Tag: எம். ஜெயராம சர்மா
-
அழுகுரலைத் தடுத்திடுவோம் !
எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா
இல்லறத்தின் நல்லறமே இனிமையுடன் வாழுவதே
இல்லறத்தில் பிள்ளைச்செல்வம் எல்லோர்க்கும் பெருவரமே
இல்லறத்தில் இணைவார்க்கு பிள்ளையில்லை எனும்பொழுது
இல்லறமே இணைவார்க்கு இன்பமதை அளிக்காதே !
மணமான மறுவருடம் மழலையினைக் காண்பதுதான்
மகிழ்ச்சியது உச்சமாய் வையகத்தில் இருக்கிறது
மழலையது முகம்பார்த்து மனமெல்லாம் நிறைவுபெறும்
வாழ்வுதனை யாவருமே வாஞ்சையுடன் விரும்புகிறார் !
இனிமையுடை வாத்தியங்கள் இசைகொடுத்து நின்றாலும்
மழலைமொழி வள்ளுவர்க்கு மாவிசையாய் இருந்ததுவே
கனிவுநிறை மழலைமொழி காதினிலே நுழைந்துவிடின்
புவிமீது வேறின்பம் புலனேற்க மறுத்திடுமே !
பிள்ளைவரம் வேண்டுமென்று பிராத்தனைகள் பலவாற்றி
நல்லபடி தானதர்மம் நாளுமே ஆற்றிநின்று
எல்லரிய விரதமெல்லாம் எப்படியோ கடைப்பிடித்து
நல்லதொரு பிள்ளைவேண்டி நாளுமே வேண்டிடுவோம் !
மழலையில்லாப் பெற்றோர்க்கு மலடுவெனப் பெயர்சூட்டி
மாநிலத்தில் சமூகமது மறைமுகமாய் தூற்றிநிற்கும்
சபைநடுவே அவர்வந்தால் சற்றொதுக்கி வைத்திடுவார்
அதைக்கண்டு மழலையிலார் அலமந்தே நின்றிடுவார் !
சமூகத்தில் திருமணத்தால் சமூகநிலை உயர்கிறது
சந்தோசம் குழந்தையினால் தானங்கே நிலைக்கிறது
குழந்தையில்லா வாழ்வுதனை குறையெனவே கருதுகிறோம்
குறைபோக்கி நிறைவுதரக் குழந்தயெமக் குதவுதன்றோ !
பிள்ளைதனைப் பெற்றாலும் பேணிநிற்கும் நிலையினிலே
பெற்றோர்கள் சிலரிப்போ பேயாக மாறியுள்ளார்
மழலைமொழி அவர்கேட்டு மாறிடுவார் அரக்கர்களாய்
மடிவைத்த மழலைகளை மரணதுக்கே கொண்டுசெல்வார் !
பாசநேசம் அத்தனையும் பஞ்சாகப் பறக்கவிட்டு
பாலகராய் இருப்பாரை பதைபதைக்க வதைத்திடுவார்
ஓலமிடும் பாலகரை ஒருகணமும் பார்க்காமல்
உன்மத்தம் பிடுத்தபடி உருக்குலைப்பார் இரக்கமின்றி !
பெற்றபிள்ளை தனையங்கே பித்தேறி அடிப்பாரின்
பேய்த்தனத்தை முகநூலில் பதிவேற்றி விட்டிடுவார்
அத்தகைய செயல்கண்டு அனைவருமே கொதித்தெழுந்தும்
அநியாயம் செய்தவரோ அவர்பாட்டைப் பார்த்துநிற்பார் !
நித்தமும் நாம் இவ்வாறு பலவற்றைப் பார்த்திடினும்
சட்டப்படி நடவடிக்கை ஏனெடுக்கத் தயங்குகிறோம்
மொத்தமுள்ள பாசமதை முழுதாக அழித்தொழிக்கும்
மூர்க்கர்தமை விட்டுவைத்தால் நாட்டுநிலை என்னாகும் !
பிஞ்சுமனம் அழுதாலும் கெஞ்சியவர் துடித்தாலும்
கொஞ்சமேனும் இரக்கமுறா கொடுமைக்குண முடையார்கள்
அஞ்சிநிற்க வழிசெய்து அவர்க்குப் புத்தி ஊட்டுதற்கு
அனைவருமே புறப்படுவோம் அழுகுரலைத் தடுப்பதற்கு !
-
அன்னையர் தின வாழ்த்து!
ஶ்ரீ ஶ்ரீமதி ஜெயராமசர்மா
தம்பதியர்அனைவருமே பணிந்து நிற்போம் !
( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )
கண்கண்ட தெய்வமாய் காருண்யக் கடவுளாய்
மண்மீது வந்திருக்கும் மாதாநம் வரமாகும்
எண்ணிநாம் பார்த்துவிடா இன்னல்களை அனுபவித்தும்
எமைப்பற்றி நினைத்திருப்பாள் என்னாளும் அன்னையவள் !இரவுகண் விழித்திருப்பாள் எம்மருகே அவளிருப்பார்
குளிர்சுரங்கள் வந்துவிட்டால் கொடுத்திடுவாள் பலமருந்தை
அவளுணவை நினைக்காமல் அழுமெம்மை அவள்பார்ப்பாள்
ஆசையுடன் எமையணைத்து ஆறுதலைப் பெற்றுநிற்பாள் !நாம்சிரிக்கும் நாளெல்லாம் தான்சிரிப்பைக் காட்டிடுவாள்
நாமழுது விட்டுவிடின் தானுமே சேர்ந்தழுவாள்
ஓர்நொடியும் எமைவிட்டு அவளுணர்வு ஒதுங்கிவிடா
வேராக அவளிருந்து வீழாமல் காத்துநிற்பாள் !அம்மாபோல் பொறுப்புள்ளார் இப்புவியில் யாருமுண்டோ
அம்மாவின் மடியிருத்தல் அனைவருக்கும் பெருமையன்றோ
அம்மாவை அணைத்துநிதம் அவழடியைத் தொழுதுநிற்றல்
அம்மாவை அகம்வைப்பார் அனைவருமே ஆற்றிடுவார் !காப்பகத்தில் தாயைவிடும் காட்சியினை மறந்திடுவோம்
கர்ப்பத்தில் காத்தவளை காப்பகத்தில் விடலாமா
மூப்புவரும் முடுக்குவரும் மூச்சுவிடக் கஷ்டம்வரும்
காத்துயெம்மை வளர்த்தவளை காப்பாற்றல் கடமையன்றோ !அம்மாவின் அழுகுரலை ஆருமே விரும்பாதீர்
அம்மாவை நோகவிட ஆருமே நினைக்காதீர்
அம்மாவின் தினமதிலே அன்னைதெய்வம் எனநினைப்போம்
அத்தெய்வம் தனைநாங்கள் அனைவருமே பணிந்துநிற்போம் ! -
அனைவருமே வாருங்கள்!
-எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா
இலக்கியங்கள் பலகற்றும் இங்கிதங்கள் வளரவில்லை
தலைக்கனத்தை விட்டுவிட நிலத்திலுள்ளார் விரும்பவில்லை
கொடுத்துதவும் மனப்பாங்கைத் தொலைத்துவிட்டு நிற்பதையே
நிலத்திலுள்ள பலரிடத்து நிலைத்துநிற்கக் காணுகிறோம்!அறம்செய்ய விரும்பென்று அவ்வைகூறிச் சென்றதனை
ஆருமே மனமதனில் அமர்த்தியதாய்த் தெரியவில்லை
அதிகசெல்வம் சேர்ப்பதிலே ஆசைகொண்டே அலைகின்றார்
அல்லலுடன் இருப்பார்க்கு அவருதவின் அறம்மகிழும்!பொருள்தேவை என்பதனால் அருளதனை ஒதுக்குவதா?
மருளோடு வாழுவதால் வாழ்வுவளம் ஆகிடுமா?
அருளான வழிசென்று பொருளதனைப் பயனாக்கின்
மருளகன்று வாழ்வினிலே அருள்வெள்ளம் பெருகிடுமே!பலகற்று உயர்நிலையில் இருக்கின்ற பலபேர்கள்
பல்லக்கில் பவனிவரும் பதவியுடை பலபேர்கள்
பணந்தேடி பணந்தேடி பதராக மாறுகிறார்
பாங்காக அவர்வாழின் பண்பு தடுமாறிடுமா!பூமித்தாய் பலவற்றைப் பொறுமையுடன் தாங்குகிறாள்
சாமியெனச் சூரியனும் பூமிக்கு உதவுகிறான்
வான்மழையும் மண்ணினுக்கு வளங்கொடுத்தே நிற்கிறது
மனம்மாறா மனிதரெலாம் மாறிவிட்டால் மகத்துவமே!பலகற்றோம் என்பதனால் பண்புநிலை மாறுவதா?
பக்குவத்தைத் தொலைத்துவிட்டு பதவிகளை நாடுவதா?
புவிமீது ஆற்றுதற்குப் பொறுப்பான பலவிருக்கு
அதையாற்றி அகநிறைவோம் அனைவருமே வாருங்கள்! -
அலமந்து அழுகின்றார்!
-எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா
வீசுகின்ற காற்றுக்கு விலைபேச முனைகின்றார்
வெளிச்சந்தரும் வெயிலதனை விற்றுவிட எண்ணுகிறார்
வான்பொழியும் மழையதனை மறைத்துவிட முயலுகிறார்
மனிதர்செயும் இச்செயலால் மாநிலமே அழுகிறதே!ஆர்ப்பரிக்கும் கடலைக்கும் அவருரிமை கேட்கின்றார்
அளவற்ற நீர்கொண்ட கடலினையும் பிடுங்குகிறார்
ஆண்டவனின் கொடையான ஆறுகளைத் தடுக்கின்றார்
அளவற்ற ஆணவத்துள் அமிழ்ந்துவிட்டார் அனைவருமே!ஓடிவரும் ஆறுகளை ஒடுக்கிவிட முயலுகிறார்
தேடித்தேடி அணையெடுத்து திருப்புகிறார் தமக்கெனவே
நாடுவளம் தனையெண்ணி ஓடிவரும் ஆறுகளைக்
கேடுகெட்ட எண்ணமுடன் கெடுக்கின்றார் பலருமிங்கே!ஆறுகளை ஆண்டவனாய் எண்ணிப் பூஜைசெய்கின்றார்
ஆறுகளைத் தொழுவதற்கு அநேகம்பேர் செல்லுகிறார்
புனிதமாய் நினைத்துநிற்கும் புவியிலுள்ள ஆறுகளைத்
தனியுடமை ஆக்குதற்குத் தான்பலபேர் முயலுகிறார்!ஆறுகளை அரசியலாய் ஆக்கிவிட்ட காரணத்தால்
அறம்வளர்ந்த நாட்டினிலே மறமோங்கி நிற்கிறது
ஆண்டாண்டாய் பூஜைசெய்து ஆறுகளைப் போற்றிநின்றார்
ஆணவத்தின் எழுச்சிகண்டு அலமந்து அழுகின்றார்! -
தப்புக்கணக்கு !
எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா
பக்கத்து வீட்டில் புதிதாக ஒரு குடும்பம் வந்துசேர்ந்தது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கணவனும் மனைவியுமாய் வந்தார்கள். வேற்று நாட்டவராய் காணப்பட்டார்கள். எங்களுக்கு அயலில் குடும்பத்துடன் அவர்கள் வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களின் அயலில் இருந்தவர்களில் பாதிப்பேர் தனித்தே இருந்தார்கள். எப்ப வருவார்கள் எப்ப போவார்கள் என்றே தெரியாது.
ஒருமாதம் ஒருவரும் அடுத்தமாதம் இன்னொருவருமாய் மாறி மாறி வருவார்கள். எங்களுக்கு நல்ல அயல் இல்லாதபடியால் நல்ல குடும்பங்கள் இருக்கும் பக்கமாக பார்த்து வீடு வாங்கவேண்டும் அல்லது வீடுமாற வேண்டும் என்னும் எண்ணம் மனத்தினினுள் புதைந்தே கிடந்தது. ஆனால் இந்த வாரம் எங்களின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் புதுக்குடும்பம் வந்தது எங்களின் அபிப்பிராயத்தைத் தள்ளிப் போட்டுவிட்டது.
எனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல சந்தோசம். பக்கத்தில் குடும்பமாய் வந்தபடியால் எல்லாவற்றுக்கும் நல்லதுதானே என்ற எண்ணமே ஏற்பட்டது. எனது மனைவி பக்கத்துவீட்டுப் பெண்ணுடன் பேசத்தொடங்கினாள். அந்தப் பெண்ணும் நன்றாகவே பேச்சைக் கொடுத்தாள். தாங்கள் வேலையின் நிமித்தம் இங்கு வந்ததாயும் பிள்ளைகளின் படிப்பும் இங்கு நல்லதாய் இருப்பதால் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததாயும் அவள் பேசியதாக மனைவி என்னிடம் கூறினாள்.
ஒருநாள் என்னிடம் அந்தப் பெண் பேச்சுக் கொடுத்தாள். நல்ல ஆங்கிலத்தில் பேசினாள். நீங்கள் எந்த நாடு என்று கேட்டதற்கு வியட்நாம் என்று பதிலளித்தாள். எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. வியட்நாமியர், சீனர்கள், ஆங்கிலம் பேசினால் விளங்குவது சற்றுக் கடினம். அவர்களின் உச்சரிப்பு நச்சரிப்பாய்த்தான் அமையும். அப்படியிருக்க இவள் எப்படி நல்ல ஆங்கிலத்தைப் பேசுகிறாளென்று என்னுள் வியந்து கொண்டேன். அவளின் குடும்பம் பற்றி விசாரித்தேன். தான் ஏழுவயதில் அவுஸ்திரேலியா வந்ததாயும் இங்குதான் படித்ததாயும் தனது கணவன் ஒரு சீனக்காரர் என்றும் சொன்னாள். அவள் இங்கு சின்னவளாய் இருந்து படித்த படியால்த்தான் நல்ல ஆங்கிலம் பேசமுடிந்தது என்பதை அப்பொழுது உணர்ந்துகொண்டேன். கணவன் தன்னைவிடப் படிப்புக் குறைந்தவன் என்றும் ஆனால் நல்ல குணமுள்ளவன் என்றும் அதனால்த்தான் அவனைத் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினாள். தான் ஒரு நிறுவனத்தில் கணக்காளராக இருப்பதாகவும் தனது கணவன் பாண் போறணையில் வேலை செய்வதாகவும் தெரிவித்தாள். “நீங்கள் குடும்பத்துடன் இங்கு இருப்பது எங்களுக்குப் பெரிய திருப்தியும் மகிழ்ச்சியும்” என்று தெரிவித்தாள். நானும் முறுவலுடன் தலையாட்டி விட்டு வந்தேன்.
கணவன் மாலை வேலைக்குப் போய் அதிகாலைதான் வருவான். அவள் காலையில் போய் மாலையில் வந்துவிடுவாள். பிள்ளைகளை அவளே பாடசாலைக்குக் கூட்டிச் செல்லுவாள். எங்கள் பிள்ளைகளும் அவர்களும் சேர்ந்து விளையாடுவார்கள். எங்கள் வீட்டு விசேசங்களுக்கு அவர்கள் வருவார்கள். நாங்களும் அவர்களின் விசேசங்களில் பங்குபற்றுவோம். உணவைப் பொறுத்தவரை வேறு பட்டாலும் உள்ளத்தால் இணைந்து நின்றோம். நல்லவொரு குடும்பம் அயலாக வந்ததை நாங்கள் அனைவரும் மனதார விரும்பினோம். அவள் நல்ல அழகான பெண். எடுப்பான மூக்கு. கவர்ச்சியான கண்கள். பார்ப்பதற்கு பளிச்சென்ற நிறம். கட்டான உடல்வாகு. மொத்தத்தில் பார்பவர்களைத் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகு அவளிடம் கொட்டிக்கி டந்தது.
அதற்கு மாறாக அவள் கணவனிருந்தான். நிறம் குறைவு. சற்றுக் குட்டையான உயரம். சப்பை மூக்கு. ஆனால் மல்யுத்த வீரன்போல் உடலமைப்பு அழகுப் பதுமையும் அவனும் அன்புடன் குடும்பத்தில் இணைந்து பிள்ளைகளுடன் இருப்பதைப் பார்க்கும் பொழுது எங்களுக்கே உள்ளூர ஆச்சரியம்தான். பிள்ளைகள் தாயைப்போல இருந்ததால் வடிவாக இருந்தனர். அந்தக் குடும்பம் வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அவளின் கணவன் விடுமுறை நாட்களில் மட்டுமே வீட்டில் நிற்பான். அப்பொழுதுதான் அவனைப் பார்க்க முடியும். அவனுடன் பேச முயன்றும் அவன் அதனைத் தவிர்த்தே நின்றான். அவனின் முகத்தில் சிரிப்பென்பதை மருந்துக்கும் காணவே முடியாது. ஆனால் வீடும் வேலையுமாகவே அவனிருக்கிறான் என்பது மட்டும் எங்களுக்குத் தெரியும்.
அவளிடம் ஒருநாள் துணிவுடன் கேட்டே விட்டேன். ” உனது கணவன் பேசுவதை ஏன் தவிர்க்கிறான் ? முகத்தில் சிரிப்பையே காணவில்லையே ! குடிக்கிறானா ? ” அவள் சொன்னாள். அப்படி ஒன்றும் இல்லை. அவர் மிகவும் நல்லவர். அவர் சீனப் பெளத்தர். சமய நம்பிக்கை மிக்கவர். அவருக்கு ஆங்கிலம் சரளமாகப் பேசவராது. அதனால் உங்களுடன் பேச அவருக்குப் பயம். அவரின் சுபாபமே அப்படித்தான். சீன மொழியில் கவிதைகூட இயற்றுவார். நல்ல சீன மொழி எழுத்தாளரும் கூட. என்று அவள் கணவனைப் பற்றிக் கூறியதும் என்னால் அதனை நம்பவே முடியாமல் இருந்தது. “இவ்வளவு திறமைசாலியா இப்படி!” என வியந்து கொண்டேன்.
ஐந்து வருடம் என்பது எப்படி ஓடியதோ தெரியவில்லை. எங்கள் பிள்ளைகள் பல்கலைக்கழகம் சென்றுவிட்டார்கள். பக்கத்து வீட்டுப் பிள்ளைகளும் பத்தாம் வக்குப்பில் படிக்க வந்துவிட்டார்கள். அடிக்கடி வந்து கதைக்கும் அவள் இப்போது கதைப்பது குறைந்து விட்டது. அவளின் கணவனின் நடமாட்டமும் கண்ணில் படவே இல்லை.அவள் மட்டும் காரில் போவாள் வருவாள். அவள் கணவனின் காரையும் காணவில்லை. அவன் வேலைக்குப் போய் வருவதாகவும் தெரியவில்லை. வாசலிலே கண்டவுடன் சிரித்த முகத்துடன் நிற்கும் அவள் சிந்தனையில்த்தான் காணும் பொழுதெல்லாம் இருந்தாள். கதைப்பதுகூடக் குறைந்துவிட்டது. கையை மட்டும் அசைத்துவிட்டுச் சென்றுவிடுவாள். அடிக்கடி பல ஆண்கள் மட்டும் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். கணவனைக் காணவில்லை. அவளின் முகமும் மாறிவிட்டது. புதியவர்கள் அடிக்கடி வருகிறார்கள். பிள்ளைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் இப்படி நடப்பது எங்களை சிந்திக்க வைத்தது.
அவள் புருசனைத் துரத்திவிட்டு கண்டவன்களுடன் உல்லாசம் காண்கிறாள் என்று எனது மனைவி சொல்லிக் கொண்டே இருந்தாள். எனது பிள்ளைகளும் பக்கத்து வீட்டுக் காரியைக் கெட்டவள் என்றே நாளும் பொழுதும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் எனக்குள் அந்த எண்ணம் எழவே இல்லை. ஒருவரிடம் பேசும் பொழுது, ஒருவரைப் பார்க்கும் பொழுது அவரை எடை போட்டுவிடலாம் என்பது எனது கருத்தாக இருந்தது. அதன்படி பக்கத்து வீட்டுக்காரி பக்குவமானவள் என்று நான் தீர்மானித்துவிட்டேன். ஆனால் நேரமும், காலமும் சூழலும் அவளின் நடத்தையில் சந்தேகம் கொள்ளும்படியே ஆக்கியிருந்தது.
எனது மனைவியும் பிள்ளைகளும் வீட்டைவிட்டு மாறவே வேண்டும் என்று ஒரே பிடிவாதமாகவே இருந்தார்கள். நடத்தை கெட்டவளுக்குப் பக்கத்தில் இருந்தால் வருகிற எங்கட நண்பர்களும் உறவினரும் கூட எங்களையும் ஒரு விதமாகவே பார்ப்பார்கள் என்று என்னை நச்சரித்தபடியே இருந்தார்கள். அன்று ஞாயிற்றுக் கிழமை. வெயிலும் குறைவாக இருந்ததால் பக்கத்து வீட்டுக்காரி புல்லுவெட்ட ஆயுத்தமானாள். நானும் புல்லுவெட்ட மெசினுடன் முன்னுக்கு வந்தேன்.அவள் பழையநிலையில் என்னைப் பார்த்துச் சிரித்து தானாகவே சுகம் விசாரித்தாள்.
இதனைச் சாக்காக வைத்து அவளுடன் பழையமாதிரி பேசத்தொடங்கி கணவனைப் பற்றியும் விசாரித்துவிட்டேன். கணவனைப் பற்றிக் கதை வந்ததும் அவளின் முகம் மாறியது. கண்கள் கலங்கின. பேச்சுக்கள் தடுமாறின. புல்லை வெட்டுவதை விட்டு விட்டு என்னை வரும்படி அழைத்தாள். பின் உடனேயே உங்கள் மனைவியையும் கூப்பிடுங்கள் என்றாள். அவளின் எண்ணப்படி மனைவியையும் அழைத்தேன். இருவரையும் தனது வீட்டுக்குள் கூட்டிச் சென்றாள். அவளின் வீட்டுக்குள் செல்வது இதுதான் முதல் தடவை. வீடு மிகவும் நேர்த்தியாக இருந்தது. புத்தர் சிலை ஒன்று எங்களை வரவேற்றது. அதன் முன்பாக ஊதுவத்தி நறும் புகையினை விட்டபடி வீட்டினை வாசமாக்கி நின்றது.
ஒரு அறையினுள் எங்களைகூட்டிச் சென்றாள். அங்கு நாங்கள் கண்ட காட்சி எங்களையே உலுக்கிவிட்டது. எங்களை அறியாமல் எங்கள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. அவளின் கணவன் கட்டிலில் படுத்தபடி இருந்தான். அவனுக்குப் பக்கத்தில் பலவித மருந்துகள் நிறைந்து இருந்தது. அங்கும் ஒரு புத்தர் சிலையும் புத்தர் படமும் இருந்தது. அவளையும் கணவனையும் மாறி மாறிப் பார்த்தோம். எங்களுக்கே வெட்கமாயும் துக்கமாயும் இருந்தது. அந்தப் பெண் இமயமாய் தெரிந்தாள். நாங்கள் சரிந்து நிலத்திலே கிடந்தோம். எடுத்த எடுப்பிலே காணும் தோற்றத்தைத்தைக் கணக்குப் போட்டு நாங்கள் எடுத்த தப்பான முடிவு அப்பளுக்கில்லா அவளை. பின்புதான் கேள்விப் பட்டோம் அவளின் கணவன் விபத்தில் அகப்பட்டு சுயநினைவு திரும்பாநிலையில் கோமாவில் இருக்கிறான் என்று.
கணவனை வேறு இடங்களில் விடாமல் தனது வேலையையும் பார்த்து அன்புக் கணவனையும் அருகிருத்திப் பார்க்கும் அவளை என்ன சொல்லி அழைப்பது ! அவள் பெண்ணல்ல. அவள் அன்பின் திருவுருவம் ! ஆண்டவனின் அனுக்கிரகம்.
-
அகற்றிவிடல் அவசியமே !
எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா
அசுரர்கள் வாழ்ந்ததாய் அறிகின்றோம் கதைகளிலே
அசுரர்கள் நிஜமாக வாழ்கின்றார் அருகினிலே
பிஞ்சுமனம் பார்க்கார்கள் கெஞ்சினாலும் கேட்கார்கள்
கொஞ்சமேனும் இரக்கமின்றி கொன்றொழிப்பார் பிஞ்சுகளை !
படித்தாலும் பண்பில்லார் பதவியாலும் உயர்வுபெறார்
நினைப்பெல்லாம் கசடாக நித்தமுமே இருந்திடுவார்
தமக்கெனவே வாழ்ந்திடுவார் தலைகுனிவை பொருட்படுத்தார்
நிலத்திலவர் வாழ்வதனால் நிம்மதியை அழித்திடுவார் !
படித்தவரில் பலபேரும் பாமரரில் சிலபேரும்
அடுத்தவரை அழவைக்கும் ஆசையிலே அலைகின்றார்
எடுத்துவைக்கும் அடியனைத்தும் இரக்கமதை மிதிப்பதற்கே
எடுத்துவைக்கும் இவர்களெலாம் ஏனுலகில் பிறந்தனரோ !
காமமெனும் வெறியுடனே கணமெல்லாம் திருயுமிவர்
காணுகின்ற அத்தனையும் காமமுடன் நோக்குகிறார்
மாமியென்றோ மகளென்றோ மலருகின்ற குருத்தென்றோ
காமநிறை கண்ணுடையார் கருதியே நிற்பதில்லை !
கணநேரம் காணுகின்ற காமசுகம் தனைநினைப்பார்
காலமெல்லாம் தவித்தழுவார் காயமதை நினைப்பதில்லை
உயிர்போகும் அவர்நிலையை ஒருகணமும் பொருட்படுத்தா
உணர்வில்லா அசுரர்களாய் உலவுகிறார் உலகினிலே !
அறியாத பிஞ்சுகளை அழித்துநிற்கும் அசுரர்களை
அனைவருமே சேர்ந்துநின்று அகற்றிவிடல் அவசியமே
நெறியிழந்து நிற்பாரை நீழ்புவியில் வாழவிட்டால்
அளவிறந்த ஆவேசம் கொண்டுநிற்கும் அசுரகுணம் !
-
வரவேற்போம் வாருங்கள் !
எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா
தைபிறந்தால் வழிபிறக்கும்
தானென்று நாம்நினைப்போம்
தைமகளும் சேர்ந்துநின்று
சித்திரையை வரவேற்பாள்
பொங்கலொடு கிளம்பிவரும்
புதுவாழ்வு தொடங்குதற்கு
மங்கலமாய் சித்திரையும்
வந்துநிற்கும் வாசலிலே !
சித்திரை என்றவுடன்
அத்தனைபேர் மனங்களிலும்
புத்துணர்வு பொங்கிவரும்
புதுத்தெம்பு கூடவரும்
எத்தனையோ மங்கலங்கள்
எங்கள்வீட்டில் நிகழுமென
மொத்தமாய் அனைவருமே
முழுமனதாய் எண்ணிடுவார் !
உழவரெலாம் மகிழுதற்கு
உதவிடட்டும் சித்திரையும்
உழைப்பவர்க்கு மனநிறைவை
ஊட்டிடட்டும் சித்திரையும்
நாட்டினிலே அமைதிவர
நல்வரவாய் இருந்திடட்டும்
நமையெல்லாம் மகிழ்விக்க
சித்திரையை வரவேற்போம் !
ஈழத்தில் சித்திரையும்
இனிப்பாக இருக்கட்டும்
இந்தியாவில் சித்திரையால்
எல்லோரும் சிறக்கட்டும்
வாழவந்த நாட்டினிலும்
மனங்குளிரச் செய்யட்டும்
வாழ்த்திநின்று சித்திரையை
வரவேற்போம் வாருங்கள் !
-
எம் மனது ஏங்குகிறது !
எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா
நாயொன்று நாம் வளர்த்தோம்
நம்காலைச் சுற்றி வரும்
நோயென்று நாம் படுத்தால்
நூறுமுறை நக்கி நிற்கும்
கதவருகே நாம் சென்றால்
காத்திருக்கும் திறக்கும் வரை
திறந்த உடன் பாய்ந்தோடி
திரும்பிநின்று எமைப் பார்க்கும்
கார் கதவு திறந்தவுடன்
கடுகதியாய் ஏறி நிற்கும்
பார்க்க நாம் வேண்டுமென்று
பரபரத்து எமை நோக்கும்
குழந்தை பக்கம் இருந்தாலும்
குழைந்தபடி பார்த்து நிற்கும்
குழந்தை அங்கே அழுதுவிடின்
குனிந்து நின்று முகம்பார்க்கும்
அழுகை நீக்க தன்வாலை
ஆட்டியாட்டி அது காட்டும்
அப்போது பொக்கை வாயால்
எங்குழந்தை சிரித்து நிற்கும்
மனைவி மக்கள் யாவருமே
வழி நெடுகக் கதைத்தாலும்
விழி பிதுங்கி நாயங்கே
வியப்புடனே பார்த்து நிற்கும்
என் மகனின் விளையாட்டு
எப்போதும் நாயுடன் தான்
நாய் நிற்கும் இடமெல்லாம்
நாடிடுவான் என் மகனும்
அவன் என்ன செய்தாலும்
அது ஒன்றும் செய்யாது
அது என்ன செய்தாலும்
அவன் மகிழ்ந்து அணைத்திடுவான்
தம்பிமகன் அன்று வந்தான்
என்மகனும் இணைந்து கொண்டான்
இருவருமே நாயை வைத்து
எத்தனையோ செய்து நின்றார்
கதவு எல்லாம் திறந்திருக்க
கண்டபடி ஓடி நின்றார்
அவரோடி நிற்கு முன்னே
நாயங்கே ஓடி நிற்கும்
வீட்டிக்கும் தெரு வினுக்கும்
விரவாக ஓடி நின்றார்
வீட்டில் உள்ளார் சொல்லுவதை
காதில் அவர் கேட்கவில்லை
விரிச் சென்ற சப்தமுடன்
கார் ஒன்று பிரேக்போட
வாலாட்டும் நாய் அங்கே
வால் சிதறிக் கிடந்ததுவே
சந்தோசம் ஒரு நொடியில்
எமை விட்டு ஓடியதே
சகலதையும் மறந்து நாம்
சந்தித்தோம் ஓர் இழப்பை
வாலாட்டும் நாய் நினைக்க
மனம் எல்லாம் துடிக்கிறது
ஏன் வளர்த்தோம் நாமென்று
எம் மனது ஏங்குகிறது !
-
அழுகிறதே அறிவுலகு !
எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா
ஊனநிலை வந்தாலும் ஊக்கமதை இழந்திடாமல்
தானெடுத்த முயற்சிதனில் சாதனையைப் படைத்துநின்ற
இங்கிலாந்தின் விஞ்ஞானி இணையில்லா ஸ்டீபன்தனை
எல்லோரும் வியந்துநின்று இதயத்தால் வாழ்த்துகிறார் !
பேசாத நிலையினிலும் பெருங்கருத்தை வெளியிட்டார்
பேராசிரியராய் இருந்து பெரும்பொறுப்பை நிருவகித்தார்
பெருங்குறைகள் தனக்கிருந்தும் பேதலிக்கா மனமுடனே
பேரண்டம் தனையாய்ந்து பெருமைதனைப் பெற்றுநின்றார் !
வைத்தியர்கள் கைவிட்டும் மனமுடைந்து போகாமல்
வாழுவேன் எனும்துணிவில் மற்றவரை வியக்கவைத்தார்
வாழ்ந்துநின்ற வாழ்க்கைதனை வையகத்துக் குதவவைத்தார்
மறைந்தாலும் ஸ்டீபன்ஹாக் மக்கள்மனம் உறைகின்றார் !
புறவழகை அவரிழந்தார் அகவழகில் அவர்நிறைந்தார்
புத்தூக்கம் புத்துணர்ச்சி மொத்தமாய் அவர்மிளிர்ந்தார்
வருங்கால இளைஞருக்கு அவருழைத்த நல்லுழைப்பு
வாழ்வுக்கு வழிகாட்டும் மாமருந்தாய் இருக்குதன்றோ !
கணனிதனை வசமாக்கி கருத்தனைத்தும் கொடுத்துநின்று
உலகிலினிலே விஞ்ஞான சாதனையால் உயர்ந்துநின்றார்
நிலவுலகில் ஸ்டீபனைப்போல் இருப்பாரை யாம்காணோம்
அவர்பிரிவை நினைத்தேங்கி அழுகிறதே அறிவுலகு !
-
சொர்க்கமாய் இருக்குமன்றோ
( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் …. அவுஸ்திரேலியா )
நிலவுலகில் நாம்வாழ நிம்மதிதான் முக்கியமே
தலைகனத்து வாழ்ந்துவிடின் நிலையிழந்து போய்விடுவோம்
விலையில்லா அன்பினைநாம் விலைபேசி நிற்கின்றோம்
நலமிழக்கும் வழிநாடி நாம்போதல் முறையன்றோ
உலகினிலே வாழுதற்கு உயர்வழிகள் பலவிருக்கு
அதைத்தொலைத்து விட்டுவிடின் அமைந்துவிடா நல்வாழ்வு
நிலையுணர்ந்து செயற்பட்டால் நிம்மதியாய் வாழ்ந்திடலாம்
எனும்நினைப்பை மனமிருத்தி எல்லோரும் இயங்கிடுவோம் !
பண்பாடு கலாசாரம் பலவாறு இருந்தாலும்
மண்மீது வாழுதற்கு மனம்சிறத்தல் வேண்டுமன்றோ
கண்ணான ஒழுக்கமதை கருத்தினிலே இருத்தாமல்
எண்ணமதைச் சிதறவிடல் எவருக்கும் ஏற்றதன்று
உண்ணாமல் உறங்காமல் ஓய்வின்றி உழைத்துழைத்து
உபகாரம் செய்வதனை உளமிருத்த மறந்துவிட்டோம்
எண்ணமதில் என்னாளும் இரக்ககுணம் இருத்திவிடல்
இவ்வுலக வாழ்வினிலே எல்லோர்க்கும் தேவையன்றோ !
எத்தனைதான் நிறமிருந்தும் எண்ணமெலாம் ஒருநிறமே
என்கின்ற உயர்கருத்து எல்லோர்க்கும் வரவேண்டும்
சத்தியத்தை மனமிருத்தி சமத்துவத்தை நிலைநிறுத்தி
உத்தமரைப் போற்றுகின்ற உயரெண்ணம் எழல்வேண்டும்
சுத்திவரப் பகைவரினும் சோர்ந்துவிடா மனமுடனே
அத்தனையும் தகர்த்தெறியும் ஆற்றலினைப் பெறல்வேண்டும்
எத்தனைநாள் வாழ்ந்தாலும் அத்தனையும் இப்புவிக்கு
சொத்தாக அமைந்துவிடின் சொர்க்கமாய் இருக்குமன்றோ !
-
வாழ்வுக்கு வழிவகுக்கும்!
-எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா
காசமெனும் நோய்தானும்
கதிகலங்க வைத்ததுவே
கவலையுடன் பலபேரும்
காசமதில் உழன்றனரே
மேதினியில் வியாதிபல
வந்துகொண்டே இருக்கிறது
விருப்புடனே வியாதிதனை
வரவேற்பார் யாருமுண்டோ!என்றாலும் சிலபேர்கள்
இதைமனதில் கொள்ளாமல்
எவர்கருத்தும் கேட்காமல்
இறுமாந்தே நடக்கின்றார்
ஆரம்பம் நடக்குமுள்ளே
அவர்க்கு அதுதெரியாது
ஆபத்து மெள்ளவந்து
அங்கேயே அமர்ந்துவிடும்!ஆபத்தாய் வந்ததுவே
அகிலமதை உலுக்கிநிற்கும்
ஆலகால விஷமான
புற்றுநோயின் வருகையதே
தப்பிதமாய் நடந்திடுவார்
புற்றுநோயைக் கண்டவுடன்
முப்பொழுதும் கவலையிலே
மூழ்கிடுவார் வாழ்வினிலே!புற்றுநோய் வருவதற்குப்
பொதுவான காரணங்கள்
செப்பமாய்ச் சொன்னாலும்
சிலவுமிப்போ சேர்ந்துளது
மொத்தமாய் பெருகிவரும்
விஞ்ஞானக் கருவிகளும்
புற்றுநோய் பெற்றுத்தர
சற்றேனும் தவறவில்லை!புகைப்பழக்கம் குடிப்பழக்கம்
புற்றுநோயை வரவழைக்கும்
என்றெங்கும் பரப்புரைகள்
ஏராளம் நடக்கிறது
வருகின்ற சினிமாக்கள்
புகைகுடியைக் காட்டிநின்றால்
வளர்ந்துவரும் தலைமுறைகள்
புற்றுநோய்க்கு என்னசொல்லும்!ஊடகங்கள் அத்தனையும்
உழைப்பதற்கு இருந்தாலும்
கேடுதரும் விஷயங்களைக்
கிழித்தெறிந்து விடவேண்டும்
குடிபற்றி புகைபற்றி
விளம்பரங்கள் போடுவதை
அடியோடு அகற்றிவிட
அவையாவும் வரவேண்டும்!புற்றுநோய் என்றதுமே
புலனெல்லாம் ஒடுங்குகிறது
உற்றவரும் மற்றவரும்
ஒருவாறு நோக்குகிறார்
பெற்றெடுத்த பிள்ளைகூட
சற்றுத்தள்ளி நிற்கின்றார்
மற்றநோயைப் புறந்தள்ளி
புற்றுயே நிற்கிறது!நாகரிகம் எனக்கருதி
நாளும்பல செய்கின்றோம்
நமக்குநன்மை செய்தவற்றை
நாமொதுக்கி விட்டுவிட்டோம்
வாழ்வெல்லாம் பலநோய்கள்
வருவதற்கும் காத்திருக்கு
மனமதனை மாற்றுவதே
வாழ்வுக்கு வழிவகுக்கும்! -
வாழ்த்தியே மகிழ்ந்திடுவோம்!
-எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா
நிலவென்போம் மலரென்போம் நீதானே உலகென்போம்
அழகெல்லாம் உன்னிடத்தே ஆரம்பம் ஆகுதென்போம்
வரமாக வந்திருக்கும் வாழ்வென்று கூறிநின்று
வையத்தில் மகளிர்தமை வாழ்த்தியே மகிழ்ந்திடுவோம்!பொன்னென்போம் புகழென்போம் பொறுமைக்கு நிகரென்போம்
மண்ணினையும் பெண்ணென்போம் மதிப்புடனே வணங்கிடுவோம்
ஓடுகின்ற நதியினுக்கும் பெண்பெயரைச் சூட்டிநின்று
உலகினிலே பெண்மைதனை உயர்வென்றே வாழ்த்திநிற்போம்!மனிதனது வாழ்க்கையிலே மகளிர்நிலை உயர்வாகும்
மகளிர்நிலை தாழ்வுற்றால் மனிதவாழ்வு கீழாகும்
ஒழுக்கமுடை மகளிர்தாம் உன்னதத்தின் இருப்பிடமே
ஒழுக்கமது குலைந்துவிடின் உலகவாழ்வே சீரிழக்கும்!நாடுயர வீடுயர நல்மகளிர் தேவையன்றோ
நல்லொழுக்கப் பிறப்பிடமே நல்மகளிர் பிறப்பாகும்
தீயொழுக்கம் மகளிரிடம் குடிகொண்டு விட்டுவிட்டால்
திறலுடைய சமுதாயம் சிறப்பிழந்து போகுமன்றோ!அடக்கு முறைக்குள் அடங்கிநின்றார் மகளிர்கள்
அவர்வாழ்வில் சோதனைகள் அலையலையாய் வந்தனவே
இலக்கியத்தில் உயர்வாக வலம்வந்த மகளிர்கள்
இவ்வுலகில் இடர்ப்பட்டு ஏக்கமுற்று இருந்தனரே!பாரதியின் பாட்டாலே பலமகளிர் துடித்தெழுந்தார்
பட்டதுன்பம் எடுத்தெறிய பாய்ச்சலுடன் வந்தார்கள்
எட்டய புரத்தாரின் வழிவந்த பலபுலவர்
கொட்டிநின்ற வார்த்தைகளால் கொடிபிடித்தார் மகளிரெலாம்!மகளிர்தொடா துறைகளிப்போ மாநிலத்தில் இல்லையன்றோ?
மண்தொட்டு விண்வரைக்கும் மகளிர்தமைக் கண்டிடலாம்
பட்டம்பல பெற்றுவிட்டார் திட்டம்பல தீட்டுகிறார்
பாருலகில் மகளிரிப்போ பகலவன்போல் வந்துவிட்டார்! -
எல்லோரும் விரும்பி நிற்போம்!
-எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா
நரையொடு மூப்பு நமைவந்துசேரும்
நாள் அதை எண்ணிடாமல்
நாளுமே நல்லதை மனமதிலிருத்தியே
நாமுமே வாழ்ந்து பார்ப்போம்தினமெலாம் புதிதென சிந்தனைபுகுத்தியே
நினைவதில் கொண்டு வாழ்வோம்
வருவது அனைத்தையும் மகிழ்வுடனேற்றுமே
வாழ்ந்திட எண்ணி நிற்போம்!மற்றவர் வாழ்வினை மதிப்பிடும்வேலையை
வாழ்க்கையில் தவிர்த்து நிற்போம்
குற்றமே கண்டிடும் குணமதை நாளுமே
வெட்டியே எறிந்து நிற்போம்பற்றுடன் நல்லதைப் பற்றியேநின்றிடும்
பக்குவம் பெற்று நிற்போம்
உற்றவர் மற்றவர் உவப்புடனிருந்திட
உறுதுணை ஆகி நிற்போம்!வளமுடன் வாழ்ந்திட வகையினை நாளுமே
மனதினில் இருத்தி வைப்போம்
உளமதில் கருணையை ஊறிடச்செய்திட
இறைவனை நினைந்து நிற்போம்அளவிலா ஆசையை மனதிலிருந்துமே
அகற்றிட முயன்று நிற்போம்
இணையிலா வாழ்வினை என்றுமே வாழ்ந்திட
எல்லோரும் விரும்பி நிற்போம்! -
தலைநிமிர்ந்து நின்றிடுவாய்!
-எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா
அம்மாவைப் பிடிக்காதார்
அகிலத்தில் ஆருமுண்டோ?
அம்மாவின் அணைப்பினிலே
அகமகிழ்வார் அனைவருமே
அம்மாவின் பாலோடு
கலந்ததுவே அன்னைமொழி
ஆதலால் காதலுடன்
அகம்நிறைப்போம் அன்னைமொழி!தாய்மொழியைப் பழிப்பாரை
சந்ததியே மதிக்காது
தாய்கூட அவர்க்கெல்லாம்
தயைகூடக் காட்டாரே
தாயொதுக்கி நின்றுவிடின்
தயைபுரிவார் யாருளரோ
தாய்மொழியைப் புறந்தள்ளி
வாழ்ந்துவிடல் முறையாமோ!மொழிகாக்கப் பலபோர்கள்
முழுவீச்சாய் நடக்கிறது
மொழிக்காகப் பலபேரும்
ஈந்தளித்தார் இன்னுயிரை
மொழிவீழின் கலாசாரம்
முழுவதுமே வீழ்ந்துவிடும்
மொழிதன்னை விழிபோலக்
காத்திடுவோம் வாருங்கள்!தாய்மொழியில் பேசுவதைத்
தலைகுனிவு எனநினைக்கும்
தாழ்வுமனப் பான்மைதனைத்
தகர்த்தெறியச் செய்திடுவோம்
தாய்தன்னைப் பழித்திடுவார்
தரமிழந்தே போயிடுவார்
தாய்மொழியும் தாய்போலத்
தானெமக்கு இருக்கிறதே!அடிபட்ட வுடனேநாம்
அம்மா வென்றலறுகிறோம்
அன்னைமொழி அகமதிலே
அமர்ந்தேயே இருக்கிறது
அடிமைத்தனம் அகமுறைவோர்
அன்னைமொழி தனைவெறுப்பார்
ஆனந்தம் வேண்டுமெனில்
அன்னைமொழி அரவணைப்போம்!தாய்மொழியில் பேசிப்பார்
சந்தோசம் நிறைந்துவிடும்
தாய்மொழியில் எழுதிப்பார்
சர்வமுமே உனக்குள்வரும்
தாய்மொழியை வாழ்வெல்லாம்
தாங்கிநின்று நீபாரு
தலைநிமிர்ந்து இவ்வுலகில்
தான்நீயும் நின்றிடுவாய்!


