மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) (7)

லியோ டால்ஸ்டாய்  (Leo Tolstoy) 

தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

சைமன், மைக்கேலிடம் அந்தச் செல்வந்தர் கொடுத்த விலையுயர்ந்த தோலைக் கொடுத்துக் கவனமாகப் பூட்ஸ்கள் தைக்கச் சொல்லிவிட்டுத் தன்னுடைய வேலையில் ஆழ்ந்தான். மைக்கேல், தோலை மேசையில் விரித்து வெட்டத் தொடங்கினான். மெட்ரீனா, மைக்கேல் எப்படிப் பூட்ஸ்க்கு வெட்டுகிறான் என்று பார்க்க விரும்பி மேசை அருகில் வந்தாள். அவளுக்கும் பூட்ஸ், செருப்புகள் தைப்பது பற்றிக் கொஞ்சம் தெரியும். மைக்கேல், தோலைப் பூட்ஸ்க்கு வெட்டாமல் வேறு விதமாக வெட்டுவதைப் பார்த்து திகிலடைந்தாள். அவனுக்குத் தன்னைவிட அதிகம் தெரியுமென்று நினைத்து ஒன்றும் கேட்கவில்லை. சற்று நேரம் கழித்துத் திரும்பவும் வந்த போது அவன் பூட்ஸ்க்குப் பதில் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தான். மெட்ரீனாவின் மனதில் கவலை குடி கொண்ட போதும் மைக்கேலிடம் ஒன்றும் கேட்கவில்லை.

இரவு சைமன் தன்னுடைய வேலையை முடித்து விட்டு மைக்கேல் முடித்து வைத்திருந்தை பார்த்தபோது அதிர்ச்சியடைந்தான். பூட்ஸ்களுக்குப் பதில் ஒரு சோடி மிருதுவான செருப்புகள்!! “மைக்கேல் இது வரையிலும் ஒரு தவறும் செய்ததில்லையே? அந்தச் செல்வந்தர் பூட்ஸ்கள் கேட்டிருந்தார். மைக்கேலோ மிருதுவான செருப்புகள் தைத்திருக்கிறான், அந்தச் செல்வந்தரிடம் நான் என்ன சொல்வேன்? இந்த விலையுர்ந்த தோலை என்னால் வாங்கிக் கொடுக்க முடியாதே” என்று கலங்கினான்.
சைமன், மைக்கேலை நோக்கி, ”ஏன் இப்படிச் செய்தாய்?” அவர் பூட்ஸ்கள் கேட்டிருந்தார். நீ மிருதுவான செருப்புகள் தைத்திருக்கிறாய், நான் அழிந்து விடப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்த போது யாரோ கதவைப் பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. அவர்கள் கதவைத் திறந்த போது, காலையில் அந்தச் செல்வந்தருடன் வந்த பணியாள் குதிரையிலிருந்து இறங்கி நின்று கொண்டிருந்தான். சைமன் அவனை வீட்டிற்குள் அழைத்து “உனக்கு என்ன உதவி வேண்டும்?” என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பணியாள், “என்னுடைய எசமானி, அந்தப் பூட்ஸ்கள் விஷயமாக இங்கு என்னை அனுப்பினாள்” என்றான்.

“பூட்ஸ்களுக்கு என்ன?’

“எசமானுக்குப் பூட்ஸ்கள் இனித் தேவையில்லை, அவர் இறந்துவிட்டார்”..
“எப்படி நடந்தது?”.

“நாங்கள் வீடு சென்றவுடன் பணியாட்கள் அவர் வண்டியிலிருந்து இறங்கக் கதவைத் திறந்த போது, அவர் இறந்து போயிருந்தார். அவருடைய விரைத்துப் போன சடலத்தை வண்டியிலிருந்து இறக்க மிகவும் கடினமாக இருந்தது. என் எசமானி, என்னிடம் இனி பூட்ஸ்கள் தேவையில்லை. சடலத்திற்கு அணிவிக்க மிருதுவான செருப்புகள் வேண்டும், எவ்வளவு நேரமானாலும் சரி, காத்திருந்து தைத்த பின் வாங்கிக் கொண்டு வா என்று கூறி அனுப்பினாள்” என்றான்.

மைக்கேல் செருப்புகளையும், மீதியிருந்த தோலையும் சேர்த்துக் கட்டி அந்தப் பணியாளிடம் கொடுத்தான். அவனும் மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றான்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.