ஶ்ரீ ஶ்ரீமதி ஜெயராமசர்மா
தம்பதியர்

 

அனைவருமே பணிந்து நிற்போம் !

( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

கண்கண்ட தெய்வமாய் காருண்யக் கடவுளாய்
மண்மீது வந்திருக்கும் மாதாநம் வரமாகும்
எண்ணிநாம் பார்த்துவிடா இன்னல்களை அனுபவித்தும்
எமைப்பற்றி நினைத்திருப்பாள் என்னாளும் அன்னையவள் !

இரவுகண் விழித்திருப்பாள் எம்மருகே அவளிருப்பார்
குளிர்சுரங்கள் வந்துவிட்டால் கொடுத்திடுவாள் பலமருந்தை
அவளுணவை நினைக்காமல் அழுமெம்மை அவள்பார்ப்பாள்
ஆசையுடன் எமையணைத்து ஆறுதலைப் பெற்றுநிற்பாள் !

நாம்சிரிக்கும் நாளெல்லாம் தான்சிரிப்பைக் காட்டிடுவாள்
நாமழுது விட்டுவிடின் தானுமே சேர்ந்தழுவாள்
ஓர்நொடியும் எமைவிட்டு அவளுணர்வு ஒதுங்கிவிடா
வேராக அவளிருந்து வீழாமல் காத்துநிற்பாள் !

அம்மாபோல் பொறுப்புள்ளார் இப்புவியில் யாருமுண்டோ
அம்மாவின் மடியிருத்தல் அனைவருக்கும் பெருமையன்றோ
அம்மாவை அணைத்துநிதம் அவழடியைத் தொழுதுநிற்றல்
அம்மாவை அகம்வைப்பார் அனைவருமே ஆற்றிடுவார் !

காப்பகத்தில் தாயைவிடும் காட்சியினை மறந்திடுவோம்
கர்ப்பத்தில் காத்தவளை காப்பகத்தில் விடலாமா
மூப்புவரும் முடுக்குவரும் மூச்சுவிடக் கஷ்டம்வரும்
காத்துயெம்மை வளர்த்தவளை காப்பாற்றல் கடமையன்றோ !

அம்மாவின் அழுகுரலை ஆருமே விரும்பாதீர்
அம்மாவை நோகவிட ஆருமே நினைக்காதீர்
அம்மாவின் தினமதிலே அன்னைதெய்வம் எனநினைப்போம்
அத்தெய்வம் தனைநாங்கள் அனைவருமே பணிந்துநிற்போம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *