வாழ்வின் வளத்திற்கு ஆக்கபூர்வமான சிந்தனைகள்

சிந்தனை என்பது நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது மனதில் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு செயல். உயிர் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் சிந்திக்கும் திறன் மாறுபாட்ட அளவுகளிலும் மாறுபட்ட வகைகளிலும் இருப்பதாக உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். சிந்தனை ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான சக்தியையும் உணர்வாற்றல்களையும் அளிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சிந்தனை ஆக்கபூர்வமாக அமையும் பொழுது அது வாழ்வின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அடிப்படையாக அமைகின்றது. இதே சிந்தனை ஆக்க பூர்வமாக இல்லாதபொழுது அது வாழ்வின் வளமைக்கும் வளர்ச்சிக்கும் தேக்கமாக அமைவது மட்டுமின்றி பல வெற்றிப்படிகளுக்குத் தடைக்கல்லாகவும் அமைகின்றது. எனவே சிந்தனையை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அதன் வேகத்தையும் போக்கினையும் நடையையும் வழிப்படுத்துதல் அவசியமாகின்றது. பொதுவாக சிந்தனைகளில் நல்ல சிந்தனைகள் என்றும் தீய சிந்தனைகள் என்றும் ஏதும் இல்லை என்றும் ஒரு தனி மனிதனின் சமுதாய கலாச்சார பொருளாதார மற்றும் வாழ்வியல் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாரும் அவருடைய தனித்த சூழ்நிலைகள் வாழ்வாதாரங்கள் மற்றும் உணர்வு நிலைகளுக்கேற்றவாருமே அவைகள் நல்லவைகளாகவும் தீயவைகளாகவும் அமைகின்றன என்று பல ஆன்றோர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.

ஆங்கிலத்தின் மிகச் சிறந்த கவிஞரான செகப்பிரியர் (Shakespeare)கூறுகின்றார் “நல்லவை தீயவை என்று ஒற்றுமில்லை, நமது சிந்தனைகளே ஒன்றை நல்லதாகவும் தீயதாகவும் உருவகிக்கின்றன.” (“There is nothing either good or bad, only thinking makes it so”).  இதற்கு மாறுபட்ட கருத்துக்களும் வழக்கத்தில் இருக்கின்றன.

இளம் பிரயாத்திலிருந்தே சிந்தனைகளை ஆக்க பூர்வமாக வளர்க்க பழகிக்கொள்ள வேண்டும். ஆக்க பூர்வமான சிந்தனைகள் ஒருவரின் ஆளுமை, மேலாண்மை மற்றும் சமுதாயப் பேராண்மை ஆகியவற்றிற்க்கு வழிவகுப்பது மட்டுமின்றி, அவர்களுடைய தனித்தன்மையை (individuality)போற்றுவித்து பேணிக்காக்கவும், அவர்களுடைய திறன்களை முறைப்படுத்தி ஊக்குவித்து படைப்பாற்றலை (Creativity)  வளர்த்து செம்மைப்படுத்தவும் உதவுகின்றது. மனநல உளவியல் வல்லுநர்கள் ஆக்க பூர்வமான சிந்தனைகள் மேலும் ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கு அடிப்படையாகவும் சாரமாகவும் அமைவதாகக் கூறுகின்றனர். ஆக்கபூர்வமான சிந்தனைகள் நேர்மறையாகவும் இருத்தல் அவசியம். எதிர்மறையான இந்தச் சிந்தனைகள் குழப்பங்களையும் மனஅழுத்தங்களையும் வளர்ப்பது மட்டுமின்றி ஒருவரின் ஆளுமை மற்றும் மேலாண்மைத் திறன்களுக்குச் சவாலாக அமைகின்ற்ன.

எனவே ஒருவரின் சிந்தனைகளின் கட்டமைப்பு எவ்வாறு இருக்கின்றது. அதன் வேகம், இயக்கவியல் மற்றும் வழிமுறைகள் எவ்வாறு இருக்கின்றன என்பதே அந்தச் சிந்தனைகளின்  எதிர்காலத்தை வடிவமைக்கின்றன.

சிந்தனைகளை ஒரு கோப்புக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் வைப்பது சற்று கடினமான செயல். இவைகளே காலப்போக்கில் எண்ணங்களாகவும் கருத்துக்களாகவும் குறிக்கோள்களாகவும் பல பரிமாணங்களில் வடிவெடுக்கின்றன.

சிந்தனைத் திறன்களை பற்றி வெகுவாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு எழுதியுள்ள டேனியல் கோலமான்(Daniel Golemaan) என்ற உளவியல் வல்லுநர் கூறுகின்றார் “சிந்தனைகள் உணர்வுகளோடு உறவாடுபவை. எனவே பல நேரங்களில் சிந்தனைகளின் மீது உணர்வுகளின் தாக்கம் ஏற்பட்டு அதனால் சிந்தனைகளின் போக்கு, வழித்தடங்கள் மற்றும் வேகப் பரிமாணங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.” சிந்தனைகளின் பரிமாணங்களை பற்றி விளக்கும் பொழுது அவைகளை பக்கவாட்டுச் சிந்தனை, (Lateral Thinking) இணையான சிந்தனை, (Parallel Thinking) பகுத்தாய்வுச் சிந்தனை,(Analytical Thinking) படைப்பாற்றல் சிந்தனை,(Creative Thinking) மற்றும் விமர்சனச் சிந்தனை(Critical Thinking) என்று பல வகைகளாக எடுத்துரைக்கின்றார். இத்தகைய சிந்தனைத் திறன்கள் ஒருவருடைய வளர்ச்சிப் பாதையிலும் தொழில் முன்னேற்றத்திற்கும் பல விதங்களில் உதவுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘சமுதாயத் சிந்தனை’ ஒரு தனி மனிதனின் சமுதாய உணர்வுகளை வளர்ப்பதற்கும் கூடி வாழ்வதற்கும் இன்றியமையாதது.

இந்த மாதிரியான சிந்தனைத் திறன்கள் ஏதோ புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல. காலந்தொட்டு இந்தச் சிந்தனைத் திறன்கள் நம்முடைய வாழ்வில் முக்கிய பங்கேற்றது மட்டுமின்றி நம்முடைய வாழ்வியலை முடுக்கிக் கொண்டிருந்தன. இந்தச் சிந்தனைத் திறன்களும் பள்ளி மற்றும் மேல் பட்டப்படிப்புகளுக்கும் தற்போது அதிகமான தொடர்பு இல்லாததே இந்தச் சமுதாயத்தின் மிகப் பெரிய சாபக்கேடு. பண்டைய காலத்தில் இந்தச் சிந்தனைகள் நடைமுறை வாழ்க்கையோடு இணைந்து ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்தன. தற்போது வெறும் “நினைவாற்றலை’ மட்டும் வளர்க்கும் கல்விமுறையில் இந்தத் திறன்களை வளர்ப்பதற்கான வழிவகுத்தல் அவசியமாகின்றது. வெறும் மதிப்பெண்களால் மட்டும் ஒரு மாணவனின் திறனையும் தகுதியையும் மதிப்பீடு செய்வது உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது.

இளமைப் பருவத்தில் தெனாலி இராமன் கதைகள், மரியாதை இராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்ரமாதித்தன் கதைகள் மற்றும் விடுகதைகள், புதிர்கள் போன்ற பல உள்ளீடுகள் கற்பவரின் சிந்தனைத் திறன்களை வளர்த்துக்கொண்டிருந்தன. தற்போது தொழில்நுட்பத் தாக்கத்தில் வருகை தந்துள்ள பல உள்ளீடுகள் இளைஞர்களின் உணர்வுகளின் ஊக்க நிலைகளை அளவுக்கு அதிகமாக வளர்த்து சிந்திக்கும் திறன்களோடு மன அழுத்தம், வெற்றியை நோக்கிய வெறித்தனம், ஆக்கிரமிப்பு மனப்பான்மை, பொறுமையின்மை, மற்றும் சுயநலத்தை அதிகமாக வளர்த்துக்கொண்டிருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியையும் அதன் தாக்கங்களையும், அதனால் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்களையும் நம்மால் தடுக்கவோ நிறுத்தவோ முடியாவிட்டாலும், ஒரு சமுதாய அளவில் நமக்குச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

விரும்பியோ விரும்பாமலோ மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கும். அது இயற்கையின் விளையாட்டு. ஆனால் இந்த மாற்றங்களை நமது சமுதாயத்திற்கும் தனி மனிதனின் வாழ்வின் வளத்திற்கும் நல்லதொரு உள்ளீட்டாக அமைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சற்று சிந்திக்கலாமே !

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *