நிர்மலா ராகவன்

அப்பாவுக்கு நன்றி

நலம்-1-1

இளவரசி எங்கள் பள்ளியில் இறுதியாண்டை முடித்துவிட்டு, பரிசோதனைக்கூடத்தில் உதவியாளாக வேலை பார்த்தாள். இரண்டு ஆண்டுகளாக அவள் ஒருவனைக் காதலித்து வந்தது எனக்குத் தெரியும். ஒரு நாள் ரொம்பக் கோபமாக இருந்தாள்.

`என்ன ஆச்சு, ஈலா?’ என்று விசாரித்தேன். (இளவரசி என்ற பெயர் வாயில் நுழையாததால், அவள் சீன ஆசிரியைகளுக்கு `ராசி’. பிறருக்கு ஈலா).

`எப்போ பார்த்தாலும், நாம்ப கல்யாணத்துக்குப்புறம், ஒன் சம்பளத்திலே வீடு வாங்கலாம், காடி வாங்கலாம்னு அதே பேச்சுத்தான்!’

`அவனுக்கு ஒன்னைவிட ஒன் சம்பாத்தியத்திலேதான் கண். வேலையை விடப்போறேன்னு சும்மா மிரட்டிப்பாரு. ஒன்னை விட்டுடுவான்!’ என்று சிரித்தேன்.

அவள் யோசித்தபடி போனாள். சில தினங்களுக்குப்பின், `நேத்து நாங்க மீட் செஞ்சப்போ, `ஸாரி. நான் ஒன்னைக் கல்யாணம் செய்துக்க முடியாது’ன்னு அவனை விரட்டிட்டேன்,’ என்று கூறினாள். அப்படியும் அவள் ஆத்திரம் அடங்கவில்லை. `இவன் ஆடம்பரமா வாழ நான் சம்பாதிச்சுப்போடணுமா?’ என்று உறுமினாள்.

இளவரசி குள்ளமாக, குண்டாக, களையான முகத்துடன் இருப்பாள். அவளுடைய உருவத்தைவிட, அவளால் ஈர்க்கப்பட்ட ஆண்கள் அவளுடைய அரசாங்க உத்தியோகத்தில் கண்ணாக இருந்தவர்கள்தாம். அவள் காலம் முடியும்வரை அளிக்கப்படும் ஓய்வூதியம் அதற்குப் பின்னர் கணவன் உயிரோடு இருந்தால், அவனுக்குக் கிடைக்கும். இது போதாதா, குறுகிய காலத்தில் வெற்றிப்படியில் ஏறத் துடிப்பவர்களைக் கவர!

`சண்டை போட்டானா?’ கவலையுடன் விசாரித்தேன்.

`அதெல்லாம் இல்லே. வருத்தமா, தலையைக் குனிஞ்சுக்கிட்டு போயிட்டான்’.

இளவரசியின் தந்தை துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்தவர். மகளை நல்லவிதமாக வளர்த்திருக்கிறார். அதனால், சுயநலத்துடன் அவளைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த காதலனை உதறும் துணிச்சல் இருந்தது. பொதுவாக, நல்லவரோ,கெட்டவரோ, பெற்ற தந்தையைப்போல் இருப்பவர்களையே பெண்கள் தம்மையுமறியாமல் வரிக்கிறார்கள்.

அவளுக்குத் தன் தந்தையின் அருமை நன்றாகப் புரிய இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது.

இன்னொரு நாள், `என் அப்பா எவ்வளவோ கஷ்டத்தோட என்னைப் படிக்க வெச்சு, ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்திருக்காரு. அவருக்கு எப்படி தாங்க்ஸ் சொல்றதுன்னு தெரியல. ஏதாவது செய்யணும்போல இருக்கு. ஆனா என்னான்னு புரியல,’ என்று என்னிடம் வந்தாள்.

மாஜி காதலனுடன் ஒப்பிடும்போது, தந்தை அவளுக்குத் தெய்வமாகவே தெரிந்திருக்க வேண்டும். எப்படி தன் தேவைகளைச் சுருக்கிக்கொண்டு, சக்திக்கு மீறி செலவு செய்து அவளைப் படிக்க வைத்திருக்கிறார்!

`அவருக்குச் சாப்பாட்டில பிரியமா?’ என்று விசாரித்துவிட்டு, ஒரு சமையல் குறிப்பை எழுதிக்கொடுத்து, விளக்கினேன்.

இரண்டு நாட்கள் பொறுத்து, வாயெல்லாம் பல்லாக வந்தாள். `இந்தமாதிரி அம்பாங் தெரு ஐயர் கடை ரவா தோசை சுட எங்கே கத்துக்கிட்டே’ன்னு அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டாரு! நிறையச் சாப்பிட்டாரு!’

(அவர் குறிப்பிட்ட கடை கோலாலம்பூரின் பிரதான தெருவில் இன்றும் இருக்கிறது. பல கைகள் மாறிவிட்டன. எங்கள் குடும்ப நண்பர் — ஒரு இஸ்லாமியர் — அதை நடத்தியபோதும், அதன் பெயர் என்னவோ ஐயர் கடைதான்! சைவ உணவு மட்டும்தான் அங்கு கிடைக்கும் என்பதாலோ, இல்லை, பழக்க தோஷத்தாலோ!)

அவளுடைய பூரிப்பு என்னையும் தொத்திக்கொண்டது.

பெற்றோருக்கு நன்றி வாயால் சொல்ல வேண்டுவதில்லை. அவர்களுக்குப் பிடித்தமானவற்றை — வெளியில் அழைத்துப்போவதோ, எதிரில் உட்கார்ந்து நம் அன்றாட வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதோ — செய்தாலே போதுமே! அப்போது அவர்கள் அடையும் ஆனந்தம், `நாம் பிள்ளைகளை நல்லவிதமாகத்தான் வளர்த்திருக்கிறோம்!’ என்ற நிறைவுதானே இறுதிக்காலத்தில் ஒவ்வொரு பெற்றோரும் வேண்டுவது!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *