பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

17690638_1279947372059459_1584759799_n
130800147@N03_rஷேக் முகமது எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.04.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – (106)

  1. பாலங்கள்…

    ஆற்றின் கரைகளை
    இணைப்பது பாலம்..

    ஆசையில்
    ஆண்பெண் இதயங்களை
    இணைக்கும் பாலம்-
    காதல்..

    காதல் மணவாழ்வில்
    ஆணும் பெண்ணும்
    அகலாமல்
    இணைக்கும் பாலம்-
    பிள்ளை..

    பிரிக்கும் மதிலைவிட,
    இணைக்கும் பாலம்
    மேலல்லவா…!

    -செண்பக ஜெகதீசன்…

  2. வீடு பேறு அழகான குடும்பம் இது !
    இல்லறமே நல்லறமாம் !
    அன்பான மங்கை நல்லாள் !
    பண்பு மிகு ஆண் மகனாம் !
    மனதால் இணைந்தார்கள்!
    பெற்றவர்கள் இசைவோடு
    திருமணமும் முடித்தார்கள் !
    அழகான வீட்டினிலே !
    அமைதியுடன் வசித்தார்கள் !
    வீடென்ற பெயர் ஏன் வந்தது!
    கவலையை விட்டதினால் வீடானதோ ?
    ஆணவத்தை விடும் இடம்
    என்பதால் வீடானதோ?
    கோபத்தை விடும் இடம்
    என்பதால் வீடானதோ?
    நான் என்பதை விட்டு!
    நாம் என்று வாழ்ந்தார்கள்!
    ஆண்டவன் அருளாலே !
    நல் மழலை பெற்றார்கள்!
    அன்பை விதைத்தார்கள்!
    ஆனந்தமாய் இருந்தார்கள்!
    இசைபட வாழ்ந்தார்கள்!
    ஈகை புரிந்ததினால் !
    உயர்வை அடைந்தார்கள்!
    ஊக்கத்துடன் உழைத்தார்கள் !
    எண்ணியதை பெற்றார்கள்!
    ஏழேழு பிறவியிலும் தொடரும் சொந்தமிது !
    ஐயமில்லை! ஐயமில்லை!
    ஒன்று பட்ட உள்ளத்தால்!
    ஓங்கியது உங்கள் வாழ்க்கை!
    ஔவை மொழி போல இனிக்கட்டும்!
    அஃதே எங்கள் ஆசை!

  3. நீரில்லா ஊர்.

    சி. ஜெயபாரதன், கனடா

    தாகமாய் உள்ளது ஒருகாலத்தில்
    வேகமாய் நீரோடிய இந்தக்
    கால்வாய் !
    காவேரி ஆறும் இப்படி ஒருநாள்
    சாவை அடையும் !
    மழை பெய்து நீரோட்ட மின்றேல்
    வேளாண்மை கருகி
    பஞ்சம் பெருகி
    பசுமை எங்கும் மங்கி
    நகரம் ஒருநாள் நரக மாகும் !
    பாலம் கட்டியும் இங்கே
    பயனில்லை !
    நீரில்லாக் கால்வாய் மேல்
    பாலமா ?
    ஞாலத்தில் இன்று மாந்தர்க்கு
    நீர்ப்பஞ்சம் ! நீர்ப்பஞ்சம் !
    நீர்ப்பஞ்சம் !
    வேர் உறிஞ்ச நீரின்றி
    பச்சை இலைகள் பல மஞ்சளாய்
    வெளுத்துப் போயின !
    இளந்தம்பதிகள்
    என்ன செய்வதென் றறியாமல்
    கலங்கி நிற்கிறார் !
    நீரில்லா ஊர் பாழாகும் !
    கருணையுள்ள
    வருண பகவானே ! எமக்கோர்
    வழிகாட்டு !

    +++++++++

  4. ஆசைக்கோர் இல்லம்
    ====================

    எந்திரமய வாழ்க்கை மறந்து – நான்
    ****இயல்பாக வாழ எனக்கொரு
    தனி வீடு கட்டவேண்டும் -அதில்
    ****தனிமைசுகம் காணவேண்டும்..!

    அழகின் எல்லையாக இருக்கவேணும் – அதன்
    ****அருகேஆறுகுளம் அமையவேணும்
    கடனில்லா வீடு கட்டவேணும் – அதில்
    ****கலையழகு கொஞ்சவேண்டும்..!

    சொந்த உழைப்பில் விளையவேணும் – அதில்
    ****பந்தங்களுக்கு பங்கில்லாநிலைவேணும்
    இயற்கை சூழலோடு ஒன்றி – யதில்
    ****இன்பயுலா வரவேண்டும்..!

    கண்குளிர ரசிப்பதற்கும் வாழ்ந்து – அதைக் ****கண்டுகளிப்பதற்கும் வேண்டுமொருவீடென்று
    காலிமனையில் இல்லம் எழுப்ப – நெடுநாள்
    ****கனவோடுநான் காத்திருந்தேன்..!

    காலமொரு நாள்கனிந்து வர – என்
    ****கனவுமதுநன வாகியதொருநாள்
    நிலைக்கும் சொத்தாக இருந்தாலும் – அங்கே
    ****நிலையாகக்குடியேற வசதியில்லை..!

    மண்ணுரிமை பெற்றுவிட்டென் – ஆனால்
    ****மழைக்கடவுள் அருளில்லை
    நீரின்றி அமையாது உலகென – அய்யன்
    ****வள்ளுவன் மொழிந்ததுபோல்..!

    கழனிகாடுகள் வீடுகள் குளிர்ந்திருக்க – ஆங்கே
    ****கனிந்தமழையின் கொடைவேண்டும்
    ஆசையாய் கட்டிய இல்ல – மதில்
    ****அங்கேயில்லை குடிதண்ணீர்..!

    வெறிச்சோடிக் கிடக்குது எம்வீடு – மனம்
    ****வெதும்போது பார்ப்பேனவ்வப்போது
    காலமாற்றத்தால் உருவாகும் கதைபோல் – அது
    ****கனவுவீடாக மாறித்தான்போனது..!

    வருஷமொரு முறைபார்த்து வந்தேன் – இப்ப
    ****வயசு அறுபத்தியாறாச்சு
    கட்டிய வீட்டில் குடியேற – காலமின்னும்
    ****எட்டியதூரத்தில் இல்லையம்மா..!

    இரவானால் பறவைகள்தன் கூட்டிற்கு – அது
    ****இயற்கையாய் செல்வதுபோல்
    இருக்கும் வரையில் எண்ணங்கள் நம்மினிய
    ****இல்லம் நோக்கியேநகரும்..!

    அன்புக்கோர் மனைவி பாசத்துக்கோர் பெண்
    ****பண்புக்கோர் பிள்ளையெனும்
    வரிசையிலே வாழ்க்கையில் இன்னு – மொரு
    ****ஆசைக்கோரில்லம் எனவொன்று

    இறையருளால் அனைவரும் பெறவேண்டும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.