நிர்மலா ராகவன்

என்றும் சோகமா!

நலம்-1-1-1
`உங்கள் மகள் இப்படி இருக்கிறாள்! நீங்கள் என்ன, சிரித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?’ என்று பல பெண்கள் தன்னைக் கேட்பதாகச் சொன்ன கௌரியின் முகத்தில் ஆழ்ந்த சோகம்.

உறவில் மணமுடித்ததாலோ, இல்லை, வேறு எந்த காரணத்தினாலோ, அவள் பெற்ற இரு பெண் குழந்தைகளுமே உடலளவில் சரியில்லை. சந்திராவின் வலது கையும், இரு கால்களும் செயலிழந்து இருந்தன. தவழ்ந்துதான் நகருவாள். அதிக கனமில்லாமல் இருந்ததால், சிறு குழந்தையைப்போல் அவளைத் தூக்கிக்கொண்டுதான் வெளியிடங்களுக்குப் போவார்கள். இதே போன்றதொரு குறையுடன் பிறந்த அவளுடைய அக்காள் இறந்துவிட்டாள்.

இருபத்தைந்து வயதான சந்திரா நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவர் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தாள். எனக்கு அவளையும், தாய் கௌரியையும் பல வருடங்களாகத் தெரியும்.

எல்லாரும் பந்தியில் சாப்பிட உட்கார்ந்தபோது, கௌரி ஒரு தட்டில் சாதம் பிசைந்துகொண்டு வந்து, மகளுக்கு தேக்கரண்டியால் ஊட்டத் தொடங்கினாள்.

என்னால் சும்மா இருக்க முடியவில்லை. `ஐயோ, அந்தச் சிறு பெண்ணின் தன்னம்பிக்கை என்ன ஆவது!’ என்று மனம் பதைத்தது.

`அவளுக்கு இடது கையால் சாப்பிட முடியாது?’ என்று கௌரியைக் கேட்டேன்.
`முடியும்!’

`அப்படிச் சாப்பிட்டால் யாராவது ஏதாவது சொல்வார்களா?’ சற்று கோபத்துடன் வந்தது என் கேள்வி.

சாந்தமாகப் பதிலளித்தாள்: `யாரும் ஒண்ணும் சொல்லமாட்டார்கள்’.
`பின்னே என்ன? அவளைத் தானே சாப்பிட விடுங்கள்,’ என்று இரைந்தேன்.

`இவள் யார் நம்மை மிரட்டுவதற்கு!’ என்று கௌரி ஆத்திரப்படவில்லை. மாறாக, அவள் முகம் மலர்ந்தது. தேக்கரண்டியை சந்திராவின் கையில் (இடதுதான்) கொடுத்தபடி, `இந்த மாமிகிட்டே ஒன்னை ஒரு மாசம் விடணும்!’ என்றாள், சிலாகித்து.

வேறொரு சமயம், கௌரி என்னருகே வந்து, மெல்லிய குரலில், “உங்கள் மகள் இப்படி இருக்கிறாள்! நீங்கள் என்ன, சிரித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?’ என்று எல்லாரும் என்னைக் கேட்கிறார்கள்!’ என்றாள், வருத்தமாக.

`விடுங்கள்! நீங்க இப்போ இருக்கிறதுதான் சரி,’ என்றேன் அழுத்தமாக. ஒருவர் அழுதால், அவரைத் தனியாக விட்டுவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கும் இவ்வுலகம்.
பிறரது வாழ்க்கையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், `நல்லவேளை, நமக்கு இப்படி நடக்கவில்லையே!’ என்ற திருப்தியுடன், `நாங்கள்தான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! நாங்கள் உன்னைமாதிரியா!’ என்பதுபோல் தலைநிமிர்த்தி நடப்பவர்கள் என்னைப் பொறுத்தவரையில், அல்பங்கள். அவர்களுக்கு ஒரு சிறு துன்பம் வந்தால்கூடத் தாங்கமாட்டார்கள்.

என் நினைவு பின்னோக்கிப் போயிற்று.

என் ஒரே மகன் இறந்து ஈராண்டுகளுக்குப்பின் நான் சென்னை போயிருந்தேன். சிறு வயதில் நான் வளர்ந்த வீடு! ஆகையால், அந்தப் பருவமே வந்துவிட்டதுபோல் இருந்தது. எல்லா உறவினர்களையும் பார்த்த சந்தோஷத்தில் நிறையப் பேசினேன், சிரித்தேன்.

`பிள்ளையைப் பறிகுடுத்துட்டு, கொஞ்சம்கூட வருத்தமில்லாம, இவ என்ன இப்படி சிரிச்சுண்டே இருக்கா!’ என்று ஐம்பது வயதான ஒருவர் (ஆணில்லை, பெண்கள்தாம் இப்படிப் பேசுவார்கள்) நீட்டி முழக்கினார்.

நான் அதை அலட்சியம் செய்தேன்.

அன்றிரவு என் பெரியம்மா என் பக்கத்தில் படுத்துக்கொண்டு, என் நெற்றியைத் தடவியபடி இருந்தார். `ஒங்க பெரியப்பா சண்டையிலே போனார், ஒரு பெண்ணையும் பறிகுடுத்தேன். ஆனா, நான் இன்னிக்கும் சிரிச்சுண்டுதான் இருக்கேன். அப்படித்தான் இருக்கணும். நம்ப துக்கத்தை உள்ளுக்குள்ளேயே வெச்சுக்கணும். நீயும் அப்படித்தான் இருக்கே!’ என்றபோது, ஒருவராவது என்னைப் புரிந்துகொண்டாரே என்று என் கண்ணீர் பெருகியது. துடைத்துக்கொள்ளத் தோன்றவில்லை.

நாங்கள் இருவரும் வழக்கத்துக்கு விரோதமாக இரவு பூராவும் ஏதோ பேசினோமே என்று இன்றளவும் சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். (`அப்படி என்னடி பேசினேள் ரெண்டுபேரும்?’)

என்ன பேசினோம் என்று நினைவில்லை. அது முக்கியமுமில்லை.

பெற்ற குழந்தையைப் பறிகொடுத்த இரு தாய்மார்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்த பொன்னான தருணம் அது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *