-சி.வித்யா            

உலகில் மிகவும் தொன்மையான மொழி நம் தமிழ்மொழி என்பது அறிந்த ஓன்று. இன்றும் நம் தமிழ்மொழி உலகளவில் பேசப்பட்டு அனைவராலும் வியக்கும் வகையில் உள்ளதென்றால் தமிழ்மொழியில் தோன்றிய இலக்கியங்களே முதற்காரணம். எவ்வாறெனில் வாழ்வினை அகம், புறம் என இருகூறாகப் பிரித்து இயல்பான நடைமுறையினைக் கொண்டு காட்டிச் செல்லும் ஓரு யதார்த்தமான நடையினைக் காணலாம்.

 

 அகவாழ்வினைப் பேசும்போது இயற்கையுடன் இயைந்த வாழ்வு மேற்கொண்டனர். புறவாழ்வுக் கொண்டால் வீரம் பேசும்; தன் உயிரினும் மேலாக வீரத்தினைக் கருதினார்கள். தன் நாட்டுக்காகவும் தன் மன்னன் வெற்றி பெறுவதற்காகவும் காலம் கருதாமல் பாசறையிலிருந்து வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு போர் புரிவர். இவ்வாறு வீரமும் ஈரமும் செறிந்த தமிழ் இலக்கியங்களில் பதிற்றுப்பத்தினை கொண்டால் வீரகாவியம் எனலாம். சேரர்களை மட்டும் பேசும் சேரர் காவியம். மன்னன் புலவர் உறவுமுறைகள் மேம்பட்டுக் காணப்படும் நூல். போர்ச் சிறப்பினை எடுத்தியம்பும் வரலாற்று நூல். இத்தகைய சிறப்புப் பெற்ற பதிற்றுப்பத்தில் போர்மறவன் பற்றிய செய்திகளை எடுத்தியம்பும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

மறவன் சிறப்பு

மறவர் என்பவர் போரில் இறப்பினும் மார்பில் விழுப்புண்பட்டு இறப்பதை பெரிதெனக் கருதினர். போருக்குச் செல்பவர்கள் தங்கள் நாட்டிற்காகத் தம்மை இழந்தாலும் நாட்டின் மானம் இழக்கக்கூடாது என்பதற்காக உயிர்கொடுத்துப் போராடுவர். இத்தகைய வீரச்சிறப்பினை தமிழிலக்கியங்களில் காணப்பெறும் போர்க்களக்காட்சிகள் நமக்குப் பறைசாட்டும். இதனைத்தான் பாரதியார்,   “வீரம் செறிந்த தமிழ்நாடு” என்று பாடுகிறார்;. போர்களத்தில் மறவன் இல்லாமல் சிறப்பு இல்லை மறவனின் வீரத்தன்மையை பாரதி இப்படிப் பாடுகிறார் எனலாம்.

பதிற்றுப்பத்தில் இமயவரம்பன் என்னும் மன்னன் பகைமன்னனின் காவல்மரத்தை வெட்டிக்கொண்டு வருமாறு தன் படைகளை ஏவிவிடுகிறான் படைகளுடன் படைவீரர்களும் சென்று பகைவர்களைப் போர்செய்து கொன்று அம்மரத்தினை வெட்டிக் கொண்டு வருவர். அம்மரத்தில் முரசுசெய்து முழங்குவர். இதன்மூலம் அறிவது மன்னன் என்பவன் ஓரிடத்தில் நின்று ஆணையிட்டதும் மறவர்கள் அச்செயலை செய்து முடிக்கின்றனர். இந்நிலையில் காணும்போது மறவன் இல்லையேல் மன்னன் இல்லை அதுமட்டுமின்றி வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு மறவன் செய்யும் செயலும் தெரியவருகிறது. மறவன் இதில் முக்கியத்துவம் அடைகிறான். இதனை,

              பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்” ( பதிற்-11 )

என்ற பாடல் வரிகள் உணர்த்திற்று.  மேலும், பகைநாடுகளில் மன்னனும் மறவனும் ஓராண்டுக்காலம் தங்கிப் போர் மேற்கொண்டனர் என்பது பதிற்றுப்பத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனில் தனது வளத்தைப் பெருக்குவதில் குறிக்கோளாக இருந்தனர். யானைப்படையானது பகைவரின் உயரமான மதில்களின் கதவுகளை அழித்து உள்ளே செல்லும், பிற படைகளும் வெள்ளம்போல் அப்பகைவர் நாட்டிற்குள் செல்லும். பகை மன்னர்களோ எண்ணிக்கையில் பலர். இவ்வாறு, எண்ணிக்கையில் அடங்காத பகைமன்னர்கள் சேனை முதலிய அரசியல்சுற்றத்தைச் சேரன் படைகள் அழிக்கும். இவ்வாறு பகைமன்னர்கள் அழியச் சேரனின் படை போர் புரியும் இச்செயலில் மறவன் என்பவன் போர்புரியும் தன்மையாலே மன்னர் வெற்றிப் பெறுகின்றனர். இதனை,

              “யாண்டு தலைப்பெயல் வேண்டுபுலத்து இறுத்து” ( பதிற் –15 )

என்ற பாடல் மூலம் அறியலாம். மேற்காணும் கருத்தோடு தொடர்புடைய தகவலைத் தமிழர்சால்பு என்ற நூலில் சு. வித்தியானந்தன் காட்டிச் செல்கிறார்.“அளவுகடந்த மண்ணாசையால் தன்னாட்டில் வாழும் குடிகள் வளத்துடன் வாழ்வதற்குப் போதிய இடமில்லததினால் மன்னர் போர் தொடுப்பர்.” இவ்வாறு மன்னன் போர் செய்யும் காரணம் மறவனின் நிலையினையும் காணமுடிகிறது.

படைப்பெருமை:

    போரினைப் பற்றிப் பேசுமிடத்தில் படைப்பெருமை பேசாமல் இருக்க முடியாதல்லவா? பதிற்றுப்பத்தில் காணலாகும் குட்டுவன் என்னும் சேர மன்னின் படையானது தலையாட்டத்தால் பொலிவுபெற்ற குதிரைகளோடும் நெற்றிப்பட்டம் முதலிய அணிகளாற் பொலிவுப் பெற்ற ஆண் யானைகளோடும் தேர்ச்சீலைகள் பரந்து விளங்குகின்ற தேர்களோடும் போர் எதிர்நோக்கும் விருப்பத்தோடு மறவர்களும் பகைவர்நாட்டின் மீது படையெடுத்துச் சென்றால் பகைவர்நாடு பாழ்நிலமாகும் என்றுக் கூறப்படுகிறது. இதில் நான்குவகைப் படையுடன் மறவர் படையும் பேசப்படுகிறது. இதனை,

                                 “ உளைப் பொலிந்த மா” ( பதிற்- 22 )

என்ற இப்பாடல் வரி உணர்த்துகிறது. படைப் பெருமை பேசுமிடத்தில் மறவன் பேசும் இயல்பினை மேலும் காணலாம் புலித்தோலால்  செய்யப்பட்ட உறையானது  எடுக்கப்படும் புலால்நாற்றம் வீசும் முனையுடைய வேலானது ஆகாயத்தில்  தோன்றும் ஓளி வீசும் மின்னல் போல மின்னும் இத்தகைய வேலினைக் கொண்டு அரசனின் ஏவலில் வலப்பக்கம் உயர்த்திப் பிடித்து பகைவரின் படையினை வெற்றிகொள்ளும் பெரும்படையின் தலைவனே என்று கூறுமிடத்தில் மறவனின் புகழினைக் காணமுடிகிறது. இதனை

                 பீடுகொள் மாலைப் பெரும் படைத் தலைவ” ( பதிற் – 24 )

என்ற பாடல் மூலம் காணலாம். மறவனின் போர் ஆயுதமான வாளும் புகழப்படுகிறது. போருக்கு முக்கியமாகக் கருதப்படும் ஆயுதம் வாள் என்பதும் அறியலாம்.

 குதிரைப்படையானது பகைவருடைய வயல்களில் கலப்பைகள் உழவேண்டாதவையாயின, யானைப் படையானது  போர்செய்த வயல்களில் வளம் ஓழிந்தன. காலாட்படையிலுள்ள போர் வீரர்கள் போர்புரிந்த மன்றங்கள் கழுதைகள் சென்றுமேயும் பாழிடங்களாயின இவ்வாறு, சேரனின் படையானது பகைவரின் வயல்களை அழித்த செய்தியும் மறவனின் வீரநிகழ்வினையும் காணலாம். இதனைப் பதிற்றுப்பத்தில் 25வது பாடல் காட்டிச்செல்லும். படையைப் பேசுமிடத்தில் கொடிகள் கட்டப்பட்ட தேர்களையுடைய பெருமானே! ஆழமான குளங்கள்  துறைகள் கலங்கும்படி மொய்த்துச் சென்ற உன் பரந்த படைதங்கும் பகைவர் நாடு கெடும்படி உன் எல்லையற்ற வெள்ளம் போன்ற படை செல்லும் அப்படையைக் கண்ட பகைமன்னர்கள் போர்புரிய நிற்காமல் புறங்கொடுத்து ஓடுவர். பகைவீரர்களின் வலிமை அழியவும் முரசங்களையுடைய பெரிய போர் தோற்கும்படி உன் வீரர்களது ஆரவாரம் கண்டு பகையரசர் அழிவர். என்பதை,

                        “ மாறா மைந்தர் மாறு நிலை தேய” ( பதிற் -34)

இப்பாடல் கூறுகிறது. இதன்மூலம் அறிவது படையுடன் படைவீரர்களின் நிலையினைக் காணலாம். புறநானூறும் இதைப்பதிவு செய்கிறது.  குதிரையுடன் கேடயங்களைப் பரப்பியபடி போர்முனை கலங்குமாறு படை சென்றது; பகைவர் விளைநிலங்களைக் கொள்ளையிட்டது; இனிஇடம் இல்லை எனும் அளவிற்குப் பெரும்படையை உடையவன் மன்னன். இதனை,

                      வினை மாட்சிய விரை புரவியொடு’ ( புறம்- 16)

என்ற பாடல் காட்டிச் செல்லுகிறது.

மறவனின் செயல்கள்

போருக்குச் செல்லும் முன் மறவனின் முரசொலி கேட்கும். மறவன் என்பவன் ஆரவாரத்துடன் போருக்குச் செல்லும் காட்சிகளைப் புறப்பொருள் வெண்பாமாலை நமக்கு எடுத்துக்காட்டும். போருக்குச் செல்வதைக் கடமையாக எண்ணுவதோடு, மகிழ்வாகவும் கொண்டனர். இதுதான் பதிற்றுப்பத்தில் காட்டப்பெறுகிறது. அச்சமூட்டும் போர்க்களம்; அலறும்படி குறுந்தடியை எடுத்துப் படைவீரர் போருக்குச் செல்லும் ஆயுத்தமாக முரசானது இடியைப் போல அதிர்ந்து ஒலிக்கிறது. இதிலிருந்து உணர்வது முரசு ஒலியுடன் மறவன் போருக்கு ஆயுத்தமாகின்றான் என்பது. இதனை,

                           “கறுத்த தெவ்வர் கடிமுனை”  ( பதிற் 39 )

என்ற  பாடல் உணர்த்துகிறது. இதுதான் தழிழர்சால்பு நூலில் கூறப்பட்டுள்ளது. “போருக்குச் செல்லும் முன் நிமித்தம் பார்த்ததும் அரசன் தண்ணுமையை முழக்கித் தன் போர் வீரரை அழைப்பான்”என்ற கருத்தினைக் காணலாம்.   அடுத்தகட்ட நிலையில் அமைவது முரசு ஓலித்தபின் போர் செய்தலால் புண்ணையுடைய தோளினையுடைய படைவீரர் போர் முனையிடத்தே வந்து தங்கினர். இதனை,

             “ இன்இசை இமிழ் முரசு இயம்பக்”  ( பதிற் – 40 )

 என்ற பாடல் காட்டிச் செல்லுகிறது. மேற்கண்டவை மூலம் அறிவது போருக்குச் செல்லும்முன் முரசு ஒலிப்பதும் பிறகு போர்க்கள முனையில் தங்குவதும் முதன்மைச் செயலாக அமைகிறது.

மறவர் போருக்குச் செல்லும்போது வீரக்கழல் அணிந்து செல்கின்றனர். மன்னனிடத்தில் வீரக்கழல் உடைய உன் படைவீரர் என்ற வரிகள் ஆராயும்போது மறவனை ஏற்றிப் போற்றும் நிலை காணப்படுகிறது. இதனை,

                “இரும் பனம்புடையல் ஈகை வான்கழல்”( பதிற்- 42)

எனும் வரி காட்டிச் செல்லுகிறது. இதேபோன்று மற்றோர் இடத்திலும் சிறந்த கழலை அணிந்த வீரர்களையுடைய தலைவனே என்று காட்டப்பெறுகிறது.

               “வலம்படு வான் கழல் வயவர்” ( பதிற் – 70 )

என மறவர்கள் போருக்குச் செல்லும் காட்சி பேசப்படுகிறது. வலிமை மிக்க பகை வீரரொடு பிற மன்னர்கள் ஏத்தும்படி சேரனின் படைவீரர்கள் தேரோடு வரும் காட்சியானது உலக முழுவதும் ஒருங்கே காணப்பெறும் கரிய பெரிய தெளிந்த கடலினது அலைகளைக் காட்டிலும் பல. இதில் மறவன் என்பவன் தன் மன்னன் வெற்றிபெறுவதற்கு பரந்துசெல்லும் காட்சியினை உணர்த்திற்று எனலாம்.  போர்க்களத்தில் மறவன் என்பவன் தம்மைத் தடுத்து நிற்கும் வளைந்த துதிக்கையுடைய யானையினது கொம்பினை வெட்டும் வாளையுடையவன்.

மேகத்தை ஓத்து எழுகின்ற கரிய பெரிய உடலை மூடுகின்ற கவசத்தையும் வேல்களைத் தாங்கிப் போர்க்களத்தின் முன்னே புறப்பட்டுச்செல்லும் வீரர்கள் தும்பைப் பூ சூடிப் போர்புரிவர். வெற்றி பெற்றபின் மன்னனுடன் போர்க்களத்தில் ஆடுவர். பதிற்றுப்பத்தில் போர்க்களத்தில் ஆடும் மன்னனாக சிறப்பிக்கப் பெறுபவர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.

போர்க்களத்தில் வெட்டப்பட்ட பிணங்களில் உண்டான இரத்தத்தால் சிவந்த கறையை உடைய குளம்பினைக் கொண்ட குதிரைக்கு விரிந்த தலையாட்டம் சூட்டிப் பகைவரது வீரம் கெடும்படி எதிர்ப் நின்ற வீரர்களின் தலைவனே என்று மன்னனைப் புகழுமிடத்தில் மறவனை அடைமொழியாகக் கொண்டு அழைப்பது அறியமுடிகிறது. இதனால் மறவனை உயர்த்தும் பண்பும் காணப்பெறுகிறது. இதனை,

                 “காஞ்சி சான்ற வயவர் பெரும” ( பதிற் – 65 )

என்ற வரி காட்டுகிறது. இதன் மூலம் மறவனின் செயல்கள் காட்டப்பெறுகிறது.

தமிழர் இயற்கையாகவே மறப்பண்பு மிக்கவர். போரென்று கேட்டால் அதனை விரும்பி ஆரவாரிக்கும் சிவந்த கண்ணை உடைய வீரர் தமிழர். பதிற்றுப்பத்தில் மன்னன் பெரும்பான்மையாகப் போற்றப்படுகிறான். மறவன் பெருமையினைக் காட்டும் விதமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

*****

துணை நூல்கள்

பதிற்றுப்பத்து – ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை,சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை,1950.

புறநானூறு – கு.வெ.பாலசுப்பிரமணியன்(உ.ஆ), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2004.

தமிழர்சால்பு – சு. வித்தியானந்தன், குமரன் புத்தக நிலயம், சென்னை,2014.

பாரதியார் கவிதைகள்- சாரதா பதிப்பகம்,சென்னை, 2003.

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் – 636 011.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.