இலக்கியம்கவிதைகள்

முரண்பாடு….!

 

ஆ. செந்தில் குமார்

 

 

அணுவின் உருவம் மிகச்சிறிது
அதில் பொதிந்துள ஆற்றல் அளப்பரிது!
அழகாய் தோன்றும் கடல்தனிலே
ஆழிப் பேரலை மறைந்துளதே!

அருவெறுப்பான சேற்றினிலே
அழகாய்த் தாமரை மலர்கிறதே!
அழகே உருவான பாம்பிடமோ
ஆளைக் கொல்லும் நஞ்சுளதே!

கரியென்றொதுக்கும் பொருள்தனிலே
கட்டி வைரங்கள் விளைகிறதே!
குயிலின் நிறமே கருப்பாரும்
குரலின் வளமே அதன் சிறப்பாகும்!

சில்லென்றிருக்கும் தென்றலுமே
சீற்றம் கொண்டால் புயலாகும்!
பொருமையின் உருவே பூமிப்பந்து – அதில்
பூகம்பம் என்பது புதைந்துளதே!

உன்னத உறவே வாழ்க்கைத்துணை – அதில்
உலுக்கும் போராட்டம் ஏராளம்!
என்னே என்னே விந்தையிது
எங்கும் நிறைந்தவன் படைப்பினிலே!

அழகில் ஆபத்து நிறைந்துளது
அருவெறுப்பில் அழகும் கலந்துளது!
பெருமையில் இருக்கும் சிறுமைத்தனம்
சிறுமையில் இருக்கும் பெருமை குணம்!

ஏனோ இந்த முரண்பாடு – என்பதை
எண்ணி வியக்கின்றேன்!
இன்பம் துன்பம் எல்லாமே
இரண்டறக் கலந்ததே வாழ்கையன்றோ!

தோற்றப் பொருட்கள் எல்லாமே
மாற்றம் நோக்கிச் செல்வதற்கே!
இந்த உடலே நாளை மண்ணாகும்
அந்த மண்ணும் மறுபடி உயிர் பெறுமே!

மறை பொருளாம் இறைநிலையே
மானிடர் நமக்கு உரைக்கின்ற
உலகியற்கை இதுவன்றோ! – இதை
உணர்ந்தே நாமும் வாழ்ந்திடுவோம்!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க