-பெருவை பார்த்தசாரதி

பெண்களென்றாலே பிதற்று கின்ற இவ்வுலகில்
-பெண்மீது எனக்குள்ளொரு கொள்கை யுண்டு..!
கண்களால் அவர்களை ஏறெடுத்தும் பார்க்காத
-கண்ணியம் கடமையோடு கட்டுப்பாடு முண்டு..!
வண்ணமலர் வாசனை யோடொருத்தி ஒருநாள்
-வளையவந்து வசமாய் மனத்துளே புகுந்தாள்..!
கெண்டை விழியாலவள் கண்சிமிட்டினாள்..நான்
-கொண்ட கொள்கையுமன்றே காற்றில் பறந்தது..!

விண்மீனுமவள் கண் முன் தோன்றினாலதன்
-விழிமூடி வெளிச்சம் தருவதையும் மறந்துவிடும்..!
கண்ணாடி முன்னவள் முகம்பார்க்கையில் தான்
-கண்டவழகை கண்ணாடியும் கவிதை யாக்கிடும்..!
கொண்டையிலே வீற்றிருக்கும் தாழம்பூ… தான்
-கொண்ட பெருமிதத்தால் மணம்வீச மறக்கும்..!
கண்சிமிட்டி கருவிழிப் புருவமுயர்த்து மழகால்
-கட்டான காளையருமவள் காலடியில் வீழ்வார்..!

சும்மாயவளைப் பார்த்தாலே சிந்தனை பிறக்கும்
-சொற்களெலாம் ஒன்றுகூடி கவிதைகள் ஆகும்..!
எம்மாடி? எவ்வளவு அழகென வியக்கும்போது
-எழுத்துக்கள் எல்லாம் காவியமாகக் கைகூடும்..!
செம்மாதுளை பிளந்த சிவப்புதடைக் காட்டிச்
-சிரித்து விட்டாலது சிறந்த காதலோவியமாகும்..!
அம்சமான அழகுக்கவள் அற்புதப் படைப்பாக
-அந்தப் பிரம்மனுமே பெருமூச்சு விடக்கூடும்..!

கண்மூடி அவள் தியானத்தில் இருந்தால்
-காதலர் களுக்குக் கனவினைக் கொடுப்பாள்..!
கண்விழித்து அவள் சற்றேயுற்று நோக்கின்
-காமன் விடும் பாணமும் எதிர்கொள்ளாது..!
கண்ணின் கருவிழியை உருட்டும் போது
-கனியும் கன்னக் குழியாலவள் அழகுகூடும்..!
கண்சிமிட்டிக் காதல் வலை வீசினாலோ
-கலையோவியம் கூட உயிர் பெற்றெழுமாம்..!

******

நன்றி தினமணி வெளியீடு:: 30 ஏப்ரல் 2018
நன்றி படம்:: கூகிள் இமேஜ்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.