நலம் .. நலமறிய ஆவல் -11
நிர்மலா ராகவன்
எனக்கென்ன, பயமா!
‘கோலாலம்பூரா! தலைநகரம் அல்லவா? சின்ன விஷயத்திற்கெல்லாம் அங்கே எல்லாரும் சண்டை பிடிப்பார்களே! நீ எப்படித்தான் தாக்குப்பிடிக்கப் போகிறாயோ, பாவம்!’
சிற்றூரிலிருந்து நாட்டின் தலைநகரத்திற்குப் போனால் கலாசார அதிர்ச்சி ஏற்படும் என்று பலரும் பயமுறுத்தி இருந்தார்கள் மே லின் என்ற அந்த இளம் ஆசிரியையை.
செல்வச்செழிப்போ, பெற்றோரின் பிரத்தியேக கவனிப்போ இல்லாத பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தவளுக்குப் பயம் பிடித்துக்கொண்டது. இந்த இருபத்து ஐந்து வருடங்களாக தான் யாரை நம்பி வாழ்ந்தோம், இனியும் அப்படித்தான் வருகிற எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் எங்கள் பள்ளிக்கூடத்தை வந்தடைந்தாள் மே லின்.
வந்த சில மாதங்களுக்குள்ளாகவே, பல ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்த ஆசிரியைகளுடன் வலுச்சண்டை போட ஆரம்பித்தாள். காரணம் இல்லாவிட்டாலும், எதற்காகவாவது விவாதமும், சண்டையும் தொடரும். எங்களுக்கெல்லாம் அலுத்துவிட்டது. வேலைப்பளு ஒரு பக்கமிருக்க, அநாவசியமாக ஒருத்தி வம்புக்கு இழுத்தால்? பலரும் அவளைக் கண்டால் ஒதுங்க ஆரம்பித்தோம்.
தான் பிறரைப் பார்த்துப் பயப்படுவதற்குப் பதில், அவர்களே தன்னைப் பார்த்துப் பயந்து விலகுகிறார்கள்! பெருமையில், அவளுடைய அதிகாரம் இன்னும் அதிகரித்தது.
நாங்கள் அனைவரும் இனபேதம் இல்லாது நட்புடன் பழகிவந்தோம். இவள்மட்டும் எதனால் இப்படி இருக்கிறாள் (`What is wrong with her?’) என்று கலந்து பேசினோம்.
ஒரு முறை, “இங்கே சண்டை போட்டால்தான் பிழைக்க முடியுமாமே! எனக்கென்ன, பயமா!” என்று மே லின் ஏதேதோ பேச, அவளுடைய போக்கிற்கான அர்த்தம் சற்றுப் புரிகிறமாதிரி இருந்தது.
ஒரு முன்னிரவு காலத்தில், நான் தெருவில் நடந்து போகும்போது, சிறிய நாய் ஒன்று வெறி பிடித்தமாதிரி குரைத்தபடி, எதிர்த்திசையிலிருந்து என்னை நோக்கி வெகு வேகமாக வந்தது.
முதலில் பயமாக இருந்தாலும், `பயந்தவர்தான் பிறரை பயமுறுத்துகிறார்’ என்ற உண்மை நினைவுக்கு வந்தது.
`நான் உன்னை ஒன்றும் செய்யப் போவதில்லையே! என்னைப் பார்த்து எதற்குப் பயப்படுகிறாய்?’ என்று மானசீகமாக அந்த நாயுடன் தொடர்பு கொண்டேன். உடனே, அது பிரேக் போட்டாற்போல் உட்கார்ந்தது. அதைத் தாண்டிப் போகையில், அதன் தலை குனிந்திருந்தது.
மே லின்னின் போக்கிற்கும் அதற்கும் என்ன வித்தியாசம்? பிறர் தன்னை ஏற்பார்களோ, மாட்டார்களோ என்ற ஏக்கம் – அச்சம் – அவளுக்கு. அந்த பயத்தில் அவர்கள் தன்னை ஏற்காதிருக்கும்படி நடந்துகொள்கிறாள்!
நான் அந்தப் பள்ளியைவிட்டு மாற்றலாகிப் போனபோது, அவளுடைய வயதும் என் அனுபவமும் ஒன்றுதான் என்ற நிலை அளித்த உரிமையுடன், மே லின்னிடம் தனிமையில் புத்தி கூறினேன்: “Take it easy! உன்னை யாரும் எதுவும் செய்துவிடப் போவதில்லை”.
“என்ன சொல்கிறீர்கள்? எனக்குப் புரியவில்லை,” என்றாள் பரிதாபமாக.
“நீ எதற்கெடுத்தாலும் சண்டை போடுகிறாய் என்று ஒரு பேச்சு நிலவுகிறது,” என்று நான் ஆரம்பிக்க, அவள் முகத்தில் ஒரே அதிர்ச்சி.
“நீ நட்புடன் பிறருக்கு உதவி செய்தாலும், மரியாதையாக நடந்துகொண்டாலுமே போதுமே! எல்லாரும் உன்னை ஏற்பர். அதை விட்டு, ஏன் இப்படி இருக்கிறாய்?” என்றுவிட்டு, அப்பால் நகர்ந்தேன்.
குரலடைக்க, “நீங்கள் என்னிடம் சொன்னதற்கு ரொம்ப நன்றி,” என்றாள், திரும்பத் திரும்ப. அழுதுவிடுவாள் போலிருந்தது.
எந்த ஒரு உத்தியோகத்திலும் நாம் புதிதாகச் சேரும்போது, வந்த அன்றே நம்மைப்பற்றித் துருவித் துருவிக் கேட்பவர்களும், நம்முடன் ஒட்டிக்கொள்ள விரும்புகிறவர்கள்போல் நடிப்பவர்களும் நட்புடன் பழகுகிறார்கள் என்றெண்ணி மகிழ்ந்து, ஏமாந்துவிடக் கூடாது. இவர்களை நம்ப முடியாது. சந்தர்ப்பம் கிடைத்தால், இந்த இரண்டு ரகமுமே முதுகில் கத்தி பாய்ச்சும்.
புதிதாக வந்திருப்பவர் நம்மை மிஞ்சிவிடக்கூடாதே என்ற பதைப்பிலிருப்பார்கள் சிலர். இவர்கள் தன்னம்பிக்கை குன்றியவர்கள்.
நான் ஒரு பள்ளிக்குச் சில காலம் அனுப்பப்பட்டிருந்தேன், மேற்பயிற்சிக்காக. அங்கே இருந்த ஓரிரு இந்திய ஆசிரியைகள் ஆசிரியர்களின் பொது அறையில் அதிகம் பேசாமல் இருந்ததைக் கண்டேன். மிகச் சாதாரணமாக உடுத்தியிருந்தார்கள். என்னுடன் மட்டும் பேசினார்கள், மகிழ்ச்சியுடன்.
ஆங்கில-சீன (Eurasian) மாது ஒருத்தி என்னிடம், “நீ தினமும் இப்படி பட்டுப்புடவையே கட்டிக்கொண்டு வருகிறாயே! இங்குள்ள மர நாற்காலிகளில் நூல் இழுபட்டு, வீணாகிவிடும்,” என்றாள்.
அவள் குரலில் கிஞ்சித்தும் கரிசனம் இல்லை என்பது புரிந்து, நான் கண்களைச் சுருக்கிக்கொண்டு, மிக இனிமையாக, “பரவாயில்லை. புடவை போனால் என்ன! நானே ஒரு நாள் சாகத்தானே போகிறேன்!” என்றேன். குரலில் அலட்சியம்.
அப்போது அவள் முகத்தைப் பார்க்க வேண்டுமே!
இன்னொரு நாள், “நீ ஆங்கிலத்தில் எழுதுவாய், தெரியும். தமிழிலும் எழுதுவாயா?” என்று ஆச்சரியம் தெரிவித்துவிட்டு, “Linguist!” என்று பழிப்பதுபோல் கூறினாள்.
அவள் எதிர்பார்த்தபடி, நான் ஏதோ தவறான காரியம் செய்துவிட்டு, மன்னிப்பு வேண்டுவதுபோல் அசட்டுச் சிரிப்பு சிரிக்கவில்லை. எந்த உணர்ச்சியும் காட்டாது, அவளையே பார்த்தேன்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவள் மாறிவிட்டாள். என்னை ஒரு தலைவியாக ஏற்றதுபோல், தன் குறைகளைச் சொல்லிச் சொல்லி என் தீர்வை நாடினாள்!
(நாற்காலிகள் எல்லாம் வழுவழுப்பாக இருந்தன, என் புடவை எதுவும் நாசமாகவில்லை என்பது வேறு விஷயம்).
அங்கிருந்த தமிழ் ஆசிரியை ஒருவரிடம், “இப்படி காமாசோமாவென்று அலட்சியமாக உடுத்திக்கொண்டு வராதீர்கள். மதிக்க மாட்டார்கள். உங்களிடம் நல்ல புடவையே இல்லையா?” என்று போலியாக மிரட்டினேன். (ஆசிரியர்களின் நகைச்சுவையான போக்கும், உடைகளும் பிடித்திருந்தால், மாணவ மாணவிகளுக்கு அவர்கள் கற்பிக்கும் பாடத்தில் தனி அக்கறை பிறக்கும். உடன் உத்தியோகம் பார்ப்பவர்களும் முதலில் வேண்டாவெறுப்பாக மரியாதை செலுத்துவார்கள். நாளடைவில் நம்மையும் சரிசமமாக ஏற்பார்கள்).
சிரித்துவிட்டு, மறு நாளிலிருந்து அவரும் விதவிதமான புடவை அணிந்துகொண்டு வந்தார். அவரைப் பார்த்தவுடன், பிற ஆசிரியைகளின் விழிகள் விரிந்தன — பயத்தால்!
ஒரு புதிய இடத்தில் நுழைந்து, ஆரம்பத்திலேயே அதிகம் பேசினால், நம் பலம், பலவீனங்களைப் பிறர் புரிந்துகொள்ள வழிவகுத்து விடுகிறோம். நம் பலத்தையே நமக்கு எதிராக வளைத்து, தமக்கு ஆதாயம் தேடிக்கொள்பவர்களும் உண்டு. ஆகவே, முகத்தில்கூட அதிக உணர்ச்சிகள் காட்டாது, மௌனமாக இருப்பது நலம். அமைதியுடன் பிறரைக் கவனித்தால், அவர்களுடைய குணம் புரியும். இந்தச் சூழ்நிலையில் நாம் எப்படி நடந்துகொள்வது என்ற தெளிவும் பிறக்கும்.
தொடருவோம்