அனைவருமே வாருங்கள்!

-எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா 

இலக்கியங்கள் பலகற்றும் இங்கிதங்கள் வளரவில்லை
தலைக்கனத்தை விட்டுவிட நிலத்திலுள்ளார் விரும்பவில்லை
கொடுத்துதவும் மனப்பாங்கைத் தொலைத்துவிட்டு நிற்பதையே
நிலத்திலுள்ள பலரிடத்து நிலைத்துநிற்கக் காணுகிறோம்!

அறம்செய்ய விரும்பென்று அவ்வைகூறிச் சென்றதனை
ஆருமே மனமதனில் அமர்த்தியதாய்த் தெரியவில்லை
அதிகசெல்வம் சேர்ப்பதிலே ஆசைகொண்டே அலைகின்றார்
அல்லலுடன் இருப்பார்க்கு அவருதவின் அறம்மகிழும்!

பொருள்தேவை என்பதனால் அருளதனை ஒதுக்குவதா?
மருளோடு வாழுவதால் வாழ்வுவளம் ஆகிடுமா?
அருளான வழிசென்று பொருளதனைப் பயனாக்கின்
மருளகன்று வாழ்வினிலே அருள்வெள்ளம் பெருகிடுமே!

பலகற்று உயர்நிலையில் இருக்கின்ற பலபேர்கள்
பல்லக்கில் பவனிவரும் பதவியுடை பலபேர்கள்
பணந்தேடி பணந்தேடி பதராக மாறுகிறார்
பாங்காக அவர்வாழின் பண்பு தடுமாறிடுமா!

பூமித்தாய் பலவற்றைப் பொறுமையுடன் தாங்குகிறாள்
சாமியெனச் சூரியனும் பூமிக்கு உதவுகிறான்
வான்மழையும் மண்ணினுக்கு வளங்கொடுத்தே நிற்கிறது
மனம்மாறா மனிதரெலாம் மாறிவிட்டால் மகத்துவமே!

பலகற்றோம் என்பதனால் பண்புநிலை மாறுவதா?
பக்குவத்தைத் தொலைத்துவிட்டு பதவிகளை நாடுவதா?
புவிமீது ஆற்றுதற்குப் பொறுப்பான பலவிருக்கு
அதையாற்றி அகநிறைவோம் அனைவருமே வாருங்கள்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.