-மேகலா இராமமூர்த்தி

மக்களாட்சி, சாமானிய மக்களுக்கு நன்மை செய்யும் நல்லாட்சியாக அமையும்; ஓடப்பரும் உயரப்பரும் ஒழிந்து அனைவரும் ஒப்பப்பராய் வாழ்வர்; ’எல்லார்க்கும் எல்லாமென்றிருப்பதான இடம்நோக்கி இந்த வையம் நகரும்’ என்றெல்லாம் அரசியல் அறிஞர்களும், பொதுவுடைமைவாதிகளும் கண்ட கனவுகளெல்லாம் பகற்கனவுகளாகவே இன்றுவரை இருக்கின்றன.

அனுதினமும் உடல்சலிக்க உழைக்கும் ஏழைமக்கள் தங்கள் வாழ்வில் அணுவளவும் முன்னேற்றம் இல்லாததுகண்டு வேதனையில் வாடுகின்றனர்.

எளியோரின் இத் துயரநிலை கண்டு அவர்களின் மீட்சிக்காக உரிமைக்குரல் கொடுத்தவர், அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படவேண்டும் என்று நாளும் முழங்கியவர் பாவேந்தர் பாரதிதாசன்.

வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரியும் இந்த அவலக் கதை குவலயத்தில் முடிவுறுவ தெக்காலம் என்று முக்காலமும் சிந்தித்திருந்தது அவருள்ளம். அந்தச் சிந்தனையின் நீட்சியாய், மண்ணக மாந்தர்படும் துயர்கண்டு விண்ணகமும் கோபத்தில் கொப்பளிப்பதாய் ஒரு காட்சி அவர் மனத்திரையில் ஓடியது. 

மண்மீதில் உழைப்பாரெல்லாம்
வறியராம்! உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர்செல் வராம்இ தைத் தன்
கண்மீதில் பகலி லெல்லாம் 
கண்டுகண்டு அந்திக் குப்பின்
விண்மீனாய்க் கொப்பளித்த
விரிவானம் பாராய் தம்பி! என்று தன் உள்ளத்து உணர்வுகளுக்கு உருக்கொடுத்தார் கவிஞர்.

மண்மீதில் மாடாய் உழைப்பவரெல்லாம்  வறியராய், அவர்களை ஏய்த்துப் பிழைப்பவரெல்லாம் வளமை படைத்தவராய்த் திகழும் முறையற்ற நிலைகண்டு பகலெல்லாம் சினத் தீயில் குமுறிக்கொண்டிருந்தது வானம். அந்தக் குமுறல் அந்திக்குப்பின் அதன் உடலெங்கும் கொப்புளங்களாய் வெடித்தன. அவைதாம் வானில் தெரியும் விண்மீன்கள்! அல்ல…அல்ல…மாந்தரின் இழிநிலை கண்டு, வானம் கழிசினம் கொண்டு கொதித்ததால் தோன்றிய புண்மீன்கள் என்கிறார் புதுவையின் புதுமைக் கவிஞர். 

நலிந்தோரின் நல்வாழ்வில் அக்கறையும், இயற்கை நிகழ்ச்சிகளைக்கூடக் கவிக்கண்ணோடு நோக்கும் நுண்மாண்நுழைபுலமும் வாய்க்கப்பெற்றால் மட்டுமே இத்தகைய உயிர்ப்புள்ள கவிதைகளைப் படைக்கவியலும். அத்தகு குணநலன்கள் குறைவின்றி  வாய்க்கப்பெற்றவர் புரட்சிக் கவிஞர் என்பதற்கு இந்தப்பாடல் சான்று பகர்கின்றது.

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.