-எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

அம்மாவைப்   பிடிக்காதார்
அகிலத்தில்  ஆருமுண்டோ?
அம்மாவின் அணைப்பினிலே
அகமகிழ்வார் அனைவருமே
அம்மாவின் பாலோடு
கலந்ததுவே அன்னைமொழி
ஆதலால் காதலுடன்
அகம்நிறைப்போம் அன்னைமொழி!

தாய்மொழியைப்  பழிப்பாரை
சந்ததியே மதிக்காது
தாய்கூட   அவர்க்கெல்லாம்
தயைகூடக்  காட்டாரே
தாயொதுக்கி  நின்றுவிடின்
தயைபுரிவார் யாருளரோ
தாய்மொழியைப்  புறந்தள்ளி
வாழ்ந்துவிடல்  முறையாமோ!

மொழிகாக்கப்   பலபோர்கள்
முழுவீச்சாய்  நடக்கிறது
மொழிக்காகப் பலபேரும்
ஈந்தளித்தார் இன்னுயிரை
மொழிவீழின் கலாசாரம்
முழுவதுமே வீழ்ந்துவிடும்
மொழிதன்னை விழிபோலக்
காத்திடுவோம் வாருங்கள்!

தாய்மொழியில்  பேசுவதைத்
தலைகுனிவு எனநினைக்கும்
தாழ்வுமனப்  பான்மைதனைத்
தகர்த்தெறியச் செய்திடுவோம்
தாய்தன்னைப் பழித்திடுவார்
தரமிழந்தே போயிடுவார்
தாய்மொழியும்  தாய்போலத்
தானெமக்கு இருக்கிறதே!

அடிபட்ட   வுடனேநாம்
அம்மா  வென்றலறுகிறோம்
அன்னைமொழி அகமதிலே
அமர்ந்தேயே இருக்கிறது
அடிமைத்தனம் அகமுறைவோர்
அன்னைமொழி தனைவெறுப்பார்
ஆனந்தம் வேண்டுமெனில்
அன்னைமொழி அரவணைப்போம்!

தாய்மொழியில்  பேசிப்பார்
சந்தோசம் நிறைந்துவிடும்
தாய்மொழியில் எழுதிப்பார்
சர்வமுமே உனக்குள்வரும்
தாய்மொழியை வாழ்வெல்லாம்
தாங்கிநின்று  நீபாரு
தலைநிமிர்ந்து  இவ்வுலகில்
தான்நீயும் நின்றிடுவாய்!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *