ஜெர்மனியின் செயற்கைச் சூரியனும் சென்னையின் சூரிய சக்தியும்!
பவள சங்கரி
புதுமைக்கும் அரசின் அணுகுமுறைக்கும் ஏற்படும் மற்றுமொரு போராட்டம். நடுவன் அரசாகட்டும், சமூக ஆர்வலர்களாகட்டும், சூரிய ஒளியை பெருவாரியாக பயன்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் இந்நாளில், 2022இல் 20,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள இன்றைய நிலையில் இஸ்ரோ, குறைந்த விலையில் சோலார் பேனல் கிடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நமது மின்சாரப் பங்கீட்டு நிர்வாகம் ஒவ்வொரு தனி மனிதர்களும் தங்கள் இடத்தில் உற்பத்தி செய்யும் சூரிய மின்சாரத்தை வாங்குவதற்கும் தேவையற்ற கெடுபிடிகள் செய்ய ஆரம்பித்துள்ளனர். 200 யூனிட்டிற்கு மேல் 500 யூனிட்டிற்கு மேல் உபயோகிப்பாளர்களுக்குரிய கட்டண வேறுபாடுகளைக்காட்டி ஏற்க மறுப்பதாக செய்திகள் கூறுகின்றன.
ஜெர்மனியில் சூரியனுக்கு நிகராக ஒரு செயற்கைச் சூரியனையே உருவாக்கிவிட்டனர்! நாம் சோலார் பேனலிலிருந்து வீட்டு உபயோகத்திற்காக மின்சாரம் எடுப்பதற்கே இத்தனை குளறுபடிகள் நாமே ஏற்படுத்திக்கொள்கிறோமே, நாம் எப்போதுதான் ஜெர்மனி போல முன்னேறப்போகிறோம்? செயற்கை சூரியன் என்பது மிகப்பெரிய பல சக்திகளின் சிறு பெயர்! அதனுடைய விரிவாக்கங்களைப் பார்த்தால் நாம் எந்த அளவிற்கு பின் தங்கியிருக்கிறோம் என்பது புரியும் .. 🙁