம்மா? எதுவானாலும் கேளு. ஒனக்கில்லாததா!”

    “எனக்கு ஒண்ணும் வேணாம்பா. என்னை… ஏம்பா தமிழ் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினீங்க?” எப்படியோ துணிச்சலை வரவழைத்துக்கொண்டு கேட்டுவிட்டாள்.
    கங்காணியின் முகம் வாடிப்போயிற்று. “என்னம்மா இப்படிக் கேட்டுட்டே?” என்றார் ஆழ்ந்த வருத்தத்துடன். “தாய்மொழிங்கறது பெத்த தாய்மாதிரி. கருவிலேயே நம்பளோட மூளையில பதிஞ்சது. வயத்துப்பிழைப்புக்காக நம்ப கலாசாரத்தைத் தலைமுழுகிட முடியுமா? சாப்பிட்டோம், தூங்கினோம்னு இருந்தா, அப்புறம் நமக்கும், மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்? நம்பளையே நாம்ப மதிக்கவேணாம்?”
    தான் தமிழச்சி என்ற பெருமை புலியம்மாவுக்குப் பிறந்தது அப்போதுதான். புதுப்பள்ளியிலோ, நூற்றுக்கு ஒருவர்கூட தமிழர் கிடையாதாம். மூன்று மாடிகளைக்கொண்ட பெரிய பெரிய கட்டிடங்கள் அமைந்த விசாலமான வளாகத்துக்குள் நுழைந்தபோது கால்கள் பின்னுக்கு இழுத்தன.

    அப்பாவுக்குப் புரிந்திருக்கவேண்டும். அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தார். ‘நீ எதுக்கும் பயப்படக் கூடாதுன்னுதானே ஒன் பேரிலேயே வீரத்தை வெச்சிருக்கேன்?’ என்று சொல்வதுபோலிருந்தது. அச்சிரிப்பில் எல்லாம் மறந்து போயிற்று அவளுக்கு.

    “அதோ பாருங்கப்பா. தமிழ் டீச்சர்!” என்று உற்சாகமாகக் கையை நீட்டிக் காட்டினாள்.
    புடவையும், பொட்டுமாக இருந்த அந்த “தமிழ் டீச்சர்” தன் வகுப்புக்கு வரமாட்டாள் என்று அதன்பின் அறிந்ததில் ஒரு சிறிய ஏமாற்றம் எழுந்தது. அதனால் என்ன? தானே போய் அறிமுகம் செய்துகொள்ள வழியா இல்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள் புலியம்மா.

    “ஒங்க பையைத் தூக்கிட்டு வரட்டுமா, டீச்சர்?”

    அந்தத் தமிழ்க் குரல் வித்தியாசமாகக் கேட்டிருக்க வேண்டும். டீச்சர் சட்டெனத் திரும்பினாள். எதுவும் பேசாது, தன் கையிலிருந்த பிரம்புப் பையை எதிரில் அகன்ற விழிகளுடன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்தாள்.

    பை சற்றுக் கனம்தான். ஆனால், சிவபெருமானிடமிருந்து மாங்கனியைப் பெற்றுக்கொண்ட பிள்ளையார்மாதிரி அச்சிறுமிக்குப் பூரிப்பு ஏற்பட்டது. அதனை அடக்க வழி தெரியாது, பல் தெரிய புன்னகைத்தபடி, டீச்சரின் சிவப்புப் புடவையையும், அதற்குப் பொருத்தமாக, கவனத்துடன் தேர்ந்தெடுத்திருந்த சிவப்புக் காலணிகளையும் பார்த்தபடி, ராமனைப் பின்தொடர்ந்த சீதையாக நடந்தாள்.

    மறுநாள் காலை, இருள் பிரியுமுன்னரே பஸ் பிடித்து, டீச்சரின் வருகைக்காகக் காத்திருந்தாள் புலியம்மா. கும்பல், கும்பலாக நின்றுகொண்டு, உரக்கப்பேசி, அதிர்வேட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தவர்களுடன் சேர விரும்பாது, ஒரு போகன்வில்லா புதர் அருகே தனித்து நின்றாள்.

    டிச்சருடைய சிறிய, வெள்ளைக்கார் கேட்டுக்குள் நுழைந்தது. காதல் வசப்பட்டவருடையதைப்போல புலியம்மாவின் இருதயம் துடித்தது. ஓடாத குறையாகக் காரை நெருங்கினாள்.

    “வணக்கம் டீச்சர்!”

    டீச்சர் அவளுடைய முகமன் காதில் விழாதவளாக நடந்தாள்.

    இன்னும் உரக்கச் சொன்னாள்: “வணக்கம் டீச்சர்!”

    டீச்சர் நின்றாள். தலையை வெட்டினாற்போல் அவள்பக்கம் திரும்பி, “மெதுவாப் பேசு!” என்று அதட்டினாள். குரல் கட்டையாக இருந்தது. “இப்படிக் கத்தினா, நாலுபேர் பாத்துச் சிரிப்பாங்க!” பழக்க தோஷத்தால், அவள் குரலில் கடினமும், அதிகாரமும் கலந்திருந்தன.

    ஒரேயடியாக மிரண்டுபோன புலியம்மாவால், கையாலாகாத்தனத்துடன் தலையை அசைக்கத்தான் முடிந்தது.

    பல வினாடிகள் கழித்துத்தான் அவளுக்கு சுயநினைவு வந்தது. தன்மீது எவ்வளவு அக்கறை இருந்தால், இப்படித் தனிப்பட்ட முறையில் கண்டிப்பார்கள் என்ற நெகிழ்வு ஏற்பட்டது. தன்னைப்போலத்தானே டீச்சரும்! ஒரே இனம், ஒரே மொழி என்ற பற்றுதல் அவர்களுக்குமட்டும் இருக்காதா, என்ன!

    இப்போதெல்லாம் தானே வலியப்போய் முணுமுணுப்பாக வணக்கம் தெரிவித்துவிட்டு, உரிமையுடன் டீச்சரின் கையிலிருந்து பிரம்புப் பையைப் பிடுங்காத குறையாக வாங்கிக்கொள்ளும் அளவுக்குத் துணிச்சல் ஏற்பட்டிருந்தது புலியம்மாவுக்கு.

    “ஒன் பேரு என்ன?” அறிந்துகொள்ளும் ஆர்வமில்லை அந்தக் கட்டைக் குரலில். ஒப்புக்குக் கேட்பதுபோலிருந்தது.

    ஆனால், அதையெல்லாம் கவனிக்கத் தோன்றவில்லை மாணவிக்கு. என்னதான் சகமாணவிகளுடன் பழகினாலும், ஆசிரியை தன்னை மதித்துப் பேசுவதுபோல் ஆகுமா?

    வெண்மையான பற்கள் கறுத்த முகத்தின் பின்னணியில் மேலும் ஒளிவிட, “என் பெயர் புலியம்மா!” என்று ஒப்பிப்பதுபோல் தெரிவித்தாள். கைகள் தாமாகக் கட்டிக்கொண்டன.

    அவள் தோழிகள் ‘காக்கா’ என்று கேலியுடன் அவளைக் குறிப்பிட்டதை லட்சியம் செய்யவில்லை புலியம்மா. அவர்களுக்கு என்ன தெரியும் சேவை செய்வதன் மகத்துவம்? காந்தி சொன்னபடி..! அவள் தானே சிரித்துக்கொண்டாள். தானும் அப்பாமாதிரியே ஆகிவருகிறோமே!

    அன்றும் ஒரு கட்டு நோட்டுப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு, கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதுபோல பயபக்தியுடன் டீச்சரின் மேசைமேல் வைத்தாள் புலியம்மா. வழக்கம்போலவே, ஒரு நன்றிகூட எதிர்பார்க்காது, ஆசிரியர்களின் பொது அறையைவிட்டு வெளியே வந்தாள்.

    ஜன்னல்வழியே உள்ளே நடந்த உரையாடல் கேட்டது. “அந்தப் பொண்ணு என்ன, உனக்கு வாலா? கிட்ட வந்தாலே ஏதோ எண்ணை நாத்தம்!”

    யாரோ சிரித்தார்கள்.

    தன்னைப்பற்றித்தான் பேசுகிறார்கள்! புலியம்மாவின் கால்கள் மேலே நகர மறுத்தன.
    “சரியான கழுத்தறுப்பு. ஒரு நாளைக்கு நாலு தடவை அங்க, இங்க பாத்து, ‘குட் மார்னிங்’ சொல்லியாகணும் அதுக்கு. அன்னிக்கு என் கையைப் பிடிச்சுக்கிட்டு, ‘எங்க கிளாசுக்கு வாங்க டீச்சர்’னு முரட்டுப் பிடிவாதம் வேற!’

    ‘தமிழ் டீச்சரா’ இப்படிப் பேசுகிறார்கள்? யாரோ மென்னியைப் பிடித்து அமுக்குவதுபோல் இருந்தது புலியம்மாவுக்கு. இரு கைகளாலும் நீலநிறக் குட்டைப் பாவாடையைக் கசக்கிப் பிடித்துக்கொண்டாள்.

    கட்டைக்குரல் தன்பாட்டில் பேசிக்கொண்டிருந்தது: “அந்தப் பொண்ணு பேரு புலியம்மா. வேடிக்கையா இல்ல? காட்டில இருக்கவேண்டியதை எல்லாம் இந்தமாதிரி நல்ல பள்ளிக்கூடத்திலே விட்டா இப்படித்தான்!”

    யார்யார்மீதோ மோதிக்கொண்டு, மன்னிப்பு கேட்கும் உணர்வுகூட அற்றவளாய், வகுப்பை அடைந்தாள் அவள். ஏமாற்றத்திலும், அவமானத்திலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

    ‘அழக்கூடாது. நீ புலிமாதிரி இல்லியா!’ அப்பா மானசீகமாகப் பக்கபலம் அளித்தார். ‘காந்திகூடத்தான் சிறுமைப்பட்டிருக்கிறார். அதனால் அவர் தளர்ந்துபோனாரா, என்ன!’ என்று அவர் கூறுவதுபோலிருந்தது.

    அப்பாவுடன் டவுனுக்குப் போய், ‘காந்தி’ ஆங்கிலப்படம் பார்த்திருந்தாள். அதிகம் புரியாவிட்டாலும், ஒரு காட்சி மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டிருந்தது.

    காந்தி ஆப்பிரிக்காவில் இருந்தபோது, தாங்கள் நடக்கும் தெருவில் கறுப்பரான அவர் நடக்கக்கூடாது என்று அவர் எதிரில் வந்த இரு வெள்ளையர்கள் தகறாறு பண்ணுகிறார்கள். அவரோ, அஞ்சாமல் அவர்களைக் கடக்கிறார். பின்பு, தன் நண்பரிடம் கூறுகிறார், “சகமனிதனை அவமானப்படுத்துவதால் ஒருவனுக்கு என்ன ஆனந்தம் என்று எனக்குப் புரியத்தான் இல்லை,” என்று.

    அன்றுபூராவும் நினைத்து நினைத்து அழுகை வந்தது. அப்பாவையும், காந்தியையும் நினைத்துக்கொண்டாள். அம்மாவிடம் சொல்லவேண்டும், ‘இனிமே கடுகெண்ணை வைத்துத் தலைபின்னாதீங்கம்மா’ என்று.

    இப்போதெல்லாம் டீச்சர் புடவை அணிந்து வருவதே அபூர்வமாக இருந்தது. டீச்சருடைய காரைக் கண்டும் காணாததுபோல் நின்றாள் புலியம்மா.

    “ஏ பையா! இந்த நோட்டை எல்லாம் எடுத்திட்டு என்கூட வா!” அந்த அதிகாரக்குரல் என்னவோ பலத்துத்தான் இருந்தது. ஆனால் அது காதில் விழாததுபோல் தன்பாட்டில் நடந்துபோனான் அவள் அழைத்த மாணவன்.

    “பெரிய அதிகாரம்! சம்பளம் வாங்கலே? இந்த நோட்டுங்களைத் தூக்கிட்டு நடக்க என்ன கேடு?” அவன் தன் நண்பர்களிடம் உரக்கக் கூறியது புலியம்மாவின் காதிலும் விழாமல் போகவில்லை.

    ‘பாவம் டீச்சர்!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். தானும் ஒரு தமிழ்ப்பெண் என்பதில் டீச்சருக்குப் பெருமிதம் இருந்திருந்தால், இப்படி ஒரு அவமதிப்பு உண்டாகி இருக்குமா?

    (1996-ல், மலேசியாவில் பாரதிதாசன் இயக்கத்தின் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது)

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 10

    நிர்மலா ராகவன்

    என்றும் சோகமா!

    நலம்-1-1-1
    `உங்கள் மகள் இப்படி இருக்கிறாள்! நீங்கள் என்ன, சிரித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?’ என்று பல பெண்கள் தன்னைக் கேட்பதாகச் சொன்ன கௌரியின் முகத்தில் ஆழ்ந்த சோகம்.

    உறவில் மணமுடித்ததாலோ, இல்லை, வேறு எந்த காரணத்தினாலோ, அவள் பெற்ற இரு பெண் குழந்தைகளுமே உடலளவில் சரியில்லை. சந்திராவின் வலது கையும், இரு கால்களும் செயலிழந்து இருந்தன. தவழ்ந்துதான் நகருவாள். அதிக கனமில்லாமல் இருந்ததால், சிறு குழந்தையைப்போல் அவளைத் தூக்கிக்கொண்டுதான் வெளியிடங்களுக்குப் போவார்கள். இதே போன்றதொரு குறையுடன் பிறந்த அவளுடைய அக்காள் இறந்துவிட்டாள்.

    இருபத்தைந்து வயதான சந்திரா நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவர் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தாள். எனக்கு அவளையும், தாய் கௌரியையும் பல வருடங்களாகத் தெரியும்.

    எல்லாரும் பந்தியில் சாப்பிட உட்கார்ந்தபோது, கௌரி ஒரு தட்டில் சாதம் பிசைந்துகொண்டு வந்து, மகளுக்கு தேக்கரண்டியால் ஊட்டத் தொடங்கினாள்.

    என்னால் சும்மா இருக்க முடியவில்லை. `ஐயோ, அந்தச் சிறு பெண்ணின் தன்னம்பிக்கை என்ன ஆவது!’ என்று மனம் பதைத்தது.

    `அவளுக்கு இடது கையால் சாப்பிட முடியாது?’ என்று கௌரியைக் கேட்டேன்.
    `முடியும்!’

    `அப்படிச் சாப்பிட்டால் யாராவது ஏதாவது சொல்வார்களா?’ சற்று கோபத்துடன் வந்தது என் கேள்வி.

    சாந்தமாகப் பதிலளித்தாள்: `யாரும் ஒண்ணும் சொல்லமாட்டார்கள்’.
    `பின்னே என்ன? அவளைத் தானே சாப்பிட விடுங்கள்,’ என்று இரைந்தேன்.

    `இவள் யார் நம்மை மிரட்டுவதற்கு!’ என்று கௌரி ஆத்திரப்படவில்லை. மாறாக, அவள் முகம் மலர்ந்தது. தேக்கரண்டியை சந்திராவின் கையில் (இடதுதான்) கொடுத்தபடி, `இந்த மாமிகிட்டே ஒன்னை ஒரு மாசம் விடணும்!’ என்றாள், சிலாகித்து.

    வேறொரு சமயம், கௌரி என்னருகே வந்து, மெல்லிய குரலில், “உங்கள் மகள் இப்படி இருக்கிறாள்! நீங்கள் என்ன, சிரித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?’ என்று எல்லாரும் என்னைக் கேட்கிறார்கள்!’ என்றாள், வருத்தமாக.

    `விடுங்கள்! நீங்க இப்போ இருக்கிறதுதான் சரி,’ என்றேன் அழுத்தமாக. ஒருவர் அழுதால், அவரைத் தனியாக விட்டுவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கும் இவ்வுலகம்.
    பிறரது வாழ்க்கையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், `நல்லவேளை, நமக்கு இப்படி நடக்கவில்லையே!’ என்ற திருப்தியுடன், `நாங்கள்தான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! நாங்கள் உன்னைமாதிரியா!’ என்பதுபோல் தலைநிமிர்த்தி நடப்பவர்கள் என்னைப் பொறுத்தவரையில், அல்பங்கள். அவர்களுக்கு ஒரு சிறு துன்பம் வந்தால்கூடத் தாங்கமாட்டார்கள்.

    என் நினைவு பின்னோக்கிப் போயிற்று.

    என் ஒரே மகன் இறந்து ஈராண்டுகளுக்குப்பின் நான் சென்னை போயிருந்தேன். சிறு வயதில் நான் வளர்ந்த வீடு! ஆகையால், அந்தப் பருவமே வந்துவிட்டதுபோல் இருந்தது. எல்லா உறவினர்களையும் பார்த்த சந்தோஷத்தில் நிறையப் பேசினேன், சிரித்தேன்.

    `பிள்ளையைப் பறிகுடுத்துட்டு, கொஞ்சம்கூட வருத்தமில்லாம, இவ என்ன இப்படி சிரிச்சுண்டே இருக்கா!’ என்று ஐம்பது வயதான ஒருவர் (ஆணில்லை, பெண்கள்தாம் இப்படிப் பேசுவார்கள்) நீட்டி முழக்கினார்.

    நான் அதை அலட்சியம் செய்தேன்.

    அன்றிரவு என் பெரியம்மா என் பக்கத்தில் படுத்துக்கொண்டு, என் நெற்றியைத் தடவியபடி இருந்தார். `ஒங்க பெரியப்பா சண்டையிலே போனார், ஒரு பெண்ணையும் பறிகுடுத்தேன். ஆனா, நான் இன்னிக்கும் சிரிச்சுண்டுதான் இருக்கேன். அப்படித்தான் இருக்கணும். நம்ப துக்கத்தை உள்ளுக்குள்ளேயே வெச்சுக்கணும். நீயும் அப்படித்தான் இருக்கே!’ என்றபோது, ஒருவராவது என்னைப் புரிந்துகொண்டாரே என்று என் கண்ணீர் பெருகியது. துடைத்துக்கொள்ளத் தோன்றவில்லை.

    நாங்கள் இருவரும் வழக்கத்துக்கு விரோதமாக இரவு பூராவும் ஏதோ பேசினோமே என்று இன்றளவும் சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். (`அப்படி என்னடி பேசினேள் ரெண்டுபேரும்?’)

    என்ன பேசினோம் என்று நினைவில்லை. அது முக்கியமுமில்லை.

    பெற்ற குழந்தையைப் பறிகொடுத்த இரு தாய்மார்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்த பொன்னான தருணம் அது.

    தொடருவோம்

    Share
  • கண்ணாடிமுன்

    நிர்மலா ராகவன்

    `மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!’

    குரலில் சற்றும் கோபமில்லாமல்தான் மனைவி அந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்தாள். ஆனால் அதில் பொதிந்து கிடந்த ஏளனம்!

    வேண்டும். நன்றாக வேண்டும். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தமாதிரி, ஏற்கெனவே குண்டாக இருந்த மனைவியிடம் அவளுடைய உடலைப்பற்றிக் கிண்டல் செய்வானேன், இப்படி வாங்கிக் கட்டிக்கொள்வானேன்!

    அவருக்கு எல்லார்மேலேயும் கோபம் வந்தது.

    `பிறந்த நாள்’ என்று அவரைத் தூக்கிப்போகாத குறையாக வெளியே அழைத்துப்போன அந்த ஐந்து நண்பர்கள்மேல், அவர்களுடன் பார்த்த படத்தின் கதாநாயகிமேல். இன்னும்.., தன்மேலேயே.

    இந்த சிம்ரன் ஒருத்தி! எதற்காக உடலை இவ்வளவு கச்சிதமாக வைத்திருக்க வேண்டும்? அட, அழகான, ஒல்லியான உடல் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே! அதை இப்படியா வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும், இடுப்பு, தொப்புள் என்று அணு அணுவாக!

    இவரைப்போன்ற இளிச்சவாயர்கள், `ஆகா! இன்னும்கூட நமக்கு இளமையின் உத்வேகம் இருக்கிறதே!’ என்ற பூரிப்புடன் மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் சேர்ந்து செய்த சதி! இல்லாவிட்டால், முக்காலே முவ்வீசம் கிழவனாகிவிட்ட தனக்கு அந்த இளம்பெண்ணைப் பார்த்து எதற்காக இத்தனை கிறக்கம் ஏற்பட வேண்டும்?

    பார்த்ததுதான் பார்த்தோமே, அப்போது உண்டான மயக்கத்தை மனசுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?

    படத்தின் பாதிப்பு குறையாமலேயே வீட்டுக்கு வந்தவருக்கு, காலைப் பரத்திக்கொண்டு, குறட்டை விட்டபடி தூங்கிக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்ததும் எரிச்சல் பொங்கியதில் என்ன ஆச்சரியம்?

    `சனியன்! எனக்குப்போய் இப்படி ஒண்ணு வாய்ச்சிருக்கே!’ என்று அவளை மனசுக்குள்ளேயே திட்டி, தன்மேல் பரிதாபப்பட்டுக்கொண்டார்.

    அப்போது கண்விழித்தவள், “வந்துட்டீங்களா?” என்று தூக்கக் கலக்கத்தில் கட்டைக்குரலில்கேட்டது அவரது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.

    “வராம? தியேட்டரிலேயே படுத்துடுவாங்களா? இல்ல, இது ஒன் புருஷனோட ஆவின்னு நினைச்சுக்கிட்டியா?” என்று எரிந்து விழுந்தார்.

    அவள் எழுந்து உட்கார்ந்துகொண்டாள். “ரொம்பப் போட்டுட்டீங்களா? பேசாம படுங்க!” என்றாள், மனைவிகளுக்கே உரிய விவேகத்துடன்.

    “யாரு, யாரைடீ போட்டாங்க? புருஷனை மயக்கறமாதிரி ஒடம்பை வெச்சுக்கத் தெரியல, பெரிசா பேச வந்துட்டா!” என்று பொரிந்தவர், “சே! ஏண்டா வீட்டுக்கு வர்றோம்னு இருக்கு. வந்தா, பூரியாட்டம் ஒப்பிப்போன ஒன் மூஞ்சியைப் பாத்துத் தொலைக்க வேண்டியிருக்கு. ஹூம்! சிம்ரனைக் கட்டிக்கப்போறவன் குடுத்து வெச்சவன்!” என்று ஏகமாக உளறினார்.

    அவளுக்கு ஏதோ புரிந்தாற்போலிருந்தது. முகத்தில் மெல்லிய புன்னகை.

    அப்போதுதான் சொன்னாள், “மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!”
    அசரீரிபோல், வேளைகெட்ட வேளையில் அவள் குரல் கேட்டவண்ணம் இருந்தது.

    காலையில் பல் துலக்கிய கையோடு பாத்ரூமில் சவரம் செய்துகொள்ளும்போது, குளித்துவிட்டுத் தலை வாரிக்கொள்ளும்போது, ஏன், காரை ஓட்டிப்போகும் வழியில் ஏதாவதொரு சிவப்பு விளக்கில் நிற்கும்போது முகத்திற்குமேல் இருந்த கண்ணாடியைத் திருப்பி … இப்படி பல கோணங்களிலும் கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்துக் கொண்டவருக்கு ஒன்று புரிந்தது.

    மனைவி சிம்ரன்மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், தானும் சினிமா கதாநாயகன்போல் இருக்கவேண்டாமோ?

    `ரஜினி எவ்வளவு இளமையா இருக்காரு, பாருங்க! அவருக்கும் ஒங்க வயசுதானாம்!’ அண்மையில், `சந்திரமுகி’ பார்த்துக்கொண்டிருந்தபோது மனைவி காதருகே குனிந்து முணுமுணுத்தது நினைவில் எழுந்தது.

    அவருக்குப் படத்தின் ஆரம்பத்திலேயே சுவாரசியம் போய்விட்டது. `இதையெல்லாம் ஒரு படம்னு பாக்கறாங்களே, அறிவு கெட்டவங்க!’ என்று தமிழ்ப்பட ரசிகர்களை ஒட்டுமொத்தமாக வைதார்.

    மனைவியை மயக்கிய அந்தக் கதாநாயகனை பொறாமையுடன் வெறித்தார்.ஒரு படத்துக்கு ஐம்பது கோடிக்குமேல் சம்பளம் வாங்குபவருக்கு ஆயிரக்கணக்கில் செலவழித்து, வழுக்கைத்தலையை மறைக்க கரிய நிறத்தில் `விக்’ வாங்க முடியும்தான். இத்தாலி நாட்டுக்குப் போய், முகத்திலும், உடம்பிலும் தொங்கும் வேண்டாத சதையை எல்லாம் அறுவைச் சிகிச்சையால் அகற்றிக்கொள்ளவும் முடியும்.

    தனக்கு அதெல்லாம் முடியுமா? கேவலம், மாதச் சம்பளக்காரன்! இந்த லட்சணத்தில், வெளிநாட்டில் படிக்கும் மகனுக்கு வேறு அவ்வப்போது தண்டம் அழ வேண்டியிருக்கிறது.

    இதெல்லாம் நண்பர்களுக்குத் தெரிகிறதா?

    “ஒனக்கென்னப்பா! ஒரே மகன்! மகா புத்திசாலி! நீங்க புருஷன், பெண்டாட்டி ரெண்டே பேர் வீட்டிலே! எப்பவும் ஹனிமூன்தான்!” என்று விகாரமாகக் கண்ணைச் சிமிட்டி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வார்கள்.

    ஹனிமூனாவது!

    அந்த வார்த்தை காதில் விழுந்தாலே, அவருக்குத் தன் கல்யாணம்தான் நினைவுக்கு வந்து பயமுறுத்தும்.

    குப்பன்.
    அதுதான் அவருடைய பெயர்.

    அவரைக் கேட்காமல், அவருக்குப் பிடிக்காத பெயராக வைத்துவிட்டார்கள். ஷ், ஹ் போன்ற வடமொழி எழுத்துக்கள் ஒன்றிரண்டு கலந்து நாகரிகமாக இல்லை தன் பெயர் என்ற பெரிய குறை அவருக்கு.

    போதாத குறைக்கு, பள்ளியில் ஷாம் என்ற மாணவன் `ஷாம்பு’ ஆக, சம்சூரி என்ற மலாய் மாணவன் `சம்சு’வாக (மட்ட ரக கள்ளைக் குறிக்கும் வார்த்தை), இவரைக் `குப்ப’ என்று அழைத்தார்கள் சகமாணவர்கள்.

    வாத்தியார்களுக்கும் புனைப்பெயர் வைத்துச் சிரித்த காலம் அது. ஆனால், தன் பெயரைச் சுருக்கி அழைத்து, பிறர் சிரிக்கும்போது, அதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டு சிரிக்க முடியவில்லை அவரால். அழுகைதான் வந்தது.

    வயதாக ஆக, தனக்கு வரும் மனைவிக்காவது பெயர் மிக அழகாக இருக்கவேண்டும் என்ற தீர்மானம் அவருக்குள் எழுந்தது.

    அதனால்தானே, “பொண்ணு பேரு ஜலஜாவாம்,” என்றபடி, மேலே ஏதோ சொல்லவந்த அம்மாவை இடைமறித்து, “இதையே முடிச்சுடுங்க!” என்றார் அவசரமாக?

    “நீ பாக்க வேணாம்?” என்று அம்மா அதிசயப்பட்டுக் கேட்டபோது, “பரவாயில்லே,” என்று மட்டும்தான் அவரால் சொல்ல முடிந்தது.

    ஜலஜா!
    ஆகா! எவ்வளவு அழகான பெயர்! பெயரே இவ்வளவு அழகாக இருந்தால், உருவம் எப்படி இருக்கும்! அடுத்த சில மாதங்கள் இனிமையான கற்பனையில் கழிந்தன.

    மனைவியின் பெயரிலிருந்த அழகிற்கும், உருவத்திற்கும் கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லை என்று உணர்ந்து அவர் அதிர்ந்தபோது, அவள் கழுத்தில் தாலி ஏறியிருந்தது.

    “இவ இவ்வளவு குண்டுன்னு ஏம்மா மொதல்லேயே சொல்லலே?” அம்மாவைத் தனியாகப் பார்த்தபோது அழமாட்டாக்குறையாகக் கேட்டார்.

    “நீ எங்கே சொல்லவிட்டே?” என்று பழியை அவன்மேலேயே திருப்பினாள் தாய். “இப்ப அதனால என்ன மோசம்? நளபாகமா சமைக்கிறா. நீயும் குண்டாயிட்டாப் போவுது!” என்று சமாதானப்படுத்தினாள்.

    அப்படியும் அவர் முகம் வாடியிருந்ததைப் பொறுக்காது, “எல்லாப் பொண்ணுங்களும் ஒரு பிள்ளை பெத்ததுக்கு அப்புறம் குண்டாத்தானே போயிடுவாங்க! நான் எப்படி இருந்தேன், தெரியுமா?” என்று ஆரம்பித்தாள்.

    நல்லவேளை, மனைவியின் பிரசவம் கடினமாக இருந்தது. சற்றே இளைத்தாள்.

    இருந்தாலும், ஏமாந்துவிட்ட உணர்ச்சி அவரை அலைக்கழைத்துக்கொண்டே இருந்தது. எதற்காகவாவது அவளை விரட்டுவார். அவரது போக்கால் பாதிக்கப்படாது, எருமை மாட்டின்மேல் பெய்த மழைபோல் அவள் சும்மா இருந்தது அவரை மேலும் ஆத்திரப்படுத்தியது.

    இன்றோ, பயம் சுத்தமாக விட்டுப்போய், அவரையே பழிக்கிறாள்!

    எதையோ இழந்துவிட்டது போலிருந்தது. யாருடனும் பேசப் பிடிக்காமல், பத்திரிகைகளில் வரும் தத்துவ போதனைகளைப் படிக்க ஆரம்பித்தார். அப்படியாவது நிம்மதி கிடைக்காது?

    காவி கட்டிய ஒருவர் இந்த அரிய யோசனையை அளித்திருந்தார்: மனம் உற்சாகமாக இருந்தால், உடலில் இளமை துள்ளி விளையாடும்.

    சிறிது தயக்கத்திற்குப்பின், ஹைபர் மார்க்கெட்டுக்குப் போய், மருக்கொழுந்து வாசனை அடித்த செண்ட் ஒரு குப்பி வாங்கிக்கொண்டார். கல்யாணமான புதிதில் உபயோகித்தது. அதற்குப் பிறகுதான் உல்லாசமே போய்விட்டதே!

    கணவர் அடிக்கடி கண்ணாடியில் அழகு பார்த்துக்கொள்வதையும், இப்போது செண்ட் உபயோகிப்பதையும் கண்டும் காணாததுபோல் இருந்த ஜலஜா குழம்பினாள். `நாற்பது வயதில் நாய்க்குணம்’ என்பார்களே!

    அவர் எதிர்பார்த்த அளவுக்கு அந்த செண்ட் வாசனை புத்துணர்ச்சி அளிக்கவில்லை.
    அடுத்த முறை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டபோது, உப்பும் மிளகும் கலந்தது போன்றிருந்த தலைமயிர் அவர் கண்ணை உறுத்தியது.

    `என் முடி ரஜினியுடையதைவிட எவ்வளவு அடர்த்தி!’ என்ற பெருமையும் எழாமலில்லை.

    தனக்கு எதற்கு `விக்’கும், மண்ணாங்கட்டியும்! முடி மட்டும் கொஞ்சம் கறுப்பாக இருந்ததால், இன்னும் பத்து வயது குறைவாகக் காட்டுமே!

    குளிக்கப்போனவர் ஒரு மணி நேரத்துக்குமேல் ஆகியும் வெளியே வரவில்லையே என்று பயந்த மனைவி தன் பலத்தையெல்லாம் பயன்படுத்தி கதவை உடைக்காத குறையாகத் தட்ட, அசட்டுச் சிரிப்புடன் வெளிப்பட்டார்.

    “இதென்னங்க கண்ராவி!” சிரிப்பை அடக்க முயற்சித்து, தோற்றவளாகக் கேட்டாள்.

    “அமில மழையிலே நனைச்சுட்டேன்!” என்று — வெகுவாகக் கறுத்த — தன் முடிக்கு ஒரு காரணத்தைக் கற்பித்தார்.

    தான் எதிர்பார்த்தபடி, மனைவி தன் புதிய முக அழகில் அப்படி ஒன்றும் மயங்கவில்லையே என்ற வருத்தம் அவருக்குள் எழுந்தது.

    வேறு எங்காவது கோளாறோ?

    உடல் பூராவையும் பார்த்துக்கொள்ள முழுநீளக் கண்ணாடி ஒன்றை வாங்கி மாட்டினார். அப்போதுதான் புரிந்தது மனைவியின் எகத்தாளம்.

    நம் வயிறு எப்போது, எப்படி, இப்படி — எட்டு மாதக் கர்ப்பிணிபோல் — பருத்தது?

    முடிச்சாயம் வாங்கிய அதே கடைக்குப் போய் சில மணி நேரங்களைச் செலவிட்டார். வெளியே வரும்போது அவர் கையில் இருந்த பொட்டலத்தில் ஒரு வித இடுப்புப்பட்டி இருந்தது. ஏதோ மருந்து சேர்க்கப்பட்டதாம். வயிற்றைச் சுற்றிச் சுற்றிக் கட்ட வேண்டும். எந்நேரமும் அணிய வேண்டும். சில வாரங்களுக்குள்ளேயே வித்தியாசம் புலப்படும் என்று அங்கிருந்த சீன மாது அடித்துச்சொல்ல, `இந்தப் பானை வயிற்றைக் குறைக்க நூற்றுப் பத்து ரிங்கிட் செலவழிப்பதில் தப்பொன்றும் இல்லை! என்று துணிந்து வாங்கிவிட்டார்.

    இப்போது நிமிர்ந்துதான் உட்காரவோ, நடக்கவோ முடிந்தது. நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டாலும், எந்நேரமும் வயிறு வெடிப்பதுபோல் இருந்ததால் சாப்பிடும் அளவு கணிசமா்கக் குறைந்து போயிற்று.

    `வயிறு சரியா இல்லியா?’ `சாப்பாடு நல்ல இல்லே?’ என்றெல்லாம் மனைவி ஆதுரத்துடன் கேட்டபோது, மனதுக்குள் கொக்கரித்துக்கொண்டார்: `என்னை மட்டம் தட்டினியே! இன்னும் கொஞ்ச நாளிலே பாரு!’

    கொஞ்ச நாளில் தலைசுற்றல்தான் வந்தது.

    பொறுக்க முடியாது போக, மருத்துவரிடம் போனார்.”எடையை ஒரேயடியாக் குறைக்க ஏதோ செய்யறீங்களா? அதான் ரத்த அழுத்தம் குறைஞ்சுபோய், தலை சுத்துது. சாதாரணமா, லேடீஸ்தான் இப்படிச் செய்வாங்க!” என்று அந்த மனிதர் பிட்டுப் பிட்டு வைத்து, ஒரு மாதிரியாகப் பார்க்க, மானம் போயிற்று குப்பனுக்கு.

    வீடு திரும்பியதும் முதல் வேலையாக, பெல்டைச் சுற்றி, பழைய துணிகளுக்கடியில் ஒளித்து வைத்தார். அவ்வளவு விலை கொடுத்து வாங்கியதை தூர எறியவும் மனம் இடம் கொடுக்கவில்லை.

    அன்று அவர் வேலை முடிந்து வந்தபோது, வழக்கத்துக்கு விரோதமாக மனைவி யாரிடமோ பேசிசுக்கொண்டிருந்தது கேட்க, மறைந்திருந்து கேட்டார்.

    “அவர் முந்திமாதிரி என்னைச் சீண்டறது கிடையாது. எப்பவும் ஏக்கமா, எதையோ நினைச்சுக்கிட்டு, சரியா சாப்பிடறதில்ல. வீடெல்லாம் கண்ணாடி வாங்கி மாட்டி அழகு பாத்துக்கிடறது இருக்கே! விடலைப் பசங்க தோத்தானுங்க, போ! ஏதானும் சின்ன வீடு சமாசாரமோன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது. இவரைவிட்டா, இத்தனை வயசுக்குமேல நான் என்னடி பண்ணுவேன்!”

    மெய்சிலிர்க்க, வந்த வழியே மீண்டும் நடந்தார் குப்பன். மனைவிக்குத் தன்மேல் அன்பு இல்லாமல் இல்லை!

    ஆணழகராக இருக்கும் ஒருவரைத் திரையில் பார்த்து ரசிக்கலாம். ஆனால், எல்லாரும் வாழ்க்கைத்துணையாக முடியுமா?

    ஏதோ உறைத்தது.

    சிம்ரனோடு மனைவியைத் தான் ஒப்பிட்டுப் பேசியது மட்டும் என்ன நியாயம்?
    அந்த பஞ்சாபி நடிகையால் அப்பள வற்றல் குழம்பும், கத்தரிக்காய் பொரியலும் ஜலஜாவின் கைமணத்தோடு ஆக்கிப்போட முடியுமா?

    வீட்டுக்குத் திரும்பியவர் கையில் பழைய தினசரியில் சுற்றப்பட்ட மல்லிகைப்பூ. ஒரு பிளாஸ்டிக் பை பிதுங்க ரசமலாய், சூர்யகலா, பால்கோவா, பாதம் ஹல்வா என்று வித விதமான இனிப்பு வகைகள்.

    “இவ்வளவு இனிப்பு சாப்பிட்டா, நான் இன்னும் குண்டாயிடுவேன்!” என்று செல்லமாய் சிணுங்கிய மனைவியை ஆசையுடன் பார்த்தார்.

    “நீ இப்படி இருந்தாத்தான் நல்லா இருக்கு. இறுகக் கட்டிக்கிட்டா, எங்கே எலும்பு நொறுங்கிடுமோன்னு பயப்பட வேண்டாம், பாரு!” என்றபடி அவளை நெருங்கினார்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 9

    நிர்மலா ராகவன்

    அப்பாவுக்கு நன்றி

    நலம்-1-1

    இளவரசி எங்கள் பள்ளியில் இறுதியாண்டை முடித்துவிட்டு, பரிசோதனைக்கூடத்தில் உதவியாளாக வேலை பார்த்தாள். இரண்டு ஆண்டுகளாக அவள் ஒருவனைக் காதலித்து வந்தது எனக்குத் தெரியும். ஒரு நாள் ரொம்பக் கோபமாக இருந்தாள்.

    `என்ன ஆச்சு, ஈலா?’ என்று விசாரித்தேன். (இளவரசி என்ற பெயர் வாயில் நுழையாததால், அவள் சீன ஆசிரியைகளுக்கு `ராசி’. பிறருக்கு ஈலா).

    `எப்போ பார்த்தாலும், நாம்ப கல்யாணத்துக்குப்புறம், ஒன் சம்பளத்திலே வீடு வாங்கலாம், காடி வாங்கலாம்னு அதே பேச்சுத்தான்!’

    `அவனுக்கு ஒன்னைவிட ஒன் சம்பாத்தியத்திலேதான் கண். வேலையை விடப்போறேன்னு சும்மா மிரட்டிப்பாரு. ஒன்னை விட்டுடுவான்!’ என்று சிரித்தேன்.

    அவள் யோசித்தபடி போனாள். சில தினங்களுக்குப்பின், `நேத்து நாங்க மீட் செஞ்சப்போ, `ஸாரி. நான் ஒன்னைக் கல்யாணம் செய்துக்க முடியாது’ன்னு அவனை விரட்டிட்டேன்,’ என்று கூறினாள். அப்படியும் அவள் ஆத்திரம் அடங்கவில்லை. `இவன் ஆடம்பரமா வாழ நான் சம்பாதிச்சுப்போடணுமா?’ என்று உறுமினாள்.

    இளவரசி குள்ளமாக, குண்டாக, களையான முகத்துடன் இருப்பாள். அவளுடைய உருவத்தைவிட, அவளால் ஈர்க்கப்பட்ட ஆண்கள் அவளுடைய அரசாங்க உத்தியோகத்தில் கண்ணாக இருந்தவர்கள்தாம். அவள் காலம் முடியும்வரை அளிக்கப்படும் ஓய்வூதியம் அதற்குப் பின்னர் கணவன் உயிரோடு இருந்தால், அவனுக்குக் கிடைக்கும். இது போதாதா, குறுகிய காலத்தில் வெற்றிப்படியில் ஏறத் துடிப்பவர்களைக் கவர!

    `சண்டை போட்டானா?’ கவலையுடன் விசாரித்தேன்.

    `அதெல்லாம் இல்லே. வருத்தமா, தலையைக் குனிஞ்சுக்கிட்டு போயிட்டான்’.

    இளவரசியின் தந்தை துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்தவர். மகளை நல்லவிதமாக வளர்த்திருக்கிறார். அதனால், சுயநலத்துடன் அவளைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த காதலனை உதறும் துணிச்சல் இருந்தது. பொதுவாக, நல்லவரோ,கெட்டவரோ, பெற்ற தந்தையைப்போல் இருப்பவர்களையே பெண்கள் தம்மையுமறியாமல் வரிக்கிறார்கள்.

    அவளுக்குத் தன் தந்தையின் அருமை நன்றாகப் புரிய இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது.

    இன்னொரு நாள், `என் அப்பா எவ்வளவோ கஷ்டத்தோட என்னைப் படிக்க வெச்சு, ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்திருக்காரு. அவருக்கு எப்படி தாங்க்ஸ் சொல்றதுன்னு தெரியல. ஏதாவது செய்யணும்போல இருக்கு. ஆனா என்னான்னு புரியல,’ என்று என்னிடம் வந்தாள்.

    மாஜி காதலனுடன் ஒப்பிடும்போது, தந்தை அவளுக்குத் தெய்வமாகவே தெரிந்திருக்க வேண்டும். எப்படி தன் தேவைகளைச் சுருக்கிக்கொண்டு, சக்திக்கு மீறி செலவு செய்து அவளைப் படிக்க வைத்திருக்கிறார்!

    `அவருக்குச் சாப்பாட்டில பிரியமா?’ என்று விசாரித்துவிட்டு, ஒரு சமையல் குறிப்பை எழுதிக்கொடுத்து, விளக்கினேன்.

    இரண்டு நாட்கள் பொறுத்து, வாயெல்லாம் பல்லாக வந்தாள். `இந்தமாதிரி அம்பாங் தெரு ஐயர் கடை ரவா தோசை சுட எங்கே கத்துக்கிட்டே’ன்னு அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டாரு! நிறையச் சாப்பிட்டாரு!’

    (அவர் குறிப்பிட்ட கடை கோலாலம்பூரின் பிரதான தெருவில் இன்றும் இருக்கிறது. பல கைகள் மாறிவிட்டன. எங்கள் குடும்ப நண்பர் — ஒரு இஸ்லாமியர் — அதை நடத்தியபோதும், அதன் பெயர் என்னவோ ஐயர் கடைதான்! சைவ உணவு மட்டும்தான் அங்கு கிடைக்கும் என்பதாலோ, இல்லை, பழக்க தோஷத்தாலோ!)

    அவளுடைய பூரிப்பு என்னையும் தொத்திக்கொண்டது.

    பெற்றோருக்கு நன்றி வாயால் சொல்ல வேண்டுவதில்லை. அவர்களுக்குப் பிடித்தமானவற்றை — வெளியில் அழைத்துப்போவதோ, எதிரில் உட்கார்ந்து நம் அன்றாட வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதோ — செய்தாலே போதுமே! அப்போது அவர்கள் அடையும் ஆனந்தம், `நாம் பிள்ளைகளை நல்லவிதமாகத்தான் வளர்த்திருக்கிறோம்!’ என்ற நிறைவுதானே இறுதிக்காலத்தில் ஒவ்வொரு பெற்றோரும் வேண்டுவது!

    தொடருவோம்

    Share
  • குட்டக் குட்டக் குனியும்போது

    நிர்மலா ராகவன்

    பத்திரிகையில் பெயர் வந்துவிட்டால், புகழ் வருகிறதோ இல்லையோ, எல்லாருக்கும் பொறாமை வருகிறது. என்னமோ பத்திரிகைக்காரர்கள் கொட்டிக் கொடுத்து, அந்த சன்மானத்தில் நாலு பங்களா வாங்கிப் போட்டுவிட்ட மாதிரிதான்! இந்த மனிதர்களை எண்ணி அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை இந்திராவுக்கு.

    இருபத்தைந்து ஆண்டுகளாக புனைப்பெயரிலேயே எழுதி தன்னை மறைத்துக் கொண்டவளின் போதாத காலம் ஏதோ போட்டியில் பரிசு கிடைத்து, புகைப்படம் மூலம் அவள் முகமும், அத்துடன் சொந்தப்பெயரும் எல்லாருக்கும் அறிமுகமாகிவிட்டது.

    பரிசு வாங்கியதில் தன்னம்பிக்கை துளிர்த்தது. துணிந்து, சமூகத்தின் குறைகளைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தபோதுதான் பிடித்தது சனி.

    இவள் பெண்களுக்குச் சமத்துவம் கேட்கப்போய், எல்லாப் பெண்களும் விழித்துக்கொண்டு, அப்புறம் நம்மையே குப்புற வீழ்த்தி விடுவார்களோ என்று பயந்தார்கள் ஆண் வாசகர்கள்.

    பயம் இருப்பவன்தான் பயங்கரமானவனாக ஆகிறான் என்று எங்கோ படித்தது இந்திராவுக்கு நினைவு வந்தது.

    அடங்கிக் கிடப்பதுதான் பெண்ணாகப் பிறந்ததன் பயன் என்றெண்ணிய பெண்களோ, `இவள் என்ன நம்மை மட்டம் தட்டுவது!’ என்று ஆத்திரம் அடைந்தார்கள்.

    யாராவது மிகுந்த பலம் அடைவதற்குள் எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று எல்லாருமே கங்கணம் கட்டிக்கொள்கிறார்கள். சிலர், வெளிப்படையாக எதுவும் செய்யத் துணிவின்றி, புகழ்வதுபோல, தந்திரமாகக் குழிபறிக்கிறார்கள்.

    எவனுக்கோ இவள் தலையெடுத்தது பிடிக்கவில்லை. இல்லாவிட்டால், நாற்பது வயதான, ஒரு பெண்ணுக்கும் தாயான இவள் பெயருக்குமுன்  `மிஸ்` போட்டு கடிதம் எழுதியிருப்பானா?

    `அது எப்படி கண்ட தடியனெல்லாம் என் பெண்டாட்டிக்கு கடுதாசி எழுதப்போச்சு!’ என்ற கோபத்தைவிட, எழுதின முட்டாள் `மிஸ். இந்திரா’ என்று விலாசத்தில் எழுதியிருந்ததுதான் கதிரேசனது ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது.

    “உன்னையெல்லாம் காலை ஒடைச்சு, வீட்டிலேயே  வைக்கணும். பெரிய மனசு பண்ணி, வேலைக்குப் போக விட்டிருக்கேன்ல? சம்பாதிக்கிற திமிரு! அதான் கொழுத்துப் போச்சு!” என்று ஆரம்பித்தவன், என்னமோ இவள் தானாகப்போய் எவனுடனோ கள்ள உறவு வைத்துக்கொண்டதுபோல பேயாட்டம் ஆடினான்.

    அடுத்து என்ன நடக்கும் என்று புரிந்து போயிருந்தாலும், கணவனுக்கு எதிர்பேச்சு பேசாது, அடங்கிப்போவதுதான் ஒரு நல்ல மனைவியின் தர்மம் என்று வளர்க்கப்பட்டு இருந்ததால், பலியாடுபோல் எதற்கும் தயாராக நின்றாள்.

    தாயின் வீங்கிய முகத்திலும் உடலிலும் ஒத்தடம் கொடுத்தபடி வசந்தா பேசினாள்: “இன்னும் எத்தனை நாளைக்கும்மா இப்படி அடிபட்டு சாகப்போறீங்க? நீங்கதான் சுயமா சம்பாதிக்கிறீங்களே! எங்கேயாவது தனியா போயிடறது!”

    உலகம் புரியாத மகளைக் கனிவுடன் பார்த்தாள் இந்திரா. கல்யாணத்திற்கு நிற்பவள்!

    ஒரு பெண் கணவனிடம் படும் அவதியைப் பற்றி யாருக்கு என்ன  அக்கறை! `பொண்ணுக்கு அம்மா சரியில்லையாமே!’ என்றுதான் மற்ற எல்லாப் பெண்களும் வம்பு பேசுவார்கள்.

    பிறர் கிடக்கட்டும், தனக்கேகூட பயமாகத்தான் இருக்கிறது. ஒரு பெண் இந்த உலகத்தில் தனியாக இருக்க முடியுமோ? `ஆண் என்னும் கொழுகொம்பில் படருபவள்தான் பெண் என்னும் மெல்லியலாள்’ என்று சினிமா, கதைப்புத்தகங்கள் மூலம் நம்ப வைத்து விட்டார்களே!

    சரி, கொடுமைக்காரரான இவரை விட்டுவிட்டு, வேறு ஓர் ஆணைத் தேடிக்கொள்ளலாம்தான். அவன் மட்டும் நல்லவனாக இருப்பான் என்பது என்ன நிச்சயம்?

    தீர்மானிக்க முடியாததோர் எதிர்காலத்தைவிட கசப்பான நிகழ்காலத்தையே பொறுத்துப் போகலாம் என்றுதான் விரக்தியுடன் எவ்வளவோ இம்சையைத் தாங்கி வந்திருக்கிறாள். எல்லாம் இந்தப் பெண்ணுக்காகத்தானே! அது புரிகிறதா இவளுக்கு!

    “அப்பா முந்தியெல்லாம் இப்படியா இருந்தாரு! நம்ம போதாத காலம், குடிச்சுட்டு காடியை எவன்மேலேயோ ஏத்தி, லைசன்சு போயிடுச்சு. என்னடா, தனக்கு வேலை போயிடுச்சே, பொண்டாட்டி சம்பாதிச்சுக் கொண்டு வர்ற காசில சோறு திங்க வேண்டியிருக்கேன்னு அவமானம், பாவம்! அவரோட கோபத்தையும், வருத்தத்தையும் வேற யார்மேல காட்ட முடியும், வசந்தா?”

    ஆனால், தன் சமாதானத்தை மகளால் ஏற்க முடியவில்லை என்பது புரிந்தது. மகள் தந்தையைத் தவிர்ப்பதையும்,`நான் கல்யாணமே செய்துக்கப் போறதில்லே! அதான் ஃபேக்டரி வேலைக்குப் போறேனே!’ என்று திமிராகப் பேசுவதையும் பார்த்து இந்திராவுக்குப் பயம் வந்தது.

    `இந்த காலத்துப் பெண்கள் நம்மைப்போல கையாலாகாத அசடுகள் இல்லை!’ நினைக்கும்போதே பெருமிதம் ஏற்பட்டது.

    `பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்,’ என்று அடிக்கடி எழுதிய தன்னுடைய தைரியம் எல்லாம் எழுத்தோடு சரி.`கணவன் செய்யும் எல்லா கொடுமையையும் பொறுத்துப் போகிறவள்தான் நல்ல பெண்!’ என்பதுபோல் அல்லவா நடந்துகொள்கிறோம்!

    இனியாவது ஊருக்கு உபதேசம் செய்து கொள்வதோடு நிற்காமல், தான் சொல்லி வருவதைத் தானே கடைப்பிடிக்க வேண்டும். இப்படித் தீர்மானம் செய்து கொண்டாலும், சிறிது பயமும் எழுந்தது இந்திராவுக்குள்.

    அன்று சம்பள நாள்.

    மனைவிக்காக வீட்டு வாசலிலேயே காத்திருந்தான் கதிரேசன்.

    “கொண்டா!” அவனது நீட்டிய கையை லட்சியம் செய்யாது, உள்ளே நடந்தாள் இந்திரா.

    நாராசமாகக் கத்தியபடி அவன் அவளைப் பின்தொடர்ந்தபோது, சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தாள் வசந்தா. அவள் கண்கள் பயத்தில் விரிந்தன.

    அவ்வளவுதான். இந்திராவுக்கு எங்கிருந்தோ ஆவேசம் வந்தது. கைப்பையை இறுக அணைத்துக் கொண்டாள். “நான் ராப்பகலா வேலை பாக்கிறதில கிடைக்கற காசு இது! ஒங்களுக்கு எதுக்குக் குடுக்கிறது!”

    வழக்கத்துக்கு விரோதமான அந்த எதிர்ப்பில் கதிரேசன் சற்றே அயர்ந்து போனான். பிறகு, வெறியுடன் அவள்மேல் பாய, அதை எதிர்பார்த்தவளாக, சட்டென விலகினாள். தாவிய வேகத்தில் சுவற்றில் தலை மோதி, கீழே விழுந்தான்.

    சமாளித்தபடி எழுந்திருக்கப்போனவனை இந்திராவின் குரல் தாக்கியது. “சும்மா அப்படியே ஒக்காருங்க. நீங்க பாட்டில எல்லா காசையும் தண்ணியில விட்டுட்டா, வசந்தாவுக்கு ஒரு கல்யாணம், காட்சின்னு எப்படி செய்யறது?”

    “என்னமோ, வசந்தா வசந்தாங்கறியே! நானில்லாட்டி ஒம்பொண்ணு எப்படி வந்திருக்கும்!”

    இந்திராவின் உதடுகள் அலட்சியத்தில் விரிந்தன. `பிள்ளை பெத்துக்க எந்த ஆம்பளையா இருந்தா என்ன! கற்பழிப்புகூடத்தான் கருவில வந்து முடியுது!’ என்று அவள் நினைப்பு ஓடியது. வெளியில் சொல்வது அசிங்கம் என்று அடக்கிக்கொண்டாள்.

    “இதோ பாருங்க! வேலைவெட்டி எதுவும் இல்லாத ஒங்களை வெச்சு சோறு போடறேன் — நீங்க தாலி கட்டின தோஷத்துக்கு. அதுக்கு மீறி, என்மேல ஒங்க கை பட்டுச்சோ, போலீசுக்குப் போயிடுவேன். பொண்டாட்டியை அடிக்கிறது `குடும்ப விவகாரம்’ னு இப்ப யாரும் ஒதுங்கிப் போறதில்ல. நம்ப மலேசிய நாட்டில இது சட்ட விரோதம். தெரியுமில்ல?”

    வசந்தாவின் முகத்தில் ஓர் ஆச்சரியக் குறி. கண்ணில் மின்னல் கீற்று தோன்றி மறைந்தது நன்றாகவே புலப்பட்டது. தனக்குக்கூட தைரியம் வந்துவிட்ட பெருமையில், தலை நிமிர்ந்து உள்ளே நடந்தாள் இந்திரா.

    கதிரேசன் நிலைகுத்திப்போய் உட்கார்ந்திருந்தான்.

    `என்ன பொண்ணு நீ! புருஷனுக்கு மரியாதை குடுத்து நடக்கத் தெரியாது?’ ஏதோ தலைமுறையைச் சேர்ந்த எவளோ கூறியது அசரீரியாகக் கேட்டது.

    இந்திரா உதட்டைச் சுழித்தாள். “மரியாதை எல்லாம் குடுத்து வாங்கற சமாசாரம்!” உரக்கவே சொன்னாள்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (8)

    நிர்மலா ராகவன் 

    அப்பா, அம்மா, அடி

    நலம்-

    `எங்கப்பா என்னைத் தினமும் அடிக்கிறார்! எதற்கென்றே புரியவில்லை!’

    `எங்கப்பா மட்டும்? நான் எவ்வளவு நல்லது செய்யப் பார்த்தாலும், என்னை ஓயாமல் திட்டுகிறார்!’

    பத்து வயதுப் பையன்கள் இருவரின் உரையாடல் இது. தந்தைக்கு ஏன் தன்னைப் பிடிக்கவில்லை என்ற பரிதவிப்பு இருவருக்கும்.

    இதே ஏக்கத்தை நாற்பது வயதான ஓர் சகஆசிரியரும் என்னிடம் பகிர்ந்துகொண்டார்: `நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். என் அப்பாவின் அன்பைப் பெற முடியவில்லை!’

    `அவருக்கு உங்கள் தங்கைமேல்தான் பாசமோ?’ என்று ஊகித்தேன்.

    ஒரு தாய் மகன்மேல் பாசம் வைப்பதும், தந்தை மகள்மேல் அன்பைப் பொழிவதும் இயற்கை. அதற்காக, தான் பெற்ற பிற பிள்ளைகளை வெறுப்பதுபோல் அடக்கி ஆள்வது என்ன நியாயம்?

    காரணமின்றி அடித்தும், பயமுறுத்தியும் வளர்க்கப்பட்டிருந்த தந்தைக்குப் பிறந்தது இரண்டும் பெண்களாக இருந்துவிட்டால், தன்னைப்போல் இருக்கின்ற மகளின்மேல் வன்முறை செலுத்துவார்.

    இந்த தந்தைமார்கள் சிறு வயதில் அடி வாங்கியிருப்பார்கள். `அடி வாங்கியதனால்தான் நான் உருப்பட்டேன்!’ என்று நியாயம் கற்பித்துக்கொள்வார்கள். அடி வாங்காது, செய்த தவறுகளுக்குக் கனிவுடன் திருத்தப்பட்டிருந்தால் இன்னும்கூட முன்னேறி இருக்கலாமோ என்று இவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

    (நகைச்சுவையால் குழந்தைகளின் மனம் நோகாமல் கண்டிக்க முடியும் என்று படித்திருந்தேன். அந்த அறிவுரையைப் பின்பற்றி, நான் என் குழந்தைகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கும் சிறு வயதில் கூறியது: `நான் சொல்ற நல்லதையெல்லாம் கேட்டுடாதீங்கோ! அப்புறம் உருப்பட்டுட்டா என்ன பண்றது!’ சிரிப்பார்கள். ஆனால் அறிவுரை மனதில் பதிந்திருக்கும்).

    தம்மைப் பாதுகாக்க வேண்டிய பெரியவர்கள் — என்னதான் காரணங்களை விளக்கினாலும் — அடிப்பதால் சிறுவர்களுக்குக் குழப்பம்தான் உண்டாகிறது. அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள்: அவமானம், தாழ்மை உணர்ச்சி, மனத்துடன் உடல் நலமும் கெடல்.

    சிறு வயதில் இந்த அப்பாக்களும் இதே உணர்ச்சிகளுக்கு ஆளாகியிருப்பார்கள். ஆனால் தம்மிடமிருந்தே அதை மறைத்துக்கொண்டு விட்டதுதான் பரிதாபம்.

    `என் மகன் பிசாசு மாதிரி பேரனை அடிக்கிறான்!’ என்று என்னிடம் வருந்திக் கூறினார் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர்.

    தொண்ணூறு வயதை எட்டிக்கொண்டிருந்த அவருக்கு நான் என்ன ஆறுதல் சொல்வது! `சிறு வயதில் உங்கள் பிள்ளையை ரொம்ப அடித்து வளர்த்தீர்களா?’ என்றேன் மெள்ள.

    பதிலாக, அவருடைய உடலும், முகமும் இறுகின.

    `எவ்வளவு அடித்தாலும், உருப்படுவதில்லை! ஊர் சுற்றுகிறான், எதிர்த்துப் பேசுகிறான்!’ என்று பிரலாபிப்பவர்களுக்கு ஒன்று புரிவதேயில்லை. ஓயாமல் குறை கண்டுபிடித்து, அடி வாங்கினால், எதிர்ப்புக்குணம்தான் வரும். நீங்கள் எதிர்பார்ப்பதற்கு நேர் எதிராக ஒரு காரியம் செய்துவிட்டு, அதன் விளைவாக நீங்கள் கொள்ளும் ஆத்திரமே அவர்களது நொந்த மனதிற்கு உற்ற மருந்தாகிறது.

    `உங்கள் அப்பா உங்களுக்குச் செய்ததையே நீங்கள் உங்கள் மகனுக்குச் செய்கிறீர்களே! பெரியவன் ஆனதும், அவன் உங்களை மதிப்பானா?’ என்று ஒருவரைக் கேட்டேன். அந்த மனிதர் வயது முதிர்ந்த தந்தையுடன் பேசுவதையே விட்டு விட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    `என்னை மதிக்காவிட்டால் போகிறது! அவன் முன்னுக்கு வந்தால் போதும்!’ என்று விட்டேற்றியாக பதில் வந்தது.

    இங்குதான் குழப்பமே. பிள்ளைகளை முன்னுக்குக் கொண்டுவர வேறு வழி தெரியவில்லை அவரைப் போன்றவர்களுக்கு.

    வெகு சிலர், `என் மகனும் நான் சிறு வயதில் அடிபட்டு நொந்தமாதிரி ஆகிவிடக்கூடாது!’ என்று, மகன் என்ன தவறு செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். இப்படி வளர்க்கப்பட்ட பிள்ளை உருப்படுவானா என்பதும் சந்தேகம்தான். தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்ட வேண்டாமா?

    சில தாய்மார்களும் மகளை அடிக்கிறார்கள்.

    வசுமதி ஒரு பதின்ம வயதுப் பெண். அவளுடைய தலையின் வடிவம் கோணல்மாணலாக உருமாற ஆரம்பித்தபோது எனக்கு அவளுடைய அவல நிலை புரிந்தது. அவளிடம் கேட்டபோது, வருத்தத்துடன் ஒப்புக்கொண்டாள்.

    அவள் தாயைச் சந்தித்து, `உங்கள் பெண்ணை சும்மாச் சும்மா அடிக்காதீர்கள்!’ என்று கூறினேன்.

    ஆச்சரியத்துடன், `அடிக்கக் கூடாதா?’ என்று திருப்பிக் கேட்டாள், நாற்பது வயது நிரம்பாத அப்பெண்மணி.

    `எதுக்கு அடிக்கறது?’ என்றேன், பொறுமையிழந்து.

    `வீட்டிலே ராங்கி பண்ணுது!’

    மேலும் விசாரித்தபோது, புத்திசாலியான, முன்னுக்கு வரத் துடிக்கும் மகளுக்கு அம்மாவின் அடக்குமுறை சரியெனப் படாததால் எதிர்த்திருக்கிறாள் என்று புரிந்தது.
    மகளைத் தனியாக அழைத்து, அவளுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் கிடைக்க தாய் கொடுத்து வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினேன்.

    `உன் அம்மா உலக அனுபவம் இல்லாதவள். அப்பா அடிப்பதை எதிர்ப்புக் காட்டாமல் ஏற்று, `எல்லாப் பெண்களுமே அப்படித்தான் இருக்க வேண்டும்போல இருக்கிறது,’ என்று நினைத்துவிட்டாள். நீ வித்தியாசமாக இருக்கிறாய். அது தவறென்று அம்மாவுக்குப் படுகிறது,’ என்று மேலும் விளக்கினேன்.

    நிலவரம் புரிந்தபோது, தாய்மீது பரிதாபம்தான் எழுந்தது வசுமதிக்கு. தாய் மகளுக்குள் நல்லுறவும் உண்டாகியது.

    தொடருவோம்

    Share
  • நலம் …. நலமறிய ஆவல் .. (7)

    நிர்மலா ராகவன்

    யாருக்கு மருமகள்?

    நலம்-
    அந்த இளம்பெண் தன் சின்ன மாமியாரின் வீட்டு விசேஷத்திற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே வந்திருந்தாள்.

    காலையில் எல்லாருக்கும் முன்னர் எழுந்து, வாசல் தெளித்து கோலம் போட்டு.. இப்படி ஓயாது வேலை செய்து கொண்டிருந்தவளுக்கு, அடிக்கடி சமையலறையிலிருந்து அழைப்பு வந்தது. “சீதா! ஒரு கோலத்தைப் போட எத்தனை நேரம்! இன்னும் எவ்வளவு வேலை பாக்கி இருக்கு! வந்து கீரையை ஆய்ந்து நறுக்கிக் குடு! சீக்கிரம்! அப்புறம்..!”
    எதையும் நேர்த்தியாகச் செய்யும் அப்பெண் தன் திறமையை எல்லாம் காட்டி கோலத்தைப் போட்டுக்கொண்டிருந்தாள். சிறிதும் ஆயாசப்படாமல், “இதோ வரேன்!” என்று எழுந்தவளைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

    “நீ ஒரு நல்ல மாட்டுப்பொண்ணா?” என்று கேட்டேன், கொஞ்சம் கேலியும், உண்மையாகவும்.

    “ஆமாம்!” என்று பெருமையுடன் சிரித்தபடி ஓடினாள்.

    எனக்கு வியப்பளித்தது என்னவென்றால், அவள் வயதையொத்த பல பெண்கள் அங்கு இருந்தார்கள். அவர்களது தேவைகளையும் இவளே கவனிக்க வேண்டியிருந்தது. ஏனென்றால், இவள் மட்டும்தான் வேறு வீட்டிலிருந்து புகுந்த பெண்.

    அவள் ஏழைப் பெண்ணில்லை, முதுகலைப் பட்டம் பெற்றவள் என்றறிந்து என் ஆச்சரியம் இன்னும் அதிகமாயிற்று.

    `எந்த வேலையாக இருந்தாலும், அதை நன்றாக செய்யக்கூடியவள்!’ என்று அவர்கள் புகழ்ந்தபோது, இவள் அதைப் பெருமையாக எடுத்துக்கொண்டது தப்பாகப் போயிற்று. மாமியார் வீட்டில் மட்டுமின்றி, அவளுடைய உறவினர்கள் எவர் வீட்டுக்குப் போனாலும், இவள்தான் வேலை செய்ய வேண்டும்.

    நாலைந்து ஆண்டுகள் கழிந்தன. அதே வீட்டில் இன்னொரு கல்யாணம். முதல் வாரமே இருபது பேருக்குமேல் கூடி இருந்தார்கள். துணிகளைத் துவைத்துப்போட இயந்திரம் இருந்தாலும், மொட்டை மாடியில் உலர்த்த வேண்டுமே! மருமகள் எதற்கு இருக்கிறாள்!
    நானும் அவள் பின்னாலேயே போனேன். அங்கே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பதின்ம வயதுச் சிறுவனிடம், “நீயும் கொஞ்சம் உதவி பண்ணேன்,” என்றேன். அவன் சற்று அதிர்ந்துவிட்டு, கீழ்ப்படிந்தான். நடந்ததைச் சொன்னால், பெற்றோருக்குக் கோபம் வரும் என்று அவனுக்குத் தெரியும். அவர்களுக்கு அவ்வளவு அருமையான ஒரே மகன்! அவனை வேலை செய்யச் சொல்லி யாரோ ஏவுவதாவது!

    “எங்க துணியெல்லாம் காய்ந்திருக்கும். கொஞ்சம் எடுத்துக்கொண்டு வந்து விடுகிறீர்களா?” என்று நாத்தனார் கெஞ்சுவதுபோல் கேட்டாள் — அந்தப் பையனின் தாய். தன் மகனை வேலை வாங்கியதற்குத் தண்டனையோ!

    நானிருந்த சிறு அறைக்கு வந்து, “எல்லா வேலையையும் என்னையே செய்யச் சொல்றா!” என்று ரகசியக் குரலில் முறையிட்டாள் சீதா.

    “காதிலேயே வாங்கிக்காதே!” என்று அறிவுரை கூறினேன்.

    நாத்தனாரின் கணவர் அந்த வீட்டு மாப்பிள்ளை இல்லையா? அவர் ஒரே இடத்தில் அசையாது அமர்ந்து, தன் மாப்பிள்ளை முறுக்கை வெளிக்காட்டிக் கொண்டிருந்தார்.
    ஒரு பெண் கல்யாணமாகிப் புக்ககத்திற்குப் போனால் வேலை செய்ய வேண்டும். ஆனால், ஆணுக்குதான் அதிகாரம் செய்யும் உரிமை. யார் வகுத்த நியாயம் இது?
    குனிந்து நிமிர்ந்து, பந்தியில் பரிமாறுவதும் சீதாவின் வேலையாகிப் போயிற்று.

    அந்த மாப்பிள்ளை சாப்பிடும்போது, கேட்ட பதார்த்தத்தையே திரும்பத் திரும்பக் கேட்க, பிறருக்கு இருக்காது என்ற நிலை வந்தது.

    நான் அப்போது சமையலறையில் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தேன்.
    “ஒருத்தருக்கே எல்லாத்தையும் போட்டுட்டா எப்படி?” என்று சீதா பொரும, நான் மறுபடியும், “காதிலேயே வாங்கிக்காதே!” என்றேன்.
    நல்ல மருமகள் என்றாலும் இப்படியா!

    வீட்டுப் பெண்களும் அவர்கள் குடும்பமும் ஒரே இடத்தில் உட்கார்ந்து அதிகாரம் செய்யலாமா?

    நான் சொன்னதிலிருந்த நியாயத்தை சீதா புரிந்துகொண்டாள்.

    வீட்டுப் பெண்டிர், `சீதா முன்னே மாதிரி இல்லே. சொல்ற வேலையைச் செய்யறதில்லே!” என்று அவள் வெளியில் போயிருக்கும் சமயம் பார்த்து, அவள் மண்டையைப் பல விதமாக உருட்டிக் கொண்டிருந்தார்கள்.

    என்னால் பொறுக்க முடியவில்லை. “ஏன், பாவம், அந்தப் பெண்ணை இப்படிக் காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சறேள்?” என்று கேட்டுவிட்டேன், ஒரு சிறு சிரிப்புடன். என்னையும் தாக்குவார்களோ?

    அப்படி எதுவும் நடக்கவில்லை.

    “நீங்களே சொல்லுங்கோ. நன்னா வேலை செய்யக்கூடிய பொண்ணு! இப்போ எது சொன்னாலும் காதிலேயே வாங்கிக்க மாட்டேங்கிறா!” என்று என்னிடம் நியாயம் கேட்டார்கள். சொல்லிக் கொடுத்ததே நான்தான் என்று தெரிந்தால் என்ன ஆகியிருக்குமோ!

    அவளுடைய நாத்தனார் எந்த வேலையும் செய்வதில்லை என்பதைச் சுட்டிக் காட்டினேன்.

    “அவளோட வீட்டிலே அவதான் எல்லா வேலையும் செய்யறா!” என்று வக்காலத்து வாங்கினார்கள்.

    சீதாவும் அவள் வீட்டில் ஓயாமல் வேலை செய்வாள். ஆனால் அது கணக்கில் வராது. என்ன இருந்தாலும், அவள் இன்னொருத்தர் வீட்டுப் பெண்தானே!

    உருப்படியாக வேறு எந்த வேலையும் இல்லாது, அவர்கள்பாட்டில் மத்தியானம் பூராவும், “இப்பல்லாம் சீதா சோம்பேறியா போயிட்டா!” என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

    சோம்பல் இல்லை, தன் மதிப்பு பிறருக்கு நாயாக உழைப்பதில் இல்லை; அப்படி உழைத்தால் தன்னை ஏமாந்தவளாகத்தான் பார்க்கிறார்கள் என்று அவளுக்குப் புரிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டேன். வெளியில் சொல்லவா முடியும்!

    தொடருவோம்

    Share
  • நலம் …. நலமறிய ஆவல் …… (6)

    நிர்மலா ராகவன்

    வெளியில் நற்பெயர், வீட்டிலோ!

    நலம்-1-1-1-1

    `கணவன்மார்கள் மனைவிக்குப் போதிய சுதந்திரம் கொடுக்காததால்தான் பெண்கள் இல்லற வாழ்வில் சலிப்படைகிறார்கள், விவாகரத்து நடைபெறுவதும் இதனால்தான் என்கிறீர்களே! எல்லா சுதந்திரமும் கொடுத்தும், சில பெண்கள் கணவரை நல்லபடி நடத்துவதில்லையே?’ என்று கேட்டார் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார் நண்பர் சிவராமன். அவர் குரலில் ஏதோ ஏக்கம் தொனித்தது. அவர் மனைவியைப் பிரிந்து வாழ்கிறவர் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

    உடன் வந்திருந்தவர் அதீதமாகத் தலையைக் குனிந்துகொண்டதிலிருந்து, ஏதோ அந்தரங்கமான சமாசாரம் என்று நான் மேலே எதுவும் கேட்காமல் விட்டுவிட்டேன்.

    `என்னைப்பற்றி சிலரிடம் பேசிப்பார்த்தேன். `அப்படியா?’ன்னுட்டுப் போயிடுவாங்க. நீங்க அப்படியில்லே!’ என்றார் சிவராமன்.

    அவர் முன்பொருமுறை வேறு குழப்பத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டபோது, நான் அதை அலசி, ஆறுதலாக ஏதோ கூறியது `மண்டையில் பல காலமாக இருந்த பெரிய பாரத்தை கல்லால் நகர்த்தியது போலிருந்தது!’ என்று சொன்னார். என்னிடம் மீண்டும் உதவி கேட்கவே தயங்கியது புரிந்தது.

    நான் ஏதாவது பேசும்போது, சிவராமன் ஒரு மாணவனைப்போல் மரியாதையாகக் கைகளைக் கட்டிக்கொண்டு, என் கண்களையே உற்றுப் பார்ப்பார். என்னைவிட பத்துவயது இளையவர். ஆனால், பார்வை என்னவோ ஒரு குழந்தை தாயைப் பார்ப்பதுபோல் பாசமாக இருக்கும்.

    விடை பெறும்போது அவரே, `உங்களிடம் இன்னொரு ஆலோசனை கேட்க வேண்டும். நாளை அழைக்கலாமா?’ என்று கெஞ்சுவதைப்போல் கேட்டார்.

    `எப்போ?’
    `காலை ஆறு மணிக்கு?’
    `ஐயோ!’
    `ஏழு?’
    மறுநாள் வானொலி நேரம்போல சரியாக ஏழு மணிக்கு தொலைபேசி மணி அடித்தது.

    `ஹலோ!’ என்ற சிவராமன் அதற்குமேல் பேச முடியாது திணற, அவருடைய சிரமத்தை ஒருவாறாகப் புரிந்துகொண்டேன்.

    `நான் ஒரு கதை எழுதிக்கொண்டிருக்கிறேன்,’ என்று உண்மையாக ஆரம்பித்தேன்: தட்டிக்கேட்க யாருமில்லாத நிலையில், தான் கண்ட பெண்களோடு சகவாசம் வைத்திருந்ததை புது மனைவியிடம் கூறுகிறான் ஒருவன். அதுவரைதான் எழுதியிருந்தேன்.

    நான் மேலே எதுவும் சொல்வதற்குள், அவர் தொடர்ந்தார்: அதற்குப்பின் அவர்மேல் உள்ள நம்பிக்கை அவளுக்கு அறவே போய்விட்டது. தொழில் நிமித்தம் அவர் இரவில் நேரம் கழித்து வந்தாலும், `எவளோட இருந்துட்டு வந்திருக்கீங்க?’ என்று சுடுசொற்களை வீசுவாள், `நான் கல்யாணம் செய்துகொண்டேனே, அந்தப் பெண்!’ (அடுத்த ஒரு மணி நேரமும் இப்படித்தான் மனைவியைக் குறிப்பிட்டார்).

    அவளுக்குப் பிடித்த துறையில் முன்னேற இவருடைய உதவி தேவைப்பட்டது. இருவரும் திருமணத்துக்கு முன்பே காதல்வசப்பட்டு, சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார்களாம். அவள் பெரிய பணக்காரி என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

    படிப்பிலும், அந்தஸ்திலும் மிகப் பெரிய நிலையில் இருந்தவள் தன்னை விரும்புகிறாள் என்ற உணர்வு, `என்னைவிட பாக்கியசாலி இந்த உலகில் யாருமில்லை!’ என்று அவரை நினைத்துப் பூரிக்கவைத்தது. அதைத் திரும்பத் திரும்பச் சொன்னார்.

    `ஒண்ணா சேர்ந்து இருக்கிறபோது, ’நமக்குள்ளே எந்த ரகசியமும் இருக்கக்கூடாது,’ என்று சொல்லிக்கொண்டோம். அப்போ தெரியலே, அது எங்கே கொண்டு விடும்னு! வாசலிலேயே நிக்க வெச்சு கன்னா பின்னான்னு கத்துவா!’ விட்டு விட்டுப் பேசினார், அந்த நிகழ்ச்சியை நினைவுகூர்வதே சகிக்க முடியாமல் இருந்ததுபோல்.

    திருணமானபிறகு மனைவியில் குத்தல் பேச்சு ஆரம்பித்தது.

    ‘நான் கல்யாணம் செய்துகொண்டேனே, அந்தப் பெண்ணை நான் கட்டுப்படுத்தியதே இல்லை. ஆனால், அவளுக்கு என்மேல் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது!’

    பொறுக்க முடியாமல் போக, விவாகரத்திற்கு மனு செய்தார்.

    அவளுக்கு ஒரே ஆத்திரம். பணமும், புகழுமாய் தானிருக்க, தன்னை ஒதுக்கிவைத்துவிட ஒருவர் துணிவதாவது!

    அவர்கள் மகனுக்கு அப்போது மூன்று வயது. மாதம் ஒரு முறை தந்தை மகனுடன் நேரத்தைக் கழிக்கலாம் என்று சட்டம் பெரியமனம் பண்ணிற்று.

    ஆனால், சிவராமன் எண்ணியபடி, விவாகரத்து அவருக்கு நிம்மதியான வாழ்வைக் கொடுக்கவில்லை. மனைவியை அறவே உதறமுடியாது போயிற்று. அவர் மகனை அழைத்துக்கொண்டு கிளம்பும்போது, அவளும் வலுக்கட்டாயமாக தொற்றிக்கொள்வாளாம்.

    `இப்போதும் பழையபடி குத்தல் பேச்சுதான்! எதுவும் மாறவில்லை. நான் கல்யாணம் செய்துகொண்டேனே, அந்தப் பெண் சொல்கிற இடத்துக்குத்தான் போகவேண்டும். சாப்பிட நான் ஏதாவது வாங்கிக் கொடுத்தால், அதை அனுமதிப்பதில்லை. இப்போது பத்து வயதாகிறது என் மகனுக்கு. அவனுடன் நான் அதிகம் பேசக்கூட விடுவதில்லை!’ என்று அழுகைக்குரலில் என்னிடம் கூறியவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

    `நீங்கள் என்றாவது.. அவள் சொன்னதுபோல..,’ என்று இழுத்தேன்.

    `வேறு பெண்ணைத் திரும்பிக்கூடப் பார்த்தது கிடையாது! என் உலகமே குடும்பம்தான் என்றிருந்தேன்’.

    ` ஐம்பது, அறுபதுன்னு என் வயசு கூடிட்டே போய், இப்படியே என் காலம் முடிஞ்சுடப்போகுது! இதை நினைக்கிறப்போவே பயமா இருக்கு!’

    `எப்படிச் சமாளிக்கிறீர்கள்? குடியா?’ என்று விசாரித்தேன், சர்வசாதாரணமாக.

    அதில் கேலியில்லை என்று அவரும் உணர்ந்திருக்க வேண்டும். `அதேதான்!’ என்று ஒத்துக்கொண்டார். சுயவெறுப்பு அவர் குரலில்.

    தானிருந்த இடத்தில் இன்னொரு பெண்ணைக் கொண்டுவந்துவிடப் போகிறாரே என்ற கலக்கமோ?

    `அவளுக்குக் காதலன் யாராவது இருக்கிறார்கள்?’ என்று விசாரித்தேன்.

    `அப்படி இருந்து தொலைச்சாதான் தேவலியே!’ என்று பொருமினார்.

    உலகம் அவள் பக்கம்தான் சாய்ந்திருந்தது. சிவராமனுடன் வேலைபார்த்த என் சிநேகிதி ஒருத்தி தானாகவே கூறியிருந்தாள்: `இவனோட யார் குடித்தனம் நடத்த முடியும்! எப்பவும் குடி! பாவம், அவ!’

    `நான் கல்யாணம் செய்துகொண்டேனே, அந்தப் பெண்!’ என்று அடிக்கடி அவர் குறிப்பிட்டவளுடைய விஷம் தோய்ந்த வார்த்தைகளைப் பொறுக்க முடியாததால்தால் அவர் குடிக்கிறார்; தன் வாழ்க்கையின் அவலத்தை தாற்காலிகமாவது மறக்க நினைக்கிறார் என்பது யாருக்கும் புரிவதில்லை.

    எப்போதோ படித்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது: `வாழ்க்கையில் தோல்வி அடைகிறோமே என்று ஒருவன் குடிக்கிறான். குடிப்பதால் இன்னும் அதிகமாகத் தோல்வி அடைகிறான்!’

    `இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்களேன்! எதுக்காக இப்படி உங்களையே வருத்திக்கணும்?’

    `இன்னொரு கல்யாணமா! வேண்டாம்பா!’ என்று நடுங்கினார்.

    `மகன் முகத்தைப் பார்ப்பதற்காகவே மாதம் முழுவதும் காத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறீர்கள்! அடுத்த முறை, `நீ வரவேண்டாம்!’ என்று அவளிடம் கண்டித்துச் சொல்லிவிட்டு, அவனை மட்டும் வெளியே அழைத்துக்கொண்டு போங்கள். அவனுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுங்கள்!’ என்று ஒரு உபாயத்தைக் கூறினேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை.

    `மகனைத் தனியாக அழைத்துப் போய்விட்டு, மறுநாள் என்னைக் கூப்பிட்டுச் சொல்லுங்கள். காத்துக்கொண்டிருப்பேன்,’ என்று எங்கள் உரையாடலை முடித்தேன்.
    அடுத்த வாரம் அவர் அழைக்கவில்லை.

    ஆர்வத்தைத் தாங்கமுடியாது நானே கூப்பிட்டு, `என்ன நடந்தது?’ என்று விசாரித்தேன்.
    `வழக்கம்போலத்தான்!’ மிகுந்த நிராசை அவர் குரலில்.

    `ஐயோ, ஏன்? நீ வராதேன்னு சொல்லலே?’

    `என்னால் கடுமையாகப் பேச முடிவதில்லை! இப்போ எனக்கு ஒரே ஆசைதான்– என் மகன் பெரியவன் ஆனதும், அவனிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்லணும்!’

    இதில் சம்பந்தப்பட்ட மூவருக்குமே மகிழ்ச்சியோ, நிம்மதியோ கிடையாது. அந்தப் பெண் செய்ததுபோல், வீட்டுக்கு வெளியே நற்பெயர் சம்பாதித்து, வீட்டுக்குள் சந்தேகமும் சண்டையுமாக இருந்தால் என்ன மகிழ்ச்சி கிடைக்கும்?

    `வேண்டாம்’ என்று விட்டுப்போன வாழ்க்கைத்துணையை விடாப்பிடியாகப் பிடித்து வைத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் விவேகம். Learn to let go.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல்.. (5)

    நிர்மலா ராகவன்

     

    தாய்ப்பாசம்

    நலம்-1-1-1

    `எனக்கு என் கணவரைப் பிடிக்காது. அதனால், அவரால் வந்த குழந்தைகளையும் பிடிக்காது!’ தான் செய்தது தன்னைப் பொறுத்தவரையில் சரிதான் என்று தலையை நிமிர்த்திக்கொண்டு என்னிடம் கூறிய பெண்மணி என்னைவிட மூத்தவர்.

    அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள, பெண்களுக்கு வயது வித்தியாசம் ஒரு பொருட்டேயில்லை.

    திருமணமானதும், கணவர் ஏகாம்பரத்துடன் இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு வந்தவர் காமாட்சி. விவரம் தெரியாத வயது. அரைகுறையான கல்வி. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, உறவினர்களின் ஆதரவில் வளர்ந்தவர். `புருஷன், மாமியார், நாத்தனார் இவர்களோட மனசு கோணாமல் நடந்துக்கணும்!’ என்று அவர்கள் அளித்த அறிவுரையை மந்திரமாகக் கடைப்பிடித்தார். புக்ககத்தினர் எப்படி நடத்தினாலும், எதிர்ப்பு தெரிவிக்காது, மௌனமாக ஏற்றுக்கொண்டார்.

    தாய்க்கு ஒரே மகன் ஏகாம்பரம். `என்னுடன் என் அருமை மகனைப் பங்கு போட்டுக்கொள்ள இவள் வந்துவிட்டாளே!’ என்று முதியவள் ஆத்திரப்பட்டிருக்க வேண்டும். தாய் சொல்லைத் தட்டாத செல்லத் தனயன் அம்மா சொல்லும்போதெல்லாம் மனைவியை அடித்தாராம்.

    `எதற்கு அடித்தார்?’ என்று காமாட்சி அம்மாளை விசாரித்தேன்.

    ஒரு முறை, பிள்ளைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்ததால், மாமியாருக்குச் சோறு போட சற்று தாமதமாக, `என்னைப் பட்டினி போட்டு, கொல்லப் பாக்கறாடா!’ என்று அழுதிருக்கிறாள்.

    பொதுவாக, எந்த விதமான வதைக்கு ஆளாகிறவர்களும் பொறுமையுடனோ, அச்சத்துடனோ அதை ஏற்கும்போதும் வதைப்பவருக்குத் தன் பலம் கூடிவிட்டதுபோல் ஓர் உணர்வு ஏற்படும். இதுவும் ஒருவித போதைதான். போகப் போக, வதையின் கொடுமை அதிகரிக்கும்.

    தினமுமே தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து, சுவற்றில் இடிப்பாரென்று கேட்டபோது, `ஐயோ, மூளை என்ன கதி!’ என்று என் மனம் அதிர்ந்தது. கூடியவரையில் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாது, மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

    மனைவியின் அருமை புரியாது, அவளுடன் தன் குழந்தைகளையும் `அம்போ’ என்று விட்டுவிட்டு, ஓர் இளைய மனைவியுடன் உல்லாசமாக வேறிடத்தில் காலத்தைக் கழித்திருந்தார் கணவர் ஏகாம்பரம். முதுமை வந்ததும், இளையவளை நிர்க்கதியாக விட்டுவிட்டு, மூத்த மனைவியிடம் வந்துவிட்டார்.

    அவர் எதிர்பார்த்த நிம்மதி என்னவோ குடும்பத்தில் கிடைக்கவில்லை. `பிள்ளைகளெல்லாம் அம்மா சொல்கிறதைத்தான் கேட்கிறார்கள்!’ என்று அவர் புலம்பும் அளவுக்கு உதாசீனம் செய்யப்பட்டார். சிறு வயதில் அவர்களுக்குத் தேவையானபோது அருகில் இருந்து பக்கபலம் அளிக்கவில்லை ஏகாம்பரம். அவர்கள் பெற்றிருந்ததைத்தானே திருப்பி அளிக்க முடியும்! `இப்போது நீங்கள் எங்களுக்கு வேண்டாம்!’ என்பதுபோல் விட்டேற்றியாக நடந்துகொண்டார்கள்.

    பொதுவாக, கணவன் அன்பாக, உண்மையாக இருக்கும்வரைதான் அவர்கள் இணைந்து பெற்ற குழந்தைளிடம் தாய்க்கும் அன்பிருக்கும்.

    வளர்ந்ததும், ஆண்பிள்ளைகள் அப்பாவைப்போல ஆனார்கள். பெண்கள் அம்மாவைப்போல், கணவர் என்ன செய்தாலும் சிரித்த முகத்துடன் ஏற்கத் தயாரானார்கள். அந்த தாய்க்குத் தன் பிள்ளைகளைப் பார்க்கும்போதெல்லாம், கணவரின் நினைவுதான் வந்தது.

    இப்போது முதல் வாக்கியத்தைப் படியுங்கள்.

    ஏகாம்பரத்தின் இறுதி யாத்திரையின்போது காமாட்சி அம்மாள் கதறின கதறலைப் பார்த்தவர்கள், `ஒரு பெண்ணால் இப்படிக்கூட கொண்டவனிடம் அன்பு வைக்க முடியுமா!’ என்று வியந்திருப்பார்கள்.

    என்னால் பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. வயதில் பெரியவராக இருக்கலாம். ஆனால், என்னிடம் தன் கடங்காலத் துயரைப் பகிர்ந்துகொண்டவர் ஆயிற்றே!

    காமாட்சி அம்மாளின் அருகே போய், `அவரோட நீங்க சந்தோஷமா குடித்தனம் நடத்தினது என்ன தட்டுகெட்டுப்போச்சு? ஒடம்பைக் கெடுத்துக்கொண்டு இப்போ எதுக்கு அழுகிறீர்கள்?’ என்று உரிமையுடன் அதட்டினேன்.

    `அவர் இருக்கிறவரையில்தானே சமூகத்திலே எனக்கு மதிப்பு?’ என்று மெல்லிய குரலில் பதில் கேள்வி கேட்டாலும், அழுகை என்னவோ அடியோடு நின்றது.

    அடுத்த சில ஆண்டுகளுக்குள் காமாட்சி அம்மாளின் முடிவும் வந்தது. அவரது உயிரற்ற உடலில் நெற்றியில் ஒரு நரம்பு புடைத்துக்கொண்டிருந்தது என் கண்களுக்குத் தப்பவில்லை. உயிர் போனபிறகும், மன இறுக்கமா!

    அருகில் போய் உட்கார்ந்துகொண்டு, `இனிமே உங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது. இப்போதாவது அமைதியாக இருங்கள்!’ என்று திரும்ப திரும்பச் சொன்னேன்.

    பிள்ளைகள் பெரிய குரலெடுத்து அழுதுகொண்டிருந்ததில், என்னை யாரும் கவனிக்கவில்லை.

    சில நிமிடங்கள் கழித்து, அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாது, ஒருவித `சவக் களை’ வந்ததைப் பார்த்தபோதுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது.

    ஏன் இப்படி ஓர் அவல வாழ்க்கை என்று என் யோசனை போயிற்று.

    புக்ககத்தார் என்ன சொன்னாலும், செய்தாலும் ஒரு பெண் பொறுமையாக அதை ஏற்க வேண்டும் என்று காமாட்சிக்கு அளிக்கப்பட்ட போதனையாலா?

    தன் கடமைகளை எப்படிச் சரிவர ஆற்றுவது என்று யோசித்து நடக்காது, தாய் சொன்னதற்கெல்லாம் தலையாட்டி, சுயநலத்தைப் பெரிதாக நினைத்து நடந்த கணவராலா?

    மருமகளையே போட்டியாக நினைத்து, கொடுமைகள் பல செய்த சிறுபிள்ளைத்தனமான மாமியாராலா?

    குடும்பத் தலைவர் தன் கடமையிலிருந்து வழுவினால், குடும்பம் எப்படியெல்லாம் சீரழியும் என்பதற்குச் சான்று காமாட்சி அம்மாளின் கதை.

    தொடருவோம்

    Share
  • நலம் … நலமறிய ஆவல் ….. (4)

    நிர்மலா ராகவன்

    ஊனம் யாருக்கு?

    நலம்-1-1
    என் உறவினரான நளினி முதன்முறையாகக் கருவுற்றிருந்தபோது, `இரட்டைக் குழந்தைகள்!’ என்று மருத்துவர் கூற அவள் பெரிதும் மகிழ்ந்தாள்.

    எட்டாம் மாதத்தில், குழந்தைகள் முன்போல் வயிற்றில் உருளவில்லையே என்று சந்தேகப்பட்டு தாயிடம் தெரிவிக்க, அடித்துப் பிடித்துக்கொண்டு பரிசோதனைக்குப் அழைத்துச் செல்லப்பட்டாள். ஒரு குழந்தை வயிற்றிலேயே இறந்து மூன்று நாட்களாகி இருந்தன. இன்னொன்றை வயிற்றைக் கீறி எடுத்தார்கள். இது அந்தக் குழந்தை லல்லியின் கதை.

    பிற குழந்தைகளைப்போல் லல்லி குப்புறப் படுக்கவில்லை, தவழவில்லை, உட்காரவில்லை. அண்ணன் அதைச் சுட்டியபோது, நளினி ஆத்திரத்துடன், `எல்லாக் குழந்தைகளும் ஒரேமாதிரி இருக்குமா?’ என்று அவர்கள் வாயை அடைத்துவிட்டாள். அவளுக்கும் உள்ளூர பயம் இருந்திருக்க வேண்டும், ஏதாவது அசம்பாவிதமாக ஆகிவிடப்போகிறதே என்று.

    ஒரு வயதுக்குமேல் ஆயிற்று. அப்போதும் லல்லி எழுந்து நிற்கவோ, நடக்கவோ இல்லை. ஒரே இடத்தில் சாய்ந்து உட்கார்ந்திருப்பாள். வேறு வழியின்றி மருத்துவர்களை நாட, `அவளுடன் இருந்த கரு இறந்தபோது, லல்லியின் மூளைக்குப் பிராணவாயு செல்லாததால் சேதம் உண்டாகிவிட்டது. இனி அவளால் சுயமாக நடக்க முடியாது!’ என்றுவிட்டார்கள்.

    சிறு குழந்தையாக இருந்தபோது, அவளைத் தூக்கிக்கொண்டுபோய் குளிக்கவைப்பது, பள்ளிக்கூடத்தில் விடுவதெல்லாம் எளிதாக இருந்தது. ஆனால், எத்தனை காலம்தான் இப்படியே விடுவது! ஓரளவு நடந்தால்கூட போதுமே என்று ஐந்து வயதில் லல்லியை மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றார்கள் — மருத்துவ உதவி நாடி.

    அடிக்கடி போய் அறுவைச் சிகிச்சை செய்ததில் இப்போது ஏதோ நடக்கிறாள். உட்காருவதும், எழுந்திருப்பதும் சிரமம்தான். தனிமையிலேயே உட்கார்ந்திருக்க நேரிட்டதால், ஓயாது படிக்கும் நற்பழக்கம் ஏற்பட்டது. ஆங்கிலத்தில் அவள் உரையாடுவதைக் கேட்டால் பிரமிப்பாக இருக்கும். அத்துணை புலமை!

    ஒரு முறை நானும் என் மகளும் லல்லியைப் பேரங்காடி ஒன்றிற்கு அழைத்துப் போயிருந்தோம். `கால் வலிக்கிறது!’ என்று தரையில் உட்கார்ந்துவிட்டாள். அதன்பிறகு எழுந்திருக்க அவள் பட்டபாட்டைப் பிறர் வேடிக்கை பார்த்துக்கொண்டே போனார்கள்.
    `எல்லாரும் என்னையே பார்க்கிறார்கள்!’ என்று வருத்தமாக லல்லி சொன்னபோது, நாளிதழ் ஒன்றில், `நாங்களும் மனிதர்கள்தானே! எங்களை ஏன் அப்படி உற்றுப் பார்க்கிறீர்கள்?’ என்று ஊனமடைந்தவர் ஒருவர் மனம் வருந்தி கோரிக்கை எழுப்பி இருந்தது நினைவில் எழுந்தது.

    `நாமும்தான் மற்றவர்களைப் பார்க்கிறோம், யார் என்ன ஆடையணி அணிந்து வந்திருக்கிறார்கள் என்று! அதற்காகத்தானே எல்லாரும் வெளியே வருகிறார்கள்!’ என்று அவளைச் சமாதானப்படுத்தினேன்.

    லல்லிக்குப் பதினாறு வயதானபோது, சகமாணவன் ஒருவன், `எனக்கு உன்னை ரொம்பப் பிடித்திருக்கிறது. ஒரே காதல்!’ என்றானாம்.

    அவன் கேலியாக அப்படிக் கூறினானா என்றெல்லாம் இவள் யோசிக்கவில்லை. சற்றும் அயராது, `சரி. பள்ளி முதல்வர் அறைக்குச் செல்வோம். நீ என்னிடம் சொன்னதை அவரெதிரே சொல்லு. உன்னை பள்ளியைவிட்டே துரத்துவார்! எனக்குப் படிப்புதான் முக்கியம்!’ என்றாள். பிறந்ததிலிருந்தே அனுபவித்த இயலாமை ஒருவரது துணிச்சலை அதிகரிக்கவும் செய்யும், இழக்கவும் செய்யும். அந்த விதத்தில் லல்லி அதிர்ஷ்டசாலிதான்.

    லல்லிக்கு இப்போது பதினெட்டு வயது. கல்லூரியில் படிக்கிறாள். ` ‘என்னுடன் படிப்பவர்கள், `உனக்கு கார் ஓட்டத்தெரியுமா?’ என்று கேட்கிறார்கள்!’ என்று அவள் பேச்சுவாக்கில் சொன்னபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    லல்லி அதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டிருக்கிறாள். `நான் போன வருடமே லைசன்ஸ் வாங்கிவிட்டேன். மைவி (MYVI, மலேசியத் தயாரிப்பான சிறிய கார்) வீட்டில் இருக்கிறது என்று பொய் சொன்னேன்!’ என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தாள். அவள் சிரிப்பில் வருத்தம் சிறிதுமில்லை. `என்னாலும் பிறரைச் சமாளிக்க முடியும்!’ என்ற மனஉறுதிதான் காணப்பட்டது.

    எனக்குப் பொறுக்கவில்லை. முழங்கைகளுக்குக்கீழ் ஒரு வளையத்தில் கைவிட்டபடி, இருபுறமும் ஊன்றுகோல் வைத்து நடக்கவேண்டிய நிலையிலிருந்த பெண்ணிடம் துளிக்கூட இரக்கமில்லாது இப்படியா பேசுவார்கள்!

    `நானாக இருந்தால், `என்னை ராணிமாதிரி அழைத்துப்போக பிறர் இருக்கும்போது, நான் எதற்கு கண்ணைக் கெடுத்துக்கொண்டு கார் ஓட்டவேண்டும்?’ என்றிருப்பேன்!’ என்றேன் நான். அவளை மேலும் ஆதரிக்கும் நோக்கத்துடன், `இப்போது தானே இயங்கும் கார்கள்கூட வந்துவிட்டன! நாம் வழி சொன்னால் போதும்,’ என்றேன்.

    `GO RIGHT, GO LEFT!” என்று சிரித்துவிட்டுத் தன்பாட்டில் பேசிக்கொண்டு போனாள். `உனக்குக் காதலன் யாருமில்லை?’ அவள் மனத்தைப் புண்படுத்தவென கேட்கப்பட்ட மற்றொரு கேள்வி.

    `அதற்கு நான் என்ன சொன்னேன், தெரியுமா? `எனக்குப் புத்தகங்கள்மேல்தான் காதல்!’ என்று அவர்கள் வாயை அடைத்தேன்!’ மீண்டும் பெரிய சிரிப்பு.

    (என் பேரனுக்குப் பதினாறு வயதாகியிருந்தபோது, அவனுடைய நண்பர்கள் அவனைக் கலந்தாலோசித்தார்கள்: `நாம் இப்போது girlfriend வைத்துக்கொள்ள வேண்டுமா?’

    அந்த அதிமுக்கியமான கேள்விக்குப் பதிலாக, `நாம் அவர்களை சினிமாவுக்கு அழைத்துப்போக வேண்டும், சாப்பிட வாங்கிக் கொடுக்க வேண்டும். தண்டச்செலவு! போதாக்குறைக்கு, பெண்கள் வாய் ஓயாமல் பேசுவார்கள். அதைவேறு சகித்துக் கொண்டிருக்க வேண்டும்!’ என்றானாம் அந்த தீர்க்கதரிசி! )

    அந்த நினைவை லல்லியிடம் நினைவுகூர்ந்தேன்.

    `அதானே! படிக்கும் வயதில் எதற்கு காதல்?’ என்றாள் வயதுக்கு மீறிய அறிவுக்கூர்மையுடன்.

    இப்பெண்ணுக்கோ சில அவயவங்களில்தான் கோளாறு. ஆனால் உடல் முழுமையாக இருந்தும், சிலர்..! என்ன சொல்வது, போங்கள்!

    தொடருவோம்

    Share
  • நலம் … நலமறிய ஆவல் ..! (3)

    நிர்மலா ராகவன்

    பழைய மாமியார்-மருமகள் கதைதான்!

    நலம்-1

    ‘என் மருமகள் கல்யாணமான புதிதில் எப்படி இருந்தாள்! இப்போது மகன் வீட்டுக்குப் போனால், நான் சொல்வது எதையும் கேட்பது கிடையாது!’ அரற்றிய பெண்மணிக்கு மகள் கிடையாது. மருமகள் `அம்மா’ என்று தன்னை அழைத்ததும் பூரித்துப்போய், அவள் பின்னாலேயே போய், ஒவ்வொரு காரியத்தையும் எப்படிச் செய்ய வேண்டும் என்று ஓயாது நச்சரிக்க ஆரம்பித்திருந்தாள்.

    `அம்மா’ என்று அழைப்பவர்களெல்லாம் நாம் பெற்ற குழந்தைகளாகிவிட முடியுமா?
    அவர்கள் கேளாமலேயே அறிவுரைகளைத் தாராளமாக வழங்கிக்கொண்டிருக்க முடியுமா?

    அம்மா என்றால் சிறு வயதில் குளிப்பாட்டி, இரவெல்லாம் கண்விழித்து மருந்து புகட்டி, உடன் விளையாடுகிறவர்கள் கேலி செய்து அழவிட்டபோது அணைத்துச் சமாதானப்படுத்தி, `அசக்காதேடி!’ என்று முதுகில் ஓர் அறைவிட்டபடி தலைவாரிப் பின்னிவிட்டு.. இப்படி என்னென்னவோ செய்திருக்க வேண்டும்.

    பெற்ற மகனுடன் இவளைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறதே என்று தனக்கே புரியாத குழப்பத்துடன், மருமகளிடம் அன்பைப் பொழிவதுபோல் பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொடுத்துவிட்டு, அதற்கு ஈடாக அவள் தான் செய்வதுபோலவே, தான் விரும்புவதுபோலவே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை.

    `மாமியார்தான் இனிமேல் உனக்கு அம்மா. அவர்கள் சொன்ன பேச்சைக் கேட்டு நடக்கணும்!’ கல்யாணமானதும், இளம்பெண்களுக்குப் பிறந்த வீட்டினர் வழங்கும் அறிவுரை.

    தன் கணவனுடன் தனிக்குடித்தனம் செய்யும் பெண்ணுக்கோ, `இது என் வீடு. என் விருப்பப்படி செய்யலாம்!’ என்ற உணர்வு உண்டாகும். இதில் மாமியார் குறுக்கிட்டால் ஆத்திரம் வராது என்ன செய்யும்? சிலருக்கு ஏமாற்றம் பெருகி, அது கோபமாக மாற, அப்பாவிக் கணவன்மேல் அது திரும்பலாம். மாமியாரைத் தட்டிக்கேட்க முடியுமா?
    பெற்ற மகளாக இருந்தால், இப்படி `நச்சு நச்சு’ என்று பிடுங்கும் தாயிடம் உரிமையுடன், `சும்மா போரடிக்காதேம்மா!’ என்று சிரித்தபடி சொல்லலாம்.
    மகனிடம் அவன் மனைவியைக் குறை கூறினால், அவன் எந்தப் பக்கம் சாய்வான், பாவம்!

    `அம்மா ஓரிரு மாதங்கள் வந்து தங்கிவிட்டுப் போய்விடுவாள். நான்தானே இவளுடன் ஆயுள் பூராவும் கழிக்கவேண்டும்!’ என்று மகன் மனைவிக்குப் பரிந்தால் போயிற்று. `மகன் பெண்டாட்டிதாசனாக ஆகிவிட்டானே!’ என்று புலம்புவாள் தாய்.

    எப்படியோ அவர்கள் தாம்பத்தியம் மகிழ்ச்சிகரமாக நடப்பதைக் கண்டு திருப்தி அடைந்தால்தான் இருதரப்பினருக்கும் நிம்மதி. அனாவசிய குறுக்கீடு எதற்கு?

    தொடருவோம்

    Share
  • நலம் …… நலமறிய ஆவல்! (2)

    நிர்மலா ராகவன்

    படிக்க மட்டும்தானா கல்லூரி?

    நலம் (1)

    (நான் கோலாலம்பூரிலுள்ள ஒரு கல்லூரியில் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் உரையாற்றி முடிந்ததும் என்னிடம் ஒரு மாணவி பகிர்ந்துகொண்டது).

    மாணவியின் வருத்தம்: என் தாய் அதிகப் படிப்பறிவு இல்லாதவர். கல்லூரியில் பாடங்கள் முடிந்ததும், எந்த நிகழ்ச்சியிலும், விளையாட்டிலும் கலந்துகொள்ளாது, உடனே வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறார். இதனால் பிற மாணவிகளின் கேலிக்கு ஆளாகிறேன்.
    அலசல்: திரைப்படங்களில் கல்லூரி மாணவ மாணவிகள் அடிக்கும் கொட்டத்தைப் பார்த்து பயந்திருக்கவேண்டும் உங்கள் தாய். ஆண்களுடன் இளம்பெண்கள் பேசிப் பழகினாலே காதல் பிறந்துவிடும், இல்லையேல் தகாத உறவு ஏற்பட்டுவிடும் என்று நினைத்திருக்கிறார்கள்.
    ஆண்-பெண் கவர்ச்சி இளமையில் மட்டுமல்ல, வேறு எந்த வயதிலும் ஏற்படலாம். இது இயற்கை. இது புரிந்து, மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டுவது அவசியம்.

    `அம்மாவுக்கு கல்லூரியைப்பற்றிச் சொன்னால் என்ன புரியும்!’ என்ற அலட்சியப்போக்கு இல்லாது, ஒவ்வொரு நாளும் தன்னை மகிழ்வித்த, அல்லது பாதித்த சமாசாரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். (உதாரணம்: ஒரு பதின்ம வயதுப்பெண்ணுடன் படிக்கும் பையன்கள், `வாவ்! உன் காலெல்லாம் எவ்வளவு முடி!’ என்று வியந்து பாராட்ட, அவளுக்கோ ஒரே அவமானம். பையன்களுக்குப் பெருமையாகத் தோன்றுவது பெண்களுக்குக் கேவலமாகப்படும். தாயுடன் இதைப் பகிர்ந்துகொண்டால், உடலில் தேவையற்ற ரோமத்தை நீக்கும் வழியைச் சொல்லித்தருவாரே!)
    நான் அந்த மாணவியிடம் கூறியது: `நீ உண்மையாக நடந்துகொள்கிறாய் என்ற நம்பிக்கையை ஏற்படுத்து. `தமிழ்ப்பெண்கள் உத்தியோகத்தில் படும் பாடு’ என்பதுபோல் நான் பேசியது உனக்கு உபயோகமாக இருந்ததா? அதைப் போய்ச்சொல்லு!’

    `நான் இன்னிக்கே கடைக்குப் போய் நாலு புடவை வாங்கிக்கப்போறேன்!’ என்றாள் அப்பெண். (நான் எப்போதும் புடவையே உடுத்துவதை உத்தியோகம் பார்த்த இடத்தில் சில அறிவிலிகள் கேலி செய்வதாகக் கூறியிருந்தேன்).

    மேலும் கேட்டேன்: `கல்லூரியில் நடப்பதை அம்மாகிட்டே சொல்வியா?’

    அவள் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தாள். மறுத்துத் தலையாட்டினாள்.

    `சொல்லணும்,’ என்றேன். `இன்னிக்கு நான் வந்து பேசினது, அதிலே ஒனக்குப் பிடிச்சது, பிடிக்காதது — இப்படி’.

    அன்று சனிக்கிழமை. பாடங்கள் கிடையாது. இருந்தாலும், தோழி ஒருத்தி வற்புறுத்தி அவளை அழைத்து வந்திருந்தாள். `தமிழ்ச்சங்கமும், விளையாட்டுப்போட்டிகளும் உன்னைப் போன்றவர்களுக்குத்தானே! நீயே கலந்து கொள்ளாவிட்டால் எப்படி?’

    அவள் முகம் மலர்ந்தது. `இன்னிக்கு அம்மாகிட்டே எல்லாத்தையும் சொல்லப்போறேன்!’ என்று விடைபெற்றுக்கொண்டாள்.

    தொடருவோம்

    Share
  • நலம்.. நலமறிய ஆவல்! (1)

    நிர்மலா ராகவன்

    1 காதல் திருமணம்

    நலம்

    ஒரு தாயின் ஆதங்கம்: ஆறு மாதங்களுக்குமுன், என் மகன் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவளையே மணக்க விரும்புவதாகவும் கூற, என் கணவர், `அப்படிச் செய்வதானால், இனி நீ இந்த வீட்டுக்குள் நுழையக்கூடாது!’ என்று இரைந்தார். அவனும் கோபித்துக்கொண்டு போய்விட்டான்.

    சமீபத்தில், அவன் எல்லாருக்கும் தனது கல்யாணப் பத்திரிகை கொடுத்திருப்பதை ஒரு நண்பர்மூலம் அறிந்தோம். எங்களுக்கு அழைப்பில்லை. என் கணவர் அழுதபடி இருக்கிறார்.

    அலசல்: திரைப்படங்களிலும், புதினங்களிலும் காதலின் மகத்துவத்தைப்பற்றி அறியும் இளைஞர்கள் காதல் கல்யாணத்தை விரும்புவதில் என்ன ஆச்சரியம்? ஆனால், இவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்வதில்லை. பெரியவர்கள் பார்த்து நிச்சயித்தாலும், காதலித்து மணந்தாலும், இரண்டு ஆண்டுகள்தாம் புது மோகம் நிலைக்கும். அதன்பின், எல்லா குடும்பத்திலும் ஏற்படும் சண்டை சச்சரவுகள் தவிர்க்க முடியாதவை.

    வாழ்நாள் பூராவும் சேர்ந்து வாழப்போகிறவர்கள் கணவனும் மனைவியும்தானே! `தனக்கு இவள்தான் சரி!’ என்று உங்கள் மகன் முடிவெடுத்ததை உங்கள் கணவர் ஏன் அப்படி வன்மையாக எதிர்த்திருக்க வேண்டும்?

    மகன் வளர்ந்திருந்தாலும், எல்லாவற்றிலும் தான் சொல்வதுபோலவே நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ, மிரட்டுவதோ சிறுபிள்ளைத்தனம். தனது எல்லா விருப்புவெறுப்புகளையும் ஒதுக்கிவிட்டு, தந்தை சொற்படியே நடந்துவந்தால், நாளடைவில் வெறுமைதான் மிஞ்சும்.

    உங்கள் மருமகள் ஒரு பேரக்குழந்தையைப் பெற்றுக் கொடுத்தால் உங்கள் வீம்பு மறைந்துவிடக்கூடும். ஆனால், தன் கல்யாணத்துக்கு பெற்றோர் வந்து ஆசீர்வதிக்கவில்லையே என்று மகனும், அவனுடைய திருமணத்தைப் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லையே என்று நீங்களும் எக்காலத்திலும் வருந்த நேரிடும்.

    பொதுவாக, பெற்றோர் மறுக்க மறுக்க, இளைஞர்களின் பிடிவாதம்தான் அதிகரிக்கும். அப்படியே ஒரு பெண் தங்கள் குடும்பத்திற்கு ஏற்றவளில்லை என்று அவர்கள் நம்பினால், அக்காரணத்தைப் பொறுமையாக விளக்க வேண்டும். `நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன், இனி உன் பாடு!’ என்று இருந்தால்தான் எக்காலத்திலும் நிம்மதி.

    மருமகளுக்கும் என்றுமே உங்கள்மீது கசப்பு இருக்கும் — தன்னை ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொள்ளவில்லையே என்று. பெற்றோர் சம்மதத்துடன் மணந்தால், இரு தரப்பிலும் உறவு சுமுகமாக இருக்குமே!

    (ஆறுமோ மனம் என்ற என் சிறுகதை வெளியானதும் ஒரு மாது தொலைபேசியில் என்னை அழைத்துப் பேசியதை ஒட்டியது).

    தொடருவோம்

    Share