-செண்பக ஜெகதீசன்

நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப்
பண்பில்சொற் பல்லா ரகத்து. (திருக்குறள் -194 பயனில சொல்லாமை)

புதுக் கவிதையில்… 

பயனேதும் சாராத
பண்பிலாச் சொல்லைப்
பலரிடத்தும் பேசுதல்,
ஒருவனை
நீதி நேர்மையுடன் சாராமல்
நன்மை பெறவிடாமல்
நீக்கிவிடும்…!

குறும்பாவில்… 

பயனற்ற பண்பிலாச் சொல்லை
பலரிடமும் பேசுதல், அவனை நீதிநேர்மையுடன்
சாராது நன்மைபெறாமல் தடுத்துவிடும்…!

மரபுக் கவிதையில் 

பயனது ஏதும் தாராத
-பண்பே யில்லாச் சொல்லதனை,
அயலார் அறியப் பேசிடுதல்,
-அறியா ததனைப் பேசியோனை,
உயர்ந்த நீதி நேர்மையெலாம்
-உடைமையாய் வந்து சேராமல்
பயன்படும் நன்மை பெற்றிடாமல்
-பாழாய்ப் போக விட்டிடுமே…!

லிமரைக்கூ… 

பேசாதே பயன்சாராப் பண்பிலாச் சொல்லை,
பிறரறியயிதனைப்  பேசுவோர் தமக்கு என்றும்
நீதி நேர்மையொடு நன்மையேது மில்லை…!

கிராமிய பாணியில்… 

பேசாத பேசாத
பயன்தராத சொல்ல
எப்பவுமே பேசாத…

பண்பேயில்லாம
பயன்தராத சொல்ல
பெறரறியப் பேசாத,
அப்புடிப் பேசுறவனுக்கு
நீதி நேர்மயோட
நன்ம எதுவும் கெடைக்காதே…

அதால,
பேசாத பேசாத
பயன்தராத சொல்ல
எப்பவுமே பேசாத…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *