படக்கவிதைப் போட்டி 68 – இன் முடிவுகள்
காயத்ரி பூபதி
இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் புதுவை சரவணன். இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.
மலைப் பாதையில் மழை வரும் முன்பே குடை பிடித்துச் செல்லும் இச்சிறுவன் தான் யாரோ?
விளையாடும் பருவம் இது
விளையாட நேரம் ஏது
சின்னத் திரையில் சிறு பிள்ளைப் பருவமும்
வெள்ளித் திரையில் விடலைப் பருவமும்
களி கொள்ளும் காலம் இது.
திரைக்குள் காணும் உலகை விடுத்து
திரைக்குள் அப்பால் உள்ள
வசந்த உலகைக் காண
எண்ணச் சிறகை விரித்து
வண்ணக் கனவுகளை
வகையுற அமைத்து
வாகை சூடும்
நாள் இது !
என்று வானவில் குடை விரித்து ஒய்யாரமாய் அடி எடுத்து வைக்கும் இச்சிறுவனுக்கு கவிஞர்கள் எழுதிய பாக்களைப் பார்ப்போம். இனி,
இளைய தலைமுறைக்கு பெற்றோர்களே வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றது இக்கவிதை,
வெயிலும் மழையும் இலையெனிலும்
வேடிக்கைக் காகக் குடைபிடிப்பான்,
பயிலும் பள்ளி விடுமுறையில்
பறக்கச் சிறகுகள் வந்துவிடும்,
துயிலும் பொழுதைத் தவிரதினம்
துடிப்பா யிருக்கும் பருவமிது,
இயல்பிதை வளர்த்தே நல்வழியில்
இவனைச் செதுக்குவீர் பெற்றோரே…! – செண்பக ஜெகதீசன்…
சின்னஞ் சிறு வயதில் துடிப்பாய் இருக்கும் சிறுவர்களின் இயல்பினை உணர்ந்து அவர்களை அரவணைப்பதும், நிலைப் பிறழாமல் நடக்க நல்வழி காட்டுவதும், பெற்றோரின் கடமை என்கிறார் கவிஞர்.