படக்கவிதைப் போட்டி .. 69
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.06.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்
வேண்டாம் இடையூறு…
மண்ணில் மாளிகை கட்டியேதான்
மனம்போல் ஆட்டம் போடுகின்ற
வண்ணப் பூக்களாம் பிள்ளைகளின்
வயதுக் கேற்ற விளையாட்டவர்
எண்ணம் போல நடக்கட்டும்,
எல்லாம் அவர்தம் உயர்வுக்கே,
உண்மை உணர்வீர் பெற்றோரே
உங்கள் தடைகள் வேண்டாமே…!
-செண்பக ஜெகதீசன்…
குருவிகளின் கூடு மரத்தினிலே-இந்த
குழந்தைகளின் வீடு ஈர மணலிலே
மணல் மாயமாய் மறையும் முன்னே
மணல் வீடு கட்டி மகிழட்டுமே
காற்று வீசி கலைக்கும் முன்னே
கோட்டைகள் மணலில் பல கட்டட்டுமே
மாடி வீடு கட்டி அங்கே-நம்
கொடியினை நட்டு வணங்கட்டுமே
ஈரமண்ணில் ஆடிய ஆட்டம் என்றும்
இதயத்தில் உலரா வண்ணம் இருக்கட்டுமே
காடுகள் யாவும் ஆயின வீடுகளே
காணாமல் போனது ஆற்று மணலுமே
மார்பிள் வீடு கட்டி வாழ்ந்தாலுமே
மணல் வீடு போல்தான் வந்திடுமா
மண் வாசனை போனது எங்கே
மரஙகளும் போனது எங்கே
குருவிகளுக்கும் கூடு கட்ட மரமில்லை
குழ்ந்தைகள் வீடு கட்ட மண்ணில்லை
காற்றும் கடலும் வந்து அழிதாலும்-இவரின்
கனவினை மட்டும் அழிக்காது காத்திடுவீர்
அனுப்புனர்
ராதா விஸ்வநாதன்
denver_radha@yahoo.com
அலைகள் வந்து வந்து
அலைக்கழித்தாலும்
கலையாத மனதுடன்
விட்ட இடத்திலிருந்து வீட்டை
கட்டி முடித்தஇந்த சிறுவர்கள்
கடைமை யுணர்வு கொண்டவர்கள்
வெற்றிக்கனியை விடா முயற்சியால்
எட்டிப்பிடித்து கொடியையும் நாட்டிவிட்டனர்
மணல் வீடானாலும் அவர்களின்
மன வீடு இது மகிழ்ச்சிக்கு கேட்க வேண்டுமா?
கற்பனைத் திறத்துடன்
காரியம் ஆற்றிடும்
விற்பனர்கள் இவர்கள்
இவர்களே !
நாளைய கட்டடத்தின்
செங்கற்கள்
எதிர்காலச் சூரியனை
உருவாக்கப்போகும்
ஒளிக்கற்றைகள்
பார்வையாளர்கள் அல்ல
படைப்பாளிகள் !
பாராட்டித்தட்டிகொடுப்போம்
சரஸ்வதிராசேந்திரன்
கவிதை 1
இமயத்தில் நாட்டும் கொடிக்கு
காலம் வெகு தூரமில்லை……
இதோ!
இளஞ்சிறார் நடத்தும் ஒத்திகை,
சிற்பிகள் செதுக்கும் நேர்த்தியுடன்
இலாவகமாய்…………..
கடற்கரை மணலில்
கலைமகள்
கொஞ்சி விளையாடும் கலைநயம்
விழிகளை மயக்கும்,
வலிமை தாங்குமோ?
அப்பிஞ்சு விரல்கள்
பதபதைக்கும் தாயுள்ளம்,
சிந்தனைச் சிறார்கள்
கடற்கரை மணலில்
வண்ணக்கொடி நாட்டிய படியே – வெற்றி
ஏணிப்படி ஏறுவா்
இஃது திண்ணமே.
கவிதை 2
ஒடிவிளையாட ச் சொன்னான்
முண்டாசு கவிஞன்
கூடி விளையாடச் சொன்னான்
முண்டாசு கவிஞன்
களைப்பாற
இளைப்பாற
காற்றாட நடைபயில
கட்டாந் தரையேது?
நாம் கைகோர்த்தாட
இடமேது தோழா!
இது நகர நெருக்கடியா?
இல்லை
நம் நகா்வே நெருக்கடியா?
வியபார உலகிலே
விளையாட இடமில்லை,
ரியல் எஸ்டேட் அதிபர்கள்
விட்டு வைக்காத இடம்
கடற்கரையும்……..
சிற்றில் இழைத்து
சிறுதேர் உருட்ட ஆசை
கோட்டை கட்டி
கொடி நாட்ட ஆசை
கடற்கரை மணலால்
கற்றோருக்குப் பாடம்
முனைவா் மா.பத்ம பிரியா,
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா்,
எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி,
சிவகாசி.
priyaarul065@gmail.com