Tag: மேகலா இராமமூர்த்தி

  • படக்கவிதைப் போட்டி 109-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பறக்கும் புறவினைப் படப்பெட்டிக்குள் மடக்கிவந்திருப்பவர் திரு. சத்யா. இப்படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி.

    flying pegion

    இனி, இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைக் கண்ணுறுவோம்!

    ’காடுகொன்று கட்டடப் பயிர் வளர்த்த மனிதனால் பறவையினங்கள் உயிர்வாழ்வதே கேள்விக்குரியாகிவிட்டதே!’ என வேதனைப்படுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மனிதனால்…

    காடு கொன்று
    கட்டிடப் பயிர் வளர்த்ததில்,
    கண்டுமுதல் அமோகம்..

    கூடுகட்டி
    மாடிகளில் வாழும்
    பறவை வாழ்க்கைக்கு
    மாறிவிட்டான் மனிதன்..

    கூடுகட்டி
    குடும்பமாய் வாழ்ந்த
    பறவையெல்லாம்
    கூண்டோடு காலி..

    இருக்கும் ஒன்றிரண்டும்
    இருப்பிடம் தேடுகின்றன-
    இலக்கில்லாமல் பறந்து…!

    *****

    ’மனிதனிடம் உயிர்நேயம் பேச்சில் மட்டுமே; மூச்சில் இல்லை. ஆனால் பாரை அளந்துவரும் பறவையின் சிறகுகளுக்கு அத்தகு பேதம் ஏதுமில்லை!’ என்கிறார் மா. பத்ம பிரியா.

    யாதும் ஊரே யாவரும் கேளீர்

    மானுட தர்மத்தில்,
    எல்லை தாண்டிய நேயம் பேச்சில் தான்
    எள்ளளவும் இல்லை மூச்சில் தான்
    பாரளவை சிறையெடுக்கும் பறவைகளின்
    சிறகுகளுக்குத் தெரிவதில்லை பேதங்கள்
    வெண்புறாவின் விலாசம் தேடினால்
    பிரபஞ்சம் முழுவதுமே பறத்தலின் சுதந்திரம்
    வாழ்தலின் போது வானமே எல்லை
    சிதறிய கண்டங்களில்
    சிதறுண்ட நெஞ்சங்கள்
    மானிட வம்சாவளியின் வகுக்கப்பட்டச் சட்டங்கள்
    சமாதானப் புறவிடம் தூது சொல்லி
    சம்மட்டியால் அடிக்கும் ராஜ தந்திரம்
    மனிதநேயம் காட்டி மாயை செய்வதும்
    மானுட தர்மம் ஆதலால்
    வெண்சிறகசைவில்,
    உலக உருண்டையின் மொத்தமும்
    உயிரின நேயத்தைச் சொல்லிடும்
    சின்னஞ்சிறு மழலையின் மொழிகளில் செப்பிடும் கீதங்கள்
    யாதும் ஊரே யாவரும் கேளீர்!

    *****

    ’சுற்றுச்சூழல் சீர்கேடும், பொழில்களின் அழிவும் எழிலார் பறவையினங்களின் வாழ்வை அழித்துவிட்டன. இதோ… மீளா உலகை நோக்கிப் புறப்பட்டுவிட்ட ஒரு பறவையின் இறுதிப்பயணத்தைப் பாருங்கள்!’ என்று  வருத்தத்தோடு நமக்குச் சுட்டிக்காட்டுகிறார் திரு. சி. ஜெயபாரதன்.   

    இறுதிப் பயணம்

    கரிவாயு நிரம்பி
    நகரெங்கும் புகைமூடிப்
    போச்சு!
    மூச்சுவிடத் தூய
    காற்றில்லை!
    நரகமாய்ப் போச்சு நானிருந்த
    நகரமெல்லாம்!
    குடிநீரில்லை !
    குடியிருக்க மரமில்லை!
    மரமிருந்தால்
    பச்சை இலையில்லை!
    தின்னக்
    காய் கனிகள் இல்லை!
    தரையில் கிடக்கும்
    காய்ந்த இலைகளை
    எலும்பான மாடுகள் தின்னும்!
    துப்பாக்கி ஏந்தி வருகிறான்
    சுட்டுத் தின்ன
    என்னை!
    நகர் விட்டுப் போகிறேன்
    மனிதன் தின்பதற்கு
    இரையாவேனா?
    இல்லை,
    கரிவாயுச் சூட்டில் வெந்து
    எரிந்து போவேனா?
    தவிப்பெனக்கு இந்தப்
    புவி வாழ்வில்!
    வாழ்வில்லை! போகிறேன் !
    பட்டினியில்
    மீளா உலகுக்கு!

    *****

    பறவையின் விண்வெளிப் பயணத்தைக் கவிஞர்கள் தமக்கே உரிய கவிக்கண்கொண்டு இரசனையோடு விளம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் பாராட்டு!

    ***

    மனிதவாழ்க்கையின் வெற்றி இரகசியம் உழைப்பிலும் முயற்சியிலுந்தான் ஒளிந்துகிடக்கின்றது. அதனைக் கண்டுணர்ந்த வள்ளுவர்,

    ”ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்” என்று ஊழை வெல்லும் உழைப்பின் உயர்வை உலகுக்கு உணர்த்தினார். அதை நினைவுறுத்தும் வகையில் வானில் சிறகுவிரித்துச் செல்லும் புறவின் சிறகுகள் இரண்டையும் உழைப்பு மற்றும் முயற்சியின் குறியீடுகளாக உருவகித்த கவிதை ஒன்று கருத்துக்கு விருந்தாய் அமைந்தது.

    அக்கவிதை…

    உயர்வு விண்ணைத் தொடும் கட்டிடங்கள்!
    மனித வெற்றியின் பட்டயங்கள்!
    உழைப்பு என்பது ஒரு சிறகு!
    முயற்சி என்பது மறு சிறகு!
    இவ்விரண்டு சிறகாலே
    உச்சம் தொடலாம் மறக்காதே!
    பிள்ளையின் உயர்வு தாயின் மகிழ்ச்சி!
    கவிதையின் உயர்வு மொழியின் மகிழ்ச்சி!
    நீரின் உயர்வு நிலத்தின் மகிழ்ச்சி!
    மழையின் உயர்வு மரத்தின் மகிழ்ச்சி!
    மரத்தின் உயர்வு பறவையின் மகிழ்ச்சி!
    நிறைவின் உயர்வு வாழ்க்கையின் மகிழ்ச்சி!
    செல்வத்தின் உயர்வு கொடையின் மகிழ்ச்சி!
    வெளிச்சத்தின் பின்னே இருள் இருக்கும்!
    உயர்வின் பின்னே தாழ்வு இருக்கும்!
    இரண்டையும் ஒன்றாய் நினைப்பவர்க்கு
    வாழ்க்கையில் என்றும் மகிழ்விருக்கும்!

    ’உயர்வும் தாழ்வும் வாழ்வெனும் நாணயத்தின் இருபக்கங்கள். தாழ்விலே துவளாது,  மனிதனும் பறவையைப் போல் அயர்வின்றி உழைத்தால் வாழ்விலே வெல்லலாம்!’ என்று நம்பிக்கையூட்டும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – (110)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    18217587_1308733892514140_163952999_n
    97233181@N07_rஜமீல் ரியாஸ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (06.05.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • சிறுவர்ப் பயந்த செம்மலோர்!

    -மேகலா இராமமூர்த்தி

    மனித சமுதாயத்தினர் மேற்கொண்டொழுகும் இரு அறங்கள் இல்லறமும் துறவறமும் ஆகும். இவற்றில் மற்றவர்களையும் வாழ்வித்துத் தானும் வாழும் பெற்றி பற்றி இல்லறமே சிறந்தது எனலாம்.

    வள்ளுவரும், ’அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்றுகூறி இக்கருத்துக்கு அரண் சேர்க்கிறார். இல்வாழ்க்கையின் நன்கலமாகத் திகழ்வது அறிவிற்சிறந்த மக்கட்பேறு. அதனால்தான்,

    ”பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
    மக்கட்பேறு அல்ல பிற”
    என்று மக்கட்பேற்றின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்துகின்றார் பேராசான்.

    இல்வாழ்க்கையில் எல்லா இணையருக்கும் மக்கட்பேறு விரைவில் வாய்த்துவிடுவதில்லை. சிலர் பலகாலம் தவமாய்த் தவமிருந்துதான் இப்பேற்றைப் பெறுகின்றனர். இதற்குத் தக்கதோர் சான்றாய்ச் சங்க இலக்கியம் நமக்குக் காட்டுவது பாண்டிய மன்னன் அறிவுடைநம்பி. பொருட்செல்வம் மலையெனக் குவிந்துகிடந்தது அவனிடம். காலால் இட்டதைத் தலையால் செய்ய ஏவலர் பலர் இருந்தனர். ஆயினும் அவனுக்கு மனத்தில் நிறைவில்லை. காரணம்… மனத்தை மகிழ்விக்கும் மழலையொன்று அவன் மாளிகையில் அதுவரைத் தளர்நடை பயிலவில்லை. இதனை எண்ணி எண்ணியே துயில்தொலைத்தான் அவன்.

    வறண்ட பாலையில் திடீரென்று பெய்த மழை, பாலையைப் பசுஞ்சோலையாய் ஆக்குவதுபோல், வறண்டிருந்த அவன் வாழ்க்கையை வளமாக்கும் குழந்தைச்செல்வம், வாராதுபோல் வந்த மாமணியாய், அவனுக்கு வாய்த்தது ஒருநாள்! அவனடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை!

    அக்குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் ஆசையோடு கவனித்தான். தன் உள்ளத்து உணர்ச்சிகளை அழகியதோர் பாடலாய் வடித்தெடுத்தான் அவன்.

    படைப்புப்பல  படைத்துப்  பலரோடு  உண்ணும்
    உடைப்பெருஞ்  செல்வர்  ஆயினும்  இடைப்படக்
    குறுகுறு  நடந்து  சிறுகை  நீட்டி
    இட்டும் தொட்டும்  கவ்வியும் துழந்தும்
    நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
    மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
    பயக்குறை  இல்லைத்  தாம்வாழும்  நாளே. (புறம் : 188 – பாண்டியன் அறிவுடைநம்பி)

    பல்வேறு வகையான செல்வங்களைப் பெற்று, பலருக்கும் உணவுபடைத்துத் தானும் உண்ணக்கூடிய வசதிபடைத்த செல்வரே ஆயினும், குறுகுறுவென நடந்து, சிறிய கைகளை நீட்டித் தனக்கெனப் பிசைந்து வைக்கப்பட்டிருக்கும் நெய்சோற்றைத் துழாவி, மெய்யெங்கும் பூசிக்கொண்டு காண்போர் மனம் மயக்கும் மக்கட்செல்வம் வீட்டில் இல்லையென்றால் அந்த இல்லறத்தின் பயன் குறைவுபட்டே போகும் என்று எழுதிநின்றது அவன் எழுதுகோல்.

    இன்பத்தைக் குவியல் குவியலாய்ப் பெற்றோர்க்கு அள்ளித்தருவதால்தான் ’bundle of joy’ என்று குழந்தையை ஆசையோடு அழைக்கிறார்களோ?

    மழலையர் இல்லறவாழ்விற்கு அணிகலனாய்த் திகழ்வதோடு மட்டுமல்லாமல், இல்லறத்தில் கணவன் மனைவியரிடையே ஏற்படும் பிணக்கையும் ஊடலையும் தீர்த்துவைக்கும் சமாதானத் தூதுவர்களாகவும் சிலநேரங்களில் செயலாற்றுகின்றனர். அதனை விளக்கும் அரிய பாடலொன்று அகநானூற்றில் இடம்பெற்றிருக்கின்றது.

    இல்லறவாழ்வில் இணைந்தனர் ஒரு தலைவனும் தலைவியும். அவர்களுக்கு அழகான  புதல்வன் ஒருவன் பிறந்தான். மகிழ்ச்சிக்குக் குறைவின்றிச் சிலகாலம்வரை அவர்களின் இல்லறம் நல்லறமாகத்தான் சென்றுகொண்டிருந்தது. யார் கண்பட்டதோ தெரியவில்லை…அந்தத் தலைவனின் ஒழுக்கத்தில் குறைபாடு ஏற்பட்டது. தலைவியையும் குழந்தையையும் துறந்து பரத்தையரோடு தொடர்புகொண்டான் அவன். இதற்கிடையில், இன்னொரு பெண்ணை மணக்கவும் முடிவுசெய்திருந்தான் அந்த உத்தமத் தலைவன்(!!).

    மணநாளும் வந்தது. புதுமாப்பிள்ளைக் கோலம்பூண்டு, பூமாலைகள் அணிந்துகொண்டு தலைவி வசிக்கும் தெருவழியே வந்தான் தேரேறி. வீதியில் தேர்நுழைந்ததும் தேரின் மணிகள் காற்றில் ஒலித்தன. அந்தச் சத்தம் வீட்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்த தலைவனின் புதல்வன் காதில் விழுந்தது. அது என்ன சத்தம் என்று அறியவிரும்பிய பாலகன், வீட்டுவாயிலைக் கடந்து தெருவுக்கு ஓடிவந்தான். ஓடிவந்த குழந்தையைத் தலைவனும் கண்டான். உடனே தேரை நிறுத்தச்சொல்லிக் கீழே இறங்கியவன், மலரன்ன கண்களும், பவளச் செவ்வாயும் கொண்ட தன் புதல்வனை வாரியணைத்துக்கொண்டான். பின்னர், ”பெரும! நீ உள்ளே செல்!” என்று கூறி மீண்டும் தேரில் ஏற முற்பட்டான். புதல்வனோ தந்தையைவிட்டுச் செல்லமறுத்து அழவே, அவனை விடுத்துச்செல்ல இயலாது தவித்தது தலைவனின் ’தந்தை’யுள்ளம்!

    எனவே குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். உள்ளிருந்த தலைவி, குழந்தையால்தான் தலைவனின் அவசரப் பயணம்(!) தடைப்பட்டுவிட்டது போலும் என்றெண்ணிக் குழந்தையைச் சிறுகோலால் அடிக்க வந்தாள். அதனை அனுமதிக்கவில்லை தலைவன். அப்போது, ’வா வா’ என்று தலைவனை அழைப்பதுபோல் அவனுக்குப் புதுமணம் நிகழவிருந்த வீட்டிலிருந்து மணமுழவு (கல்யாண மேளம்) ஒலித்தது.

    என்ன ஆச்சரியம்! தலைவன் மணம் செய்துகொள்ளப் புறப்படவில்லை அப்போது. தலைவியோடு தான்பழகிய அந்த இனிய நாட்களெல்லாம் அவன் நினைவில் நிழலாடின; ஆகவே மணம் தவிர்ந்தான்!

    தலைவன் குறித்த மேற்கண்ட நிகழ்வுகளையெல்லாம் தன் தோழியிடம் விவரித்த தலைவி, மேலும் தொடர்ந்தாள்…

    ”பகைவரும் விரும்பக்கூடிய அழகும் அறிவும் வாய்ந்த புதல்வரைப் பெற்றோர், புவி வாழ்விலும் புகழோடு விளங்குவர்; மறுமை உலகையும் மறுவின்றி எய்துவர் என்று பெரியோர் உரைத்த பழமொழிகளெல்லாம் வெற்றுமொழிகளல்ல…அவை உண்மைமொழிகளே! என்பதை என் சொந்த வாழ்விலேயே கண்டுவிட்டேன். ஆம், வாடியிருந்த என் வாழ்க்கையில் மீண்டும் வசந்தத்தைக் கொணர்ந்தது என் புதல்வனே” என்று புளகாங்கிதத்தோடு புகன்றாள். தோழியும் அதனை ஆமோதித்தாள்!

    இம்மை  உலகத்து  இசையொடும்  விளங்கி
    மறுமை  
    உலகமும்  மறுவின்று  எய்துப
    செறுநரும்  விழையும்  செயிர்தீர்  காட்சிச்
    சிறுவர்ப்  பயந்த  செம்மலோர்  எனப்
    பல்லோர்  கூறிய  பழமொழி  எல்லாம்
    வாயே  ஆகுதல்  வாய்த்தனம்  தோழி
    நிரைதார்  மார்பன்  நெருநல்  ஒருத்தியொடு
    வதுவை  அயர்தல்  வேண்டிப்  புதுவதின்
    இயன்ற  அணியன்  இத்தெரு  இறப்போன்
    மாண்தொழில்  மாமணி  கறங்கக்  கடை கழிந்து
    காண்டல்  விருப்பொடு  தளர்புதளர்பு  ஓடும்
    பூங்கட்  புதல்வனை  நோக்கி நெடுந்தேர்
    தாங்குமதி  வலவ என்று  இழிந்தனன்  தாங்காது
    மணிபுரை  செவ்வாய்  மார்பகம்  சிவணப்
    புல்லிப்  பெரும  செல்இனி  அகத்து எனக்
    கொடுப்போற்கு  ஒல்லான்  கலுழ்தலின்  தடுத்த
    மாநிதிக்  கிழவனும்  போன்ம்  என மகனொடு
    தானே  புகுதந்  தோனே யான்  அது
    படுத்தனென்  ஆகுதல்  நாணி  இடித்து இவற்
    கலக்கினன்  போலும்  இக்கொடியோன்  எனச்சென்று
    அலைக்கும்  கோலொடு  குறுகத்  தலைக்கொண்டு
    இமிழ்கண்  முழவின்  இன்சீர்  அவர்மனைப்
    பயிர்வன  போலவந்து  இசைப்பவும்  தவிரான்
    கழங்குஆடு  ஆயத்து  அன்றுநம்  அருளிய
    பழங்கண்  ணோட்டமும்  நலிய
    அழுங்கினன்  அல்லனோ  அயர்ந்த தன்  மணனே!  (அகம்: 66 – செல்லூர் கோசிகன் கண்ணனார்)

    இப்பாடலிலிருந்து அன்றைய சமூகம் குறித்த பலசெய்திகள் நமக்குத் தெரியவருகின்றன. ஆண்மக்கள் தம் மனம்விரும்பியபடி எத்தனை மணம் வேண்டுமானாலும் செய்துகொள்ள அன்றைய சமூகம் அவர்களை அனுமதித்திருக்கிறது. மாறாகப் பெண்களோ, கல்லானாலும் கணவன், புல் (ஃபுல்?) ஆனாலும் புருஷன் என்று அவன் அன்பையும் அருளையுமே எதிர்பார்த்து வாழ்ந்திருக்கின்றனர். பொருளாதாரச் சுதந்திரமோ, ஒழுக்கம் பிறழ்ந்த கணவனைப் பிரிந்துவாழும் சுதந்திரமோ அவர்களுக்கு அளிக்கப்படவில்லை. அதனால்தான் தலைவன் பரத்தையரைத் தேடிச்சென்று அவர்களோடு வாழ்ந்துவிட்டுத் திரும்பிவந்தாலும் அவனைச் சிறு ஊடலோடு ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் அன்றைய தலைவியர். பெண்களை ஆடவரின் அடிமைகளாகவும், நுகர்பொருளாகவும், இரண்டாந்தரக் குடிமக்களாகவும் சமூகம் நடத்திவந்ததன் வெளிப்பாடே இவை எனில் மிகையில்லை.

    இத்துணை அவலங்களுக்கு இடையிலும், தலைவன் ஒருவனின் தவறான நடத்தையை அவனுடைய சின்னஞ்சிறு மழலை திருத்திவிட்டதை இப்பாடல்வழி அறியும்போது நாம் மனம் மகிழவே செய்கிறோம். சிற்றுளி ஒன்று பெரிய மலையையே பிளந்துவிடுவதுபோல், குடும்பப் பாசமற்று மலைபோல் இறுகியிருந்த தலைவனின் உள்ளத்தைத் தன் அன்பெனும் சிற்றுளியால் பிளந்து அதில் அருளைச் சுரக்கச் செய்துவிட்டானே இந்தப் ’பொடியன்’ என்று நம் உள்ளம் இக்குழந்தையைக் கொண்டாடவே செய்கிறது.

    Share
  • படக்கவிதைப் போட்டி – (109)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    18136919_1302695336451329_1279855610_n

    9446955@N02_rசத்யா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (29.04.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 108-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்திருக்கும் பச்சைப்பசேல் காட்சியை இவ்வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்கான கருவாய்த் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி.

    greefield

    ‘பச்சை நிறமே பச்சை நிறமே
    இச்சை ஊட்டும் பச்சை நிறமே’ என்று இந்தப் படத்தைப் பார்த்ததும் நமக்கும் பாடத்தோன்றுகிறது!

    வளமையின் வண்ணம் பச்சை!
    குளுமையின் வண்ணம் பச்சை!
    எழிலான இந்தப் படத்துக்கு ஏற்றமிகு கவியெழுதக் காத்திருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு வழிவிட்டு நான் விலகுகிறேன்.

    ******

    ”குவளையில் நீரெடுத்துக் குளித்தது போதும்! கேணியிலும் அருவியிலும் கழனியிலும் குளியல் செய்வோம் ஆனந்தமாய்! நகரங்களில் நரகவாழ்க்கை வாழும் பிள்ளைகளே…! நீங்கள் உண்ணும் அரிசிச்சோற்றைத் தரும் நெல் மரத்தில் காய்க்கவில்லை; வயலில்தான் விளைகிறதென்று அறிந்துகொள்ளுங்கள்; உண்மை வாழ்வை இனியேனும் புரிந்துகொள்ளுங்கள்!” என்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    நாம் நிலைக்க நீர்: உயிரின் ஆதாரம் உணவாகும்
    உணவின் ஆதாரம் பயிராகும் !
    பயிரின் ஆதாரம் நீராகும் !
    நீரின் ஆதாரம் மழையாகும்!
    மழையின் ஆதாரம் மரமாகும்!
    மரம் நிழல் தரும்!
    பசிக்கு கனி தரும்!
    நச்சுக் காற்றைத் தான் ஏற்று!
    நல்ல காற்றை நமக்குத் தரும்!
    தாயும், மரமும் ஒன்றாகும்!
    கொடுப்பதில் கடவுளுக்கு நிகராகும் !
    நீர் நிலைக்க மரம் வளர்ப்போம் !
    நாம் நிலைக்க நீர் காப்போம் !
    கேணியில் நீர் இறைத்துக் குளித்ததுண்டா!
    அருவியில் தலை வைத்துக் குளித்ததுண்டா !
    பயிருக்கு நீர் இறைக்கும் இறைப்பானில்
    குளித்துக் களித்ததுண்டா !
    குவளையில் நீர் எடுத்துக்
    குளித்தது முடியட்டும் !
    அலை பேசியில் அனுதினமும் தான் பேசி
    வாழ்க்கையை தொலைத்தது இன்றோடு போகட்டும் !
    இன்பம் தரும் இல்லத்தில் தனித் தீவுகளாய்
    இருந்ததெல்லாம் இன்றோடு தீரட்டும் !
    கிராமத்து வாழ்க்கையை நகரப் பிள்ளைகள்
    உணரட்டும் !
    நெல்லில் இருந்து தான் அரிசி வரும் என்று
    கட்டாயம் தெரியட்டும் !
    நெல் விளைவது மரத்தில் அல்ல என்ற
    உண்மை விளங்கட்டும் !
    உணவு தரும் உழவர்களின் உழைப்பு
    புரியட்டும்!
    இயந்திர வாழ்க்கையை இன்றோடு
    மறக்கட்டும் !
    விளை நிலங்கள், மனை நிலமாய்
    மாறாமல் இருக்கட்டும்!

    *****

    ”அருவியில் குளிப்பதிலும் அலைகடலில் குளிப்பதிலும் இன்னபிற நீர்நிலைகளில் குளிப்பதிலும் சாலச் சிறந்தது வயலில் பாயும் நீரில் குளித்துக் களிப்பதே” என்பது திரு. செண்பக ஜெகதீசனின் தீர்மானமான கருத்து.

    உயிர் நீர்…

    அருவியில் உருகிடும் நீரினிலே
    ஆடிப் பாடிக் குளிப்பதிலும்,
    உருவினில் பெரிய அலைகடலின்
    உப்பு நீரில் குளிப்பதிலும்,
    அருகினில் ஆறு குளங்களெனும்
    ஆயிரம் தீர்த்தம் அமிழ்வதிலும்,
    பெருமை மிக்கது நம்வயலில்
    பாயும் நீரில் குளிப்பதுவே…!

    *****

    காலமாற்றம் இயற்கைக்குக் காலனாய் வாய்த்திருக்கிறது. நீரோடை எல்லாம் வறண்ட பாலையாய்க் காட்சிதருகின்றது. பார் செழிக்க நீர்வேண்டும்; நீர் கிடைக்க மழைவேண்டும். அப்போதுதான் கழனிகள் செழிக்கும்; கனவாய்ப் போன பசுமைப் புரட்சி நனவாகும். மக்கள் வாழ்வும் வளமாகும் என்கிறது பெருவை திரு. பார்த்தசாரதியின் கவிதை.

    பசுமைப் புரட்சி ஓர் கனவு?

    பச்சை வயல் பசுமைக் கதிர்..!
    பாய்ந்தோடும் குழாய்த் தண்ணீர்..!

    பயிர்கள் குவிந்த யிடம்…பசுமைக்கு..
    பச்சைத்தண்ணீர் ஒருகொடை..!

    பசிபோக்கும் நிறமும் இதுவே…நிலைக்கும்..
    பாரினிலோர் தொழிலிதுவே ..!

    மின்னும் நிறத்தில் பச்சை வண்ணம்..!
    கிள்ளைமொழி பேசும்கிளியின்நிறம்..!

    பச்சை சூழ்வயல் பார்க்கையில் நெஞ்சில்..
    பரவசம் தோன்றிடும்..!

    கொஞ்சும் செழுமை பசுமை எழுச்சியாய்..
    நெஞ்சம் நிறைந்திடுமின்பம்..!

    கால மாற்றத்தால் இயற்கை அழகையினி..
    காண்ப தரிது..!

    கனிந்த நீர் ஓடையெலாம் இப்போது..
    கழிவுநீர் ஓடையானது..!

    வானுயர்ந்த கட்டிட மதன்கீழ் மரம்போலே..
    வரிசையாய் வாகனங்கள்..!

    அளவற்ற அறிவியலின் மதி வளத்தால்
    பிளாஸ்டிக் கழிவுகள்..!

    சேறுகளில் நீரீரம் வற்றி விளைநிலத்துக்கு..
    ஊறுவிளை விக்குமவலம்..!

    கயல் கழனி கட்டிட மயமாக..
    வயலெங்கே போனது..!?

    ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து..
    ஒழுகுகிற அமிலமழை..!

    தடுப்பணை கட்டி நேசத்தையும் பாசத்தையும்..
    தடுக்கின்றனர் அண்டைமாநிலத்தார்..!

    பெருங்கடன் சுமையெனும் தாகத்தைப் போக்க..
    சிறுநீர்குடிக்கும் போராட்டம்..!

    செயற்கை இரசாயன தீங்கின்றி மக்கள்வாழ
    இயற்கையை நேசிநீ..!

    வானத்தின் கனிந்த கண்ணீர் ஒன்றேநம்..
    ஆனந்தமெனக் கொள்வோம்..!

    வான் பொய்க்கா நிலை வேண்டும்..நலம்
    வாழும் வரம்வேண்டும்

    பசுமைப் புரட்சி தழைத் தோங்க..
    பாரினில் மழைபொழியவேண்டும்..!

    எங்கும் பசுமை எதிலும் பசுமையென..
    பொங்கும் புரட்சியாய்..

    தொலைந்து போன எண்ணங்கள் மறுபடி..
    உலர்ந்திடாது மலர்ந்திடுமா?..

    *****

    சேற்றுவயலில் காற்றாடக் குளித்துக் களிப்பதிலுள்ள இன்பத்தை, நீரின்றிப் போனால் ஊர்கள் சீரின்றிப்போகும் அவலத்தைத் தம் கவிதைகளில் அழகாய்ப் பதிவுசெய்திருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

    நீரின்றி அமையாது உலகு

    தலையசைக்கும் நாற்று
    தாலாட்டும் காற்று
    வயல்வெளியின் குளுமை
    வாலிபனின் கும்மாளம்
    சுட்டெரிக்கும் அனலில்
    பசுமைக் குடைபிடித்துக் குதூகலக் குளியல்
    காட்சிப் படிமங்கள் காலச் சுழற்சியில்
    கனவுகளாய்…
    விவசாயி செய்யும் வேளாண்மையை
    விவரமறியாய் தலைமுறைக்குக் கற்பிப்பது யாரோ?
    கைவிடப்பட்ட இயற்கை
    தரிசு நிலமாக,
    தாரை வார்க்கப்பட்ட விலைநிலங்களாக,
    கிணறு தோண்டிச் சேகரித்த நீரெங்கே?
    நதிகள் ஓடிய பாதைகளெல்லாம் களவாடிய
    நரியின் தடங்கள்
    மணல் கூட மிச்சமில்லை
    ஊற்றுநீர் ஊற்றெடுக்க மரமில்லை
    மரம் வளா்க்கவோ மனமில்லை
    பாராள நினைக்கும் மனிதனே!
    பணம் பாதாளம் வரை பாயும்
    பள்ளம் பாய நீருண்டா?
    பாதாளம் தோண்டினாலும் நீரில்லை 
    பகுத்தறிய வேண்டுமையா நீயும்
    நாகரிக மனிதா!
    மாளும் இயற்கையை மீட்டெடுத்தால்
    பூமியின் மார்பகங்களில் நீரமிர்தம் நீளும்
    பூபாளம் பாடலாம் நாளும்!

    நீரின்றி அமையா யாக்கை இது. வானமழை யில்லையென்றால் வாழ்வுண்டோ? என்றான் மகாகவி.

    ஆனால் இந்தத் தலைமுறைக்கு நீரின் அருமை தெரியவில்லை; ஆற்றை, அதன் நீரோட்டத்தை அழியாது காப்பதன் அவசியம் புரியவில்லை. அதனால் அல்லவோ நதிகள் ஓடிய பாதைகளெல்லாம் மணலைக் களவாடிய நரிகளின் தடங்கள் தென்படுகின்றன. பாருக்கே சோறூட்டிய புலிக்கொடி பறந்த சோணாட்டு விவசாயிகள் இன்று வறட்சி நிவாரணம் கேட்டுத் தலைநகரில் நிர்வாணப் போராட்டம் நடத்தும் அவலத்தை கலியின் கொடுமை என்பதா? இல்லை…விதி செய்த சதி என்பதா?

    மாளும் இயற்கையை மீட்டெடுத்தால் மட்டுமே பூமித்தாயின் மார்பகங்களில் நீரமிர்தம் ஊறும் எனும் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கும் திருமிகு. மா. பத்ம பிரியா இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வாகிறார். அவருக்கு என் பாராட்டு!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – (108)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    17965287_1295239283863601_1167131361_n
    134429018@N04_rராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (22.04.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • விண்ணில் தோன்றிய புண்கள்!

    -மேகலா இராமமூர்த்தி

    மக்களாட்சி, சாமானிய மக்களுக்கு நன்மை செய்யும் நல்லாட்சியாக அமையும்; ஓடப்பரும் உயரப்பரும் ஒழிந்து அனைவரும் ஒப்பப்பராய் வாழ்வர்; ’எல்லார்க்கும் எல்லாமென்றிருப்பதான இடம்நோக்கி இந்த வையம் நகரும்’ என்றெல்லாம் அரசியல் அறிஞர்களும், பொதுவுடைமைவாதிகளும் கண்ட கனவுகளெல்லாம் பகற்கனவுகளாகவே இன்றுவரை இருக்கின்றன.

    அனுதினமும் உடல்சலிக்க உழைக்கும் ஏழைமக்கள் தங்கள் வாழ்வில் அணுவளவும் முன்னேற்றம் இல்லாததுகண்டு வேதனையில் வாடுகின்றனர்.

    எளியோரின் இத் துயரநிலை கண்டு அவர்களின் மீட்சிக்காக உரிமைக்குரல் கொடுத்தவர், அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படவேண்டும் என்று நாளும் முழங்கியவர் பாவேந்தர் பாரதிதாசன்.

    வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரியும் இந்த அவலக் கதை குவலயத்தில் முடிவுறுவ தெக்காலம் என்று முக்காலமும் சிந்தித்திருந்தது அவருள்ளம். அந்தச் சிந்தனையின் நீட்சியாய், மண்ணக மாந்தர்படும் துயர்கண்டு விண்ணகமும் கோபத்தில் கொப்பளிப்பதாய் ஒரு காட்சி அவர் மனத்திரையில் ஓடியது. 

    மண்மீதில் உழைப்பாரெல்லாம்
    வறியராம்! உரிமை கேட்டால்
    புண்மீதில் அம்பு பாய்ச்சும்
    புலையர்செல் வராம்இ தைத் தன்
    கண்மீதில் பகலி லெல்லாம் 
    கண்டுகண்டு அந்திக் குப்பின்
    விண்மீனாய்க் கொப்பளித்த
    விரிவானம் பாராய் தம்பி! என்று தன் உள்ளத்து உணர்வுகளுக்கு உருக்கொடுத்தார் கவிஞர்.

    மண்மீதில் மாடாய் உழைப்பவரெல்லாம்  வறியராய், அவர்களை ஏய்த்துப் பிழைப்பவரெல்லாம் வளமை படைத்தவராய்த் திகழும் முறையற்ற நிலைகண்டு பகலெல்லாம் சினத் தீயில் குமுறிக்கொண்டிருந்தது வானம். அந்தக் குமுறல் அந்திக்குப்பின் அதன் உடலெங்கும் கொப்புளங்களாய் வெடித்தன. அவைதாம் வானில் தெரியும் விண்மீன்கள்! அல்ல…அல்ல…மாந்தரின் இழிநிலை கண்டு, வானம் கழிசினம் கொண்டு கொதித்ததால் தோன்றிய புண்மீன்கள் என்கிறார் புதுவையின் புதுமைக் கவிஞர். 

    நலிந்தோரின் நல்வாழ்வில் அக்கறையும், இயற்கை நிகழ்ச்சிகளைக்கூடக் கவிக்கண்ணோடு நோக்கும் நுண்மாண்நுழைபுலமும் வாய்க்கப்பெற்றால் மட்டுமே இத்தகைய உயிர்ப்புள்ள கவிதைகளைப் படைக்கவியலும். அத்தகு குணநலன்கள் குறைவின்றி  வாய்க்கப்பெற்றவர் புரட்சிக் கவிஞர் என்பதற்கு இந்தப்பாடல் சான்று பகர்கின்றது.

     

     

     

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 107-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வானவீதியில் கானம்பாடித் திரியும் அழகுப் புறாவைத் தன் ஒளிப்படப்பெட்டியில்  களிப்போடு அடைத்துவந்திருக்கிறார் திரு. சரவணன் ரவி. அப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    pegion

    பறவைகளில் புறாக்கள் தனித்தன்மையானவை. அவற்றின் இயல்பை விளக்கவந்த பாவேந்தர் பாரதிதாசன்,

    ஒருபெட்டைத் தன் ஆண் அன்றி
    வேறொன்றுக்கு உடன் படாதாம்;
    ஒருபெட்டை மத்தாப்பைப்போல் 
    ஒளிபுரிந்திட நின்றாலும்
    திரும்பியும் பார்ப்பதில்லை
    வேறொரு சேவல்! தம்மில்
    ஒருபுறா இறந்திட்டால் தான்
    ஒன்றுமற்றொன்றை நாடும்!  என்று அவற்றின் தன்னேரிலா ஒழுக்கத்தை, ஓர் ஆணுக்கு ஒரு பெட்டை என்று வாழும் அவற்றின் உயர்குணத்தைப் போற்றுகின்றார்.

    இனி, புறாவுக்குப் போட்டியாகத் தம் கற்பனைச் சிறகைக் காற்றில் விரிக்க வருகின்றார்கள் கவிஞர்கள்!

    ***

    ”கடவுள் படைப்பில் கண்ணைக் கவர்பவை பறவைகள்! வானில் பறக்கும் ஆசையை மனிதனிடம்  விதைத்தவை பறவைகள். வீடுகட்டி வாழ்வதெப்படி என்பதைக் கூடுகட்டி விளக்கியவை பறவைகள். அம்மட்டோ? இல்லறத்தை நல்லறமாய் நடாத்தவும் மாந்தர்க்குப் பயிற்சிதந்தவை பறவைகள்” எனப் பறவைகளின் இறவாப் புகழை மறவாது பாடுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

     

    பறவையைக் கண்டேன்

    கடவுள் படைப்பிலே நமது
    கண்ணைக் கவர்வது,
    நெஞ்சில் நிலைப்பது
    பறவையினம்.
    நீர்க்கோள் தோன்றி
    பலயுகம் கடந்து
    நாலறிவு பெற்ற புள்ளினம்
    நீல வானில் பறந்தன !
    பறவைகள்
    பலவிதம், பல்லினம், பலநிறம் !
    ஆறறிவு மானிடர்க்கு
    வெறும் நாரில்
    வீடு கட்டச் சொல்லிக் கொடுக்கும்
    கூடு கட்டும்
    தூக்கணாம் குருவி !
    பறந்து செல்லும் பருந்து
    வானூர்தி ஆக்க விதி வகுக்கும் !
    பஞ்சவர்ணக் கிளி
    சொன்னதைச் சொல்லும் !
    ஆண், பெண் புள்ளினம்
    ஒன்றாய்
    இல்லறம் நடத்திக் காட்டும் !
    மானிடர் போல்
    ஆணும், ஆணும் கூடா !
    பூத்தேன் சேர்க்கும்
    தேனீக்களும் பறவை இனமே !
    உயரப் பறக்கும் கழுகு
    உள்ளவ தெல்லாம் உயர்வாய்
    எண்ணிடச் சொல்லும் !
    வண்ண வண்ணப் பறவைகள்
    வானில் பறப்பதே
    காணக் கிடைக்கா காட்சி !

    ***

    ”விண்ணில் பறக்கும் வண்ணப் புறாவே! காதலுக்குத் தூதுசெல்வதும் நீ; மோதலைத் தடுக்க அமைதிப் பாதை அமைப்பதும் நீ; கவிவேந்தர் பாரதியிடம் செல்வாய்த் தூது! புவிமாதர் வாழவும், தாய்மொழி பழிப்போர் வீழவும் கருத்தாய்க் கவி வாங்கிவா!” என்று புறாவிடு தூது நடத்துகின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    பறவை விடு தூது

    விண்ணில் பறக்கும் வண்ணப் புறாவே !
    சிறகடித்துப் பறக்க உள்ளம் ஏங்குதம்மா!
    சிகரம் தொட சிந்தை விரும்புதம்மா !
    நிலவில் உறங்க ஆசை வந்ததம்மா !
    நீ சிறகடிக்கும் ஓசை, லயம் சேர்ந்த இசையம்மா!
    உயரப் பறப்பதினால் உன் எண்ணமும் உயர்ந்ததம்மா !
    புத்தருக்கு ஞானம் வந்தது போதி மரத்தடியில்!
    எங்களுக்கு ஞானம் வரும், நீ காட்டும் வழியில்!
    நீ செல்லாத தூரம் இல்லை!
    சொல்லாத சேதி இல்லை!
    அமைதித் தூது செல்ல உனக்கு நிகர் யாருமில்லை!
    நீ சென்ற தூது ஒரு போதும் தோற்றதில்லை !
    அமைதிக்கு பரிசு, வெற்றியன்றி வேறில்லை!
    காதல் தேவதை, உண்மையில் நீ தான்!
    நீ சென்ற காதல் தூது எத்தனை எத்தனை!
    உன்னால் இனைந்த காதலர் தான்
    எத்தனை எத்தனை!
    நீ எனக்காக தூது சென்றிருந்தால்!
    எனக்கொரு காதலி கிடைத்திருப்பாள்!
    இருந்தாலும் என்ன ! அழகுப் புறாவே!
    எனக்கு இப்போது தூது செல்வாயா?
    மனைவியின் மனதறிந்து வேண்டியதைச்
    சொல்வாயா!
    பாரதியிடம் தூது சென்று கவிதை ஒன்று
    கேட்பாயா ?
    தமிழை இழிவு செய்யும் மனிதரெல்லாம்
    ஊமையாய் போவதற்கு கவிதை கேட்பாயா!
    பெண்ணை இழிவு செய்யும் கயவரெல்லாம்
    செத்தொழிந்து போவதற்கு கவிதை ஒன்று
    கேட்பாயா?
    கண்ணால் துகில் உரியும் , துச்சாதன ஆண்களெல்லாம் !
    குருடாய் போவதற்கு வழி கேட்டுச் சொல்வாயா?
    பிள்ளைகள் மனதினிலே பாசத்தை விதைப்பாயா!
    ஈன்றவரைப் பேணாத பிள்ளையெல்லாம்
    முதியவராய் உடன் மாற வரம் பெற்று வருவாயா?
    மாமியார், மருமகள் இணக்கமாய் இருப்பதற்கு
    வழி ஒன்று சொல்வாயா!
    உழவுத் தொழில் தான் உலகில் உயர்ந்ததென்று
    ஊரெங்கும் சொல்வாயா?
    ஆறறிவு பெற்றதினால் அகந்தை மிகக்
    கொண்டு அழிந்து வரும் மனித இனம்
    மீண்டு வருவதற்கு நல்ல வழி சொல்வாயா!
    நான் விரும்பும் கோகிலமே !

    ***

    ”கொண்டவனுக்கு உண்மையாய் வாழும்; உண்ட இரையுமிழ்ந்து குஞ்சுகட்கு ஊட்டும்; தேடியதைப் பதுக்காது கூடியுண்ணும்; பல்வண்ணம் காட்டி நம்எண்ணம் கவரும்; அன்புக்குத் தூது செல்லும்; அமைதிக்கும் பாதை சொல்லும்” என்று புறாவின் உயர்பண்புகளைப் பட்டியலிட்டுள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.   

    மனிதனும் புறாவும்

    ஒருவனுக்கு ஒருத்தியென்ற உறுதி கொண்ட
    உயிரினமாம் அரியபுறா..!

    கோவிலுயர் கோபுரமதில் வாழும் புள்ளின..மது
    கூடிவாழும் கூட்டினம்..!

    பறவையில் தனிப் பிறவியது தண்ணீரை
    உறிஞ்சிக்குடிப்பதோர் அற்புதம்..!

    கூட்டமாய் கூரை தரையிலும் உலவும்
    வட்டமாய்ப்பறந்து வானிலேகோலமிடும்..!

    படபடக்கும் ஓசையுடன் ஜோடியாக ஜன்னலோரம்
    கடகடவெனக் காதல்மொழிபேசும்..!

    உண்டதை உமிழ்ந்துதன் உயிர்க் குஞ்சின்
    குடல்நிரப்பும் தாய்ப்புறா..!

    பெட்டை யிட்ட முட்டையை அன்புடனே
    அடைகாக்கும் தந்தைப்புறா..!

    பகுத்துண்ணும் எண்ணத்துடன் பலதும் கூடி
    தொகுத்துண்ணும் பரந்தகுணம்..!

    ஆடல் கலையில் வல்லவன் நானே..யென
    பாடல்போன்ற முனகலோடு..

    ஒருகாலைத் தூக்கி நடராசன் போலே
    மறுகாலைமறைக்கும் தன்சிறகாலே..!

    பறக்க ரெண்டு இறக்கை உண்டுனக்கு
    பலமைல்பறக்க சக்தியுண்டு..!

    வழித்தடமில்லா வானத்திலே போகும்வழி..வந்த
    வழியறியும் நுண்ணறிவுமுண்டு..!

    உண்ணாமல் பறந்து ஓராயிரம் மைல்கடக்கும்
    உன்னததிறன்பெற்ற அற்புதபறவை..!

    அறுகாதஆதி தகவல் தொடர்புநான் தானென
    அரசனுக்கு ரகசியதூதுசெல்லும்..!

    விரோதத்தின் விளைவான வன்முறைக்குச் சமாதானமென
    வீரமாகப்பறக்கும் வெள்ளைப்புறா..!

    தன்மானம் காத்திடும் பண்பிற்கு..தலைதாழ்த்தி
    தன்னையே வளையவரும்..!

    வெண்சாம்பல் வெள்ளை கரு நிறமென
    பன்னிறவண்ண முன்பகட்டு..!

    வேற்றுமைக்கு பலநிற முன்னில் இருக்கு..மது
    ஒற்றுமையை எடுத்துக்காட்டும்..!

    பகுத்தறிவு முனக்குண்டு..மனிதரோடு நெருங்கிப்
    பழகிடுமடிமைப் பண்பு..!

    ***
    ”கலக்கமின்றித் தடை தகர்த்து இலக்கைத் தொடக் கற்றுக்கொள் சிறகடிக்கும் இந்தச் சின்னப் பறவையிடம்” என்கிறார் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணன்.

    கற்றுக்கொள்!

    சிறகடித்து சிகரம் தொடும்
    சிறு பறவை., இளைப்பாராமல்..
    கற்றுக்கொள் அதே போல உழைத்துச் சிகரம் தொட..

    வெட்ட வெளியில் சலிப்பின்றி
    வெயில் பாராமல் சுற்றித் திரியும்..
    கற்றுக்கொள் அதே போல உழைத்து முன்னேற..

    தடைகளைத் தட்டி எறிந்து
    இலக்கை எட்ட அயராது உழைத்தால்
    தொடலாம் வானை.. வண்ணப் பறவையைப் போலே..

    ***

    வானில் வட்டமிடும் வண்ணப் பறவை விண்ணைத்தொடும் எண்ணச் சிறகை நம் கவிஞர்களுக்கு வழங்கியிருப்பதை அவர்தம் கவிதைகள்வழி அறியமுடிகின்றது. பாராட்டுக்கள் கவிஞர்களே!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து வருகின்றது…

    தெரிந்துகொள்…

    சிறகை விரித்தது பறவை,
    சின்னதாகிப்போனது வானம்..

    உழைப்பு எழுதிய கவிதை,
    உயரம் தாண்டுது வனப்பு..

    துணிச்சல் போட்ட பாதை,
    துச்சமானது தூரம்..

    இயற்கை எழுதிய கவிதை,
    இன்னும் வனப்பானது வையம்..

    தெரிந்துகொள் மனிதா,
    தேவைப்படுகிறது உனக்கு-
    பறவையின் திறமை…!

    ”முயற்சி எனும் சிறகை விரித்தால் அகன்ற வானமும் உள்ளங்கைக்குள் அடங்கும்! துணிச்சல் எனும் பாதை போட்டால் தூரமும் துச்சமாகும்!” எனும் பெரிய உண்மைகளையெல்லாம் சிறிய பறவையொன்று தன் செயலால் விளக்கிடுதே!” என்று பறவையின் திறமையை வியந்திடும் திரு. செண்பக ஜெகதீசன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் தகுதியைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

    Share
  • படக்கவிதைப் போட்டி – (107)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    17857476_1286974304690099_879041747_n

    132443801@N02_rசரவணன் ரவி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (15.04.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 106-இன் முடிவுகள்

     

    -மேகலா இராமமூர்த்தி

     

    a family

    ஓவியம்போல் காட்சியளிக்கும் இப் புகைப்படத்தை எடுத்திருக்கும் திரு. ஷேக் முகமது பாராட்டுக்குரியவர். இவ்வழகிய படத்தைப் படக்கவிதைப்போட்டிக்குப் பாங்காய்த் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனும் நம் போற்றுதலுக்குரியவரே!  

    மங்கலமான மனைமாட்சியின் நன்கலமாம் நன்மக்கட்பேற்றைப் பெற்றிருக்கும் இப்பெற்றோர் பேறுபெற்றோரே.

    கண்ணைக்கவரும் இவ்வண்ணப்புகைப்படம் கவிஞர்களின் கற்பனைத்திறனைப் பொற்புடன் திறந்துகாட்டக் கிடைத்ததோர் நல்வாய்ப்பு!

    இனி, கவிதைகளுக்குச் செல்வோம்!

    *****

    ”ஆற்றின் கரைகளை இணைப்பது கற்பாலம்; ஆண் பெண் இதயங்களை இணைப்பதோ
    காதலெனும் நற்பாலம். இந்தக் காதல் பாலம் தந்த பரிசே இவ்விணையர் கரங்களில் வரமெனத் தவழும் கனிமழலை; பிரிக்கும் மதிலினும் இணைக்கும் பாலமே மேல்” என இல்லறத்தின் இனிமையை நல்ல சொல்லெடுத்துப் போற்றுகின்றது திரு. செண்பக ஜெகதீசனின் கவிதை!

    பாலங்கள்…

    ஆற்றின் கரைகளை
    இணைப்பது பாலம்..

    ஆசையில்
    ஆண்பெண் இதயங்களை
    இணைக்கும் பாலம்-
    காதல்..

    காதல் மணவாழ்வில்
    ஆணும் பெண்ணும்
    அகலாமல்
    இணைக்கும் பாலம்-
    பிள்ளை..

    பிரிக்கும் மதிலைவிட,
    இணைக்கும் பாலம்
    மேலல்லவா…!

    *****

    ’ஆறில்லா ஊரின் அழகு பாழ்’ என்றனர் ஆன்றோர். இன்று ஆறிருக்கின்றது ஆனால் அதில் நீரில்லை. நீரற்ற ஆற்றின்மேல் பாலம் எதற்கு?  வறட்சியால் வையமே பரிதவிக்கின்றது; வருணனின் கருணைப்பார்வை புவியின்மீது படாதோ? என்று நெஞ்சுநொந்து பேசுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    நீரில்லா ஊர்

    தாகமாய் உள்ளது ஒருகாலத்தில்
    வேகமாய் நீரோடிய இந்தக்
    கால்வாய் !
    காவேரி ஆறும் இப்படி ஒருநாள்
    சாவை அடையும் !
    மழை பெய்து நீரோட்ட மின்றேல்
    வேளாண்மை கருகி
    பஞ்சம் பெருகி
    பசுமை எங்கும் மங்கி
    நகரம் ஒருநாள் நரக மாகும் !
    பாலம் கட்டியும் இங்கே
    பயனில்லை !
    நீரில்லாக் கால்வாய் மேல்
    பாலமா ?
    ஞாலத்தில் இன்று மாந்தர்க்கு
    நீர்ப்பஞ்சம் ! நீர்ப்பஞ்சம் !
    நீர்ப்பஞ்சம் !
    வேர் உறிஞ்ச நீரின்றி
    பச்சை இலைகள் பல மஞ்சளாய்
    வெளுத்துப் போயின !
    இளந்தம்பதிகள்
    என்ன செய்வதென் றறியாமல்
    கலங்கி நிற்கிறார் !
    நீரில்லா ஊர் பாழாகும் !
    கருணையுள்ள
    வருண பகவானே ! எமக்கோர்
    வழிகாட்டு !

    *****

    காணிநிலம் வேண்டினார் மகாகவி பாரதி; ஆசையாய்க் கட்டிய வீட்டில் குடிபோகத் தடையாயிருக்கும் குடிநீர்ப் பஞ்சம் நீங்கவேண்டும் என்று வேண்டுகின்றார் கவிஞர் திரு. பார்த்தசாரதி.  அவர் வேண்டுதல் பலித்து, அக்கனவு இல்லத்தில் அவர் குடியேறும் நாள் நனவாக வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்!

    ஆசைக்கோர் இல்லம்

    எந்திரமய வாழ்க்கை மறந்து – நான்
    ****இயல்பாக வாழ எனக்கொரு
    தனி வீடு கட்டவேண்டும் -அதில்
    ****தனிமைச் சுகம் காணவேண்டும்..!

    அழகின் எல்லையாக இருக்கவேணும் – அதன்
    ****அருகே ஆறுகுளம் அமையவேணும்
    கடனில்லா வீடு கட்டவேணும் – அதில்
    ****கலையழகு  கொஞ்சவேண்டும்..!

    சொந்த உழைப்பில் விளையவேணும் – அதில்
    ****பந்தங்களுக்குப்  பங்கில்லா நிலைவேணும்
    இயற்கைச் சூழலோடு ஒன்றி – அதில்
    ****இன்பவுலா வரவேண்டும்..!

    கண்குளிர ரசிப்பதற்கும் வாழ்ந்து – அதைக்
     ****கண்டுகளிப்பதற்கும் வேண்டுமொருவீடென்று
    காலிமனையில் இல்லம் எழுப்ப – நெடுநாள்
    ****கனவோடுநான் காத்திருந்தேன்..!

    காலமொரு நாள்கனிந்து வர – என்
    ****கனவுமதுநன வாகியதொருநாள்
    நிலைக்கும் சொத்தாக இருந்தாலும் – அங்கே
    ****நிலையாகக் குடியேற வசதியில்லை..!

    மண்ணுரிமை பெற்றுவிட்டென் – ஆனால்
    ****மழைக்கடவுள் அருளில்லை
    நீரின்றி அமையாது உலகென – அய்யன்
    ****வள்ளுவன் மொழிந்ததுபோல்..!

    கழனிகாடுகள் வீடுகள் குளிர்ந்திருக்க – ஆங்கே
    ****கனிந்தமழையின் கொடைவேண்டும்!
    ஆசையாய்க் கட்டிய இல்லமதில்
    ****அங்கேயில்லை குடிதண்ணீர்..!

    வெறிச்சோடிக் கிடக்குது எம்வீடு – மனம்
    ****வெதும்பிப் பார்ப்பேனவ்வப்போது
    காலமாற்றத்தால் உருவாகும் கதைபோல் – அது
    ****கனவுவீடாக மாறித்தான்போனது..!

    வருஷமொரு முறைபார்த்து வந்தேன் – இப்ப
    ****வயசு அறுபத்தியாறாச்சு
    கட்டிய வீட்டில் குடியேற – காலமின்னும்
    ****எட்டியதூரத்தில் இல்லையம்மா..!

    இரவானால் பறவைகள்தன் கூட்டிற்கு – அது
    ****இயற்கையாய்ச் செல்வதுபோல்
    இருக்கும் வரையில் எண்ணங்கள் நம்மினிய
    ****இல்லம் நோக்கியே நகரும்..!

    அன்புக்கோர் மனைவி பாசத்துக்கோர் பெண்
    ****பண்புக்கோர் பிள்ளையெனும்
    வரிசையிலே வாழ்க்கையில் இன்னு – மொரு
    ****ஆசைக்கோரில்லம்  எனவொன்று
    இறையருளால் அனைவரும் பெறவேண்டும்..!

    *****

    நல்ல கவிதைகளை நம் உள்ளம் இரசிக்கத் தந்திருக்கும் கவிஞர்களுக்குப்  பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது…

    வீடு பேறு அழகான குடும்பம் இது!
    இல்லறமே நல்லறமாம்!
    அன்பான மங்கை நல்லாள்!
    பண்பு மிகு ஆண் மகனாம்!
    மனதால் இணைந்தார்கள்!
    பெற்றவர்கள் இசைவோடு
    திருமணமும் முடித்தார்கள்!
    அழகான வீட்டினிலே
    அமைதியுடன் வசித்தார்கள்!
    வீடென்ற பெயர் ஏன் வந்தது?
    கவலையை விட்டதினால் வீடானதோ?
    ஆணவத்தை விடும் இடம்
    என்பதால் வீடானதோ?
    கோபத்தை விடும் இடம்
    என்பதால் வீடானதோ?
    நான் என்பதை விட்டு
    நாம் என்று வாழ்ந்தார்கள்!
    ஆண்டவன் அருளாலே !
    நல் மழலை பெற்றார்கள்!
    அன்பை விதைத்தார்கள்!
    ஆனந்தமாய் இருந்தார்கள்!
    இசைபட வாழ்ந்தார்கள்!
    ஈகை புரிந்ததினால்!
    உயர்வை அடைந்தார்கள்!
    ஊக்கத்துடன் உழைத்தார்கள் !
    எண்ணியதை பெற்றார்கள்!
    ஏழேழு பிறவியிலும் தொடரும் சொந்தமிது !
    ஐயமில்லை! ஐயமில்லை!
    ஒன்று பட்ட உள்ளத்தால்!
    ஓங்கியது உங்கள் வாழ்க்கை!
    ஔவை மொழி போல இனிக்கட்டும்!
    அஃதே எங்கள் ஆசை!

    ஆணவத்தைவிட்டு அன்பால் இணைந்த இணையர், இல்லறமாம் நல்லறத்தின் பயனாய்ப் பெறுகின்ற இன்மழலைக்கு ஈடேது இவ்வுலகில்?

    பெருமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
    மக்கட்பே றல்ல பிற என்று மக்கட்பேற்றின் மாண்பைப் போற்றுகின்றார் வாழ்வியல் வலவர் வள்ளுவர்.

    நன்மக்கட்பேற்றோடு முற்றுப் பெறுவதில்லை இல்வாழ்க்கை. ஈகை எனும் இனிய குணத்தால் அது மேலும் சிறக்கிறது எனும் அரிய வாழ்வியல் உண்மையை எளிமையாய்ச் சொல்லியிருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையெனும் பெருமையைப் பெறுகின்றது. கவிஞருக்கு என் பாராட்டுக்கள்!

    Share
  • படக்கவிதைப் போட்டி – (106)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    17690638_1279947372059459_1584759799_n
    130800147@N03_rஷேக் முகமது எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.04.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 105-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    momandchild

    திருமிகு. ஷாமினியின் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். மங்கையர் இருவருக்கும் என் மனங்கனிந்த நன்றி!

    இயற்கையின் படைப்பில் கடலும் மலையும் என்றுமே காணச் சலியாதவை. பாதங்களை வருடிச்செல்லும் கடலலையில் நின்றிருக்கையில் பெரியோரும் காலம்மறந்து குதூகலிக்கும் குழந்தைகளாவர்.

    தாயும் சேயும் கடலோரம் களித்திருக்கும் இக்காட்சியைக் கவிஞர்கள் எப்படியெல்லாம் நோக்கியிருக்கிறார்கள் என்பதை அவர்தம் பாக்கள்வழித் தெரிந்துகொள்வோம்.

    ***

    ”அலையில் ஆடவேண்டும் எனும் சேயின் விருப்பை மறுக்காது நிறைவேற்றும் பாசத்துணை தாயன்றி வேறில்லை” என்று நெகிழ்ந்துரைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பாசத் துணை…

    அழுது பிள்ளை அடம்பிடிக்கும்,
    அலைகள் மோதும் கடலினிலும்
    விழுந்து குளிக்க விருப்புடனே
    வில்லாய் வளைந்து சத்தமிடும்,
    மெழுகாய் உருகித் தாயவளும்
    மெல்ல நனைப்பாள் கால்களையே,
    பழுது யேதும் இல்லாத
    பாசத் துணையது தாய்தானே…!

    ***

    ”பெயர்த்தியை உயர்த்திப் பிடிக்கும் பாட்டியின் பாசத்தோடு யாரும் போட்டியிட முடியாது” என்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    கடலினும் பெரிது இவர்களின் அன்பு;
    மலையினும் பெரிது பாட்டியின் பாசம்;
    உலகில் உயர்ந்தது பேத்தியின் நேசம்;
    அன்பு அணைப்பில் ஆண்டவனைப் பார்க்கிறேன் ;
    ஆனந்தத்தின் எல்லையை இங்கு தான் பார்க்கிறேன்;
    கடல் மகள் அலை வந்து , தாயின் காலை
    தொட்டு வணங்கிப் போவதைப் பார்க்கிறேன்;
    மகனையும், தாயையும், இணைக்கும்
    அன்புப் பாலம் இந்தப் பேத்தி!
    பேத்தி காலில் நீர் பட்டால் கூட வலிக்கும் என
    தூக்கிப் பிடிக்கும் அருமைப் பாட்டி!
    மழலையும் , தாய்மையும், அன்பாய் சேர்ந்து!
    இறைவனின் வடிவாய் கண்டேன் இன்று!
    கடலருகே நிற்பது ஆபத்தன்றோ!
    நிற்பது இரண்டும் குழந்தையன்றோ !
    வயதானால் பெரியவரும் குழந்தையன்றோ!
    இருந்தாலும் அஞ்ச வேண்டாம்!
    கடலும் நமக்கெல்லாம் அன்னையன்றோ !
    அன்னை, பிள்ளைகளை வெறுப்பதுண்டோ !
    அலையாய் வந்து தான் அடிப்பதுண்டோ!

    *** 

    ”பெண்ணென்று பிறந்துவிட்டால் மண்ணில் இல்லையே பாதுகாப்பு! நச்சரவுகள் உனைத் தீண்டி நாசம் செய்யாதிருக்க முத்தே உனைநான் காப்பேன் சிப்பியாய் இருந்து!” என்று பகரும் தாயைக் காண்கிறோம் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனின் கவிதையில்.

    சிப்பிக்குௗ் இருக்கட்டும் முத்து.

    அழகாய் மகௗ் பெற்று
    ஆசை தீர வௗர்க்கிறேன்
    இன்பம் பொங்குதடி உன் முகம் பார்க்கையிலே-இன்று
    ஈர மணலில் தனியே துள்ளி குதித்தாட
    உன் மனம் ஏங்குவதை அறிவேனடி!
    ஊரெல்லாம் நச்சுப் பாம்புகௗடி
    என் செல்வமே, மொட்டென்றும் பாராமல் கொத்திப் பார்க்குதடி
    ஏன் இந்த அவலம் தெரியவில்லை
    ஐயம் மட்டும் நெஞ்சினின்று அகலவில்லை
    ஒப்பவில்லை மனம் உனை தனியே விட
    ஓடி விளையாட ஏற்ற இடமில்லை உனக்குத் தர.. அட
    ஔவை தோற்றத்தின் அர்த்தம் இன்றுதான் புரிகிறதடி!

    சிப்பிக்குௗ் முத்தைப் போல
    சிறு மலரே, கைக்குள்ளேயே இருந்துவிடடி
    பகைவனை அறியும் பக்குவம் வரும் வரை…

    ***

    தாயிவள் குழந்தையைக் கையிலேந்திக் கடலை நோக்கிப் போவது அதனைக் கடலில் வீசவோ என்று ஐயுற்று, “பெற்ற தாயே முந்தித் தவமிருந்து முந்நூறு நாள் சுமந்துபெற்ற அழகுச் செல்வத்தை ஆழியில் வீசலாமா?” என்று வெகுண்டு வினவுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    ஆங்காரி

    பெற்ற தாயின் வாயைப் பார்!
    எட்டியுள்ள கடலைப் பார்!
    சிட்டு போன்ற
    எளிய சிறுமியைப் பார்!
    தாயின் வாய் சினம் காட்டுது!
    கடலின் வாய்
    விழுங்கப் பார்க்குது!
    சேயின் மெய் துடிக்குது!
    கை துடிக்குது!
    உயிரென்ன வெள்ளரிக்காயா?
    பிள்ளை என்ன
    கிள்ளுக் கீரையா?
    தவமிருந்து பெற்ற பிள்ளை
    தவிக்குதடா!
    அழுவாத பிள்ளை,
    அடம் பிடிக்கா பிள்ளை
    எழு பிறப்பிலும் உண்டோ?
    கடலில் போடப் போகும்
    மடந்தை இவள்
    தாயா?
    அல்லது பேயா?

    ***

    சிந்திக்கவைக்கும் கவிதைகளைத் தந்திருக்கும் கவிஞர் குழாத்துக்கு என் பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது…

    தாயின் மகிழ்ச்சி

    பத்தியங்கள் பலயிருந்து பத்துமாதம்
    பக்குவமாய் வயிற்றில்சுமந்த அன்னைநான்!

    ஈன்றேடுத்த தாயெனக்கு இதைவிட
    வேறென்ன மகிழ்ச்சி இருக்குதம்மா!

    காலைப் பொழுதில் வேலைபலயிருந்தும்
    பிள்ளை மகிழ்ச்சியில் கொள்ளைசுகம்காண்பேன்!

    குடும்ப பாரம் சுமந்தாலும் அன்னையெனக்குக்
    குழந்தைப் பாசம்தனில் சுமைபலகுறையும்!

    ஆழ்ந்த வறுமையினால் உனை ஆள்
    ஆக்க நாளெல்லாம் எதிர்நீச்சலிடுவேன்!

    கள்ளச் சிரிப்பை மறைந்துரசிக்கக்
    கரைவராமல் கடலலை கண்டுமகிழும்!

    பெண்ணாகப் பிறந்தயென் பாக்கியமே!
    எண்ணத்தில் நிறைந்திருக்கும் பெட்டகமே!

    ஆண்மை ஆதிக்கத்தில் அகப்படாமல்
    பெண்ணினம் தழைக்கப் பாடுபடு!

    வன்முறைபல தாண்டியுன் வாழ்வினிலே
    வழித்தடம்பதித்து வெற்றிபெற வேண்டுமம்மா!

    புண்ணியமே பலசெய்து பெற்றிடினும்
    பெண்ணியமே பெரிதென்று கொண்டுவிடு!

    பெண்சிசுவதைக் கொல்வதைத் தடுத்திடு!
    பெண்மையே மேன்மையெனப் போற்றிடு!

    நானிலத்தில் பெண்ணைக் கேலிசெய்வோரை
    நாவறுக்கும் வாளாய்நீ யெழுகவே!

    பலநாளும்தாலாட்டிப் பண்புடன் வளர்த்ததாலே
    உலகாளும் பெண்ணாக நீயொருநாள் வரவேணும்!

    நவிலுகின்ற நற்பொருளை நன்கறிந்து
    நவின்றுநாளும் பணிதுவக்கப் பணிகின்றேன்!

    வளர்த்தவுனை வாய்பிளந்து பார்க்கையில்
    களைப்பும் சோர்வும் களையிழக்கும்!

    கடல்நீரில் ஒருசேரநாம் கால்நனைக்க யென்
    கவலையெலாம் கரையுமம்மா உனைநினைக்க!

    வாய்மைக்கு எடுத்துக் காட்டும் நீதான்!
    வாழ்க்கையின் வழிகாட்டியும் நீதான்!

    அன்னையெதை ஊட்டி வளர்த்தாளென
    ஆருமுனைக்கேட்டால் அன்பூட்டினாள்
    எனச்சொல்லு!

    ”மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்றார் மகாகவி. நானிலத்தில் பெண்ணை இழிவு செய்வோரின் நாவை அறுத்தெறியும் வாளாய் எழு!” என்று தன் பெண்மகவுக்கு மகத்தானதோர் அறிவுரை கூறும் மறத் தாயைப் பார்க்கிறோம் இக்கவிதையில்!

    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளோடு, நிமிர்ந்த நன்னடை பழகும் செம்மை மாதரை உருவாக்கவேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் இற்றைப் பெற்றோர்க்கு, குறிப்பாக, அன்னையர்க்கு இருக்கின்றது. அதன் அவசியத்தைப் பேசியிருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதியின் பாடலைப் பாராட்டி, அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிக்கின்றேன்.

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – (105)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    17577885_1272953816092148_15154307_n

    112795645@N05_rஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.04.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 104-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    man lying on seashore

    இவ்வாரப்போட்டிக்கு வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தெரிவு செய்திருக்கும் இந்தப் படம் திருமிகு. காயத்ரி எடுத்தது. இவ்விருவருக்கும் என் நன்றி!

    தணல்போலத் தகிக்கும் மணலிலே துணிக்குடையின் அடியிலே சாய்ந்திருக்கும் இந்த மனிதரைக் காண்கையில், மாடமாளிகையில் நெஞ்சினிக்கும் பஞ்சணையில் துயிலும் பேறு எல்லார்க்கும் வாய்ப்பதில்லை; வெட்டவெளியில் பாயுமின்றிப் படுத்துறங்கும் பேர்களுக்கும் பாரினிலே பஞ்சமில்லை எனும் உண்மை உறைக்கிறது; நெஞ்சம் வேதனையில் உறைகிறது!

    இந்தப்படம், நம் கவிஞர்களின் நெஞ்சில் எண்ணற்ற எண்ண அலைகளைத் தோற்றுவித்திருக்கும் என்றே எண்ணுகிறேன். அவ் அலைகளில் நாமும் நீந்தி வருவோம்! கவிச்சுவை மாந்திவருவோம்!

    ***

    ”சிந்தையில் நிறைவிருந்தால் பஞ்சணை தேவையில்லை; மண்தரையும் மனங்கவரும் மஞ்சமே” என்று எளிமையின் இனிமை பேசியிருக்கிறார் திரு. பிரசாத் வேணுகோபால். 

    நிம்மதி

    உள்ளநிறை இல்லாமல் இல்லையில்லை என்றெண்ணப்
    பஞ்சணையில் சாய்ந்தாலும் தூக்கமது வாராது
    உள்ளதுவே போதுமென்ற எண்ணமது கொண்டுவிட்டால்
    மண்தரையும் நல்மஞ்சம் ஆம்.

    *** 

    கொடத்த அணைச்சுகிட்டுக் கூடாரம் போட்டுக்கிட்டுப் படுத்துக்கிடக்கும் தம்பியிடம், அவருடைய இந்த நிலைக்குக் காரணமென்ன என்று கனிவோடு விசாரிக்கிறார் திரு. கருணானந்தராஜா. 

    1. கொடத்த அணைச்சுக்கிட்டு கூடாரம் போட்டூக்கிட்டு
      படுத்தூக் கெடக்கிறியே தம்பி நீ
      பரதேசி ஆனாயோ வெம்பி!
    2. பாலவனத்தினிலே பரதேசியானவனே
      வேல கெடைக்கலையோ தம்பி – இந்த
      வெயிலும் சுடுகலையோ தம்பி
    3. கூடுகட்டித் தூக்காணாங் குருவியெல்லாம் வாழுகையில்
      கேடுகெட்டுப் போனாயே தம்பி இங்க
      கெடந்து வதங்குறியே தம்பி
    4. பாடு… பட்டுப்பிட்டு பழஞ்சோத்தைக் கொட்டிப்பிட்டு
      வாடிப் போய்த் தூங்கிறியோ தம்பி – உன்
      வரலாறு தோணலையே தம்பி!
    5. ஆத்துக்காரி கட்டித்தந்த சோத்த முழுங்கிப்பிட்டு
      வேர்த்துக்கொட்டத் தூங்கிறியோ தம்பி – நீ
      வேலையத் தொடங்கலையோ தம்பி!
    6. கொடத்துல தண்ணி மொண்டு கொண்டுவந்து வச்சிப்பிட்டு
      படங்கு கட்டித் தூங்கிறியோ! தம்பி – எதிர்
      பார்க்குதுன்ன ஒங்குடும்பம் நம்பி
    7. குப்பையில கண்டெடுத்த கொடம், வாளி, போத்தல்களை
      எப்ப நீ விற்கப் போறே தம்பி – கொஞ்சம்
      எணச் சாய இருக்கிறியோ! தம்பி.
    8. எணச்சாய இருப்பதற்கு ஏழைக்கு நேரமில்ல
      பணங்காசு வேணுமுன்னாத் தம்பி – உன்
      படங்கச் சுருட்டிக்கோடா எம்பி
    9. சேர்த்ததெல்லாம் சீக்கிரமா, சில்லறைக்கு வித்தூப்பிட்டு,
      ஆத்துக்குப் போயிருடா தம்பி – நீ
      அங்க போயி தூங்கிக்கலாம் தம்பி
    10. தன்னான தானே நன்னே தானான தானே நன்னா
      தன்னானத் தானே தன்னே தானே நன்னானே – தன்னே
      தானானத் தானேதன்னே தன்னாந் தன்னானே!
       

     ***

    ”செல்வந்தன் யார்? கோடிப்பணம் இருந்தும் போதாதென்று மேன்மேலும் தேடுபவனா? இல்லை! இருக்கும் பொருளில் நிறைவுகண்டு வருத்தமின்றி வாழும் ஏழையே உண்மைச் செல்வந்தன்!” என்று செல்வத்துக்குச் சிறந்ததோர் விளக்கம் தருகிறார் திரு. செண்பக ஜெகதீசன். ”செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” என்றுதான் குமரகுருபரரும் கூறியிருக்கின்றார்.

    செல்வந்தன்…

    இருப்பதை வைத்து நிறைவுறாமல்
    இன்னும் வேண்டும் எனுமவாவில்
    அருகி லுள்ளதை நுகராதே
    அல்ல லுறுவோர் செல்வரல்லர்,
    இருக்கும் பொருளே போதுமென்ற
    இதய நிறைவுடன் உண்டுறங்கும்
    வருத்தம் மறந்த ஏழையேதான்
    வாழும் உண்மை செல்வந்தனே…!

    ***

    ”இறைவன் தந்த அருட்கொடையாம் உறக்கத்தை, உலகியல் தேவைகளைத்  தேடித்தேடித் தொலைத்துவிட்டான் மனிதன். ஆகவே நிம்மதியாய்த் தூங்கும் உனைக்கண்டால் என்னுள் எழுகிறதே ஏக்கம்!” என்று துணிக்குடைக்கீழ் தூங்கும் மனிதனைக் கண்டு ஏங்கிப் பாடுகிறார் திரு. பழ. செல்வமாணிக்கம். 

    தூக்கம், ஆண்டவன் தந்த அருட் கொடை தோழா!
    துக்கம் மறந்த நிலை, தூக்கம் என் தோழா!
    பாலுக்கு அழுது தூக்கத்தை தொலைத்தது
    சில காலம்!
    படித்துப் படித்து தூக்கத்தை தொலைத்தது
    சில காலம்!
    வேலை தேடி தூக்கத்தை தொலைத்தது
    சில காலம்!
    பருவ வயதில் துணையைத் தேடி
    தூக்கத்தைத் தொலைத்தது சில காலம்
    குடும்பச் சுமையில் தூக்கத்தை தொலைத்தது
    சில காலம்!
    பணத்தைத் தேடி தூக்கத்தை தொலைத்தது
    சில காலம்!
    தொலைத்த தூக்கத்தை தேடிப்
    பிடித்தாயோ என் தோழா!
    அன்னை வயிற்றில் தூங்கிய தூக்கம்!
    இன்று வரையில் மறந்த தூக்கம்!
    உன்னைப் பார்த்ததும் வந்தது ஏக்கம்!

    *** 

    ”என் அழிபசி போக்கியெனை ஆதரிக்க ஆருமில்லை என்றாலும் துணிக்குடையின் கொடையாலே நானயர்ந்து தூங்குகின்றேன்” என்று உறங்கும் மனிதரிவர் தன்னிலையைச் சொல்வதாய்க் கவி வடித்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி. பசிப்பிணி போக்கும் மருத்துவர்களுக்குப் பாரில் எப்போதும் பஞ்சமே…என்ன செய்வது?

    சிந்தனை உறக்கம்!

    இறைந்துண்டு வாழும் வாழ்க்கையானாலும்..
    இறவாப் பசியென்பதனைவர்க்கும் இயற்கைதானே..!

    சதைரத்தம் எலும்புடன் உடலென்றாலங்கே
    பசிமயக்கம் உறக்கமென்பதும் உடன்பிறப்பன்றோ?..

    உறக்கத்துக்கு உரிமைக்குரல் தேவையில்லை..
    ஊணுறக்க மில்லையேல் உயிர்களுமில்லையப்பா..!

    மாலைச் சூரியனின் கருணையினால்..
    மணற் படுக்கையிலென் கவலைமறந்துவிட..

    வெட்டாந்தரை இடம்தான் நானுறங்கும்
    கட்டாந்தரை..நீர்வற்றிருகிய நிலமேயென்சொர்க்கம்!

    துணிக்குடையின் கொடையால் தந்நிழல்தர..
    துயிலெழ மனமில்லா மதிமயக்கம்தனில்..

    உறவொன்றுமில்லையடா உறக்கம்தான் சொந்தமடா
    ஊர்திரிந்துஉடல் களைத்துறங்கிக் கிடக்கிறேன்..!

    அவனியில் படுமின்னலிலே யானும்..
    அகதியாகி அயர்ந்துறங்கிக் கிடக்கின்றேன்..!

    வண்டினம்வாழ பண்புடை மலர்போல..இங்கு
    வறியவர்க்குதவும் குணமுடை யோரில்லையப்பா,,!

    ஈகைமிகு தென்றலும் மேகமுடன்சேர்ந்ததால்..
    இதமாகவென் பசியும் அடங்கிப்போனதே..!

    இல்லாதவனைக் கண்டுகொளா தேசத்தின்..
    இனம்காணா நினைவலையில் உறங்குகிறேன்..!

    பசியுறக்கம் நிரந்தர வரமேயானாலும்..
    பாரிலில்லை ஆருக்கும்பசிபோக்கும் மனப்போக்கு..!

    பாவம்வயிறு செய்த தவறுதானென்ன..
    தினம்வறுமை தானெனை வாட்டிடுதே..!

    வயிற்றுக்குச் சோறிட வேண்டும்..
    இங்கும் வாழும் மனிதர்க்கெல்லாம்…என

    மஹாகவியின் கவிப்பசியறிந் தாங்கே..
    மகத்தான சிந்தனைக்கே அடிபணியவேண்டுமப்பா..!

    மண்குடிசை வாழ்வு நிலையென்றால்..
    மண்ணிலென் வறுமைதீரும் நாளெப்போது?..

    உறக்கத்தினாலென்னுடல் மண்ணைத் தொட்டாலும்..
    விழித்தெழும்போதென் சிந்தனைகள் விண்ணைத்தொடுமப்பா..!

    இல்லையெனும் சொல்லேயிலாமல் இருந்திருந்தால்..
    இயல்புவாழ்க்கை யாவர்க்கும் எளிதாகுமப்பா..

    நிறைவுடனே நானிலத்தில்நாம் வாழநித்தம்..
    இறைவனிட மதையேமண்டியிட்டு வேண்டிடுவோம்..!

    *** 

    ”என்னைத் தாங்கிவளர்த்த தாயெனும் தெய்வத்தின் அருமைஅறியாது துரத்தினேன் அன்று. நாதியற்று நடுத்தெருவில் நிற்கின்றேன் இன்று! நீங்களேனும் உங்கள் தாயைப் பேணுங்கள் நன்கு!” என்று தன் அனுபவங்களை வேதனையோடு விளம்பும் மனிதரைக் காண்கிறோம் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனின் கவிதையில்.

    தவறவிட்ட தங்கம்

    கண்மூடி நானிருப்பது நல்ல கனவினிலல்லவே.
    கண்ணுக்குத் தெரியும் கானல் காட்சியன்றி நீருமல்லவே..

    “யாசித்தாலும் நிம்மதியான வாழ்க்கை! ”
    யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன்
    யானும் வாழ்ந்தேன் அவ்வித வாழ்வை
    யாரும் மறுப்பதற்கல்லவே..

    உழைத்து நிதமும் உணவளிக்காவிடினும்
    உண்மையான பாசம் பொழிந்தாள்
    உண்டி உறையுௗ் எதுவுமின்றியும்
    உன்னத வாழ்வளித்தது அவௗல்லவே..

    அறியவில்லை அவள் பாசம் அன்று
    அதிகாரம் கொண்டேன் ஆண்மகனென்று
    அதட்டி அவளை விரட்டினாலும்
    அௗவில்லா மதிப்பளித்தாலல்லவே..
    கடற்கரை மணலில் காண்கிறேன் பலரைக்
    கண்டதுமெனை விலகியே செல்கின்றனர்
    கடவுளே..! நாய்க்களிக்கும் உணவு கூட
    நான் புசிக்கத் தருவதில்லை!
    கண்னென எனைக்காத்தவௗ் விட்டுச்சென்றதுமே..

    ஊதாரியாய்த் திரிந்தாலும் எனக்கு
    ஊட்டி விட்டு மகிழ்ந்தாளே
    ஊரில் ஒருவர் கூட மதிப்பதில்லை
    உலகத்தை விட்டு அவௗ் சென்றதுமே..

    உதறிவிட்டேன் ஐயகோ
    உயிர்கொடுத்த அவளை
    ‘தொலைந்து போ நீ’ என விரட்டித்
    தொலைத்து விட்டேன் என் தங்கத்தை.

    காரணமில்லாமல் காதலிப்பவௗ் பெற்றெடுத்தவௗ் மட்டுமே
    காலம் சென்ற பின்னரே உணர்கிறேன் என்றுமே
    மனிதனாய் மதிக்க கூட நாதியில்லை
    மண்ணை விட்டு மங்கையவள் பிரிந்ததுமே..

    பிரிந்தது உனதுயிர் – தாயே இங்கு
    பிணமானது நீ பெற்ற உயிர்
    பிரிவில் தான் உணர்கிறேன்
    பித்துப்பிடித்து நான் செய்த தவறுகளையே..

    “ஆண்டாண்டு காலம் அழுது புலம்பினார் மாண்டார் திரும்புவதில்லை”
    ஆண்டாண்டு காலம் நான் இனி வாழ்ந்தாலும்
    ஆதரவளிக்க எவருமில்லை..

    தவறவிட்ட தங்கத்தை எண்ணி ஏங்குகிறேன்
    தக்க வைத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள் நீங்களாவது
    தங்கள் கையிலிருக்கும் தங்கத்தை
    தாயெனும் தெய்வத்தை..!

    *** 

    ”அந்தோ! தேசமில்லை அவர்கள் வசிக்க; நேசமில்லை அவர்கள் சுகிக்க” என்று கதியற்று அகதியாய் அலையும் மனிதரின் அவதியை உணர்வுபூர்வமாய்த் தன் கவிதையில் பொதிந்து தந்திருக்கின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

    துரத்தப்பட்ட உறவு

    தேசமில்லை
    உன் தேசமில்லை
    ஓயாத ஓலம்….
    அவர்களுக்கோ
    நேசமில்லை
    நெஞ்சில் நேசமில்லை
    மீளாத சோகம்…
    அகதி எனும் கேலியாய்
    தூற்றும் தூவேசக் குரல்
    காற்றில் தெறிக்க
    தொலை தூர பயணத்தில்
    மண்ணில் விதைக்கப்பட்டவர்கள் ஏராளம்
    பாலியல் அத்துமீறல்கள் தாராளம்
    ஆண் என்றால் கணநேரம் துயிலலாம் தெருவோரம்
    பெண்ணென்றால் என் செய்ய?
    மணல்மேடுகள் சவக்குழிகளாக
    உறவுகளும் உடைமைகளும் சிதறவிட்டு
    அகதியாய் அலையவிடும்
    பாவிகளே
    என்று தீரும்
    எங்கள் சுதந்திர தாகம்.

    ***

    படத்தின் வழியே வாழ்க்கைப் பாடத்தினைப் போதித்திருக்கிறார்கள் நம் கவிஞர்கள். கருத்துச் செறிவுமிக்க அவர்களின் கவிதைகளுக்கு என் நன்றியும் பாராட்டும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தேர்வுசெய்திருக்கும் கவிதை இனி!

    என் குடியிருப்பு

    கடற்கரையே என் குடியிருப்பு!
    கஞ்சி ஊத்த எனக்கு,
    காவல் காக்க எனக்கு
    கடற்தாயே துணையிருப்பு!
    காத்தாடி வேணாம்,
    கதவும் தேவை யில்லை!
    வாடகை தர வேணாம்!
    வரி கட்ட வேணாம்!
    போன சுனாமியிலே
    பொண்டாட்டி
    போய் விட்டாள்!
    படகும் போச்சு!
    அடுத்தடுத்த அலை அடிப்பில்
    குடிசையும் போச்சு!
    பிடிச்ச மீனெல்லாம் போச்சு!
    காசும் போச்சு!
    கட்டிய வேட்டியும் போச்சு!
    கரையிலே கிடந்த
    போர்வையே கூரை யாச்சு!
    கோரமாய்த் தாக்கிய
    சுனாமி அழிவைக்
    காண வந்த
    முதல் அமைச்சர்
    குடிசை கட்டித் தருவதாய்
    உறுதி கூறினார்!
    இனிதாய்ப் பேசினார்!
    குடிசை கட்ட வந்த போது
    நிலம் விற்க மறுத்து விட்டார்
    நிலச் சொந்தக் காரர்!
    இந்தக் குடியிருப்பில்
    இனிப் பயமில்லை எனக்கு!
    சுனாமி அடித்தாலும்
    புயல் அடித்தாலும்
    புதுசாய்க் கட்ட
    ஓலைப் பாய் கிடைக்காதா?
    ஒடிந்த கம்பு ஒன்று
    மிதக்காதா?
    கடற்கரையிலே வாழ்ந்து
    கடலிலே புதையும்
    ஜடங்களுக்கு
    இறுதிச்
    சடங்கும் இல்லை!
    இரங்குவாரும்
    இல்லை!

    கடற்கரையே என் குடியிருப்பு; கடலன்னையே என் துணையிருப்பு; வானமே என் மேற்கூரை; பூமியே என் பஞ்சணை! என எதை இழந்தாலும் நம்பிக்கை இழக்காது வறுமையிலும் செம்மையாய் வாழும் மனிதனைக் காணமுடிகின்றது இக்கவிதையில்.

    ”எதைக்கொண்டு வந்தோம் நாம் இழக்க?” எனும் விட்டேற்றியான மனப்பாங்கோடு, துள்ளிவரும் கடலோரம் பள்ளிகொண்டிருக்கும் இந்த மனிதரைப் போல் கவலையின்றி வாழும் கலையை அனைவரும் கற்றுவிட்டால் வாழ்வில் துன்பமில்லை; ஒரு துயரமில்லை!

    ஏழையின் எதிர்பார்ப்பில்லா மனநிலையை எளிமையாய் எடுத்தியம்பியிருக்கும் திரு. சி. ஜெயபாரதன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!

    Share
  • படக்கவிதைப் போட்டி – (104)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    17409641_1266256516761878_528197070_n
    62059640@N05_rகாயத்ரி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.03.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share