எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

 

        இல்லறத்தின் நல்லறமே இனிமையுடன் வாழுவதே

             இல்லறத்தில் பிள்ளைச்செல்வம்  எல்லோர்க்கும் பெருவரமே

       இல்லறத்தில் இணைவார்க்கு பிள்ளையில்லை எனும்பொழுது

              இல்லறமே இணைவார்க்கு இன்பமதை அளிக்காதே !

 

       மணமான மறுவருடம் மழலையினைக் காண்பதுதான்

           மகிழ்ச்சியது உச்சமாய் வையகத்தில் இருக்கிறது

       மழலையது முகம்பார்த்து மனமெல்லாம் நிறைவுபெறும்

             வாழ்வுதனை யாவருமே வாஞ்சையுடன் விரும்புகிறார் !

 

     இனிமையுடை வாத்தியங்கள் இசைகொடுத்து நின்றாலும்

           மழலைமொழி வள்ளுவர்க்கு மாவிசையாய் இருந்ததுவே

     கனிவுநிறை மழலைமொழி காதினிலே நுழைந்துவிடின்

              புவிமீது வேறின்பம் புலனேற்க  மறுத்திடுமே  !

 

    பிள்ளைவரம் வேண்டுமென்று பிராத்தனைகள் பலவாற்றி

            நல்லபடி தானதர்மம் நாளுமே ஆற்றிநின்று

     எல்லரிய விரதமெல்லாம் எப்படியோ கடைப்பிடித்து

           நல்லதொரு பிள்ளைவேண்டி நாளுமே வேண்டிடுவோம் !

 

     மழலையில்லாப் பெற்றோர்க்கு மலடுவெனப் பெயர்சூட்டி

          மாநிலத்தில் சமூகமது மறைமுகமாய் தூற்றிநிற்கும்

     சபைநடுவே அவர்வந்தால் சற்றொதுக்கி  வைத்திடுவார்

           அதைக்கண்டு மழலையிலார் அலமந்தே நின்றிடுவார் !

 

        சமூகத்தில் திருமணத்தால் சமூகநிலை உயர்கிறது

             சந்தோசம் குழந்தையினால் தானங்கே நிலைக்கிறது

       குழந்தையில்லா வாழ்வுதனை குறையெனவே கருதுகிறோம்

              குறைபோக்கி நிறைவுதரக் குழந்தயெமக் குதவுதன்றோ !

 

        பிள்ளைதனைப் பெற்றாலும் பேணிநிற்கும் நிலையினிலே

             பெற்றோர்கள் சிலரிப்போ பேயாக மாறியுள்ளார்

        மழலைமொழி அவர்கேட்டு மாறிடுவார் அரக்கர்களாய்

              மடிவைத்த மழலைகளை மரணதுக்கே கொண்டுசெல்வார் !

 

        பாசநேசம் அத்தனையும் பஞ்சாகப் பறக்கவிட்டு

            பாலகராய் இருப்பாரை பதைபதைக்க வதைத்திடுவார்

        ஓலமிடும் பாலகரை ஒருகணமும் பார்க்காமல்

               உன்மத்தம் பிடுத்தபடி உருக்குலைப்பார் இரக்கமின்றி !

 

      பெற்றபிள்ளை தனையங்கே பித்தேறி அடிப்பாரின்

          பேய்த்தனத்தை முகநூலில் பதிவேற்றி விட்டிடுவார்

     அத்தகைய செயல்கண்டு அனைவருமே கொதித்தெழுந்தும்

           அநியாயம் செய்தவரோ அவர்பாட்டைப் பார்த்துநிற்பார் !

 

     நித்தமும் நாம் இவ்வாறு பலவற்றைப் பார்த்திடினும்

         சட்டப்படி நடவடிக்கை ஏனெடுக்கத் தயங்குகிறோம்

     மொத்தமுள்ள பாசமதை முழுதாக அழித்தொழிக்கும்

           மூர்க்கர்தமை விட்டுவைத்தால் நாட்டுநிலை என்னாகும் !

 

      பிஞ்சுமனம் அழுதாலும்  கெஞ்சியவர் துடித்தாலும்

          கொஞ்சமேனும் இரக்கமுறா கொடுமைக்குண முடையார்கள்

      அஞ்சிநிற்க வழிசெய்து அவர்க்குப் புத்தி ஊட்டுதற்கு

           அனைவருமே புறப்படுவோம் அழுகுரலைத் தடுப்பதற்கு !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *